Published:Updated:

`தாத்தாவின் நினைவுகளை உயிர்ப்பிக்கும் பள்ளிக்கூடம்!' - நெகிழ்ச்சிப் பகிர்வு #MyVikatan

தாத்தாவின் நாகலாபுரம் வீடு
தாத்தாவின் நாகலாபுரம் வீடு

அந்தக் காலகட்டத்தில் 25 பைசா, 50 பைசா எல்லாம் நமக்குப் பெரிய பணமுடிப்பு மாதிரி.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

“டேய்...பள்ளிக்கூடத்து மணி அடிச்சு ரொம்ப நேரமாச்சு. இன்னும் போகாமே இங்கேயே இருக்கே?”

“வாய்ப்பாடு இருந்தாதான் பள்ளிக்கூடம் வரணுமாம். டீச்சர் சொன்னாங்க. எனக்கு வாய்ப்பாடு இல்ல. அதனால் நான் பள்ளிக்கூடம் போகலை..”

1990-ல் ஒன்றாம் கிளாஸ் படிக்கும்போது நடந்த சம்பவம் இது. அதற்குப் பிறகு வாய்ப்பாடு வாங்க 25 பைசா கொடுத்துவிட்டுச் சென்றார், எனது தாத்தா சின்னையா.

நான் படித்த பள்ளி
நான் படித்த பள்ளி

அந்தக் காலகட்டத்தில் 25 பைசா, 50 பைசா எல்லாம் நமக்கு பெரிய பணம் முடிப்பு மாதிரி. எப்பவும் எனது தாத்தாவின் சைடு பையில் 5 ரூபாய் வரை சில்லரை நாணயங்கள் இருக்கும். `தாத்தா எனக்குக் காசு வேண்டும்' என்றால், `என்கிட்ட பைசா கிடையாது' என்பார். பிறகு அவரே ``இந்தா எட்டணா வச்சுக்க'' என்று 50 பைசா கொடுப்பார்.

நான் படித்த தொடக்கப் பள்ளிக்கூடத்தில்தான் எங்க தாத்தா இரவுக் காவலர். மாசம் 30 ரூபாய் சம்பளம். அப்போது அவருக்கு அது பெரிய பணம். தினமும் ராத்திரி பள்ளிக்கூடத்தில்தான் தூங்குவார். பிற்காலத்தில் அந்தச் சம்பளம் 80 ரூபாய் வரை உயர்ந்தது.

தாத்தா வீட்டில் இருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள இந்தப் பள்ளிக்கூடம்தான், எனக்கு அ, ஆ, இ என ஆரம்பக்கல்வி கற்றுக் கொடுத்த கல்விச்சாலை. இன்றும் இந்தப் பள்ளிக்கூடம் இயங்குகிறது. ஆனால், அந்தநாளில் இருந்த ஓட்டுச்சாவடி கட்டடங்கள், வகுப்பறைகள் எல்லாம் இப்போது சேதமடைந்துவிட்டன. இதனால் அந்தக் காலத்தில் நாங்கள் ஓடியாடி விளையாடிய மைதானத்தில் இப்போது கட்டடங்கள் கட்டப்பட்டு, வகுப்பறைகள் இயங்குகின்றன. பள்ளிக்கூடத்தின் பழைய கட்டடங்கள் ஏனோ இன்னும் அப்படியே புதர்மண்டி நிற்கிறது. ஏனோ பள்ளி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.

பள்ளி கேட்
பள்ளி கேட்
`தேங்காய் வியாபாரத்துக்கு மாறிய மிட்டாய் தாத்தா!' - ஊரடங்கிலும் உதவும் 114 வயது உழைப்பாளி

முகப்பு வாயிலில் நண்பர்களுடன் நான் சேர்ந்து விளையாடிய இரும்புக் கேட்டில் இப்போது பெரிய பூட்டு தொங்குகிறது. அதைப் பார்க்கும்போது சற்று மனம் கனத்துப்போகிறது. அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் கேட் அமைத்து, அதன் வழியாக மாணவர்கள் படிக்கச் செல்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

இப்போதும் ஊருக்குச் சென்றாலும், என் தாத்தா வாழ்ந்த பூர்வீக வீடும் அவர் இரவுக்காவலராக இருந்த பள்ளிக்கூடத்தின் பழைய கட்டடமும் அவருடைய ஞாபகத்தைச் சொல்லும் அடையாளங்களாய் நிற்கிறது.

இன்று (04-06-2020) எனது தாத்தாவின் 25-வது நினைவு நாள்.. இப்போதும் அவரது முறுக்கு மீசையும் கள்ளம் கபடமில்லா சிரிப்பும் எனது தொடக்கப்பள்ளிக் கூடமும் மனத்திரையில் சிம்மாசனமிட்டு நிற்கிறது!

-சி.அ.அய்யப்பன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு