Published:Updated:

சவுதி - பஹ்ரைன் பாலத்தை பார்க்க ஆசைப்பட்டது ஒரு குத்தமா? - கிராமத்தானின் பயணம் 12

சரிப்பா வந்துட்டேன், என்ன அதற்கான நிவர்த்தியோ சொல்லுங்கோ. செய்துர்றேன் என்பது போல் பரிதாபமாக பார்க்க அந்த அதிகாரி மேலதிகாரியிடம் என் கடவு சீட்டை கொடுக்க அவர் பக்கம் பக்கமாக ஏதோ ராணிமுத்து நாவல் படிப்பதுபோல திருப்பினார்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-11 படிக்காதவர்கள் படிக்கலாம்)

அக்டோபர் 2011. இரானிலிருந்து வந்து சில மாதம் கழித்து வேலை நிமித்தம் தம்மம் (Dammam, Kingdom of Saudi Arabia) செல்ல வேண்டிய அவசியம் வந்தது.

இந்த மத்திய கிழக்கு பிராந்தியத்தில் (Middle East Region), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE, வசிக்கும் நாடு) தவிர்த்து, குவைத், கத்தார், ஓமான் அடிக்கடி சென்று வந்துள்ளேன். சவூதி இதற்கு முன் ஒரு முறை சென்று வந்துள்ளேன். பஹ்ரைன் மட்டும் சென்றதில்லை. ஒரு படத்தில் வடிவேலு கேட்பார் "துபாயில எங்க பகிரைனா?". அதே பகிரைன் தான். இந்த பஹ்ரைன் துபாயில் இல்லை, தனி நாடு என்பது எல்லோருக்கும் தெரியும்.

Bahrain palm tree
Bahrain palm tree

பஹ்ரைன் ஒரு பிரதான தீவு மற்றும் சில சிறிய தீவுகள் கொண்ட நாடு. 1985 போல பஹ்ரைனை சவுதியுடன் இணைக்கும் கடல் மேலான 25 கிமீ பாலம் திறக்கப்பட்டது. இந்த பாலத்தை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். சரி இந்த முறை சவூதி வேலை முடிந்து திரும்பும்போது இந்த பாலத்தின் மீது சென்று பஹ்ரைன் வழியாக துபாய் வரலாம் என்று அதற்கு ஏற்றவாறு பயண சீட்டும் முன்பதிவு செய்தேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - அந்த பாலம் மற்றும் பஹ்ரைன்.

பாதுகாப்பு காரணம் கருதி, சவுதியில் ஒன்றும் சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அலுவலகம் மற்றும் நிறுவனத்தின் விருந்தினர் இல்லம் (கெஸ்ட் ஹவுஸ்) மட்டுமே அனுமதிக்கப்பட்ட இடங்கள். வேலையை முடித்து திரும்பும்போது திட்டமிட்டபடி கடல் பாலத்தின் வழியாக கிளம்பினேன்.

இரு நாடுகள் சம்மந்தப்பட்ட சமாச்சாரம். குடியுரிமை சோதனை வேண்டுமல்லவா? ஆகவே அந்த பாலத்தின் ஒரு அங்கமாக, நடுவில், மத்திய தீவு (Middle Island) என்ற இடத்தில் இரு நாட்டின் குடியுரிமை சோதனைச்சாலைகள் இருக்கும். சவூதி விட்டு வெளியேறி சற்றே நடந்து பஹ்ரைன் நுழைவாயில் வழியாக பஹ்ரைன் பக்கம் நுழைய வேண்டும்.

நிறுவனத்தின் ஓட்டுநர் சவூதி பக்கம் என்னை இறக்கி விட்டு பஹ்ரைன் ஓட்டுநர் இருப்பதை உறுதி செய்து எனக்கு டாடா காட்டிவிட்டு சென்று விட்டார். சவூதி குடியுரிமை அதிகாரியும் என் கடவு சீட்டில் (Passport) சந்தோஷமாக வெளியேறும் அனுமதியை (Exit Stamp) குத்தி சென்று வா என்று கதவை மூடினார். அதன் அர்த்தம் என்னவென்றால் இப்போது நீ சவூதி விட்டு வெளியேறிவிட்டாய், பொடி நடையாய் சென்று பஹ்ரைன் கதவை தட்டு. இங்க மட்டும் திரும்பி வராதே ஏனென்றால் உன் “ஒரு முறை" (Single Entry) விசா உபயோகமாகிவிட்டது.

King Fahd Causeway
King Fahd Causeway

ஒரு 200-300 அடி வைத்து பஹ்ரைன் கதவை தட்டினேன். கடவு சீட்டை நீட்டினேன். என்னிடம் எப்போதும் 2-3 கடவு சீட்டுகள் ஒரு சேர இருக்கும். காரணம் என் சில ஐரோப்பிய நாடுகளின் பொது விசா (Schengen) விசா மற்றும் அமெரிக்கன் விசா பழைய கடவு சீட்டில் இருக்கும். அதிக பயணத்தால் எல்லா பக்கங்களும் உபயோகப்படுத்தப்பட்டு புதிய கடவு சீட்டை வாங்கியிருப்பேன். இந்த மாதிரி தருணங்களில் விசாக்களை புதிய கடவு சீட்டுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. சுருங்க சொன்னால் நான் இப்போது 3 இணைக்கப்பட்ட கடவு சீட்டுக்களை நீட்டினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாங்கிய பஹ்ரைன் அதிகாரி கேட்ட முதல் கேள்வி "சவூதி செல்லும்போது நீங்கள் இந்த பாலம் வழியாக தான் வந்தீர்களா" என்று. இது என்னை சற்றே கவலைக்குள்ளாக்கியது. காரணம் நான் பஹ்ரைன் - தம்மம் சென்றது விமானம் மூலம். சொன்னேன் (அவருக்கும் தெரியும் கடவு சீட்டை பார்த்த மாத்திரத்தில்). கேட்டுக்கொண்ட அவர் சற்றே எரிச்சலான முகத்துடன் பக்கத்துக்கு அதிகாரியிடம் ஏதோ கேட்டார். அவரும் சற்றே எதிர் மறையாக தலை ஆட்ட ஒன்று விளங்கியது ஏதோ எங்கோ சரியில்லை என்று. என்ன ஆனாலும் இப்போதைக்கு ஒன்றும் செய்ய முடியாது. என்ன சொல்கிறார்கள் பார்ப்போம் என்று நான் கவலையுடன் காத்திருக்க அந்த அதிகாரி என்னிடம் நீங்கள் பஹ்ரைன்-தம்மம் விமானம் மூலம் சென்றதால் திரும்பும்போது கடல் பாலம் மார்க்கம் செல்ல முடியாது, நீங்கள் தவறாக வந்துள்ளீர்கள் என்று மட்டும் சொல்லி என்னையும் பின் என் கடவு சீட்டுக்களையும் மாறி மாறி பார்த்தார்.

Bahrain World Trade Center
Bahrain World Trade Center

சரிப்பா வந்துட்டேன், என்ன அதற்கான நிவர்த்தியோ சொல்லுங்கோ. செய்துர்றேன் என்பது போல் பரிதாபமாக பார்க்க அந்த அதிகாரி மேலதிகாரியிடம் என் கடவு சீட்டை கொடுக்க அவர் பக்கம் பக்கமாக ஏதோ ராணிமுத்து நாவல் படிப்பதுபோல திருப்பினார். என்ன அவ்வளவு சுவாரசியம் நம்ம கடவு சீட்டில் என்று எனக்கு புரியவில்லை. ஆனால் அதிகாரிங்க அதிகாரிங்கதான்.

அவர் கேட்ட முதல் கேள்வி நீ எதற்கு பஹ்ரைன் செல்கிறாய் என்பதுதான். சொன்னேன், வேலை விஷயமாக தம்மம் சென்று பஹ்ரைன் வழியாக துபாய் திரும்புகிறேன், என்று. அவர் திருப்தி அடைந்தமாதிரி தெரியவில்லை. (உண்மையில் நேரா போகாம அப்பிடியே பஹ்ரைன் ஒரு எட்டு போய் பார்த்துடலாம்னுதான் பஹ்ரைன் போனேன். ஆனால் சொன்னா தேவையில்லாமல் குழப்பம் வரும்.).

அடுத்த கேள்வி இன்னும் கொஞ்சம் கவலை அளித்தது. அது என் எண்ணற்ற இரேனியன் விசா / குடியுரிமை ஸ்டாம்ப் பற்றியது. ஏன் ஈரான் பல முறை சென்று வந்தாய்? என்ன செய்தாய் போன்ற கேள்விகள். சார் நான் ஈரானில் 2 வருடம் வேலை செய்தேன் என்று கூறினேன். (நிறைய கோர்ம சப்சி சாப்பிட்டேன், ஷிராஸ் பார்த்தேன் போன்ற தேவை அற்ற விவரங்களை சாமர்த்தியமாக தவிர்த்தேன்). என் நிறுவனத்தின் அடையாள அட்டையையும் காட்டினேன். அவர் என் கடவு சீட்டுகளில் மீண்டும் ராணிமுத்து படிக்க ஆரம்பித்தார்.

என்ன பண்ணுவாங்க இப்ப? திருப்பி சவூதிக்காரர்கள் என்னை அனுமதிக்கமாட்டார்கள். இவர்களும் என்னை அனுமதிக்காவிட்டால் கம்பி எண்ண சொல்வார்களா? சாப்பாட்டுக்கு இட்லி தோசை கிடைக்குமா? இல்ல குபூஸ் (Arabic Bread) தானா? நிறுவனத்துக்கு சொன்னால் பெயில் அப்ளிகேஷன் போடுவார்களா இல்லை தொல்லை விட்டதுன்னு வேற ஆளை நியமித்துவிடுவார்களா? இப்படி பலப்பல கேள்விகள் என்னுள்.

King Fahd Causeway
King Fahd Causeway

அப்போது அந்த ராணிமுத்து அதிகாரி என்னிடம் "நீங்கள் சட்டப்படி இந்த வழியாக செல்ல முடியாது. இருந்தும் இந்த முறை உங்களை அனுமதிக்கிறேன். அடுத்த முறை கவனமாக இருங்கள். இதெல்லாம் நீங்கள் இந்தியன் என்ற ஒரே காரணத்தால்” என்றார்.

இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்லவேண்டும். ஈரான் ஷியா நாடு. பஹ்ரைனில் ஷியா சுன்னி கலவை. பஹ்ரைனுக்கும் ஈரானுக்கும் இந்த விஷயத்தில் நீண்ட நாள் பனிப்போர் உள்ளது. அதனாலேயே என் ஈரான் பயணங்கள் அவருக்கு நியாமான சந்தேகத்தை கிளப்பியது. அதையும் மீறி என் இந்தியன் என்ற முத்திரை என்னை சுலபமாக காப்பாற்றியது.

அவருக்கு ஒரு பெரிய நன்றி சொல்லி இந்தியாவிற்கும் ஒரு நன்றி சொல்லி வெளியே வந்தேன். இதற்கிடையில் என் பஹ்ரைன் ஓட்டுநர் ஒன்றும் புரியாமல் வெளியே காத்துக்கொண்டிருந்தார். ஒரு 10 நிமிடத்தில் முடிய வேண்டிய வேலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக எடுத்துவிட்டது. அவருக்கு விளக்கி சொல்லி நேராக உணவு விடுதிக்கு சென்று நல்ல பிரியாணி தருவித்து என் மனைவிக்கு அழைத்து சொன்னேன்.

அதற்கு மனைவி, உங்களுக்கு சிறையில் சோறு போட்டு மாளாது என்று விட்டிருப்பார்கள் என்று வெறுப்பேற்றினார். போகட்டும். நமக்கு பிரியாணி முக்கியம். நன்றாகவே இருந்தது. பின் சில மணி நேரங்கள் பஹ்ரைனை வாகனத்திலேயே சுற்றி பார்த்துவிட்டு (முக்கியமாக உலக வணிக மய்யம் (World Trade Centre) விமானம் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

அந்த பஹ்ரைன் அதிகாரி சொன்ன "இந்தியன் என்பதால்" என்னை யோசிக்க வைத்தது. இந்தியன்...... இந்த வார்தையை அவ்வளவு எளிதாக வரையறுக்க முடியுமா? தமிழனா, மலையாளியா, ஹிந்துவா, முஸ்லிமா, சீக்கியரா, அய்யரா, செட்டியாரா, கேரளாவா, ஒரிஸ்ஸாவா, நாகாலாந்தா எல்லோரும் இந்த இந்தியன் என்ற சிறந்த ஒரு வார்த்தைக்குள் அடங்கிவிடுவோம். அதுவும் நம் நாட்டு எல்லையை தாண்டினால்.

என் முதல் பயணம் 1991 டிசம்பரில். இந்த 30 வருடத்தில், ஒரு விஷயம் நான் ஒரு கண்கூடாகஉணர்ந்தது என்னவென்றால் "இந்தியா" ஒரு வரையறுப்புக்கு அப்பாற்பட்ட சொல் (Enigma). இந்தியா இந்த அளவுக்கு ஒரு மரியாதைக்குரிய இடத்தை அடைய காரணம் யார்?

India
India

இந்திய அரசாங்கமா? கூகிள் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நாடெல்லா போன்ற தலைமை பொறுப்பில் உள்ளவர்களா? லட்சக்கணக்கில் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நிறுவனங்களில் வெவ்வேறு பொறுப்புகளில் கடின மற்றும் தரமான உழைப்பை தினம்தோறும் கொடுக்கும் இந்தியர்களா? இல்லை திருப்பூரிலிருந்து உலகத்தரம் வாய்ந்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களா? எல்லா பிரச்சினைகளுக்கு நடுவிலும் ஒரு கட்டுக்கோப்புக்கு உட்பட்டு வாழ்க்கையை நடத்திச்செல்லும் பொது ஜனங்களா? வெற்றியோ தோல்வியோ தேர்தல் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ வழி செய்யும் அரசியல் வாதிகளா? யோகாவா? இந்திய திரைப்படங்களா? கோவிலோ மசூதியோ தேவாலயமோ வித்தியாசமேயில்லாமல் சகோதரத்துவத்துடன் வழிபடும் மக்களா?

இவை (மற்றும் நிறைய காரணங்கள்) எல்லாமே சேர்ந்துதான் இந்தியா என்ற தேசத்தை வரையறுக்கின்றன என்றே நம்புகிறேன். உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் ஒரு விதத்தில் காரணம் என்றும் நம்புகிறேன்.

ஆக மொத்தம், இந்தியன் என்றால் திறமைசாலிகள், நல்ல உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் என்று ஓர் பரவலான எண்ணம் நிலவவுது உண்மை என்றே எனக்கு தோன்றுகிறது.

அப்படியென்றால் இந்தியா உலகத்திலேயே சிறந்த நாடா? இல்லவே இல்லை. அப்படி ஒரு நாடு இருக்கிறதா? அதுவும் இல்லை. உடோபியா (கற்பனை நகரம்) இன்றும் கற்பனைதான். எல்லா நாடுகளிலும் நிறையும் குறையும் சேர்ந்தே.

ஒரு ஒப்பீட்டுக்கு சில நாடுகளை பார்ப்போம்.

Representational Image
Representational Image

நீங்கள் கேள்விபட்டுருப்பீர்கள் பெர்னி மேடோஃப் என்ற பேர்வழி எப்படி அமெரிக்க மக்களை பல வருடம் ஏமாற்றி பெருத்த நஷ்டம் ($18 Billion) ஏற்படுத்தினார் என்பது. (பின்னர் சிறையில் தூக்கு போட்டுக்கொண்டார்). அவ்வளவாக கேள்விப்படாத அட்டூழியங்கள் நிறைய உண்டு. ஃபிளிண்ட் என்ற நகரில் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏறக்குறைய 5 வருடங்கள் பல்லாயிரம் மக்கள் நச்சுத்தன்மை கொண்ட குடிநீரை பருகினார்கள். அமெரிக்கன் சிறைகளில் வாடும் மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். சான் பிரான்சிஸ்கோவின் பெரிய பிரச்னைகளில் ஒன்று போதை அடிமைகளும் வீடற்றவர்களும் திறந்தவெளியில் இயற்கை கடன்களை செய்வது.

