Published:Updated:

75! | My Vikatan

Representational Image

25 ஆம் ஆண்டு சுதந்திர தினம் 1972 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது நான் பொள்ளாச்சி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்தேன். தினசரி பத்திரிக்கையைத் தவிர வேறு எதுவும் இல்லாத காலம்.

75! | My Vikatan

25 ஆம் ஆண்டு சுதந்திர தினம் 1972 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது நான் பொள்ளாச்சி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்தேன். தினசரி பத்திரிக்கையைத் தவிர வேறு எதுவும் இல்லாத காலம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

75 வெறும் நம்பர் அல்ல. பல கோடிக்கணக்கான மக்களின் சுதந்திர உணர்வுகளை உள்ளடக்கிய ஒன்று. தியாகங்கள், சிந்திய ரத்தங்கள், அடக்குமுறைகள் என்று மாபெரும் வரலாறு அதன் உள்ளே இருக்கிறது.

ஆகஸ்ட் 15 வரும் தினத்தில் பல அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து சொல்வார்கள், பேட்டி கொடுப்பார்கள். தொலைக்காட்சிகளில் திரையுலக பிரபலங்களின் பேட்டிகள் பட்டிமன்றம், மற்றும் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்று அறிவித்து புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். இப்படித்தான் இந்த நாள் கடந்து போகும்.

25 ஆம் ஆண்டு சுதந்திர தினம் 1972 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது நான் பொள்ளாச்சி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்தேன். தினசரி பத்திரிக்கையைத் தவிர வேறு எதுவும் இல்லாத காலம். எங்கள் வகுப்பில் இருந்த பொன்ராஜ் என்ற நண்பன் வீர சிவாஜி, மகாத்மா காந்தி ஆகியோர் படங்களை வகுப்பறை சுவரில் வரைந்தது இன்னும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

Representational Image
Representational Image

"தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை

தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்

ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்

உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்... "

வானொலி ஆட்சி நடந்து கொண்டிருந்த போது இது போல சுதந்திர உணர்வுகளைத் தூண்டும் பாடல்களை ஒலிபரப்புவார்கள். செவி வழியாக கேட்கும் போது நம்மையும் அறியாமல் நாட்டுப்பற்று நமக்குள் அதிகமாகும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1960 - 1970 களில் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்கள் வெளிவந்து மக்களுக்கு சுதந்திரத்தின் அருமை பெருமைகளை என்றும் நினைவில் நிறுத்த வைத்தது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் இடம் பெற்ற உணர்ச்சிமயமான காட்சிகள் வசனங்கள் இன்றளவும் பேசும் பொருளாக உள்ளது. நம் முன்னோர்கள் நமக்காக செய்த தியாகங்களை எடுத்துரைக்கிறது.

பத்மினி பிக்சர்ஸ் சார்பாக திரு.பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கிய படம் இது. திரு.சக்தி கிருஷ்ணசாமி அவர்களின் அனல் பறக்கும் வசனங்களை பேசி கட்டபொம்மனாக நடிகர் திலகம் வாழ்ந்து காட்டியிருப்பார்..

நடிகராக வேண்டும் என்ற கனவோடு கோடம்பாக்கம் வந்த பலர் இந்த படத்தின் வசனங்களை பேசி நடித்துக் காட்டி வாய்ப்புகள் பெற முயன்றனர்.

Representational Image
Representational Image

ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தை எதிர்த்து பலமாக குரல் கொடுத்தவர் கட்டபொம்மன். இந்திய சிற்றரசர்களிடம் வரி வசூலிக்கும் உரிமை பெற்ற ஆங்கிலேயர்கள் அதற்கு ஜாக்சன் துரை என்பவரை நியமித்தார்கள். அந்த அதிகாரியும் கட்டபொம்மனும் சந்திக்கும் காட்சிகள் மிகவும் உணர்ச்சிமயமாக இருக்கும்.

"கிஸ்தி, திரை, வட்டி, வேடிக்கை! வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுக்க வேண்டும் கிஸ்தி! எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றம் இறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது மாமனா? மச்சானா? மானங்கெட்டவனே! எதற்கு கேட்கிறாய் வரி, யாரை கேட்கிறாய் திரை? போரடித்து நெற்குவிக்கும் வேழை நாட்டு உழவர் கூட்டம் உன் பரங்கியர்கள் உடல்களையும் போரடித்து தலைகளை நெற்கதிர்களாய் குவித்துவிடும் ஜாக்கிரதை! "

சாகாவரம் பெற்ற வசனம் இது. இவர்தான் கட்டபொம்மன் என்று அடையாளம் காட்டியவர் நடிகர் திலகம் அவர்கள். கட்டபொம்மன் கோலத்தில் இருக்கும் அவருக்கு மிக உயரமான சிலையை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவ வேண்டும். அந்த சிலை இருக்கும் பீடத்தில் இந்த வசனத்தை எழுதி வைக்க வேண்டும். அதைப் பார்க்கும் ஒவ்வொரு நாளும் நமக்குள் ஒரு எழுச்சி வரும். சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்ற எண்ணம் வரும். நாட்டுக்கு எதிராக பேசும் சிந்தனைகள் கருகிப்போகும். வீரம் விளைந்த மண் இது என்ற எண்ணம் ஓங்கி நிற்கும்.

கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் பத்மினிபிக்சர்ஸ் பந்துலு அவர்கள் தயாரித்து இயக்கினார். இதில் . வ.உ.சி. யாக உருமாறினார் அதே நடிகர் திலகம் அவர்கள்.

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி

"SWADESHI STEAM NAVIGATION COMPANY" என்று ஒரு கம்பெனியை ஆங்கிலேயர்களின் "BRITISH INDIA NAVIGATION COMPANY" க்கு எதிராக 1906 ஆம் ஆண்டு ஆரம்பித்து தூத்துக்குடி கொழும்புக்கு இடையே சேவையை தொடங்கி வைத்தார் வ.உ.சி. அவர்கள். ஆங்கிலேயர்களுடன் பலமாக மோதினார். ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களின் நரித்தனமான தந்திரங்களால் கம்பெனி திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனாலும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வந்தார். 1908 ஆம் ஆண்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசியல் கைதிகளுக்கு உரிய சலுகைகள் எதுவும் அவருக்கு வழங்கப்படவில்லை. .சிறையில் செக்கிழுத்தார். கடினமாக உழைத்தார். இதனால் அவரின் உடல் நலம் குன்றியது. அதன் காரணமாக 1912 ஆம் ஆண்டு அவரை விடுதலை செய்தனர்.

ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கில தத்துவ எழுத்தாளர் அவர்கள் எழுதிய 'ஒரு மனிதனின் சிந்தனையில்' (AS A MAN THINKETH) என்ற சுய முன்னேற்றம் தொடர்பான புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார் வ.உ.சி. மக்கள் மனங்களை களையெடுத்து அதில் சுதந்திர விதைகளை விதைத்தார்...அதுவும் ஒரு ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தை மொழிபெயர்த்து.


சுதந்திரதிற்காக பாடுபட்டவர்கள் வாழ்க்கை வரலாற்றை திரு.பந்துலு அவர்கள் படமாக்கி நமக்குத் தந்தார். இது போன்ற படங்கள் அடிக்கடி ஒளிபரப்பினால் இன்றைய தலைமுறைகள் தப்பித்தவறி பார்த்து நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு வாங்கித்தந்த சுதந்திரத்தை தினமும் போற்றி பாடுவார்கள்.


மிகப் பெரிய கம்பெனிகள் கூட சுதந்திர வரலாற்றை படமாக்க முன் வருவதில்லை. மக்கள் படத்தை பார்க்க தியேட்டருக்கு வருவார்களா என்ற சந்தேகம் இருக்கும். காரணம்...சுதந்திர உணர்வு 'பத்தல..பத்தல..' என்று நினைக்கிறார்கள்.

ஓ.டி.டி. என்று ஒரு தளம் உள்ளதே... அதில் வெளியிடலாம். மகாத்மாவின் வாழ்க்கை வரலாற்றை மிக சிறப்பாக படம் எடுத்தவர் நம்மை அடிமைப்படுத்திய அதே ஆங்கில தேசத்தை சேர்ந்த இயக்குனர் திரு.ரிச்சர்ட் அட்டன்பரோ அவர்கள். 1982 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. பென் கிங்ஸ்லி அவர்கள் காந்தியாக மாறினார்.

சுதந்திரம்
சுதந்திரம்

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் திரு.ஆட்டன்பரோ அவர்கள் விருது வாங்க சென்ற போது 'ரகுபதி ராகவ ராஜாராம்' பாடல் இசைக்கப்பட்டது.

‘அன்பு நண்பர்களே, உண்மையில் இந்த விருதுகள் எனக்கோ, பென் கிங்ஸ்லிக்கோ அல்லது தொழில்நுட்பத்திற்காகவோ அல்ல. இந்த விருதுகள் மூலம் நீங்கள் மகாத்மா காந்திக்கும் நாம் அனைவரும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்ற அவருடைய குறிக்கோளுக்கும் மரியாதை செலுத்துகிறோம்‘ என்று அவர் பேசியது யாராலும் மறக்க முடியாது.

மகாத்மாவின் கொள்கைகளுக்கு உலகளவில் கொடுக்கப்பட்ட மரியாதை இது. அரிச்சந்திரா நாடகம் பார்த்து தனது வாழ்க்கை பாதையைமாற்றிக்கொண்டார். நம்மை அடிமைப் பிடியிலிருந்து விடுவிக்க ஒரு மகாத்மாவை உருவாக்கித் தந்தார் அரிச்சந்திர மன்னர்.

இன்றும் சில கிராமங்களில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் அரிச்சந்திரா நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. நாடகம் முடிந்து திரையும் விழுகிறது. இன்னும் சில மகாத்மாக்கள் வெளியே வரவில்லை.

1977 ஆம் ஆண்டு நடிகர் திலகம், கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் 'நாம் பிறந்த மண்". ஒளிப்பதிவாளர் திரு.வின்சென்ட் அவர்கள் இயக்கினார். சுதந்திரப் போராட்டத்தை கருவாக வைத்து தயாரான படம். அவ்வளவாக வெற்றி பெறவில்லை. இந்தப் படத்திலிருந்து உருவானதுதான் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'இந்தியன்' படம்.

இந்தியன் படத்தில் சுதந்திரப் போராட்ட காட்சிகள் சுமார் அரை மணி நேரம் இடம்பெற்று இருக்கும். தியேட்டர்களில் அதை கட் பண்ணி 15 நிமிடத்திற்குள் முடிந்து விடுவது போல காட்டினார்கள். 90 களில் சினிமா எடிட்டர்களை விட மிகச் சிறந்த எடிட்டர்கள் அப்போதைய தியேட்டர் ஆபரேட்டர்கள் தான்.

மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்

தனது பாடல்களால் மக்களுக்கு எழுச்சி ஊட்டியவர் மகாகவி.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே..ஆனந்த சுதந்திரம்

அடைந்துவிட்டோம் என்று..."

"தண்ணீர்விட் டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்

கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ?"

"என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்?

என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?"

-பாரதியாரின் இந்த பாடல்கள் இன்றும் பல மேடைகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. தொலைக்காட்சி போட்டிகளில் சிறு குழந்தைகள் அவர் பாட்டை பாடி பரிசு பெறுகிறார்கள்.

அக்காலத்தில் பல திரைப்படங்களில் அவரின் பாடல்கள இடம்பெற்றன. 1977 ஆம் ஆண்டு 'ஏழாவது மனிதன்' என்ற படத்தை திரு.பாளை.சண்முகம் என்பவர் தயாரித்தார். ரகுவரன் அறிமுகமான திரைப்படம் அதில் முழுவதும் பாரதியார் பாடல்களையே பயன்படுத்தினார்கள்.

திரைத்துறையை சம்பந்தப்படுத்தியே சுதந்திர தின நிகழ்வுகளை குறிப்பிட்ட காரணம் யாருக்கும் இப்போது புத்தகம் படிக்க நேரமில்லை என்று சொல்கிறார்கள்.

வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது போல தெரிகிறது. ஒரு பஞ்ச், ஒரு குட்டிக்கதை என்று வாசிக்கும் தளம் மாறி இருக்கிறது.

சிறந்த திரைக்கதை சிறந்த வசனம் சிறந்த இயக்கம் மூலமாக சுதந்திர வரலாற்றை சுலபமாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

ஒரு சந்தோஷமான நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரியில் சுதந்திர போராட்ட வரலாறு தொடர்பான 'ஓலம்' என்ற காணொளி மத்திய அமைச்சர் திரு.முருகன் அவர்களால் வெளியிடப்பட்டது. சுதந்திரத்திற்காக போராடிய பல தியாகிகள், மன்னர்கள், வீரர்கள் பற்றிய அறிய தகவல்களை உள்ளடக்கிய காணொளி இது.

சுதந்திரம்
சுதந்திரம்

இது போன்று இன்னும் பல வெளி வரவேண்டும். சுதந்திர தினத்தன்று ஒளிபரப்பாகும் சிறப்பு பட்டிமன்றத்தில் தலைப்பு சுதந்திரம் தொடர்பாக இருக்காது. பேச்சாளர்களும் ஜனரஞ்சகமாக பேச மட்டுமே தயாராகிறார்கள். நிறைய விஷயங்களை படித்து ஆராய்ந்து அதை எளிய முறையில் மக்களிடம் சேர்க்க முயல வேண்டும். படிக்கும் கட்டுரைகளை உள்வாங்கி விமர்சனம் செய்து தங்களை மேம்படுத்திக் கொண்டால் பார்வையாளர்களை ஈர்க்கலாம்.

எது சுதந்திரம் என்பதில் தெளிவு வேண்டும். யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்காக வாங்கப்பட்டது அல்ல சுதந்திரம்.


நமக்கு நாமே எல்லை வகுத்துக்கொண்டு அதற்குள் நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக வாழ வழி வகுக்க வேண்டும். இன்னொருவரின் நம்பிக்கையை, எல்லையை ஆக்கிரமிக்க நினைப்பது சுதந்திரம் அல்ல.

"நாடு அதை நாடு...அதை நாடாவிட்டால் ஏது வீடு"

பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு..

மானம் பெரிதென்று வாழும் பண்பாடு..."

-நாட்டிற்காக பாடப்பட்ட திரைப்பட பாடல் இது.


நாடும் ஒரு கோயில்தான். அங்கே குடிக்கொண்டு இருப்பது நமது பாரத அன்னைதான்.

எதற்காக கோவிலுக்கு செல்கிறோம். அமைதியைத் தேடி நல்வாழ்வு தொடர பிரார்த்தனை செய்கிறோம்.

உள்ளத்தில் உள்ள குப்பைகளை வெளியே கொட்டிவிட்டு திறந்த மனதோடு கோயிலுக்குள் செல்வோம். சாந்தி பெற்று திரும்புவோம்....குப்பைகளை . கண்டுகொள்ளாமல்.

75 அல்ல இன்னும் பல நூற்றாண்டுகள் கொண்டாடப்படும் இந்த சுதந்திர தினத்தை நமது சந்ததியினர் கண்டு களிப்பார்கள். அவர்களுக்கு நாம் விட்டுச் செல்வது நமது சுதந்திர உணர்வுகளை மட்டுமே. இதுதான் நம் பரம்பரை சொத்து.

வீட்டில் மட்டுமல்ல நம் உள்ளத்திலும் ஏற்றுவோம் தேசியக்கொடியை.

மனதி லுறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்.

-பாரதி சொன்னதை செய்து தேசம் காப்போம்....


வந்தே மாதரம்...ஜெய் ஹிந்த்..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.