வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
வேட்டையாடுதல் ஆதி மனித வழக்கங்களில் ஒன்று. அன்றாட உணவுக்காகவும், தன்னை தற்காத்துக்கொள்ளவும் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடினான் ஆதி மனிதன். மன்னர்களோ பொழுதுபோக்குக்காகவும் பெருமைக்காகவும் வேட்டையாடினார்கள். அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கால்பதித்த ஐரோப்பியர்கள் அந்தந்த மண்ணின் மிருகங்களை மட்டுமல்லாமல் பூர்வ குடிகளையும் வேட்டையாடி ஒழித்தார்கள். தோல் மற்றும் உறுப்புகளுக்காகப் பறவைகளும் மிருகங்களும் இன்றளவும் வேட்டையாடப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

மரபணு வழியாக அந்த ஆதி பழக்கம் நம் புத்தியிலும் நம்மையும் அறியாமல் பதிந்திருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் சட்டரீதியாக வேட்டை தடை செய்யப்பட்ட இன்றைய சூழலில் வாழும் நவீன மனிதனின் நடவடிக்கைகளில் கூட வலை விரித்தல், காத்திருத்தல், தனதாக்கிக்கொள்ளுதல் அல்லது தாக்குதல் ஆகிய வேட்டை குண சாயல்களை காணலாம்.
தொண்ணூறுகளின் இறுதிவரை வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவணான்டி சத்யராஜைப் போல வேட்டை துப்பாக்கியும் கையுமாக அலைந்தவர்கள் ஊருக்கு ஒன்றிரண்டு பேராவது இருந்தார்கள். அவர்கள் அனைவரும் பறவை வேட்டை பிரியர்கள் !
வெள்ளைக்காரன் கொடுத்தது கொள்ளுத்தாத்தா காட்டெருமை சுட்டது என அவரவர் துப்பாக்கிகளுக்கான மூல கதைகள், அத்துப்பாக்கிகளை பராமரிப்பதற்கும் அவற்றுக்கான உரிமங்களைப் புதுப்பிப்பதற்கும் அவர்கள் செய்த அலப்பறைகள், அவர்கள் சொல்லும் கற்பனை கலப்புக்குப் பஞ்சம் இல்லாத வேட்டை கதைகள் என அந்த வேட்டை பிரியர்களை அறிந்தவர்களுக்கு சிவணான்டி கதாபாத்திரம் அவர்களின் பிரதிபலிப்பாகவே தெரியும் !

வடகிழக்கு பருவ மழை வலுக்கும் காலமான அக்டோபர், நவம்பர் காலகட்டத்துக்கு எங்கள் ஊரின் பறவை கறி பிரியர்கள் வட்டத்தில் "குருவி சீசன்" எனப் பெயர் ! குருவி சீசனின் போது பல்வேறு நாடுகளிலிருந்து, பல்லாயிரம் மைல்கள் பறந்து வலசை வரும் பல்வேறு வகை பறவைகளில் சில உள்ளூர் உணவுச் சட்டியில் குழம்பாகிவிடும்!
காடை கவுதாரி தொடங்கி, உள்ளான், கொக்கு, மடையான், சிறவி, குயில், வரிக்குயில் என குருவிகளில் பட்டியல் நீளமானது. உள்ளான்களில் மட்டுமே கொசு உள்ளான், கோட்டு உள்ளான், ஏர் உள்ளான் என மூன்றுவகை உண்டு.
"குருவி சீசனுக்கு" கட்டியம் கூறுவது போல, நீர் நிலைகளை ஒட்டிய வயல்வெளிகளிலும் தோப்பு துறவுகளிலும் முதலில் வந்திறங்குவது கொசு உள்ளான்கள் தான். சிட்டுக்குருவியைவிட சிறியதாக, விருட் விருட் எனப் பறக்கும் கொசு உள்ளான்கள் துப்பாக்கி வேட்டைக்கு உகந்தவை அல்ல இவை வலைகளின் மூலம் பிடிக்கப்பட்டு டஜன் கணக்கில் விலைக்கு விற்கப்பட்டன.

குருவி சீசனில் "மார்க்கெட்" சென்று திரும்புபவர்களின் முகத்தில் தெரியும் உவகையை வைத்தே பேரம் பேசலில் விலை படிந்த உள்ளான்களோ அல்லது கொக்கு, மடையான்களோ அவர்கள் இறுகப் பிடித்துக்கொண்டிருக்கும் துணிப் பைக்குள் படபடத்துக்கொண்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். வாங்கியது கொக்கு அல்லது மடையான் என்றால் "கூட சேர்த்து ஆக்க" செளசெளவ்வும் பையில் இருக்கும் !
கொசு உள்ளான் கண்ணில் படத் தொடங்கியதுமே குருவி வேட்டை பிரியர்கள் குதூகலமாகிவிடுவார்கள்...
அவரவர் வேட்டை கதைகள் மற்றும் "குருவி வரத்து" பற்றிய ஆருடங்களுடன், துப்பாக்கிகளைத் துடைப்பது வெடி மருந்தைக் காய வைப்பது போன்ற "வேட்டை முஸ்தீபுகள்" ஆரம்பித்துவிடும் !
தெருமுனை சஹீது நானா பெட்டிக்கடைக்கு நேர் எதிரே காதர் மாமா வீடு...

மாலை நேரங்களிலும், முன்னிரவு பொழுதுகளிலும் தாழ்வான ஓட்டுக்கூரை வீட்டின் காரை பெயர்ந்த திண்ணையில் அமர்ந்து சுருட்டு புகைத்துக்கொண்டிருக்கும் காதர் மாமாவின் மேனியில் சட்டையைக் கண்டதான ஞாபகமே இல்லை.
பெட்டிக்கடையில் நடக்கும் இளவட்டங்களின் ரகளைக்குக் காது கொடுத்தபடி, மார்புக்கு மேலே துக்கி கட்டிய லுங்கியுடன் இருட்டு திண்ணையில் அமர்ந்து சுருட்டு பிடித்துக்கொண்டிருக்கும் காதர் மாமா திடீரென,
"இருடா... இருடா... தோ வாரேன்" என அரக்கப் பறக்க வீட்டினுள் ஓடினால் ஏதோ ஒரு ஆந்தையோ வௌவாலோ அவரது கண்ணில் பட்டுவிட்டது என அர்த்தம்.
அடுத்த சில நிமிடங்களில் தன் சுங்குத்தானுடன் வெளிப்படும் காதர் நானா, கண்ணில் மாட்டிய அந்த இரவு பறவையைக் குறிவைத்து சுங்குத்தானை ஊதுவார்...
"அடச்சே... தப்புச்சிட்டாண்டா! இருட்டா இருக்கில்லையா... குறி தவறிடிச்சி"
இரவு பறவைகளுக்குக் கிடைத்த இருட்டு கொடுப்பினை பகலில் கிடையாது. காதர் நானாவின் குறி தவறாத சுங்குத்தான் ரவைக்கு சிக்கிய அரசலாற்றாங்கரை பறவைகளின் வலசை பயணம் அவர் வீட்டு "அடுப்பாங்கரையில்" முடிந்துவிடும்.

"அட போங்க மாமா... ஒவ்வொரு ராத்திரியும் இதே கதை தான் !... இதே வாத்தியார் நானா மட்டும் துப்பாக்கியை தூக்கிக்கிட்டு வந்திருந்தா..."
"ஓய் ! துப்பாக்கி என்னாங்கனி துப்பாக்கி ?... சின்ன பிள்ளைக்கிட்ட கொடுத்தா கூட அழுத்தி சுட்டுடும் ! வாலிப புள்ளைங்க உங்களால என்னை போல தம் பிடிச்சி சுங்குத்தான் ஊத முடியுமாங்கனி ? சுங்குத்தான் ஊதும்போதே ரூஹை விட்டவன் கதையெல்லாம் தெரியும் தானே ?..."
சுங்குத்தானை தரையில் ஊன்றி பிடித்தபடி நெஞ்சு நிமிர்த்தி காதர் மாமா சவால் விடுவதைக் கேட்கும் எங்களுக்குப் பல முறை கேட்ட, சுங்குத்தான் ஊதும் போது மாரடைத்து "ரூஹை", அதாவது உயிரை விட்ட மாமரத்தப்பாவின் கதை மீண்டும் ஒரு முறை ஞாபகம் வரும் ! அந்த கதைக்கு துணையாக, துப்பாக்கி குழலுக்கு நேராகத் தலையைக் காட்டிக்கொண்டு மருந்து கெட்டிக்கும் போது துப்பாக்கி தவறுதலாக வெடித்து மாய்ந்தவர்களின் கதைகளும் நினைவு கூறப்படும்.
சுங்குத்தான் என்பது ஏறக்குறைய ஒன்பது அடி நீளமுள்ள நீண்ட ஊதுகுழல். சுங்குத்தானுக்காகவே பிரத்தியேகமாகத் தயாரித்த, சுட்ட களிமண்ணிலான சிறிய கோலிக்குண்டு போன்ற ரவைகள் உண்டு. ரவையை உதட்டில் பொருத்தி சுங்குத்தான் வழியாகப் பறவையைக் குறி பார்த்து ஊத வேண்டும் ! சுங்குத்தான் ரவையால் தாக்கப்பட்ட பறவை சுருண்டு விழும் !
ஆங்கிலத்தில் "Blow gun" எனப்படும் வகையைச் சார்ந்த சுங்குத்தான் ஒரு பழங்குடி வேட்டைக்கருவி. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டுப் பழங்குடி மக்கள் மற்றும் அமெரிக்கப் பழங்குடியினர் பயன்படுத்துவது.

மேலே குறிப்பிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த வேட்டை ஊதுகுழலுக்கு மலேசியாவில் பேசப்படும் மலாய் மொழியில் சும்பிட் அல்லது சும்பித்தான் என்று பெயர். சிங்கப்பூர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் வியாபார தொடர்பிலிருந்த காரைக்கால் மற்றும் நாகூர் வாசிகளுடன் கப்பலில் வந்திறங்கிய சும்பித்தான், "சுங்குத்தான்" என மருகியிருக்க வேண்டும் !
தென்கிழக்காசிய நாடுகளுக்குத் திரைகடல் ஓடி திரவியம் தேடிய காரைக்கால், நாகூர் மற்றும் இவ்வூர்களைச் சுற்றிய பகுதிகளின் இஸ்லாமிய சமூகத்தினரின் பேச்சு தமிழில் இன்றளவும் சில மலாய் வார்த்தைகள் புழக்கத்தில் உண்டு.
நான் அறிந்த வரையில் காரைக்காலிலும் நாகூரிலும் புழக்கத்திலிருந்த சுங்குத்தான், தமிழகத்தின் வேறெந்த பகுதியிலாவது வழக்கத்தில் இருந்ததா எனத் தெரியவில்லை.
சுங்குத்தானை அறிந்தவர்களுக்கு சுங்கான் என்ற வார்த்தையும் ஞாபகம் வரலாம். சுங்கான் என்பது புகையிலையை அடைத்து புகைப்பதற்கு பயன்படுத்தப்படும் புகை குழாய்.

எங்கள் தெருவின் மற்றொரு வேட்டை நாயகனான வாத்தியார் நானா துப்பாக்கியுடன் சுங்குத்தானும் வைத்திருந்தவர். ஆனால் வேட்டைக்குப் பயன்படுத்தியது என்னவோ துப்பாக்கியை மட்டும் தான். சுங்குத்தான் அவர் வீட்டு கூடத்து சுவரில் பரம்பரை பெருமைக்காக மட்டுமே தொங்கிக் கொண்டிருந்தது.
குருவி வரத்துக் கண்ணில் படத் தொடங்கியதுமே, தனது இரட்டைக்குழல் தோட்டா துப்பாக்கிக்குத் தோட்டாக்கள் தயாரிப்பதில் இறங்கிவிடுவார் வாத்தியார் நானா. வீட்டுத் திண்ணையில் தன் மகன்களுடன் அமர்ந்து, வெற்று தோட்டாக்களில் வெடிமருந்தையும் ஈய குண்டுகளையும் சரியான விகிதத்தில் கலந்து, பிரத்தியேக கருவியில் வைத்து அழுத்தி அவர் தோட்டாக்கள் தயாரிப்பதைப் பார்க்கத் தெருவின் வாண்டுகளும் இளசுகளும் கூடிவிடும்.

முட்டிக்கு மேலே மடித்துக் கட்டிய லுங்கியுடன், தொப்பையுடன் சேர்ந்து இடுப்பில் கட்டிய தோட்டா பெல்ட்டும் குலுங்க, குருவி வேட்டைக்குச் செல்லும் வாத்தியார் நானாவின் பின்னால் அவருக்குத் தெரியாத அவரது "பட்ட பெயரை" குசுகுசுத்துச் சிரித்தபடி சில சிறுவர்களும் ஓடுவார்கள்.
வாத்தியார் நானா பெரும்பாலும் குருவிகளின் பின்னால் இருந்தே குறி பார்த்துச் சுடுவதால் அவருக்குக் கொடுக்கப்பட்ட, குருவி என ஆரம்பிக்கும் அவரது பட்ட பெயரின் அடுத்த வார்த்தையை குறிப்பிட்டால் விகடன் தாத்தா கொஞ்சமும் சிரிக்காமல் தணிக்கை செய்து விடுவார் !
காதர் மாமா மற்றும் வாத்தியார் நானாவின் குருவி வேட்டை சிறு வட்டத்துக்குள்ளேயே முடிந்துவிடும். கூப்பிடு தூரத்திலிருந்த அரசலாற்றாங்கரை குருவிகளுடன் காதர் மாமா திருப்திப்பட்டுக்கொள்ள, வாத்தியார் நானா மூன்று கிலோ மீட்டர் தூரம், கடற்கரையை ஒட்டிய சவுக்கு தோப்புவரை வேட்டையாட போவார்.
எங்கள் ஊரிலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் வந்திறங்கிய வலசை பறவைகளையும் பதைபதைக்க வைத்தவர் என் வேட்டை நினைவுகளின் மூன்றாவது வேட்டைக்காரர்...
அவர் எனது தந்தை !
சொந்தமாக எந்த வேட்டை ஆயுதங்களும் இல்லாமலேயே பறவை வேட்டைக்குச் சென்ற அவரது பிரதாபங்களை அடுத்துப் பார்க்கலாம்.
தொடரும்
காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.