இன்னொரு விஷயம் பார்ப்போம். உலகத்தில் அதிகபட்சமாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் (rape) தென் ஆப்பிரிக்காவில் தான். ஒரு வருடத்தில் ஒரு லட்சம் பெண்களில் 132 பேர் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்வீடன் 63 பேர், ஆறாவது இடம். இந்தியா? 1.8 (ஒரு லட்சம் பேருக்கு). அட்டவணையில் ஏக கீழே. கணக்கில் வராத கேஸ்களை சேர்த்தால் கூட, இந்தியா ஒரு பாதுகாப்பான நாடு என்று சொல்லமுடியும்.

லெபனான் (தலைநகரம் பெய்ரூட் மிக அழகானது) இன்று சின்னாபின்னமாக உள்ளது. அறிவாளிகள். அரசியல் காரணங்களால் இன்று சொல்லொண்ணா துயரங்கள். ஏறக்குறைய ஒரு நாளைக்கு 4-5 மணி நேரம் தான் மின்சாரம். பணத்தின் மதிப்பு பாதாளத்தை நோக்கி. நான் கெய்ரோ செல்லும்போதெல்லாம் மூலைக்கு மூலை நிற்கும் ஆயுதம் ஏந்திய கறுப்பு படை அதீத கெடுபிடியை பறைசாற்றும். இன்று முபாரக் இல்லை ஆனால் கெடுபிடிகள் உண்டு.

சிரியாவில் என் நண்பர்கள் சொல்லுவார்கள் எந்த சிரியனிடமும் அரசியல் பேசாதே என்று. யார் அரசின் உளவாளி என்பது யாருக்குமே தெரியாது. துனிசியாவில் அரபிக் புரட்சிக்கு வித்திட்ட போலீஸ் அராஜகத்தால் தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தள்ளு வண்டி வியாபாரியின் (முகமத், 26 வயது) கடை இருந்த இடம் இன்று சுற்றுலா தளம்.

சரிப்பா என்ன சொல்ல வருகிறாய்? மேட்டருக்கு வந்து தொலைன்னு நீங்கள் நினைக்கும் முன் நானே வருகிறேன்.

Syria Refugees
Syria Refugees

இதெல்லாம் பார்க்கும்போது பல விதங்களில் இந்தியா நிச்சயமாக நல்ல நாடுதான். கூடிய விரைவில் வளர்ந்த நாடுகளின் பட்டியலில் (ஒரு ஸ்விட்ஸ்ர்லாந்து போலவோ நியூஸிலாந்து போலவோ) சேரும் என்று விழைகிறேன் (Hope). முக்கியமாக நம் நாட்டில் தினசரி வாழ்க்கை அமைதியாகவே உள்ளது. மத நல்லிணக்கம் இன்றும் பேணப்படுகிறது. இன்றும்கூட ஒரு குடும்பத்தில் கஷ்டம் என்றால் அரவணைத்து செல்ல சொந்தங்கள் முயற்ச்சிப்பார்கள். இந்த சமுதாய பிணைப்பு பல நாடுகளில் மிக குறைவே.

பாதுகாப்பு விஷயத்திலும் இன்றும் மிகவும் நல்ல சூழலே உள்ளது. இதைப்பற்றி சொல்லும்போது என் ஈராக் பயணம் பற்றி சொல்லுவது சரியாக இருக்கும்.

சில பன்னாட்டு நிறுவனங்களின் பணியாளர்கள், குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும்போது சில நெறிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும். உதாரணத்திற்கு, என் நிறுவனத்தில், சில நாடுகளுக்கு செல்லும்போது பொது போக்குவரத்தை உபயோகப்படுத்தவே கூடாது. விடுதிகளும் அங்கீகரிக்கப்பட்டவைகளாக இருக்க வேண்டும். சவூதியில் தங்கும் இடம்கூட நிறுவனத்தின் விருந்தினர் இல்லம் (Guest House) தான். அதிகபட்ச காவல் ஏற்பாடுகள். ஈராக்கில் கெடுபிடிகள் இன்னும் அதிகம்.

Iraq
Iraq

2012 இல் முதல் முறையாக ஈராக் சென்றேன். விமான நிலையத்தின் உள்ளேயே நிறுவனத்தின் பிரதிநிதி வந்து அழைத்து செல்வார். விமான நிலைய வாசலில் இருந்தே AK 47 தாங்கிய காவலாளர்கள் அழைத்துச்சென்று ஒரு ஒதுக்குபுறமான இடத்தில் நிறுத்தி தலை கவசம் (Helmet) மற்றும் குண்டு துளைக்காத மேலுடை (Bullet Proof Vest) அணியவைத்து குண்டு துளைக்காத வாகனத்தில் அமர்த்துவார்கள். நாம் ஒரு ரோபோட் தான். இயக்குபவர்கள் அவர்கள். வாகனத்தில் அமர்ந்த பிறகு, பேசும் கருவியில் (Walkie Talkie) மற்ற வாகனங்களுடன் பேசுவார்கள். அப்போது தெரியவரும் நாம் செல்லும் வாகனத்தின் முன்னும் பின்னும் வேறு வாகனங்கள் வரும் என்பது. முன்னே செல்லும் வாகனம் சாலை நிலவரத்தை கண்டறிய. பின்னே வரும் வாகனம் முதலுதவி வசதிகளுடன். மூன்று வாகனங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் இருப்பார்கள்.

சரி இதெல்லாம் நம் பாதுகாப்புக்குதானே என்று மனதை திறப்படுத்தி உட்கார்ந்தால் மனம் அடங்குமா?

அரசியல் தலைவர்களை சொந்த பாதுகாப்பாளர்களே சுட்ட சம்பவங்கள் சில உண்டு. மிக அதிகபட்ச மன அழுத்தத்தில் இருக்கும் இந்த இராக்கி பாதுகாப்பாளர் AK 47 நல்லா வேலை செய்யுதான்னு நம்ம நோக்கி இரண்டு தோட்டாக்களை அனுப்பமாட்டார் என்று என்ன நிச்சயம்? இப்படியே நாம் பயந்தபடி உட்கார்ந்திருக்கும்போது திடீரென வண்டி நின்றால்? ஏன் ஏது என்று கேட்கலாமா இல்லை வேண்டாமா? கேட்டால் இரண்டுக்கு பதிலா நாலு தோட்டா? ஆனால் நம் மனதை புரிந்து கொண்ட மாதிரி சொல்லுவார்கள், ஒன்றுமில்லை நம் முன் செல்லும் வாகனம் (Pilot) சொல்கிறார் இந்த பாதையில் சற்றே பிரச்சினை இருக்கலாம், வேறு வழி எடுக்கவேண்டும் என்று. இப்படி ஒரு நிச்சயமில்லாமல், அவஸ்தையான 10-12 கிலோ உடை அணிந்து செல்லும்போது 5-6 கிமீக்கு ஒரு முறை சோதனை என்ற பெயரில் இது வழியா பூந்து போ, அதை திறந்து காட்டு, மோப்ப நாய் பக்கத்தில வா என்று ரொம்பவே சோதிப்பார்கள். ஓரிடம் விட்டு ஓரிடம் செல்வது என்பது நீங்கள் தீர்மானிக்க முடியாத ஒன்று. அங்கும் மக்கள் தினசரி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

Iraq
Iraq

இத்தனைக்கும் அந்த நாடு எண்ணையில் மிதக்கிறது. ஆனால் அடிப்படை வசதியான தடையில்லா மின்சாரம் குதிரை கொம்பு. பாதுகாப்பற்ற நாடு. (இப்போது ஓரளவுக்கு பரவாயில்லை)

ஒரு முறை பாஸ்ரா (Basra) இன்னொரு முறை பாக்தாத் (Bagdad) என இரு முறை ஈராக் சென்று வந்தேன். முடிந்தவரை எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிறுவனம் செவ்வனே செய்யும். நான் பாக்தாதில் இரவு தங்கியிருந்த விருந்தினர் இல்லத்துக்கு சற்று அருகிலேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. காலையில் எங்கள் காவல் அதிகாரி நிலைமை இப்போது சரியாகிவிட்டது, நீங்கள் வழக்கப்படி செல்லலாம் என்று உறுதி கொடுத்தார்.

