Published:Updated:

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது! | My Vikatan

Representational Image

சித்தாள்கள் மற்றும் நாட்டுப்புற பெண் கலைஞர்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்து நிறைய படைப்புகள் விவாதம் செய்துள்ளன.

சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது! | My Vikatan

சித்தாள்கள் மற்றும் நாட்டுப்புற பெண் கலைஞர்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்து நிறைய படைப்புகள் விவாதம் செய்துள்ளன.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"பொற்காலமாக இருந்தாலும்

இவள் தலையில் எழுதியதோ

கற்காலம் தான் எப்போதும்.

செத்தாலும் சிறிதளவே

சலனங்கள் ஏற்படுத்தும்

சித்தாளின் மனச்சுமைகள்

செங்கற்கள் அறியாது!" - கவிஞர் நாகூர் ரூமி எழுதிய "சித்தாளு" என்கிற தலைப்பில் எழுதிய கவிதையில் இடம்பெற்றிருக்கும் வரிகள் இது.

சமீபத்தில் வெளியான "ஆதார்" என்கிற தமிழ்த் திரைப்படம் கட்டிடத் தொழிலாளியின் இன்னல்களை அழுத்தமாகப் பேசியது. அப்படத்தில் கட்டிடத் தொழிலாளியின் மனைவி திடீரென ஒருநாள் காணாமல் போய்விடுகிறார். காணாமல் போன அந்தக் கட்டிட தொழிலாளியின் மனைவிக்கு என்ன நேர்ந்தது என்பது மீதிக்கதை.

ஆதார்
ஆதார்

அடித்துக் கொன்றுப் போட்டாலும் ஏன் என்று கேள்வி கேட்க ஆள் இல்லாத இச்சமூக அமைப்பில் கட்டிட தொழிலாளியின் மனைவியை பற்றி விசாரணை மேற்கொண்ட, அதிகார வர்க்கத்தினருக்கு துணைநிற்கும் காவல்துறையினர், "உன் மனைவி எவன் கூடவோ ஓடிவிட்டாள்" என்று பொய்யைக் கூறி புகார் கொடுத்த கட்டிட தொழிலாளியை அதற்குமேல் பேசவிடாமல் வாயடைத்து அனுப்புகிறார்கள்.

இத்திரைப்படத்தில் கட்டிட தொழிலாளியின் மனைவியை சித்தாளாக காண்பிக்கவில்லை என்றாலும் நிஜத்தில் பெரும்பாலான கட்டிட தொழிலாளிகளின் மனைவிகள் சித்தாள் வேலைக்குச் செல்பவர்களாக தான் இருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் வரும் இக்காட்சி சித்தாள் வேலை செய்யும் பெண்கள் அப்படி இப்படி என்று ஒழுக்கம் கெட்டவர்களாக தான் இருப்பார்கள் என்று காலம்காலமாக கட்டமைக்கப்பட்ட மேல்தட்டு மக்களின் அபத்தமான ஆபத்தான பார்வையை விளக்குகிறது. சித்தாள்களின் வாழ்க்கைச் சூழலை கொஞ்சம் கூட புரிந்துகொள்ளாமல் தன்மானமற்ற நாக்குகள் இஷ்டத்துக்கும் கட்டுக்கதைகள் பேசுவது இன்றளவும் கிராமப்புறங்களில் புழக்கத்தில் உள்ளது. சித்தாள்கள் போலவே நாட்டுப்புற பெண் கலைஞர்கள் மீதும் இந்தப் பார்வை காலம்காலமாக கட்டமைக்கப்பட்ட ஒன்று.

சித்தாள்கள் மற்றும் நாட்டுப்புற பெண் கலைஞர்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்கள் அவர்கள் அனுபவிக்கும் வேதனைகள் குறித்து நிறைய படைப்புகள் விவாதம் செய்துள்ளன. குறிப்பாக எஸ்.ராமகிருஷ்ணனின் "சஞ்சாரம்", சுந்தர ராமசாமியின் "இரண்டு முகங்கள்" போன்ற படைப்புகள் முக்கியமானவை. சமீபத்தில் ஆனந்த விகடனில் வெளியான வழக்கறிஞர் எம்.எம்.தீன் அவர்களின் "கரகம்" சிறுகதை மனதை கனக்கச் செய்துவிட்டது. குறிப்பாக சிறுகதையின் முடிவு வரிகள் எக்காலத்திற்கும் மறக்க முடியாதவை. ஆனால் அவர்களுக்கு நடக்கும் இன்னல்கள் இன்னும் எள்ளளவும் மாறவில்லை. அவர்களை ஆபாச பொம்மைகளாக சித்தரித்து நடக்கும் கேலிக்கூத்துக்கள் இன்றும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் உள்பட பல இடங்களில் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இந்த மாதிரியான கலைஞர்கள் பணத்திற்காக எளிதில் தவறான நடத்தை கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள் என்பது மாதிரியான உரையாடல்களை மிக வெளிப்படையாக கிராமப்புற கலைநிகழ்ச்சிகளின்போது கேட்க முடிகிறது.

கருணாஸ் - ரித்விகா | ஆதார்
கருணாஸ் - ரித்விகா | ஆதார்

அதிலும் குறிப்பாக கணவர் இல்லாமல் வாழும் சித்தாள்களின், நாட்டுப்புற பெண் கலைஞர்களின் வாழ்க்கை ரொம்பவே பரிதாபத்துக்குரியது. கலைத்தொழிலை விட்டுவிட்டு கட்டிட வேலைக்கு வந்து சித்தாளாக வேலை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சாரத்திலிருந்து, ஏணியிலிருந்து தவறி விழுந்த சித்தாள் பெண்கள் நிறைய பேர் முதுகுத்தண்டு வலியாலும் எலும்பு தேய்மானத்தாலும் பாதிக்கப்பட்டு கடும் மன உளைச்சலுடன் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அறியாமல் இச்சமூகம் மிக எளிமையாக அவர்களை கீழ்த்தரமானவர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறது.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய விவாத நிகழ்ச்சியில் வீட்டு வேலைகள் செய்யப் போகும் பெண்களுக்கு அந்த மேல்தட்டு வீட்டுக்காரர்கள் தனி தட்டுகள் வழங்கி அவர்களின் மீது நவீன தீண்டாமையை செலுத்துகிறார்கள் என்பது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. தனி தட்டு கொடுப்பதற்கு காரணமாக, இந்த மாதிரியான பெண்கள் சுத்தமாக இருப்பதில்லை என்று கூறினர் மேல்தட்டு வர்க்கத்தினர்.

Representational Image
Representational Image

தூய்மை பணியாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், நாட்டுப்புற கலைஞர்கள், சித்தாள்கள் போன்ற கட்டுமான தொழிலாளர்கள் இன்னபிற விளிம்புநிலையில் உள்ள பெண்கள் எல்லாம் நாகரிகமற்றவர்கள், சுத்தமற்றவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள் என்பது மாதிரியான கீழ்மைத்தனமான கதைகளும் பதிவுகளும் இணையதளங்கள் யூடியூப் போன்ற ஊடகங்களில் நிறையவே கொட்டிக் கிடக்கின்றன. அந்த மாதிரியான பொதுப்புத்தியால் இன்றும் பெரும்பாலான பணியிடங்களில் அவர்கள் ஒருமையில் தான் அழைக்கப்படுகிறார்கள். ஆதலால் எளிய மக்கள் கீழ்த்தரமானவர்கள் என்பது மாதிரியான மனிதத்தன்மையற்ற பதிவுகளை இணையம் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து அகற்ற அரசு உத்தரவிட வேண்டும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.