தூத்துக்குடியில் மகேந்திரன் என்பவர் பிரியாணியை பனையோலை பெட்டிகளில் விற்பனை செய்கிறார் எனும் விகடன் செய்தியை படித்த போது சற்றே வருத்தம் கலந்த பெருமகிழ்ச்சி ஏற்பட்டது !
மறுசுழற்சி, சுற்றுச்சூழல் நலன், குடிசைத்தொழில் வளர்ச்சி என பனையோலை பெட்டிகளின் நன்மைகளுடன் கூடிய அந்த மனிதரின் சமூக அக்கறை மகிழ்ச்சியை ஏற்படுத்திய அதே வேலையில் ஒரு தலைமுறை காலத்துக்குள் நம்மிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்ட ஒரு பாரம்பரிய பழக்கத்தை நினைவுகூரக்கூட நேரமில்லாமல் போய்விட்ட நமது இயந்திர வாழ்க்கைமுறை வருத்தத்தையும் ஏற்படுத்தியது!

வாழையிலை மட்டுமல்லாமல் வாழை பட்டை, தாமரை இலை, பனை ஓலை, தாழம் ஓலை, தேங்காய் சிரட்டை என உணவு பரிமாறுவதற்கும், கொண்டு செல்வதற்கும் தமிழர்கள் பயன்படுத்திய இயற்கை பொருட்கள் ஏராளம். அந்தந்த நிலப்பரப்பின் விவசாய வளத்துக்கு ஏற்ப இவை அமையும். துணிப்பைகள் அதிகம் புழக்கத்துக்கு வராத காலத்தில், இறைச்சி மீன் மற்றும் காய்கறிகள் கொண்டு செல்ல பனையோலை பெட்டிகளும், தாழம் பெட்டிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நெய்ச்சோறு மற்றும் தாளிச்சாவின் சூடு பனையோலையில் பரவி எழும் மணம் உணவின் மணத்துடன் கலந்து, பொட்டி சோற்றுக்கான தனித்த மணம் மற்றும் சுவையை ஏற்படுத்தும் ! பொட்டி சோற்றின் மணம், சுவைக்கு பழகியவர்கள் அதற்கு வாழ்நாள் அடிமைகளாகி விடுவார்கள்!காரை அக்பர்
எங்கள் ஊரிலிருந்து குற்றாலம் செல்பவர்கள் கட்டாயம் வாங்கிவரும் கருப்பட்டியும் எள்ளு மிட்டாயும் சிறிய பனையோலை பெட்டிகளில்தான் வரும். திட உணவு மட்டுமல்லாமல் திரவ உணவுக்கும் பனையோலை பயன்படுத்தப்படுவதுண்டு. வாழையிலையில் பரிமாறப்படும் உணவின் மணம் மற்றும் சுவையை போலவே பனையோலை உணவுக்கும் ஒரு தனித்த மணமும் சுவையும் உண்டு.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகோபல்லபுரத்து மக்கள் நாவலில் சம்முக நாடார் இளம் பனையோலையில் கட்டிய நெத்திலி கருவாட்டுக் குழம்பு சாதத்தை ருசித்து உண்பதை "கரிசல் முன்னத்தி ஏர்" கி. ராஜநாராயணனின் வார்த்தைகளில் படித்தால் கருவாடு என்றால் காத தூரம் ஓடுபவர்களின் நாவில் கூட நீர் சுரக்கும்!
வாழையிலையில் பரிமாறப்படும் உணவின் மணம் மற்றும் சுவையை போலவே பனையோலை உணவுக்கும் ஒரு தனித்த மணமும் சுவையும் உண்டு.காரை அக்பர்
புதுவை மாநிலத்தின் காரைக்கால், நாகை மாவட்டத்தின் நாகூர் மற்றும் இவ்வூர்களின் சுற்றுவட்டார பகுதி இஸ்லாமிய மக்களின் உணவு வழக்கங்களில் ஒன்று "பொட்டி சோறு"!
நேர்ச்சை எனப்படும் வேண்டுதலை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுப்பதற்கும், வீட்டில் விருந்து கொடுக்காமல் உற்றார் உறவினர்களின் வீடுகளுக்கே அனுப்புவதற்கும் பொட்டி என மருகிய பெட்டி சோறு வழக்கம் பின்பற்றப்படுகிறது. பொட்டி சோற்றுக்கான பனை ஓலையில் பின்னப்பட்ட பெட்டியை குறப்பெட்டி என்றும் சொல்வார்கள்.

தாளிச்சசோறு என்றும் அழைக்கப்படும் நெய்ச்சோறு ஒலைப்பெட்டியின் முக்கால் பாகத்துக்கு நிரப்பப்பட்டு, அதன் மேல் காய்கறிகள் ஆட்டின் எலும்பு பகுதிகள் மற்றும் கொழுப்பு கலந்த தாளிச்சா குழம்பு ஒரு பக்கமும், தனிக்கறி எனப்படும் ஆட்டுக்கறியுடன் கூடிய குழம்பு ஒரு பக்கமும் ஊற்றப்படும்.
நெய்ச்சோறு மற்றும் தாளிச்சாவின் சூடு பனையோலையில் பரவி எழும் மணம் உணவின் மணத்துடன் கலந்து, பொட்டி சோற்றுக்கான தனித்த மணம் மற்றும் சுவையை ஏற்படுத்தும் ! பொட்டி சோற்றின் மணம், சுவைக்கு பழகியவர்கள் அதற்கு வாழ்நாள் அடிமைகளாகி விடுவார்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பரங்கிப்பேட்டையில் பனையோலை பெட்டிகளுக்கு பதிலாக சிக்லா எனப்படும் சிறிய மண் கலயங்கள் புழக்கத்திலிருந்தன. நாகூரிலும் புழக்கத்திலிருந்த மண் கலயங்களுடன் தாழம் ஓலையில் முடையப்பட்ட பெட்டிகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. அளவில் பெரிய தாழம்பு பெட்டிகளில் குஸ்கா எனப்படும் மாமிசம் இல்லாத பிரியாணி பகிரப்பட்டது. பனையோலையை போலவே தாழம் ஓலை மற்றும் மண் சட்டிகளில் உண்ணப்படும் உணவுகளுக்கும் தனிச் சுவையும் மணமும் உண்டு !
ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வரை சிக்லா எனப்படும் சிறிய மண்கலயங்கள் ரமலான் நோன்பில் முக்கிய பங்கு வகித்தன...

இப்தார் எனப்படும் நோன்பு திறப்புக்கான நோன்புக் கஞ்சி சிக்லாக்களில்தான் பரிமாறப்பட்டன. இதற்கெனவே பள்ளிவாசல்களில் நூற்றுக்கணக்கான சிக்லாக்கள் பாதுகாக்கப்பட்டென ! ரமலான் மாதத்தின் நெருக்கத்தில் இந்த மண்கலயங்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு, அவை கழுவி சுத்தப்படுத்தப்படும். ரமலான் மாதம் முடிந்த பிறகு, இந்த மண்கலயங்கள் மீண்டும் எண்ணப்பட்டு பத்திரப்படுத்தப்படும் !
நோன்பு காலங்களில், பள்ளி வளாகத்தில் காய்ச்சப்படும் நோன்புக் கஞ்சி வரிசையாக பரப்பப்பட்ட சிக்லாக்களில் ஊற்றப்படும். அதன் மேல் கொஞ்சம் புளி சம்பல் ! மாலையில் இப்தார் நிகழ்வுக்காக பள்ளிக்கு வரும் "நோன்பாளிகள்" ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொள்வார்கள்.
எந்த கலயத்துக் கஞ்சியில் அதிக கறித்துண்டுகள் இருக்கும் என்பதான முணுமுணுப்பு ஆலோசனைகள் வரிசையில் நிற்கும் சிறுவர்களிடையே நடக்கும் ! திடப்பொருட்கள் கீழே தங்கி, மேலே கெட்டித்து சலனமற்ற குளம் போல காட்சி தரும் நோன்புக் கஞ்சி கலயங்களுக்குள் அமிழ்ந்திருக்கும் கறித்துண்டுகளும் மனித மனதுக்குள் அமிழ்ந்திருக்கும் ரகசியங்கள் போன்றவைதான் ! அப்படியெல்லாம் தெரிந்துக்கொண்டுவிட முடியாது !
ஆனாலும் சமமற்று சற்றே முட்டலாய் தெரியும் கலயங்களை வரிசை தவறி எடுக்க முற்பட்டு, மூத்தவர்கள் கண்டிப்பு பார்வைக்கு ஆளாகும் சிறுவர்களும் உண்டு. அவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், நோன்பு திறக்கும் நேரத்துக்காக கலயத்துடன் காத்திருக்கும் போது கஞ்சிக்குள் விரல்விட்டு கறி தட்டுப்பட்டுவிட்டால் திருப்திப்பட்டுக்கொள்வார்கள் !

உண்டு முடித்தபின், அவரவர் கலயங்களை பள்ளியிலிருக்கும் ஹவுல் எனும் சிறிய செயற்கை குளத்தின் நீர் கொண்டு கழுவி வைக்க வேண்டும். ஹவுல் தண்ணீரில் கலக்கும் எஞ்சிய கஞ்சி பருக்கைகளை அதில் வளர்க்கப்படும் மீன்கள் தின்றுவிடும் !
ஒரே பாத்திரம், ஒரே வரிசை எனும் அடிப்படையில், ஏழை பணக்காரர் வித்தியாசமின்றி, சமூகத்தின் பலதரப்பட்ட அடுக்குகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக உணவருந்தும் சமூக ஒற்றுமைக்கான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று !காரை அக்பர்
இன்று எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் சிக்லாக்களின் இடத்தை பிடித்துக்கொண்டுவிட்டன. பொட்டி சோறும் சிக்லா சோறும் மூலப்பெயர் மட்டும் மிச்சமிருக்கும் "பிளாஸ்டிக் டப்பி சோறாக" மாறிவிட்டன! பனையோலை பெட்டி சோறு இன்றும் வர்த்தக ரீதியில் எங்கள் ஊரில் கிடைத்தாலும் பழைய சுவை கிடைக்கவில்லை! ஆட்டிறைச்சியின் இடத்தை பிடித்துக்கொண்ட பிராய்லர் கோழி இறைச்சி, பக்குவமற்ற சமையல் என இதற்கு பல காரணங்கள் உண்டு !
பிளாஸ்டிக் பெட்டிகள், பைகள் மூலம் உண்டாகும் சுற்றுச்சூழல் கேடுகள் பேசப்படும் அளவுக்கு, அவற்றில் கொடுக்கப்படும் சூடான உணவுகளில் ஏற்படும் ரசாயண மாற்றங்கள் பற்றியும் அதனால் ஏற்படக்கூடிய உபாதைகள் பற்றியும் நாம் பேசுவதோ கவலைப்படுவதோ இல்லை.
மேலை நாடுகளில் உணவு பதார்த்தங்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பிகள் மற்றும் பைகளுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு. குளிர்விக்கப்பட்ட உணவு வகைகளுக்கானது, சூடான உணவுகளுக்கானது, மைக்ரோ ஓவனில் உபயோகப்படுத்தப்படக்கூடியது என்றெல்லாம் தரம் பிரிக்கப்படுவதுடன் அந்தந்த உபயோகங்கள் பிளாஸ்டிக் பொருட்களில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டியதும் கட்டாயம் ! பொருத்தமற்ற பிளாஸ்டிக்கினால் ஏற்படும் கேடுகளை பற்றிய விழிப்புணர்வும் அதிகம் !

அது போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் முறையாக பின்பற்றப்படாத, சரியான விழிப்புணர்வு முற்றிலும் ஏற்படாத சூழலில் பிளாஸ்டிக் உபயோகம் நம் உடல்நலத்தில் நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
தூத்துக்குடி மகேந்திரனை போல, உள்ளூர் உணவு வியாபாரிகள் அவரவர் வட்டாரத்தில் கிடைக்கும் இயற்கை பொருட்களையும் மண் கலயங்களையும் பயன்படுத்தினால் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் குடிசை தொழில்களும் மேம்பட்டு உள்ளூர் பொருளாதாரம் செழிக்கவும் வழி பிறக்கும்.
-காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.