ஒரு நாள் இல்லை இரு நாள் இப்படி வாழலாம். ஆனால் தினசரி வாழ்க்கையே அபாயத்துக்கு இடையிலேதான் என்றால்?

இதெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று எனக்கு அவசியமா? ஆமாம் அவசியம், எல்லாம் வயிற்று பிழைப்புக்கு என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் நிறுவனம் அந்த சுதந்திரம் கொடுப்பார்கள். போக விருப்பமில்லை என்றால் நிர்பந்தப்படுத்தமாட்டார்கள். நான் லைட்டா "ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது" ரகம்.

ஈரானில் மக்களின் போராட்டத்தையும் அதை "பஸீஜிகள்" (பிரத்யேக காவல் துறை) அடக்கிய விதம் கண்டிருக்கிறேன். சிரியாவுக்கு கடைசியாக 2011 டிசம்பரில் சென்றபோதுதான் அசாத்துக்கு எதிரான போராட்டம் துவங்கியிருந்தது.

இப்போது சொல்லுங்கள் இந்தியா எந்த அளவுக்கு குறைந்து போய்விட்டது. உண்மையில் நாம் அனுபவிக்கும் பேச்சு, கருத்து, மத சுதந்திரம் மிக உன்னதமானது. இது இன்னும் மேலும் மேலும் சிறக்க வேண்டி என் பயண விருப்பத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

Port of Beirut Blast
Port of Beirut Blast

ஏமன், பலஸ்தீன், சோமாலியா, தெற்கு சூடான், எரிட்ரியா, ஆப்கானிஸ்தான் என என் விருப்ப பட்டியல் மிக நீண்ட ஒன்று. ஆனால் இப்போதைய சூழலில் எட்டா கனி போல் உள்ளது. நல்லவேளை பாகிஸ்தான் சென்று வந்துவிட்டேன்.

இந்த சவாலான இடங்கள் மற்றும் சவாலான வேலைகள். முற்றிலும் மாறுபட்ட சக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சந்திப்புகள் / பேச்சு வார்த்தைகள். இவையெல்லாம் எனக்கு ஒரு அளவில்லா மன திருப்தியை தந்தது. ஆகவே இந்த மாதிரி பயணங்கள் நான் மிகவும் விரும்பி செய்த/செய்யும் ஒன்று. மனைவி தைரியசாலியாயிருந்தது ஒரு பிளஸ் பாயிண்ட்.
சங்கர் வெங்கடேசன்

இவ்வளவு படித்தபிறகு நீங்கள் இந்த மத்திய கிழக்கு நாடுகளே மோசம் என்று நினைத்தால், சற்று மாற்றிக்கொள்ளுங்கள். எங்கு செல்லினும் பொது மக்கள் நல்லவர்கள். அப்பாவிகள்தான். அவர்களுக்கு தேவையெல்லாம் ஒரு கூரை, நல்ல உணவு, குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிம்மதி. அப்புறம் நல்ல இணைய தொடர்பு, இலவச WiFi மற்றும் Facebook, WhatsApp, Instagram. ஆனால் அதை தீர்மானிப்பது அவர்கள் மட்டும் இல்லையே.

ஓமான் (அருமையான நாடு, அமைதி பூங்கா, நல்ல மக்கள்), ஜோர்டான் (அழகு - நாடும் மக்களும்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (சொல்லவே வேண்டாம்), கத்தார் (செல்வ செழிப்பு) என நிறைய நல்ல அம்சங்கள் உள்ள நாடுகளும் இங்குதான் உள்ளன.

இவற்றில் அடுத்த வாரம், ஓமான் மற்றும் ஜோர்டான் பார்க்கலாம். கூடவே பாகிஸ்தான். (இலவச இணைப்பு).

பின்னர், நிச்சயமாக ஒரு வாரம், நாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பற்றி மட்டுமே விவரமாக பார்க்கலாம்.

-சங்கர் வெங்கடேசன் ( shankarven@gmail.com )

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு