Published:Updated:

நடந்தாய் வாழி காவேரி! | My Vikatan

ஆடிப் பெருக்கு ( Vikatan Library )

ஆடி மாதம் சூரியன் சிறிது சிறிதாக நகர்ந்து தென்திசை நோக்கி செல்லும். ஆடி முதல் மார்கழி மாதம் வரையில் தென் திசையில் இருக்கும். இதற்கு தட்சிணாய புண்ணியகாலம் என்று சொல்வார்கள்.. இந்த காலத்தில் காவிரியில் புனித நீராடுதல் சிறந்தது.

நடந்தாய் வாழி காவேரி! | My Vikatan

ஆடி மாதம் சூரியன் சிறிது சிறிதாக நகர்ந்து தென்திசை நோக்கி செல்லும். ஆடி முதல் மார்கழி மாதம் வரையில் தென் திசையில் இருக்கும். இதற்கு தட்சிணாய புண்ணியகாலம் என்று சொல்வார்கள்.. இந்த காலத்தில் காவிரியில் புனித நீராடுதல் சிறந்தது.

Published:Updated:
ஆடிப் பெருக்கு ( Vikatan Library )

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ஆடி மாதம் பிறந்ததும் ஜவுளி கடைகள் மட்டுமல்ல கோயில்களும் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்துவிடும்.

ஒரு பக்கம் ஆடித் தள்ளுபடி மறுபக்கம் ஆடி வெள்ளி, ஆடி பூரம், ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை.... என்று மாதம் போவதே தெரியாது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல வருவது தான் ஆடிப்பெருக்கு . ஒவ்வொரு வருடமும் ஆடி 18 ந் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

எண்ணிக்கை அடிப்படையாக வைத்து கொண்டாடப்படும் பண்டிகை இது மட்டும்தான்.

ஆடிப்பெருக்கு நம் உள்ளத்தையும் இல்லத்தையும் மகிழ்விக்கும் ஒரு சிறந்த நாள். மற்ற பண்டிகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இதற்கு கொடுக்கப்படுவதில்லை. ஒரு முழுமையான அரசு விடுமுறை இந்த நாளுக்கு விடவேண்டும் என்று இதுவரையில் எந்த அரசும் சிந்திக்கவில்லை. வெறும் அரசியல் ஆதாயத்திற்காக காவிரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த காவிரி அன்னையின் மனதை குளிர வைக்க நம்மால் முடிந்ததை ஆடிப்பெருக்கில் செய்ய வேண்டும்..

தஞ்சாவூர் சீனிவாசபுரம் புதாறு படித்துரை -ஆடிப்பெருக்கு
தஞ்சாவூர் சீனிவாசபுரம் புதாறு படித்துரை -ஆடிப்பெருக்கு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பஞ்சபூதங்களாகிய நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளோடு இணைந்துதான் நாம் வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறோம். அதில் 'நீர்' பிரதானமானது.

"நீர் இன்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு." -என்று வள்ளுவர் நீரின் முக்கியத்துவத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார்.

ஆடிப்பெருக்கு என்றதும் 1970 கிட்ஸ்களின் காதுகளில் ஒலிப்பது "ஆடியில பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி

வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக, எம்மை வாழ

வைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக.."

1970களில் வெளிவந்த "ராதா" என்ற படத்தில் அந்த கால குணச்சித்திர நடிகை பிரமிளா நடித்து இடம்பெற்ற பாடல்தான். இன்றும் சில தொலைக்காட்சியில் ஆடிப்பெருக்கு அன்று ஒளிபரப்புவார்கள்.

1960 கிட்ஸ் களுக்கு ஜெமினி, சரோஜாதேவி நடித்த 'ஆடிப்பெருக்கு' என்று அதே பெயரில் இயக்குனர் கே.சங்கர் இயக்கிய படம் நினைவுக்கு வரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொன்னியின் செல்வன் கதை துவங்குவதே ஆடிப்பெருக்கு நாள் அன்றே. வந்தியத்தேவனோடு நம்மையும் தனது வர்ணனைகளால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ நாட்டில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு விழாவுக்கு கல்கி அவர்கள் அழைத்துச் சென்று விடுவார்.

``ஆடிப்பெருக்கு அன்று சோழ நாட்டில் உள்ள அனைத்து நதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடும். அனைத்து ஏரிகளும் நிரம்பி வழியும். அதில் ஒன்று தான் கடல் போல விரிந்து பரவி இருக்கும் வீராணம் ஏரி. விழாவைக் கொண்டாட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர். ஆண்கள் பெண்கள் அனைவரும் புத்தாடை அணிந்திருந்தார்கள். பெண்களின் கூந்தலை தாழம்பூ, செவ்வந்தி, முல்லை, மல்லிகை, இருவாட்சி, செண்பகம் ஆகிய மலர்கள் அலங்கரித்தன.

கூட்டாஞ்சோறு, சித்திரான்னம் (புளிச்சாதம், சக்கரைப்பொங்கல்,எலுமிச்சை சாதம், தயிர் சாதம்) எடுத்துக்கொண்டு பலர் குடும்பம் குடும்பமாய் வந்திருந்தார்கள்." இப்படி மிக மிக அழகாக வர்ணித்திருப்பார் கல்கி.

ஆடிப்பெருக்கு
ஆடிப்பெருக்கு

இக்காலத்தில் பொன்னியின் செல்வன் நாவலை முதன் முதலாக படிக்கும் ஆண் பெண் இருவருக்கும் அதில் சொல்லப்பட்ட தாழம்பூ, கூட்டாஞ்சோறு, சித்திரான்னம் போன்ற செய்திகள் புதுமையாக இருக்கும்.

கிராமங்களில்கூட பெண்கள் கூந்தலில் தாழம்பூ அணிவது நின்று போய் சுமார் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். மேலும் "மதுரை வீரன்" எம்.ஜி.ஆர். அவர்களை, நாவல் வாசித்த 1960 -1980 காலகட்ட இளைஞர்கள் வந்தியத்தேவனாக பார்த்தார்கள். அவர்கள் தங்கள் மனதில் "பருத்திவீரன்" கார்த்தியை இவருக்கு பதில் இவர் என்று நிலைநிறுத்திக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

ஆடி மாதம் சூரியன் சிறிது சிறிதாக நகர்ந்து தென்திசை நோக்கி செல்லும். ஆடி முதல் மார்கழி மாதம் வரையில் தென் திசையில் இருக்கும். இதற்கு தட்சிணாய புண்ணியகாலம் என்று சொல்வார்கள்.. இந்த காலத்தில் காவிரியில் புனித நீராடுதல் சிறந்தது. தட்சிணாயன புண்ணிய நதி என்ற பெருமை காவிரிக்கு மட்டுமே உண்டு.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகிய 'பட்டினப்பாலை' யில் காவிரியின் பெருமைகளை போற்றிப் பாடியுள்ளார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

"வசையில் புகழ் வயங்கு வெண்மீன்,

திசை திரிந்து தெற்கு ஏகினும்,

தற்பாடிய தளி உணவின்

புள் தேம்பப் புயல் மாறி

வான் பொய்ப்பினும், தான் பொய்யா

மலைத் தலைய கடல் காவிரி,

புனல் பரந்து பொன் கொழிக்கும். ." -அதன் பொருள்

குற்றமற்ற புகழினையுடைய வெள்ளிக்கோள், தான் நிற்கின்ற வடதிசையிலிருந்து தென் திசைக்குப் போனாலும், தன்னைப் (வானத்தை) பாடி, மழைத்துளிகளையே உணவாக உண்டு வாழும் வானம்பாடிப் பறவை தனக்கு உணவான மழைத்துளிகளைப் பெற முடியாமல் வருந்துமாறு மழை மேகம் திசை மாறி மழை பெய்யாது பொய்த்தாலும் தான் பொய்க்காமல் இருப்பது காவிரியாறு. இக்காவிரியாறு குடகுமலையில் தோன்றி கடல் போன்று எங்கும் பரந்து பொன்னாக விளை நிலங்களைச் செழிக்கச் செய்யும்.

ஆடிப் பெருக்கு
ஆடிப் பெருக்கு

கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகி பல இடங்களை கடந்து ஒகேனக்கல் அருவியை அடைந்து பின் அங்கிருந்து மேட்டூர் அணை நோக்கி செல்கிறது. அங்கு தேக்கப்படும் நீர் 100 அடிக்கு மேல் சென்றதும் (நீர்வரத்து பொறுத்தே) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தர்மபுரி சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், முசிறி, திருச்சி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை இறுதியாக பூம்புகாரில் கடலில் கலக்கிறது.

தென்மேற்கு பருவக்காற்று வீசும் காலங்களில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதையே ஆற்றுப்பெருக்கு என்பார்கள். ஆற்றுப்பெருக்கு வரும் மாதத்தையே ஆடிப்பெருக்கு என்கிறார்கள். இந்த ஆற்றுப்பெருக்கு காலத்தில்தான் வேளாண் பணிகள் முழு வீச்சில் நடைபெற ஆரம்பிக்கும். 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழி இப்படித்தான் உருவானது. தங்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் காவிரி அன்னைக்கு நன்றி செலுத்தும் நாள் தான் ஆடிப்பெருக்கு.

காவிரிக் கரையோரங்களில் உள்ள ஊர்களில் இது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை, பவானி கூடுதுறை ,ஈரோடு, பரமத்தி, குளித்தலை, திருச்சி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய இடங்களில் காவிரியை வழிபட மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருவார்கள்.

திருச்சி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா
திருச்சி காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா

அன்றைய தினம் பெண்கள் காவிரியில் குளித்து கரையில் வாழை இலை போட்டு வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து அகல் விளக்கேற்றி விவசாயம் செழிக்கவும் நாடு செழிக்கவும் வழிபாடு செய்வார்கள்.

புதுமணத் தம்பதிகள் கல்யாண மாலைகளை காவிரியில் விடுவார்கள். தாலி பெருக்கி போட்டுக்கொள்வார்கள். மற்ற சுமங்கலி பெண்கள் பழைய தாலியை மாற்றி புதிய தாலி அணிந்து கொள்வார்கள். காவிரி அன்னையின் அருளால் தாங்கள் நீண்ட நாட்கள் சுமங்கலியாக வாழ்வோம் என்ற நம்பிக்கைதான் அதற்கு காரணம். திருமணமாகாத இளம் பெண்கள் தங்களுக்கு நல்வாழ்க்கை அமைய வேண்டும் அடுத்த ஆடிப்பெருக்கில் ஜோடியாக வந்து நன்றி செலுத்துகிறோம் என்று கோரிக்கை வைப்பார்கள்.

சப்த கன்னியர்கள் வழிபாடு அன்று நடக்கும். பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆதிபராசக்தியின் அம்சமாக கருதப்படும் இந்த ஏழு பேர்கள் தான் சப்த கன்னியர் என்று அழைக்கப்படுகிறார்கள். நாம் எதை நினைத்து அவர்களை வழிபட்டாலும் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

காவிரி அன்னை திருவரங்கம் ரங்கநாதனுக்கு தங்கையாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு நாளன்று பெருமாள் தனது தங்கைக்கு பட்டுப்புடவையோடு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

காவிரிக்கு பொன்னி என்று ஒரு பெயரும் உண்டு.

'பொன்னி சூழ் திருவரங்கா..' என்று தொண்டரப்பொடி ஆழ்வார்பெருமாளை போற்றிப் பாடியது இதற்கு சான்றாகும்.

அருள்மொழி வர்மன் என்கிற ராஜ ராஜ சோழனுக்கு 'பொன்னியின் செல்வன்' என்ற பெயர் வருவதற்கு காரணம் உண்டு. சிறுவயதில் தாய் தந்தையருடன் காவிரியில் படகில் சென்று கொண்டு இருந்த அருள்மொழி வர்மர் தவறி நதியில் விழுந்து விட ஒரு பெண் அவரை காப்பாற்றினார்.

அது காவிரித்தாய் என்று சோழ நாட்டு மக்கள் நம்பினார்கள். அதனால்தான் அவருக்கு 'பொன்னியின் செல்வன்' என்ற பட்டப்பெயர் கிடைத்தது.

மேட்டூர் அணையில் கொண்டாடப்பட்ட ஆடி பெருக்கு திருவிழா.... படங்கள் - க.தனசேகரன்
மேட்டூர் அணையில் கொண்டாடப்பட்ட ஆடி பெருக்கு திருவிழா.... படங்கள் - க.தனசேகரன்

ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி என்று சுற்றுலா செல்கிறவர்கள், நவக்கிரக கோயில்களுக்கு குடும்பத்தோடு செல்கிறவர்கள் ஒரு முறை குடும்பத்தோடு திருச்சியில் தொடங்கி திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக பூம்புகார் வரையில் 'காவிரி உலா' சென்று வாருங்கள். வழி முழுவதும் பசுமை, பசுமை... இனிமை..., இனிமை.. என்று மனம் பொங்கி வழியும். நம் வாழ்க்கை முற்றிலும் வேறு விதமாக மாறிவிடும்.

காவிரியை வணங்குங்கள் நமது மனசு விசாலமாகும். அவள் நமக்கு மட்டுமே சொந்தம் என்ற குறுகிய மனப்பான்மை விலகிப்போகும். அவளின் பறந்து விரிந்த கரங்கள் இன்னும் நிறைய பேரை அரவணைக்க காத்திருக்கிறது.

நாகரிகங்கள் நதிக் கரையோரங்களில் தோன்றியதாக வரலாற்றில் படித்திருக்கிறோம். தமிழர்களின் அழகான அன்பான வாழ்க்கை காவிரிக்கரையோரம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்து பாரம்பரியம் மாறாத நாகரீகங்களை உலகிற்கு வழங்குகிறது.

ஆடிப்பெருக்கு நன்னாளில்

"நடந்தாய் வாழி காவேரி நாடெங்குமே செழிக்க

நன்மையெல்லாம் சிறக்க

நடந்தாய் வாழி காவேரி"

என்று அனைவரும் போற்றி பாடுவோம்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.