வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சமீப காலமாக சமுக வலைதளங்களில், யூடியுப்களில் மழலைகளின் திறமைகளும், சுட்டித் தனங்களும் அதிகமாக பார்க்க முடிகிறது. ஒவ்வொரு குழந்தைகளின் குட்டி குட்டி ரியாக்ஷன்களைப் பார்க்கும் போதும் அப்படியே அள்ளிக் கொஞ்சிக் கொள்ளலாம் போல் இருக்கும். இக்கால பெற்றோர்கள் தன் குழந்தைகளுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறார்கள். இந்த ஜெனரேஷன் குழந்தைகள் அனைவருக்கும் அவர்கள் கேட்டது கேட்ட நேரத்தில் கிடைத்து விடுகிறதல்லவா என்று எண்ணியபடியே இந்த குழந்தைகளின் வீடியோக்களைப் பார்த்துக்கொண்டே இருக்க, என்னை அறியாமலே மனதில் சுற்றிக் கொண்டிருந்த காலச் சக்கரம் என்னை என்னுடைய குழந்தை பருவத்திற்கு கொண்டு போய் இறக்கி விட்டிருந்தது.

இது தான் என் குழந்தை பருவம்..!!! ம்ம்ம்... உடம்பில் ஒரு துணி கூட இல்லாமல் எவ்வளவு சுதந்திரமாக மண்ணில் அழகாக வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்கிறேன். அட, ஐஸ்க்கார அண்ணா வந்துவிட்டார்... விரல் சூப்பிக் கொண்டு அம்மாவிடம் ஓடிப்போய் அடம்பிடித்து வெறும் முதுகில் சுளீர் சுளீர்னு ரெண்டு அடி வாங்கி என்னால் ஐஸ்க்கார அண்ணனும் அம்மாவிடம் திட்டு வாங்கி ஒரு வழியாக நான் ஐஸை வாங்கி நாக்கில் வைக்கும் போது... ஆஹா.... என்ன சுவை என்ன சுவை..! அம்மாவிடம் வாங்கிய அடியெல்லாம் ஐஸ் போல கரைந்திருக்கும்.(மனசுக்குள்) நாளைக்கும் மறக்காம வந்திடுங்க ணா..!
என்னிடம் போன் இருந்திருந்தால் முதலில் ஐஸ்கார அண்ணாவிடம் ஒரு செல்ஃபி... இல்லணா இங்க பாருங்க நண்பர்களே இப்போ நாம என்ன பண்ண போறோம்னா ஐஸ் சாப்பிட போறோம்னு ஒரு வீடியோ... அப்படியும் இல்லனா ஏய்... எப்புறா... ஐஸ் இந்த கைக்கு வந்திடுச்சுனு ஒரு மேஜிக்... என்னென்னவோ பண்ணிருக்கலாம் இல்ல... என நினைக்கும் போது சட்டென மன ஓட்டத்திலிருந்து வெளியே வந்து விட்டேன். ஆனால் விழுந்தவன் மீட்கப்படாமல் விழுந்த இடத்திலே கிடக்கிறேன்.

கடவுள் தோன்றி என்ன வரம் வேண்டுமெனக் கேட்டால் குழந்தை பருவம் அல்லது பள்ளி பருவத்தில் மீண்டும் வாழ வேண்டும் என்று தான் கேட்பேன். எந்நேரமும் ஏதோ ஒரு சந்தோஷம், எதிர்பார்ப்பு, ஆச்சரியம் என அதிசயங்களாக இருக்கும். களி மண்ணில் பொம்மைகள் செய்வோம், தென்னை மட்டையில் பேட் செய்வோம், தென்னை ஓலையில் வாட்ச், மோதிரம், விசில், மரத்தின் இலைகள் தான் காசு. சின்ன இலை சில்லறை காசுகள், பெரிய இலை நோட்டு காசுகள், திருடன் போலீஸ், கிரிக்கெட் கார்ட்ஸ், WWE கார்ட்ஸ், அன்டர்டேக்கருக்கு சாவே இல்லையாம் டா ஏழு முறை செத்து பிழைச்சவன் டா என்ற உருட்டுகள் என இன்று நினைத்தால் நம் குழந்தை பருவத்தில் அவ்வளவு சந்தோஷமாகத்தானே இருந்திருக்கிறோம்... என்று தோன்றுகிறது.
ஆனால் நாம் சந்தோஷப்பட்ட விஷயங்கள் அத்தனையும் நிஜங்களால் வந்தவை அல்ல... அத்தனையும் கற்பனைகளின் நீட்சியே. மயிலிறகு குட்டி போடும் என்ற கற்பனை, பென்சிலை துருவி கஞ்சியில் போட்டா ரப்பர் வரும் என்ற கற்பனை என குழந்தை பருவம் முழுக்க முழுக்க கற்பனையிலேயே சந்தோஷங்களை சேகரித்து வாழ்ந்துவிட்டோம். இன்று விவரம் தெரிந்த பிறகு மனதின் ஓரத்தில் நிஜத்தில் இழந்ததின் ஏக்கங்கள் ஆழமாக பதிந்திருக்கிறது. பெற்றோரின் மீது லேசாக கோபம் கூட வருகிறது. இதுவரை திருவிழாவில் ஒரு பொம்மைக்கூட வாங்கி கொடுத்ததில்லை. படிப்பு படிப்பு என ஒரு நாளும் விளையாட அனுமதித்ததில்லை.

படம் பார்த்தால் கெட்டுப் போய்விடுவோம் என டிவி பார்க்க விட்டதில்லை என குழந்தை பருவத்தில் ஆசைப்பட்டது, அனுபவிக்க நினைத்து கிடைக்காமல் போனது அத்தனையும் மனதில் இருந்து ஏதோ செய்கிறது. குழந்தை பருவத்தில் நம் விருப்பங்கள் அத்தனையையும் ஏதோ ஒரு காரணங்களால் மறுக்கப்பட்டிருக்கும் இல்லையேல் கடுகடுப்பான, கராரான தொணியில் அடக்கப்பட்டிருப்போம். இயலாமை, ஏக்கம், எதிர்பார்ப்பு அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. எனது குழந்தை பருவத்தை நினைத்துப் பார்த்தால் பிறந்தநாள் கொண்டாடும் பையன் பின்னாடியே நாள் முழுக்க சுற்றி அவனிடம் நல்ல பெயர் எடுத்து எக்ஸ்ட்ரா ஒரு மிட்டாய் வாங்கியது தான் அதிகபட்ச சாதனையாக இருக்கிறது.
கடலில் கலந்த நெகிழியைப் போல காலங்களோடு சேர்ந்து இவ்வளவு தூரம் ஓடி வந்து விட்டோம். இன்றைய குழந்தைகளைப் பார்க்கும் போது நாமெல்லாம் ஒருநாளும் இப்படி சொகுசாக இருந்தில்லையே நம் பெற்றோர் இப்படி கவனித்துக் கொண்டதில்லையே என்ற கவலை கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது. சரி அதை விடுவோம். எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிடுதில்லை. எல்லா காலக்கட்டங்களிலும் எல்லோருக்கும் நிறை குறைகள் இருக்கத்தானே செய்யும்.

நம் குழந்தை பருவத்து குறைகளை எந்த சமன்பாடுகள் கொண்டும் தீர்க்க இயலாது என்பது உண்மை தான். ஆனால் இழந்த குழந்தைப் பருவத்தை மீட்க குழந்தையாக மாறுவதை விட வேறென்ன வாய்ப்பு இருந்து விடப் போகிறது. நாம் இன்றும் ஏங்குவது அந்த குழந்தை பருவத்திற்கு தானே. நாம் இன்று இழந்து இருப்பது அந்த குழந்தை தன்மையை அந்த குழந்தை மனதைத் தானே. இல்லாத போது இப்படி தான் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். இருக்கும் போது அனுபவிக்க மறந்துவிடுகிறோம். துன்பத்தை மறக்க ஒரே வழி இன்பமாக இருப்பது தான். நமக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைகளை வெளியில் எடுப்போம்... இருக்கும் நாட்களை கொண்டாடி மகிழ்வோம்..! "ஹலோ... கடைக்கார அண்ணா, அந்த ரிமோட் கார் என்ன விலை..!!!"
-கோ.ராஜசேகர், தருமபுரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.