வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
டாக்டரிடம் சென்று ரிப்போர்ட்டை வாங்கினால் அவளுக்கு கேன்சர் என்றிருந்தது.
எதிர்பார்த்தது தான்.
மனம் அமைதியாக இருந்தது.
அது எப்படி அமைதியாக இருக்க முடியும்?
வந்திருப்பது கேன்சராச்சுதே.
அதுவும் முப்பத்திரண்டு வயது பெண்ணிற்க்கல்லவா!
ரெண்டு பெண் குழந்தைகள் வயது முறையே எட்டும் நான்கும்.
வீட்டிற்கு முதல் மகள். குடும்பத்தில் எல்லோருக்கு மிகவும் பிடித்த தேவதை.
எனக்கோ வாராது வந்த மாமணி. நட்பு. பதினான்கு வருட நட்பு. பதின் பருவத்தில் உண்டான இல்லையில்லை வரமாக கிடைக்கப்பெற்ற நட்பு. என் பலம் அறியாத அனுமார் நான். என்னையே எனக்கு சொல்லித் தந்த நட்பு.
மார்பகத்தில் சிறு கட்டி இருக்கிறது என்று பிரசவம் பார்த்த மருத்துவரிடம் செல்ல அவரோ டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணன் என்னும் மிகவும் புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜனிடம் அனுப்பியிருந்தார்.
டாக்டர் மாதங்கி ராமக்கிருஷ்னன் இது fibroadenoma என்று சொன்னார். கடந்த வாரம் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தவர் எங்களிடம் இது கேன்சர் மாதிரி இருக்கிறது என்று சொன்னார்.

முகத்தில் யாரோ பலமாக ஒரு குத்து விட்டதைப் போல் இருந்தது. என்னுடைய திகைத்த தோற்றத்தைக் கண்டவர் பரிதாபப்பட்டு, "அகற்றிய பாகத்தை ஆய்விற்கு அனுப்பியிருக்கேன். ரிசல்ட் வரட்டும்" என்றார்.
அவருடைய உதவி மருத்துவரிடம் கேட்டேன், "சார், எப்படி பார்த்ததுமே கேன்சர் என்று சொன்னார்கள் மேடம்" என்று.
"சாதாரண கட்டி என்றால் தசை கிரிக்கெட் பந்து மாதிரி இறுகி இருக்கும். கேன்சரில் சதை காலிபிளவர் பூ போல நன்றாக விரிந்திருக்கும். இவர்களுக்கு அதுப் போலத் தான் இருக்கிறது"
"ரிசல்ட்டில் என்ன தெரியும்?"
"கேன்சர் என்று உறுதிபடுத்தி விட்டு
எந்த அளவிற்கு அதாவது எந்த ஸ்டேஜில் இருக்கிறது என்பதை சொல்வார்கள். இதை வைத்து தான் என்ன வைத்திய முறையை கையாள்வது என்று தீர்மானிப்பார்கள்"
இதோ இன்று ரிசல்ட் வந்து விட்டது. கேன்சர் என்று.
மருத்துவர் மாதங்கி ராமகிருஷ்ணன் சொன்னார்கள். "மார்பகத்தை அகற்றி விட்டு மேற்கொண்டு வைத்தியமும் செய்தால் இன்னும் முப்பது வருடம் ஆயுள் கேரண்டி என்று"
என் தோழிக்கோ மகா சந்தோஷம். "பாரு. நமக்கு கஷ்டத்திலும் எத்தனை நன்மை செய்திருக்கிறார் கடவுள்" என்று அவளருகில் அழுத கண்களுடன் நின்று கொண்டிருந்த என்னிடம் சொன்னாள்.
நோயாளி அவளா? நானா?
நான் அவளுக்கு ஆறுதல் சொல்வது போக அவளோ என்னைத் தேற்றுகிறாள். அது தான் அவள்.
"இதில் என்ன நன்மை இருக்கிறது?" என்று விசும்பினேன் நான்.

"இன்னும் முப்பது வருஷம் இருக்கிறதே. என் கடமைகளை முடித்து விடுவேன் அல்லவா!"
டாக்டரிடம் அப்படியா என்று கேட்டேன்.
"ஆமாம். பெண்களுக்கு மார்பகமும் கர்ப்பப்பையும் உபரியாகத் தானே இருக்கிறது. இது ரெண்டும் இல்லாமல் ஆண்கள் வாழ வில்லையா?" என்று என்னிடம் திருப்பிக் கேட்ட போது
எனக்குமே உலகம் நம்பிக்கை நிறைந்ததாகத் தான் இருந்தது.
மீண்டும் மார்பகத்தை அகற்ற ஆபரேசன். சந்தோஷமாகவே எதிர்கொண்டாள் அவள். மறுநாள் எழுந்து வார்டில் இருக்கும் மற்ற நோயாளிகளிடம் சென்று ஆறுதலாக பேசிக் கொண்டிருப்பாள். அநேக நண்பர்கள் அவளுக்கு. அவள் சேவை அங்கே எல்லோருக்குமே தேவையாக இருந்தது.
அதே உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் கீமொதெரபியையும், ரெடியேசனையும் எதிர்கொண்டாள்.
சமயத்தில் துணையுடனும் அநேக நேரத்தில் தனியாகவும். அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்க மறுத்து விட்டாள்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு செகண்டரி லிவர் வந்து எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் பதினெட்டு நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு அமைதியாக விடைப் பெற்றுக் கொண்டாள் இருவத்தியாறு வருடங்களுக்கு முன்பு.

ஒரு போர்வீரனின் துணிச்சலும் தைரியமும், நான் வேறு எங்கும், எவரிடமும் இன்றளவும் கண்டதில்லை. அந்த தன்னம்பிக்கையும் துணிவும் எங்கேயிருந்து வந்தது?
விடியற்காலையில் நான்கு மணிக்கு எழுந்து முழங்காலிட்டு ஜெபித்துக் கொண்டிருப்பாளே அதனாலா?
அடிக்கடி சொல்வாள்" மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமெங்கே? என்று.
என் அந்திம காலத்தில் அவளைப் போல என் மரணத்தை நானும் துணிவுடன எதிர் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான தருணத்தை தர வேண்டும் என்றே என் கடவுளிடம் நான் கேட்டுக் கொள்கிறேன் இப்போதும்.
அவள் பெயர் ஹெலன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.