Published:Updated:

ஆடிப்பெருக்கும்.. அழகிய காதலும்..! - 70ஸ் நினைவலை

Representational Image
Representational Image

ஆடியில், அவன் பிறந்த மாதத்தில்தான் ‘ஆடிப் பெருக்கு’ வருகிறது. அவன் பிறந்ததும் வந்த முதல் விழா அது என்பதால் அவனுக்கும் அதன் மீது அலாதி விருப்பம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

‘ஆடி வெள்ளி

தேடி உன்னை

நானடைந்த நேரம்...

கோடி இன்பம்

நாடி வந்தேன்

காவிரியின் ஓரம்!...’

என்ற ‘மூன்று முடிச்சு’ பாடல் அவனுக்கு மிகவும் பிடிக்கும். இளமையான கமல்-ஶ்ரீதேவி ஜோடி, ஆலமர விழுதுகளுக்கு இடையே நடந்து வருவதால் மட்டுமல்ல,அவன் பிறந்ததும் ஆடித் தலை வெள்ளியில் என்பதாலும்.

அம்மா சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ‘என் கடைக்குட்டிப் பையன் பிறந்தது ஆடித் தலை வெள்ளியில்!’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.

அவன் அடம் பிடித்துச் சண்டை போடும்போது, அவனுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொல்வார், ‘நான் பொறந்தது வெள்ளிக் கிழமை ராஜா தேசிங்கு.. சண்டை பொறந்தது வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு!’ என்று.. தேசிங்கு ராஜன் பாடல் ஒன்று இருப்பதையும்.

என்னதான் அறிவு பூர்வமாகச் சிந்தித்து, ‘எல்லா நாளும் நல்ல நாளே’ என்று வெளியில் சொன்னாலும், நமக்குச் சாதகமாகச் சொல்லப்பட்டவற்றை எண்ணி மனதில் எப்பொழுதும் ஒரு சின்ன சந்தோஷம் ஊடாடும்.’ அந்த ஊடாட்டம் இன்று வரை அவனுக்குள்ளும் உண்டு. அவனும் சராசரி மனிதன்தானே.

ஆடிப் பெருக்கு
ஆடிப் பெருக்கு

ஆடியில், அவன் பிறந்த மாதத்தில்தான் ‘ஆடிப் பெருக்கு’ வருகிறது. அவன் பிறந்ததும் வந்த முதல் விழா அது என்பதால் அவனுக்கும் அதன் மீது அலாதி விருப்பம். காவிரியின் கிளை ஆறான மரைக்காக் கோரையாற்றுப் பாசனத்தில்தான் அவர்கள் ஊர்.

அப்பொழுதெல்லாம் ஆடிப் பெருக்கின் போது,ஊரெங்கும் நீராகவே இருக்கும்.

குட்டை, குளம்,வாய்க்கால், ஆறு என்று அத்தனை நீர் நிலைகளும் பொங்கி வழியும்.

பௌர்ணமி சமயத்தில்,ஊரைச் சுற்றியிருக்கும் நஞ்சை நிலங்கள் அனைத்திலும் நீர் நிறைந்திருக்க, நிலவு அந்த நீரில் முகம் பாரக்க, அந்த ஒளியழகைப் பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.’காணக் கண் கோடி வேண்டும்!’ என்று சொல்வதன் அர்த்தம் அப்போது நன்றாகவே புரியும்.

அப்பொழுதெல்லாம், பெண்களை வெளியில் எங்கும் பார்க்க முடியாது. இரவு எட்டு மணிக்கு மேல் ஊர் சற்றே அடங்கியதும், அவரவர் வீடுகளுக்குப் பக்கத்திலுள்ள குட்டை, குளங்களுக்குக் குளிக்கவும், பாத்திரம் கழுவவும் வருவதோடு சரி. வருடத்தில் ஒரு நாள் பகலில் அவர்கள் வெளிவரும் நாள், பெரும்பாலும் ஆடிப்பெருக்கு தினமாகத் தான் இருக்கும்.

அந்த நாளில் ஆற்றிலோ, வாய்க்காலிலோ,குளத்திலோ கும்மி கொட்டுவது என்பது தொன்று தொட்டு தொடர்ந்து வரும் பழக்கம். அதற்காக ஓரிரண்டு மாதங்கள் முன்பிருந்தே ‘குப்பி’ தட்டுவார்கள். குப்பி என்பது சாணத்தால் தட்டப்படும் ‘வரட்டி’ க்குத் தங்கை என்று கொள்ளலாம். தற்போதுள்ள ‘பட்டர் பிஸ்கட்’ வடிவிலானது. அதனைத் தயாரித்துக் காய வைத்து விடுவார்கள். ஆடிப் பெருக்கென்று அதனை நீரில் விடுவார்கள்.

 ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் பதினெட்டாம் நாள், (அதனால்தான் ஆடிப் பெருக்குக்கு ஆடிப்பதினெட்டு என்ற மற்றொரு பெயரும் உண்டு) காலை உணவை முடித்துக் கொண்டு சுமார் 11 மணியளவில், கன்னிப் பெண்களெல்லாம் ஒன்று கூடி கும்மி கொட்டும் நீர் நிலைக்கு வருவார்கள். மற்ற ஊர்களில் எப்படியோ... எங்கள் இளமைக் காலத்தில், எங்கள் ஊரில் இந்த நேரத்தைத்தான் அவர்கள் தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.

பிடாரி குள வட கரையில் ஓடும் வாய்க்கால்தான் அவர்கள் கும்மி கொட்டும் இடம்.

பிடாரி கோயிலைத்தாண்டி,குளத்தின் மேற்குக் கரையில் ஐயனாரின் ஈச்ச மர பிரான்ஞ்சைத் தாண்டி 50 மீட்டரில் அந்த வாய்க்கால்.

இங்கு ஐயனார் மூலம் உள்ள மற்றொரு பெருமையையும் சொல்லியாக வேண்டும்.

எப்படி மதுரை சொக்கர் ‘பிட்டுக்கு மண் சுமந்து….’ வேலைக்கு உணவுத் திட்டத்தை அந்தக் காலத்திலேயே ஆரம்பித்து வைத்தாரோ, அது போலவே கோயிலின் பிராஞ்ச் ஆக உள்ள நிலையை அந்த ஊர் ஐயனார்தான் அந்தக் காலத்திலேயே ஆரம்பித்து வைத்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊரிலிருந்து 3 கி.மீ.,க்கு அப்பால், ஆற்றங்கரையில் இரண்டொரு மரங்களுடன் நின்றிலங்கும் தலைமை பீட ஐயனாருக்கு, ஊருக்கு அருகிலுள்ள பிடாரி குளக் கரையில் நிற்கும் ஈச்ச மரமே பிராஞ்ச். தூரத்திலுள்ள தலைமையிடத்துக்குப் போக முடியாத வயதானோர்,குளிக்க வரும்போதே ஈசி யாக அவரை வணங்கிக் கொள்ள ஏதுவாக இந்த ஏற்பாடு. இந்த ஏற்பாடு தொன்று தொட்டு வருவது.

வங்கிகளும், வேறு பல நிறுவனங்களும் கிளைகளை நிறுவ, அந்த ஊர் ஐயனார்தான் முன்னோடியோ என்ற எண்ணம் அங்குள்ளவர்களுக்கு அதிகமாகவே உண்டு.

பிராஞ்ச் ஐயனாரைத் தாண்டி, பெண்கள் வாய்க்கால் கரையை அடைவதற்குள்ளாக உள்ள 50 மீட்டர் தூரத்தில்தான் அந்த வேடிக்கை நடக்கும். இளைஞர்கள் நொச்சிச் செடிகளுக்குள் மறைந்திருந்து அந்தக் கன்னிப் பெண்கள் கொண்டு வரும் குப்பிகளையும் மற்றும் தட்டில் கொண்டு வரும் பழம் தேங்காய் போன்றவற்றையும் பிடுங்கிக் கொள்ள முயல, அதனை அவர்கள் தடுத்துக் கொள்ள, ஒரே கூத்தாக இருக்கும். அன்றைக்கு மட்டும் இளைஞர்களுக்கு அவ்வாறு விளையாட பர்மிஷன் உண்டு.

அப்பொழுது இந்த விளையாட்டில் வைத்தியநாதன்தான் மும்முரமாக இருப்பார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் ஓடுவார்கள். அதில் அவனும் அடக்கம். அந்த விளையாடல் சுமார் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் மட்டுமே நீடிக்கும். முறைப் பெண்களை வம்புக்கு இழுப்பதும், அவர்கள் ஆண்களின் மீது தண்ணீரையள்ளி அடிப்பதுமாக அந்த விழா நடைபெறும்.

அதன் பிறகு, ஊற வைத்து வெல்லம், சர்க்கரை கலந்த அரிசியைக் கடவுளுக்குப் படைத்து, கும்மி கொட்டியபடி பிடித்து வைத்த பிள்ளையாரைச் சுற்றி வந்து வணங்க, விழா முடிவுக்கு வரும்.

ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு

எல்லோருக்கும் ஊற வைத்த அரிசி வினியோகிக்கப்படும். கன்னிப் பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே கொண்டாடும் இன்ப விழா இது.

திருமணமான பெண்கள், தாலி பெருக்கிப் போடும் விழாவாகவும் இதனைக் கொண்டாடுகிறார்கள். கல்யாணத்தன்று கட்டப்பட்ட கயிற்றை மாற்றி வேறு கயிற்றுக்குத் தாலியை மாற்றிக் கொள்வார்கள்.

வைத்தியநாதன் இப்படி இரண்டு மூன்று ஆண்டுகள் தொடர்ந்தபோதுதான் அது நடந்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பு வந்த மற்றப் பெண்கள் திருமணமாகிப் போய் விட, அந்தப் பெண் மட்டும் மூன்றாவது ஆண்டும் வந்ததும், வைத்திய நாதனுக்கு அந்தப் பெண் மீது அலாதிப் பாசம் ஏற்பட, அதுவே பின்பு காதலாக மாறி விட்டது.

ஐயங்குளத்திற்கு இரவு நேரங்களில் அந்தப் பெண் வருவதை அறிந்த வைத்திய நாதன், அங்கேயே சுற்றித் தன் காதலைத் தெரிவிக்க, முதலில் மறுத்த அந்தப் பெண் பின்னர் ஏற்றுக் கொள்ள, பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் இனிதே நடந்தேறியது.

அடுத்த ஆண்டு ஆடிப் பெருக்கில் வைத்தியநாதன் தம்பதியர் அந்த நீர்த் துறையில் தாலி பெருக்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

-ரெ.ஆத்மநாதன்,

மெக்லீன்,அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு