வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்களை பகிர்கிறேன்..
``அடி நீ எங்கே ... அடி நீ எங்கே... அடி நீ எங்கே... அடி நீ எங்கே.. சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு குடையொன்னு குடையொன்னு தா கிளியே..விட்டு விட்டு துடிக்குது என் நெஞ்சு வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே... ’’
இசைப் புயலின் இன்னிசையில்(1999) தாஜ்மஹால் படத்தில் இடம்பெற்ற அருமையான பாடல் பாடியவர்கள் ஸ்ரீநிவாஸ் சுஜாதா. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் . இந்தப் பாடலின் இசை ஒளிப்பதிவு படமாக்கப்பட்டிருக்கும் விதம்... எல்லாம் மிகவும் அருமையாக இருக்கும்.

"தாஜ்மஹால் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் சூப்பர் ஹிட். மிகவும் ரசித்து அனுபவித்து இசையமைத்திருப்பார் இசை புயல். பாடல் முழுவதும் மெல்லிய புல்லாங்குழலை கசியவிட்டிருப்பார்.
'உசுரு உள்ள ஒருத்திக்கு தாஜ்மஹால் கட்டியவன் நான்தாண்டி',...வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அனுபவித்து எழுதியிருப்பார் கவிப்பேரரசு. பாடலின் ஆரம்பத்தில் வரும் அடி நீ எங்கே விற்கு. (பாடலின் ஆரம்ப இசை உள்ளத்தைக் கொல்லும்..) இரைச்சல் இல்லாமல், பிசிறு இல்லாமல் துல்லியமாக இசையை கொடுத்திருப்பார் இசை புயல்.

டிஜிட்டல் இசையில் கிராமிய இசை கருவிகளை திறம்பட பயன்படுத்தி மிக அருமையாக இசையமைத்திருப்பார் . அழகான மழை , சில்லென காற்று முகத்தில் பட இந்தப் பாடலை கேட்டு பாருங்கள். கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்..
எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு பாடல்...
ஒரு மென் சோகப்பாடல் 'ஜோடி'(1999) திரைப்படத்தில் இடம் பெற்ற'ஒரு பொய் யாவது சொல் கண்ணே... உன் காதலன் நான் தான் என்று... அந்த சொல்லில்.. அந்த சொல்லில்... உயிர் வாழ்வேன் அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்... ஜீவனுள்ள ஒரு பாடல்.
'பாலுக்கும் கல்லுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான்... உண்டால் ரெண்டும் வேறு தான்' எவ்வளவு கவித்துவமான அழகான எளிமையான வரிகள்.

'தங்கம் பூசி தோல் செய்தானோ ஆனால் பெண்ணே உள்ளம்... கல்லில் செய்து வைத்தானோ?' காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ..'? ஹரிஹரனின் குரல் மிகவும்பொருந்தும். (உணர்வு பூர்வமாய் ) இந்தப் பாடலைக் கேட்கும் போது சில பல நினைவுகள், வலிகள் வருத்தங்கள் கண்ணீர்..இப்படி எல்லாம் வந்து போகும் பலருக்கும்.
'பூக்களின் உன்னால் சத்தம் அடி மௌனத்தின் உன்னால் யுத்தம் இதை தாங்குமா என் நெஞ்சம்'... பின்னணி இசை இதயத்துக்குள் ஊடுருவிச் செல்லும்.
காதல் வலிகளை சுகமாக்கும் இசைப்புயலின் இந்தப் பாடலை தனிமையில் இருக்கும் போது கேட்டுப்பாருங்கள். மனதிற்கு அவ்வளவு இதமாக இருக்கும். இந்தப் பாடல் முடியும்போது நம் கண்ணில் கண்ணாலே கண்ணீர் வரும்.

எனக்கு மிகவும் பிடித்த... நான் அடிக்கடி கேட்கும் இன்னொரு பாடல். ரிதம் (2000)படத்தில் வரும் காற்றே என் வாசல் வந்தாய்... மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்...' உன்னிகிருஷ்ணன் அவர்களும் கவிதா கிருஷ்ணமூர்த்தியும் இணைந்து பாடிய பாடல்.
பாடலுடன் படம் தொடங்குவது தமிழில் மிகவும் அரிது. ரிதம் படம் 'நதியே நதியே'... பாடலோடு தான் தொடங்கும். பாடலுக்கு ரகுமான் கொடுத்த இசை விஷூவல் ட்ரீட் மட்டுமின்றி ஒரு மியூசிக்கல் ட்ரீட் எனலாம்.

முக்கியமாக ரஹ்மானின் பின்னணி இசை. நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். சில படங்களை பார்க்கும் போது மனசுக்குள் ஒரு அழகான உணர்வு வரும் . அது நம்முள் பல மாற்றங்களை உண்டு செய்யும். இயற்கையை ரசிக்க செய்யும். நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை போக்கும். மனிதர்களை நேசிக்க செய்யும். மொத்தத்தில் நம் வாழ்க்கையை அழகாக்கும்... அப்படிப்பட்ட ஒரு படம் தான்' ரிதம்' (நான் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்பதற்கு கணக்கே இல்லை)
ஒரு ரயில் பயணத்தில் எதிர்பாராத விதமாக தங்கள் வாழ்க்கை துணையை இழந்த இரு நபர்கள் சந்தித்து அவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளை மென்மையாகவும் எதார்த்தமான காட்சிகள் மூலமாகவும் சொல்வதுதான் 'ரிதம் 'படத்தின் கதை. இந்த படத்தை பார்த்திருக்கிறீர்களா?! என்று யாரையாவது நீங்கள் கேட்டுப்பாருங்கள் தீம்தனனா... தீம்தனனா என்ற பாட்டு வருமே அந்த படம் தானே?! என்று சொல்லும் அளவிற்கு படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் உயிர் நாடியாக அமைந்திருக்கும்.

இசைப்புயலின் இசையில் நிலம், நீர், நெருப்பு ,காற்று ,ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் மையமாகக் கொண்டு உருவான பாடல்கள் நம் ஐம்புலன்களையும் கட்டிப்போடும். . 'ரிதம்'படத்தின் காட்சிகளை மனதில் ஓட்டிப் பார்த்தால் கூடவே அதன் பின்னணிஇசையும் சேர்ந்தே ஒலிக்கும் என்றால் மிகையில்லை.
22 ஆண்டுகள் கடந்தாலும் இன்றும் இதன் இசை புத்தம் புதுசாய் அழகாய் நம்மை தாலாட்டும். அதுதான் இசை புயலின் வெற்றி.
ஆஸ்கார் நாயகனுக்கு அழகான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.