வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மணிவண்ணன் என்றதுமே சட்டென நினைவுக்கு வருவது அவர் எழுதி இயக்கிய "அமைதிப்படை" திரைப்படம் தான். இன்று வரை அதற்கு நிகரான அரசியல் பகடி சினிமா தமிழில் வரவில்லை என்றே கூற வேண்டும்.
சத்தியராஜ், கவுண்டமணி, வடிவேலு போன்றோருடன் பல படங்களில் அவர் இணைந்து செய்த லூட்டிகள் ஏராளம்... என்றபோதிலும்,
சூரிய வம்சம் படத்தில் "மரியாதைங்" என்று சொல்லிவிட்டு துண்டால் முகத்தை ஒருபுறம் மறைத்துக்கொண்டு மது அருந்தும் காட்சியும், ஆர்மிகாரரின் சட்டையை பிச்சைக்காரருக்கு தானமளித்துவிட்டு வரும் மணிவண்ணனை இரண்டாம் முறை பார்க்கும் பிச்சைக்காரர் "மகாபிரபு" என்று அழைக்கும் காட்சியும், ஔவை சண்முகி படத்தில் ஔவை சண்முகியை மணிவண்ணன் கையில் ரோஜா பூ ஏந்திக்கொண்டு சுற்றிசுற்றி திரிந்து உருகி உருகி காதலிக்கும் காட்சியும் எப்போது நினைத்துப் பார்த்தாலும் நம்மையறியாமல் நம் முகத்தில் புன்னகை தவழ வைக்க கூடியவை.

அப்படிபட்ட கலைஞனின் அரசியல் பகடி காமெடி காட்சிகள், நக்கல் நிறைந்த குடும்ப காமெடி காட்சிகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு அவர் ஏற்று நடித்த அப்பா கதாபாத்திரங்களும் நிச்சயம் சிலாகிக்கப்பட வேண்டியவை.
மணிவண்ணன் நடித்த அப்பா கதாபாத்திரங்களில் "சங்கமம்" படத்திற்கு தான் எப்போதும் முதலிடம்!
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடலில் "ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்... மகனே வா மகனே வா..." என்ற எம்எஸ்வியின் குரல் மணிவண்ணனுக்கு அத்தனை பொருத்தமாக உயிர்ப்பாக அமைந்திருக்கும்.
அந்தக் காட்சியில் இடம்பெறுவது போல நம்மை விட்டு நீங்கிப்போன மணிவண்ணன் ஒருமுறை உயிர்த்தெழுந்து திரும்ப ராஜநடை போட்டு வந்தால் எப்படியிருக்கும் என்று சாதாரண ரசிகராக மனம் பலமுறை ஏங்கியதுண்டு.

யூடியூபில் இடம்பெற்றிருக்கும் அந்தப் பாடல் காணொளி கமெண்ட் பாக்ஸில் ஆயிரக்கணக்கான "மிஸ்யூ மணிவண்ணன்" என்ற கமெண்ட்களை பார்க்க முடிகிறது.
அடுத்ததாக "வசீகரா" படத்தில் விஜய்க்கும் மணிவண்ணனுக்கும் அப்பா மகன் கெமிஸ்ட்ரி அவ்வளவு வசீகரமாக அமைந்திருக்கும். அப்பாவை விஜய் மணி மணி என்று செல்லமாக பெயர் சொல்லி அழைப்பார். அப்படிப்பட்ட விஜய் கல்லூரியில் தேர்வெழுதும்போது ஜன்னல் வழியாக பிட்டு பேப்பர் தூக்கி வீசும், ரொம்பவே ஜாலியான அழகான அப்பாவாக அசத்தியிருப்பார் மணிவண்ணன்.

விஜய் செய்த குறும்புகளை எல்லாம் மணிவண்ணன் நாசருக்கு கடிதமாக எழுதி அனுப்ப அதை படித்து சினேகா குலுங்கி குலுங்கி சிரிக்கும் காட்சியின்போது... தாயில்லா மகனை நல்ல நிலைமைக்கு கொண்டுவந்துவிட அதே சமயம் அவனை கண்டித்து வளர்க்க மனம் வர இயலாத ஒரு அப்பாவி தகப்பனின் ஏக்கம் நிறைந்ததாக அமைந்திருக்கும் அந்தக் கடிதத்தின் பின்னணியில் ஒலிக்கும் மணிவண்ணனின் குரல்.
விக்ரம், பசுபதி நடித்த "மஜா" படத்திலும் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு ஜாலியான அப்பா மணிவண்ணனை பார்க்க முடிந்தது. குறிப்பாக கிளைமேக்ஸில் மணிவண்ணன் மலையிலேறி தற்கொலை செய்துகொள்ள போகும் காட்சியில் "இந்த மலைய கண்டுபிடிச்ச சைத்தான் யாருன்னு தெரிலயே" என்று மணிவண்ணன் புலம்ப அதற்கடுத்து வரும் விக்ரம், பசுபதி, மணிவண்ணன் மூவருக்குமான உரையாடலும் அதனை தொடர்ந்த காமெடி காட்சிகளும் ரொம்பவே குதூகலமானவை.

அடுத்ததாக தனுஷ் நடித்த "சுள்ளான்" படமும் ரொம்பவே முக்கியமானது. குப்பை லாரி ஓட்டும் அப்பா மணிவண்ணன், மகன் தனுஷ் படிக்கும் கல்லூரிக்கு வந்து அவன் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிக்கும் காட்சியை ஜன்னல் வழியாக மறைந்திருந்து பார்த்து "என் பையன் படிக்கிறான் இனி என் குடும்பம் விடிஞ்சிரும்" என்று வசனம் பேசி மகன் எப்படியாவது நல்ல நிலைமைக்கு வந்துவிட வேண்டுமென நினைக்கும் ஏழை அப்பாவாக ரொம்பவே நெகிழ வைத்திருப்பார்.
அப்படிப்பட்ட அப்பாவை குப்பைக் கூளத்தில் வைத்து வில்லன் எரித்துக் கொன்றுவிடுவான் என்பது மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

"டேய் பரமா படிடா" என்ற மாயாண்டி குடும்பத்தார் படத்தில் இடம்பெறும் மணிவண்ணனின் வசனம் சமூக வலைதளங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. அந்த மீம் டெம்ளேட்டை வெறும் காமெடியாக மட்டுமே கடந்து செல்ல முடியவில்லை. லட்சக்கணக்கான பாமர அப்பாக்களின் இதயத்தின் ஆடி ஆழத்திலிருந்து கிளர்ந்து வரும் கண்ணீர் நிறைந்த உணர்ச்சிக் குரலாக தான் பார்க்க முடிகிறது.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.