Published:Updated:

தன்னை செதுக்கியது யார் என்பதை என்றுமே மறக்கமாட்டார் தனுஷ்! - ரசிகரின் நம்பிக்கை

 நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் ( பா.காளிமுத்து )

"இந்த தனுசு எல்லா படத்துலயும் நல்லா நடிக்கிறான் பாரு... மாமனார மிஞ்சிடுனுவான் போல..." என்று வயதான பாட்டி ஒருவர் சொன்னதை கேட்கும்போது தனுஷ் வேற லெவல் வளர்ச்சியை அடைந்திருக்கிறார் என்றுணர முடிந்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே கிடைத்த பரிசு தான் தனுஷ்!" - ஒரு விருது மேடையில் இயக்குனர் பாலா தனுஷை பற்றி சொன்ன வார்த்தைகள் இவை. அவர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்பதை மிக இளம் வயதில் சிறந்த நடிகருக்கான இரண்டு தேசிய விருதுகள் வாங்கி நிரூபித்துள்ளார் தனுஷ். ``ரஜினி இல்லனா தனுஷ் இல்ல…'' என்று விமர்சிப்பவர்களுக்கு சிறந்த சவுக்கடி தான் இந்த இரண்டு தேசிய விருதுகள்.

 தனுஷ்
தனுஷ்

தனுசும் தேசிய விருதுகளும்:


புதுப்பேட்டை படத்தில் வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் தன் குழந்தையை எடுக்கப் போகும் காட்சி, அதே குழந்தையை குப்பைத் தொட்டியில் போடும் காட்சி, போஸ்டர் ஒட்டப் போய் எதிராளிகளிடம் தனியாளாய் மாட்டிக் கொள்ளும் காட்சி, பஸ்ஸில் பயந்துகொண்டு ஜன்னலோரம் அமர்ந்துசெல்லும் காட்சி என்று நடிப்பில் மிரட்டியிருப்பார் தனுஷ்.

இந்தப் படத்தை இப்போது பார்க்கும்போது ஏன் தனுஷிற்கு அப்போதே தேசிய விருது கொடுக்கவில்லை என்று கேட்க தோன்றுகிறது. ஆடுகளம், அசுரன் படங்கள் மட்டுமின்றி காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மரியான், மயக்கம் என்ன, வடசென்னை போன்ற படங்களுக்கும் தேசிய விருது கிடைத்திருந்தால் இந்நேரம் ஏழு தேசிய விருதுக்கு சொந்தக்காரராக இருந்திருப்பார் தனுஷ்.

இப்போதும் ஒன்றும் குறைந்திடவில்லை, சிறந்த நடிகருக்காக இரண்டு முறை, சிறந்த தயாரிப்பாளருக்காக இரண்டு முறை என்று இளம் வயதிலேயே நான்கு தேசிய விருதுகளை பெற்ற பெருமையை அடைகிறார் தனுஷ்.

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி என்றாலே அந்தப் படத்திற்கு தேசிய விருது உறுதி என்பது நாம் அறிந்ததே. அதேபோல நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்வராகவன் தனுஷ் கூட்டணி இணைந்துள்ளது. புதுப்பேட்டை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன போன்ற படங்களில் கிடைக்காத தேசிய விருது புதிதாக இணைந்துள்ள இந்தப் படத்திற்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கபடுகிறது.

தனுஷ்
தனுஷ்

இசை ரசிகர் தனுஷ்:

தனுஷ் மிகச் சிறந்த இசை ரசிகர். குறிப்பாக இளையராஜாவின் வெறித்தனமான ரசிகர். அதனால் தான் தனுஷால் பாடகராகவும் பாடலாசிரியராகவும் உருவெடுக்க முடிந்தது. அவர் அனிருத்துடன் இணையும்போது அனிருத்திடம் இருந்து வேறுமாதிரியான இசை பிறக்கிறது. அனிருத்தை சரியாக உள்வாங்கிக் கொண்டு சரியாக பயன்படுத்தியதால் தான் ``வேலையில்லா பட்டதாரி’’ படம் அவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதே போல ஷான் ரோல்டனையும் நன்கு பயன்படுத்த தெரிந்திருக்கிறார் தனுஷ். அதனால் தான் அவருக்குள் ஒளிந்திருக்கும் ஒரு இளையராஜாவை பவர் பாண்டி படத்தின் மூலமாக வெளியே கொண்டு வந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"வெண்பனி மலரே...", "பார்த்தேன் களவு போன நிலவ நான் பார்த்தேன்...", "இறைவனாய் தந்த இறைவியே..." போன்ற பாடல்களை நிறைய பேர் வாட்சப் ஸ்டேட்டஸாக வைத்திருக்கிறார்கள். இந்தப் பாடல்களை எப்போது கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பது இல்லை. தனுஷும் அனிருத்தும் சீக்கிரம் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆவல். அதே போல தனுஷ், ஜஸ்டின் பிரபாகரன், நிவாஸ் கே பிரசன்னா, கே எஸ் சுந்தரமூர்த்தி, கோவிந்த் வசந்தா போன்ற இளம் இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆவல்.

தனுஷ்
தனுஷ்

தயாரிப்பாளர் தனுஷ்:

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை முழுமையாக நம்பி, தான் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகபடுத்தியவர் தனுஷ். அந்த படம் துரை செந்தில் குமார், அனிருத் போன்ற கலைஞர்களுக்கு வாழ்வு அளித்தது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம் என்று தொடர் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தார் விஜய் சேதுபதி. சரியாக அந்த தருணத்தில் நானும் ரௌடி தான் படத்தை தயாரித்து சேதுவின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் தனுஷ். இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது அந்தப் படம்.

இயக்குனர் பா. ரஞ்சித் ரஜினியை வைத்து கபாலி என்ற படம் எடுத்தார். பெரும்பாலானோர் கபாலி படம் நன்றாக இல்லை என்று விமர்சித்த போதிலும் பா. ரஞ்சித்திற்கு ரஜினியை வைத்து இரண்டாவது படம் இயக்கும் வாய்ப்பை தந்தார் தனுஷ். அதனால் தான் `காலா' என்ற படம் மூலமாக தாராவி மக்களின் வாழ்வியலை, வாழ்வாதார பிரச்சினைகளை பா. ரஞ்சித்தால் அவ்வளவு அழுத்தமாக பதிவு செய்ய முடிந்தது. தயாரிப்பாளர் தனுஷ் இல்லையென்றால் விசாரணை, காக்கா முட்டை, அம்மா கணக்கு, வடசென்னை போன்ற அற்புதமான படங்கள் நமக்கு கிடைத்திருக்காது.

இயக்குனர் தனுஷ்:

தனுஷின் அப்பா, அண்ணன், மனைவி, மனைவியின் தங்கை என்று வீட்டிலயே நான்கு இயக்குனர்களை வைத்துள்ளார். இன்னும் சொல்ல போனால் டைரக்சன் அவருடைய ரத்தத்தில் கலந்துள்ளதால் தான் அவரால் `பவர் பாண்டி' என்கிற அற்புதமான காதல் படத்தை எடுக்க முடிந்ததோ என்னவோ. ரஜினி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஆர்யா, சூர்யா, விக்ரம், ஜான் விஜய் போன்ற நடிகர்களை வைத்து நிறைய படங்கள் தனுஷ் இயக்க வேண்டும். காக்கா முட்டை மணிகண்டன், பா. ரஞ்சித், பூ சசி, வசந்தபாலன், விக்ரம் சுகுமாரன், 96 பிரேம் குமார் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதே போல பாலாவின் இயக்கத்தில் தனுஷ் எப்போது நடிப்பார் என்ற நீண்ட நாள் கேள்விக்கும் விரைவில் விடை கிடைக்க வேண்டும்.

தனுஷ்
தனுஷ்

பெண்கள் மனதில் தனுஷ்:

"இந்த தனுசு எல்லா படத்துலயும் நல்லா நடிக்கிறான் பாரு... மாமனார மிஞ்சிடுனுவான் போல..." என்று வயதான பாட்டி ஒருவர் சொன்னதை கேட்கும்போது தனுஷ் வேற லெவல் வளர்ச்சியை அடைந்திருக்கிறார் என்றுணர முடிந்தது. அதேபோல இளம்பெண்கள் நிறைய பேர் தனுஷின் ரசிகையாக இருக்கிறார்கள், தனுஷ் ரசிகை என்பதில் பெருமையும் கொள்கிறார்கள் என்பதை சுதா கொங்கரா தன்னுடைய இறுதிச்சுற்று படத்தில் சுட்டிக் காட்டியிருப்பார்.

ஷமிதாப் படம் ரிலிசான போது ஒரு மீம் என்னை வெகுவாக கவர்ந்தது. ஒரு பெண் ஷமிதாப் படம் பார்க்க போகும்போது அந்தப் பெண்ணிடம் “உனக்கு ஹிந்தி தெரியுமா…” என்று கேட்க, அந்தப் பெண் “ எனக்கு ஹிந்தி தெரியாது… ஆனால் தனுஷ் தெரியும்…” என்பார். தனுஷ் என்ற ஒருவருக்கு ரசிகராக இருந்தால் நாம் ஒட்டுமொத்த சினிமா உலகிற்கே ரசிகராக இருக்கிறோம் என்று அர்த்தம். விகடன் மேடையில் தனுஷ் ரசிகையான மாற்றுதிறனாளி பெண் ஒருவர் “தியேட்டரில் மாற்றுத்திறனாளிகள் படம் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று தனுஷிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாவின் செல்லம் தனுஷ்:

தனுஷிற்கு இரண்டு அம்மா இருக்கிறார்கள். ஒன்று அவருடைய அம்மா… இன்னொன்று அவருடைய அண்ணன்… ஒரு விருது மேடையில் தனுஷிற்கு விருது கொடுத்த செல்வராகவன் “நான் ஒரு குழந்தையை பிரசவித்ததை போல உணர்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

"எங்கம்மா மட்டும் உயிரோட இருந்திருந்தா நான் இங்கெல்லாம் வந்திருக்கவே மாட்டேன்... இன்ஜினியராவோ டாக்டராவோ ஆயிருப்பேன்..." என்று அண்ணன் எழுதிய வசனம் பேசி புதுப்பேட்டையில் அம்மாவின் பிள்ளையாக வாழ்ந்திருப்பார் தனுஷ். அதே தனுஷ் பின்னாளில் வேலையில்லா பட்டதாரியில் "அம்மா... அம்மா..." என்ற பாடலை எழுதி அதை ஜானகி அம்மாளோடு சேர்ந்து பாடி நம்மை உருக வைத்தார். இன்றைக்கும் அந்தப் பாடல் டிவியில் வந்தால் அதை கேட்டு கண் கலங்குபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தனுஷ்
தனுஷ்

தனிப்பட்ட பெருமை:

தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய தெலுங்கு திரையுலக இயக்குனர் கே. விஸ்வநாத், அமிதாப் பச்சன், இயக்குனர் பாலுமகேந்திரா, நடிப்பு ராட்சசன்களான நாகேஷ், ரகுவரன், நவரச நாயகன் கார்த்திக் போன்ற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய மிக இளம் வயது நடிகர் என்ற பெருமை தனுஷை சேரும். தமிழ் சினிமா உலகில் இருந்து சென்று ஹிந்தியே தெரியாமல் ஹிந்தி சினிமா உலகில் கால் பதித்ததோடு மட்டுமின்றி அங்கேயும் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை வாங்கியுள்ளார் என்பது பாராட்டுக்குரியது.

தனுஷ் ஒரு விருது மேடையில் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார். தன்னை செதுக்கியது யார் என்று நன்கு தெரிந்து வைத்திருப்பதால் தான் தனுஷ் இன்றும் வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தனுஷ்!

-மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு