Published:Updated:

ரஜினியின் நீண்ட சினிமா கச்சேரிக்கான அருமையான முன்னுரை இது!| My Vikatan

புவனா ஒரு கேள்விக்குறி

ரஜினி தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான அருமையான முன்னுரை எழுதிய படங்களில் முக்கியமான படமிது. அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவராகட்டும்... காதலியை இழந்து சிறகு ஒடிந்து நிற்கும் கையறு நிலை ஆகட்டும்..

ரஜினியின் நீண்ட சினிமா கச்சேரிக்கான அருமையான முன்னுரை இது!| My Vikatan

ரஜினி தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான அருமையான முன்னுரை எழுதிய படங்களில் முக்கியமான படமிது. அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவராகட்டும்... காதலியை இழந்து சிறகு ஒடிந்து நிற்கும் கையறு நிலை ஆகட்டும்..

Published:Updated:
புவனா ஒரு கேள்விக்குறி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

என்னுடைய ஏழு வயசுல முதன் முதலில் நான் பார்த்த கருப்பு வெள்ளைத்திரைப்படம்... (எடப்பாடி சக்தி தியேட்டரில்) 'புவனா ஒரு கேள்விக்குறி'. படம் கருப்பு வெள்ளைதான். ஆனாலும் கொள்ளை அழகு. அந்தப் படத்தை இன்னைக்கு வரைக்கும் என்னால மறக்க முடியல. அந்த படத்தை அதற்குப் பிறகு எத்தனையோ முறை பார்த்து விட்டேன் கணக்கே இல்லை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் முதல் முறை பார்ப்பது போன்று புத்தம் புதிதாகவே இருக்கும்.

ரஜினி தன் நீண்ட சினிமா கச்சேரிக்கான அருமையான முன்னுரை எழுதிய படங்களில் முக்கியமான படமிது. அப்பாவி காதலனாய் அன்பில் காதலிக்காக காத்து நின்று கனிவராகட்டும்... காதலியை இழந்து சிறகு ஒடிந்து நிற்கும் கையறு நிலை ஆகட்டும்..

உயிர் காக்கும் நண்பனின் தவறுகளுக்கு தார்மீக துணையாக நின்றாலும் உள்ளே மனம் வெதும்புவதாகட்டும்...

' அண்ணே,' நாகராஜ் அண்ணே ' என்று கரம் கூப்பி சிவக்குமாரிடம் தத்துவம் பேசுவதாகட்டும் ... சுமித்ராவிடம் ஏக்கம் மிகுந்த குரலில்தன் தாபங்களை வெளிப்படுத்தி தவிப்பினை உணர்த்துவதாகட்டும் ... இப்படி படம் முழுக்க ரஜினியின் அட்டகாசம் தொடரும்.அவரின் தனி ஆவர்த்தனம் அசத்தலோ அசத்தல். அதிலும் குறிப்பாக 'அண்ணே ,"நாகராஜ் அண்ணே" என்ற வசனம் பின்னாளில் கொடி கட்டி பறந்த ரஜினியிஸத்தின் துவக்கம் என்றே சொல்லலாம். அந்த கை விரல்களை அப்படி இப்படி என்று சொடுக்கி வசனம்பேசும் ரஜினி ஸ்டைல் வரலாற்றின் ஆரம்ப புள்ளி. இப்படியாக அந்த படத்தில் ஆரம்பித்த அவர் மீதான காதல்...தொடர்கிறது... ஒரு கட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற தலைவியாகவும் என்னை அழகு பார்த்தது புவனாஒரு கேள்விக்குறி'. மகரிஷி என்பவர் எழுதிய கதை. 'மாலைமதி' என்ற பத்திரிகையில் முழு நாவலாக வெளிவந்தது.

புவனா ஒரு கேள்விக்குறி
புவனா ஒரு கேள்விக்குறி

இந்தக் கதையில் நாயகர்களின் பாத்திரமே மிக மிக வித்தியாசமானது. மனிதர்களின் முரண்பாடுகளை பாத்திர வடிவில் அழகாக சித்தரித்துக் காட்டியிருக்கும். நல்லவன் போல் தோற்றமளிக்கும் ஒருவன்... அதாவது சிகப்பாக, அழகாக நேர்த்தியாக, தன்மையுடன் பேசுபவனாக உள்ள ஒருவன் எல்லா அயோக்கியத்தனங்களையும் செய்கிறான். இதற்கு எதிர்மறையாக , சுமாராக உள்ள ஒருவன்... கருப்பாக, பரட்டைத் தலையுடன் , நக்கலாக பேசும் ஒருவன் மிக மிக நல்லவனாக இருக்கிறான். ஏமாந்த பெரும்பாலான பேர்கள் தோற்றத்தை பார்த்து லாவகமான பேச்சைப் பார்த்துதான்(னே) ஏமாறுகிறார்கள்.

அழகுதான் நம்மை ஏமாற்றுகிறது.' அழகா பேசினான்... அதுல தான் ஏமாந்துட்டேன்' என்று எவ்வளவோ பேர் சொல்ல கேட்டிருக்கிறோம். வசீகரமும் லாவண்யமும் சில நேரம் ஏமாற்றவும் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு மிக சரியான உதாரணம் இந்தத் திரைப்படம். சிவக்குமார் படத்தில் ஃபிளேபாயாக வருவார் . இந்த படம் 02.09 1977 ஆம் ஆண்டு திரைக்கு வந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படம். தலைவரின் பத்தாவது திரைப்படம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எஸ் பி முத்துராமன் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்த முதல் திரைப்படம் இதுவே! படத்தின் கதை... நாகராஜாவாக சிவகுமார், சம்பத்தாக ரஜினி, கதை தலைப்புக்கு உரியவளான புவனாவாக சுமித்ரா...

கதையின் சின்ன சுருக்கம்... தமிழகத்தின் தென் மூலையில் உள்ள நாகர்கோவிலில் பிளாட்பாரத்தில் துணி வியாபாரம் செய்து வரும் நண்பர்கள் சிவக்குமார் மற்றும் ரஜினிகாந்த். வாய் நிறைய பொய் சொல்லி துணி வாங்குபவர்களையும் அவர் மீது சபலப் படும் பெண்களையும் ஏமாற்றும் ஃபிளேபாயாக சிவக்குமார் . அவரைப்போல் ஓடியாடாமல் ஐந்து ரூபாய் கிடைத்தாலே போதும் சரக்கு அடித்து சந்தோஷம் காண்பவர் ரஜினி. இருவரும் அனாதை. ரஜினி மட்டும் உண்மையான அன்புக்கு ஏங்குகிறார் . அது அவரை காதலிக்கும் மீரா மூலம் கிடைக்கிறது. ஆனால் எதிர்பாராத விபத்தின் மூலம் அந்த பெண் இறந்து போகிறாள். உடைந்து போகும் ரஜினி தற்கொலைக்கு முயற்சிக்க சிவக்குமார் ஓடிவந்து காப்பாற்றுகிறார் .

புவனா ஒரு கேள்விக்குறி
புவனா ஒரு கேள்விக்குறி

ஒரு ஏஜென்சி எடுக்கும் விஷயமாக ரஜினியோடு ரயில் புறப்பட கோயில் பணிகளுக்காக சென்னை செல்லும் ஒய்.ஜி மகேந்திரனை சந்திக்கிறார்கள். விழுப்புரம் ஸ்டேஷனில் காபி சாப்பிட இறங்கும் ஒய்.ஜி மாரடைப்பில் உயிரை விடுகிறார். இதை அறியும் சிவக்குமார் அவர் பெட்டியை குடைந்து பார்க்க கட்டு கட்டாக கோயில் பணிகளுக்கு ஒய்.ஜி எடுத்துச் செல்லும் பணம் இருக்கிறது‌. கடவுள் தந்த சந்தர்ப்பம் என்று கருதி ரஜினி சொல்ல சொல்ல கேட்காமல் அதை தன் பெட்டியில் மாற்றிக் கொண்டு போலீசாரிடம் அப்பாவி போல் பழம் துணிகள் அடைக்கப்பட்ட பெட்டியை கொடுத்து விடுகிறார். ஒய் ஜி யின் தங்கை சுமித்ரா போலீசாரிடம் விலாசம் பெற்று காணாமல் போன பணத்தை தேடி சிவக்குமார் வீட்டுக்கு வருகிறார்.

பணத்தைப் பற்றி தெரியாது என்று சொன்னாலும் அந்த பெட்டி காண்பித்துக் கொடுக்கிறது. அதே போன்ற வேறு பெட்டி என்று சமாளித்து அனுப்பினாலும் சுமித்ரா சந்தேகம் தீராமல் கிளம்ப, அவரை பின் தொடர்கிறார் சிவக்குமார். வறுமையான அவரின் குடும்ப சூழ்நிலை அறிந்து சுமித்ராவை தன் காதல் வலையில் வீழ்த்தி கர்ப்பம் ஆக்கி விடுவார். கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு தனியாக ஜவுளிக்கடை தொடங்கி மெல்ல மெல்ல வாழ்க்கையில் முன்னேறுகிறார். அவர் முன்னேற்றத்தை கண்டசுருளி தன் மகளை அவருக்கு கொடுக்க முன் வருகிறார்.

அப்போது சுமித்ரா கர்ப்பமாக இருக்கும் செய்தி அறிந்து அதிர்கிறார். அதை கலைக்க ஒப்புக்கொள்ளாத அவரை கழற்றி விடவும் முடியாத கோபத்தில் கொலை செய்யவும் துணிகிறார். அந்த நேரத்தில் தலைவர் ரஜினி குறுக்கிட்டு தான் கவனித்துக் கொள்வதாக சொல்லி சுமித்ரா குடும்பத்தாரிடம் தானே அவள் கர்ப்பத்துக்கு காரணம் என்று சொல்லி எல்லோரையும் அதிர வைக்கிறார்.

புவனா ஒரு கேள்விக்குறி
புவனா ஒரு கேள்விக்குறி

இருவரும் ஒரே வீட்டில் வெளியுலகத்திற்கு கணவன், மனைவி போல் வாழ்வார்கள். கல்யாணம் ஆகி பல வருடங்கள் ஆகி சிவகுமார் ஜெயா தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இருக்காது குழந்தையே பிறக்காத நிலையில் தன் மகனேயே தத்தெடுத்து வளர்க்கலாம் என்பது சிவக்குமாரின் திட்டம். ஆனால் ரஜினி சம்மதிக்க மாட்டார் சுமித்ராவும் அவமதித்து அனுப்பிவிடுவார்.. இந்நிலையில் சுமித்ராவின் குழந்தை மூளைக் காய்ச்சலினால் உயிருக்கு போராடும். முக்கியமான மருந்தை எழுதித் தருவார் டாக்டர். நட்ட நடு ராத்திரியில் சிவக்குமாரின் மருந்துக் கடையில் அந்த மருந்து இருக்கும். ஆனால் குழந்தையை தத்து கொடுக்க சம்மதித்தால் மட்டுமே மருந்து தருவேன் என்பார் சிவகுமார். ரஜினி மறுத்துவிட்டு மருந்துக்கு எங்கெங்கோ அலைவார்.

இந்நிலையில் மருந்து எடுத்துக் கொண்டு ரஜினி வீட்டுக்கு வரும் சிவக்குமார் சுமித்ராவிடம் தத்துக் கொடுக்கச் சொல்லி பேரம்பேசுவார். அதை மறுக்கும் சுமித்ராவை அவர் அடிக்கப் போகும் நேரம் ரஜினி வந்து தடுப்பார் . அன்றோடு சிவகுமாரின் நட்பை முறித்துக் கொள்வதாக அறிவித்து விரட்டியும் விடுவார். பிறகு எங்கெங்கோ அலைந்து ரஜினி மருந்து வாங்கி குழந்தையை காப்பாற்றுவார். அன்றைய இரவே ரஜினியின் உடல்நிலை மோசமடைந்து உயிர் பிரிந்து விடும் மீண்டும் சுமித்ரா தனிமரம் ஆகுவார். புவனாவின் எதிர்காலம் என்னவாகிறது? என்ற கேள்விக்குறியுடன் படம் முடியும். ரஜினி இறந்த பிறகு வெள்ளை புடவையுடன் மகனைத் தூக்கி வைத்துக்கொண்டு இருப்பார். கருப்பு வெள்ளை படம்தான் ஆனால் ஒளிப்பதிவும் படமாக்கிய விதமும் மிக நேர்த்தியாக இருக்கும்.

புவனா ஒரு கேள்விக்குறி
புவனா ஒரு கேள்விக்குறி

'எல்லாப் படத்திலேயும் நல்லவனா இருக்கிற சிவக்குமார், இதுல கெட்டவன்' என்பதும் 'எல்லா படத்திலும் கெட்டவனாக இருக்கிற ரஜினி இதுல நல்லவன்' என்பதும் படத்துக்கு மிகப்பெரிய பலம். மிக நேர்த்தியான திரைக்கதை. எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட இல்லாமல் திரைக்கதை அமைந்திருக்கும். தலைவரின் நடிப்பை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை. ஆரம்பத்தில் அன்புக்காக உருகும் காதலனாய் , காதலியை காப்பாற்ற இயலாத சாதாரண மனிதனாய், சிவக்குமாரிடம் ஏற்படும் பாசத்தினால் அவர் செய்யும் பாவ காரியங்களை எடுத்து கூறும் நல்லவனாய், அவருக்காக தன் வாழ்வையே தியாகம் செய்யும் நண்பனாய், நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களில் வெளுத்து வாங்குவார் ரஜினி. அவரின் தாடி (வேற லெவல்) அத்தனை பொருத்தமாக இருக்கும்.

தன் காதலியின் நினைவுகள் இளமையின் உணர்வுகளை ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருப்பதையும், காலம் அதனை மறக்கடித்து உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுவதையும் சுமித்ராவிடம் சொல்லும் போது ரஜினி வேறு பரிணாமத்தில் ஜொலிப்பார். அவரை தெய்வத்தின் நிலையில் தான் பார்ப்பதே தள்ளி வைக்க காரணம் என்று சுமித்ரா சொல்வதும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

அவனை பொறுத்தவரைக்கும் நான்,'அவன் வச்ச வேலைக்காரன்.. உன்ன பொறுத்த வரைக்கும் உன் பிள்ளைக்கு அப்பா'! என்ன பத்தி யாரு கவலைப்படுறீங்க? நான் யாரு? என்ற கேள்வி எழுப்பும்போது ரஜினிமேல் இரக்கம் வருவதை தவிர்க்க முடியாது. குறிப்பாக சிவக்குமார் வசனம் பேசும் சில முக்கிய காட்சிகளில் நாகராஜ் என்று அவரின் பெயருக்கு ஏற்ப மகுடி இசையை ஒலிக்கவிட்டு பின்னணி இசையிலும் கவனம் செலுத்தி அசத்தியிருப்பார் இசைஞானி. படத்தின் வசனங்கள் நெத்தியடியாக இருக்கும் ``அண்ணே... நாகராஜ் அண்ணே... கடப்பாரையவே முழுங்கிட்டியண்ணே அண்ணே இதை ஏப்பம் விட்டுட முடியாது ஒரு கட்டத்திலவயித்தையே கிழிச்சுபுட்டுபதம் பாத்துரும்.’’ என்று ரஜினி சொல்லும் போதெல்லாம் கைத்தட்டல் விசில் சத்தம் காதை கிழிக்கும் அதேபோல சுமித்ராவும், ரஜினியும் கோயிலுக்கு வந்து விட்டு வெளியே வருவார்கள்.

சிவகுமாரன் ஜெயாவும் கோயிலுக்குள் வருவார்கள் 'என்ன கோயிலுக்கு, என்ன வேண்டுதல் '?என்று சிவகுமாரின் மனைவி ஜெயா ரஜினியிடம் கேட்பார்.. ரஜினி வேண்டுமென்றே' ஒரு பையன் தான் இருக்கான் அடுத்தது ஒரு பெண் குழந்தை கொடுன்னு வேண்டிக் கறத்துக்காக வந்தோம்' என்பார் ரஜினி.

புவனா ஒரு கேள்விக்குறி
புவனா ஒரு கேள்விக்குறி

அது மட்டுமா சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகனைப் போல் வளர்க்கும் பையனிடம் ,டேய் பாபு அங்கிளுக்கு டாட்டா சொல்லுடா! என்று சிவகுமாரை பார்த்து சொல்ல சொல்லி நக்கல் அடிப்பார். இந்த காட்சிகளுக்கெல்லாம் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கும்.. புவனா ஒரு கேள்விக்குறிதான்.? ஆனால் ரஜினியின் ஆரம்ப கால படங்களில் மிகப் பெரிய ஆச்சரியக் குறியைக் உண்டாக்கிய படங்களில் இதுவும் ஒன்று .

மனிதனிடம் நியாயமாக இருக்க வேண்டிய எந்த குணமும் இல்லாத ஒருவன் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி பெறுகிறான். எல்லா நல்ல குணங்களும் அமையப்பெற்ற ஒருவன் வாழ்க்கையில் வளர்ச்சி குறித்து பெரிதாக கவலைப்படவில்லை. இரு துருவமாய் விளங்கும் இருவரையும் நட்பு இணைத்தது. சூழ்நிலை பிரித்துப் போட்டது அதுதான் இந்த படத்தின் ஒன் லைன் கதை. 'விழியிலே மலர்ந்தது ','ராஜா என்பார் மந்திரி என்பார்' இரண்டு பாடல்களையும் ரஜினிக்காக எஸ்பிபி உருகி உருகிப் பாடி இருப்பார். இளையராஜா வின் இசையில் பாடல்கள் அனைத்தும் அதிரி புதிரி ஹிட்.

ஆரம்பகால ரஜினியை ரசிக்க இரண்டு கண்கள் போதாது. இது வெறும் திரைப்பட விமர்சனம் மட்டுமல்ல மிகச் சிறந்த படத்தை மிகச் சிறந்த விதமாக எனக்குத் தெரிந்த விதத்தில் விமர்சித்திருக்கிறேன் தனித் தன்மையுடன் கூடிய இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பாருங்கள். படம் வெளியாகி 45 வருடங்கள் ஆகிவிட்டன (அதைக் கொண்டாடும் விதமாகவே இந்தபதிவு.). இன்றைக்கும் ரஜினிதான் மாஸ். நீங்கள் கலக்குங்கள் நாங்கள் காத்திருக்கிறோம்.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.