Published:Updated:

பிரிட்டன் கிராமப்புறத்தில் 1000 ஏக்கரில் ஒரு வீடு! - கிராமத்தானின் பயணம் 17

விடுதி காலி செய்து விமான நிலையம் வந்து கடைசி நிமிடம் வரை கிடைக்குமா கிடைக்காதா என்று திக் திக்கென நிற்க, மனைவி குழந்தைகள் நாம் ஏதோ பெரிய ஆளு எப்படியும் சமாளிப்பார் மாதிரி பார்ப்பார்கள். இதற்கு போகாமலேயே இருக்கலாம்.

(இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ள “drop down” மூலம் பாகம் 1-16 படிக்காதவர்கள் படிக்கலாம்)

ஒரு விஷயம் நான் உங்களுக்கு தெளிவு படுத்தவேண்டும். விமான நிறுவனத்தில் பணி புரியும்போது உங்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும். அதில் தலையாயது "சலுகை விலை" பயணச்சீட்டுக்கள். ஏறக்குறைய 10% (ID 90 என்று பெயர்) விலையில் நீங்கள் பயணிக்கலாம். ஒரே நிபந்தனை என்னவென்றால், கொடுக்கப்படும் பயணச்சீட்டு "காத்திருப்பு" (Standby) அடிப்படையில்தான். அர்த்தம் யாதெனில் அந்த விமானத்தில் எல்லா இருக்கைகளும் (Seats) கட்டணம் செலுத்தும் பயணிகளால் நிரப்பப்பட்டால் நீங்கள் திரும்பவேண்டும். லண்டன், மும்பை, சென்னை போன்ற பரபரப்பான மார்க்கங்களில் (busy routes) 10% பயணம் கடினம். சமயத்தில் சில மந்தமான மார்க்கங்கள் கூட நம்மை கவிழ்த்து விடும்.

Representational Image
Representational Image

நினைத்து பாருங்கள், நீங்கள் நண்டு சிண்டுகளுடன் ஹாங்காங்கோ சிங்கப்பூரோ இந்த 10% இல் சென்றால், சற்றே தைரியம் வேண்டும். விடுதி காலி செய்து விமான நிலையம் வந்து கடைசி நிமிடம் வரை கிடைக்குமா கிடைக்காதா என்று திக் திக்கென நிற்க, மனைவி குழந்தைகள் நாம் ஏதோ பெரிய ஆளு எப்படியும் சமாளிப்பார் மாதிரி பார்ப்பார்கள். இதற்கு போகாமலேயே இருக்கலாம். ஆசை யாரை விட்டது. எனக்கு ஹாங்காங் அனுபவம் உண்டு. அது பிறகு பார்க்கலாம்.

50% பயண சீட்டு சற்றே மேல். உறுதியாக பயணம் செய்யலாம். இது தவிர்த்து மற்ற விமான கம்பனிகளும் உங்களுக்கு சலுகை விலையில் பயணச்சீட்டு தர முன்வரலாம். பயணச்சீட்டு தவிர விடுதிகளும் விமான நிறுவன ஊழியர்களுக்கு சலுகை விலையில் அறைகள் வழங்குவார்கள். ஆனால் அது காத்திருப்பு அடிப்படையில் இல்லை. நினைத்து பாருங்கள், அறைக்கு வெளியில் எப்படா காலியாகும் என்று காக்க முடியுமா

இந்த சலுகைகளை பயன்படுத்தி நிறைய பணியாளர்கள் இங்கேயும் அங்கேயும் சென்று வருவது வாடிக்கை. 1991 இல் நான் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் வேலையை ஆரம்பித்த புதிதில் ஓர் சக பணியாளர் எப்போதும் நான் இது லண்டனில் வாங்கினேன். என் பையனுக்கு காலணி "ஆக்ஸ்ஃபோர்ட்" வீதியில் தான் வாங்குவேன் என்று ஏதோ லண்டன் பக்கத்து தெரு மாதிரி பேசுவார். இந்த விஷயங்கள் புரிய சில மாதங்கள் ஆனது எனக்கு.

Representational Image
Representational Image

1997ஆம் ஆண்டு UK விற்கு குடும்பமாக ஓரு 5 நாள் சென்று வந்தோம். பின் நான் வேலை மாறி எண்ணெய் நிறுவனத்திற்கு (2000 ல்) செல்ல, அலுவல் நிமித்தம் வருடம் 1 முறையேனும் UK பயணிக்க வேண்டி வந்தது. இதனிடையில் மகள்கள் இருவரும் படிக்க UK சென்றார்கள். வருடம் ஒரு முறை மான்செஸ்டர் மற்றும் நாட்டிங்ஹாம் பயணம் அவசியமாகி போனது. மொத்தத்தில் UK ஓரளவுக்கு முன்னமே பார்த்த ஊர்தான். இந்த முறை மகள்கள் படிப்பை முடித்து வேறு ஜாகைக்கு மாறிவிட்டார்கள். ஆகவே நானும் மனைவியும் சற்றே மனம்போன போக்கில் சுற்ற மற்றொமொரு வாய்ப்பு. என் உறவினர் ஒருவர் பர்மிங்ஹாமில் வசிக்கிறார். அவர் ரொம்பவே சிபாரிசு செய்தார், வேல்ஸ் (Wales) பார்க்கவேண்டிய இடம் என்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கே கொஞ்சம் ஐக்கிய ராஜ்ஜியம் (பிரிட்டன் என்று சொல்லுவோம்) பற்றி சொல்வது அவசியம். இங்கிலாந்து (தலைநகர் – லண்டன்), ஸ்காட்லாந்து (தலைநகர் – எடின்பரா), வேல்ஸ் (தலைநகர் - கார்டிஃப்) மற்றும் வடக்கு அயர்லாந்து (தலைநகர் – பெல்ஃபாஸ்ட்) என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியது பிரிட்டன்.

London footbridge
London footbridge

பிரிட்டன் ஒரு தீவு. நீங்கள் ஒரு நாய் உட்கார்ந்து இருப்பதை கற்பனை பண்ணி பாருங்கள். தலை ஸ்காட்லாந்து. உடல்/ ஒரு பக்க கால்/ வால் இங்கிலாந்து. இன்னொரு பக்க கால் தான் வேல்ஸ். சரிப்பா வடக்கு அயர்லாந்து எங்கே போச்சு, நாய்க்கு வேறு பாகங்கள் இல்லையே என்று கவலைப்படாதீர்கள். பிரிட்டன் தீவுக்கு அருகிலேயே இன்னொரு தீவு உண்டு. அதன் வட பகுதிதான் வடக்கு அயர்லாந்து. அப்போ தெற்கு பகுதி தெற்கு அயர்லாந்தா? இல்லை அது வெறும் அயர்லாந்து (Republic of Ireland). வடக்கு அயர்லாந்து மற்றும் பிரிட்டனுக்கு இடையேயான உறவு மிக கடினமானது. ஒரு காலத்தில் கலவர பூமி. காரணம் மிக சர்ச்சைக்குரிய அரசியல். நாம் சாய்ஸில் விட்டுவிடலாம். (Out of Syllabus).

எங்களுடைய திட்டம் என்னவென்றால், நியூ காஸ்ல் (New Castle) சென்று அங்கிருந்து லீட்ஸ் (Leeds) 4 நாட்கள். அங்கிருந்து பர்மிங்ஹாம் (Birmingham) சென்று இந்தியா - இங்கிலாந்து இடையிலான ODI கிரிக்கெட் மேட்ச் பார்த்து 2 நாள் கழித்து கார்டிஃப் (Cardiff) சென்று 1 வாரம் சுற்றி/ஓய்வெடுத்து லிவர்பூல் (Liverpool) வழியாக டப்லின் (Dublin, Ireland). அயர்லாந்தில் ஒரு 11 நாள் டப்ளின் (Dublin) மற்றும் சிறு ஆனால் அழகிய இடங்களான கில்லர்நீ (Killerney) க்ளான்மெல் (Clonmel) மற்றும் கடலோர சிறு கிராமங்களை பார்க்க திட்டம். தலை சுற்றுகிறதா? திட்டம் போட்டு, வழித்தடம் இறுதி செய்து, விடுதிகள் மற்றும் வாகனம் முன் பதிவு செய்த எனக்கும் தலை சுத்தியது.

Birmingham
Birmingham

முன்பே சொல்லியிருந்தேன் அமெரிக்காவில் 37 நாட்கள், 8000 கிமீ முழுவதும் வாகனத்திலியே சுற்றிவிட்டு 13 ஜூன் தான் துபாய் வந்து இறங்கினோம். வான்பயண களைப்பு (Jet Lag) நீங்கவே 2-3 நாட்கள் செல்ல மனைவிக்கு துணிகள் பராமரிப்பு மற்றும் சமையல் என வேலை. இருந்தும் முழு மூச்சாக திட்டத்தை இறுதி செய்து பெட்டி கட்டி விமானத்தில் அமர்ந்தாகிவிட்டது. 26 ஜூன் காலை 0700 மணிக்கு எமிரேட்ஸ் வண்டிதான். நேரத்துக்கு முன்பே நியூ காஸ்ல் சென்றது.

இறங்கி குடியுரிமை சோதனை முடிந்து நேராக வாடகை வாகனம் இருக்கும் இடத்துக்கு சென்றேன். முன் பதிவு செய்திருந்தேன். சிறிய வாகனம்தான். (Vauxhall). காரணம் பிரிட்டன் சாலைகள் சற்றே குறுகளானவை. எரிபொருள் விலை அதிகம். மற்றும் நிறுத்துமிடங்களும் சவால்தான். அமெரிக்காவில் நேர் எதிர். எனவே அங்கு பெரிய வாகனம் ஒத்துவரும். முன் பதிவு செய்திருந்தாலும், அந்த சிப்பந்தியிடம் கேட்டேன், நான் உங்கள் நிறுவனத்தின் "விசுவாச அட்டை" (Loyalty Card) வைத்திருக்கிறேன், ஏதாவது சலுகைகள் உண்டா என்றேன். ஒன்றும் பேசாமல் 10% தள்ளுபடி அளித்தார். கசக்குமா என்ன?

அடுத்த வேலை உள்ளூர் சிம் அட்டை. டெஸ்கோ (Tesco) சென்று மிகவும் உதவிகரமான ஒரு சிப்பந்தி உதவியால் சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து கைபேசியில் பொருத்தி வாகனத்தை செலுத்த ஆரம்பித்தேன். ஓட்டும் முறை துபாயிலிருந்து சற்றே மாறுபட்டது. இடது பக்கம் ஓட்டவேண்டும். வண்டியும் சற்றே சிறிய வண்டி. 20 நிமிடம் போல பிடித்தது தன்னம்பிக்கையுடன் ஓட்ட. கூகுள் மேப் உதவியுடன் 90 நிமிடத்தில் (70 கிமீ) லீட்ஸ் அடைந்தோம். சிறிய ஊர்தான். 8 லட்சம் மக்கள். நிறைய பசுமை. பசுமையோ பசுமை. பிரிட்டனியா என்ற விடுதி. சற்றே பழைய கட்டிடம். இந்த விடுதி புவி வெப்பமயமாதலுக்கு மிகவும் முன்பேயே கட்டியது. அதனால் நோ ஏசி நோ மின் விசிறி. நல்லவேளை ஜூன் என்றாலும் பெரிய கஷ்டம் இல்லை.

Dorset, England
Dorset, England

பிரிட்டன் போனால் பக்கிங்காம் அரண்மனை, லண்டன் பிரிட்ஜ், ட்ரபால்கர், தேம்ஸ் என்று போகாமல் என்னப்பா லீட்ஸுக்கு என்று நினைக்காதீர்கள். லண்டன், எடின்பரோ, மான்செஸ்டர், நாட்டிங்காம் எல்லாம் முன்பே பார்த்திருக்கிறோம். இந்த முறை, எல்லாவற்றையும் விட நீண்ட சாலை பயணம், பிரிட்டனின் கிராமப்புறம் பார்க்க என்று நோக்கம் சற்றே வித்தியாசமானது.

முதல் இடம் ஹேர்வுட் இல்லம். (Harewood House). 1750 களில் கட்டப்பட்ட இல்லம். உரிமையாளர் அந்த நாட்களில் மேற்கிந்திய தீவுகளில் பெரிய எஸ்டேட் மற்றும் கொத்தடிமைகளை வைத்து சொத்து சேர்த்தவர். அந்த இல்லம் 1000 ஏக்கரில் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தோட்டங்களுக்கு இடையில் கம்பீரமாக நிற்கும். நம்மூர் ஆட்கள் பார்த்தால் முதல் கேள்வி "ஸ்குயர் ஃபீட் என்னா ரேட் போவுது இங்கெல்லாம்?" தான். அவ்வளவு பறந்து விரிந்த அழகான இடம். வீட்டை சுற்றி பார்த்தோம். இப்போதெல்லாம் 3BHK பராமரிக்கவே சிரமமாக உள்ளது. அவர்கள் எத்தனை அறைகள், குளியல் மற்றும் கழிவு அறைகள் என எப்படி பராமரித்தார்களோ? கொத்தடிமைகள் எல்லா வேலையும் செய்ய இந்த உரிமையாளர் நல்ல ஓய்வெடுத்து தேநீர் அருந்தி போலோ விளையாடி நேரத்தை கழித்திருப்பார்கள். என்ன வாழ்க்கை சார். நாம் எப்படியெல்லாம் ஓடி ஆடி உழைக்கிறோம். யோசித்தால் அடுத்தவன் சொத்தை எப்படி ஆட்டையை போடுவது என்று உலகத்துக்கு கற்று கொடுத்தவர்கள் இந்த ஆங்கிலேயர்கள்தான் என்று நினைக்கத்தோன்றுகிறது. நம் மொத்த நாட்டையும் சுலபமாக ஆட்டையை போட்டார்களே.

அந்த இல்லம் முடித்து, ரவுண்ட்ஹேய் (Roundhay) பார்க்கில் காலார (வலிக்க) நடந்து பசுமையை அனுபவித்து அறைக்கு வந்து சேர்ந்தோம். அடுத்த நாள், ஷெபீல்ட் (Sheffield) என்ற சிறிய நகரத்தை சுற்றி பார்த்தோம். பசுமை, அழகு மற்றும் நிசப்தம். பிரிட்டனின் கிராமப்புறங்களை இந்த வார்த்தைகளுக்குள் அடக்கி விடலாம்.

ஜூன் 30. முக்கிய வேலை பர்மிங்ஹாம் சென்று இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் மாட்சை எட்க்பாஸ்டன் (Edgbaston, Birmingham) அரங்கத்தில் நேரடியாக பார்ப்பது. சென்றோம். அரங்கத்தின் வெளியிலே அப்படி ஒரு அட்டகாசமான சூழ்நிலை, எங்கும் நீலம், இந்திய "ஜெர்சி" அணிந்து. நிறைய வெள்ளையர்கள் ஆட்டத்துக்கான அனுமதி சீட்டுக்களை கள்ள சந்தையில் (Black) விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒருவழியாக இடத்தை அடைந்து அமர்ந்தாகிவிட்டது. நன்றாக ஆடினார்கள், இங்கிலாந்து. நாம் சொதப்பி தோற்றோம்.

Harewood House
Harewood House

என் மனைவி இந்த விஷயத்தில் கொஞ்சம் செண்டிமெண்ட் பார்ப்பவர். செண்டிமெண்ட் என்னவென்றால் எந்த மாட்சை நான் பார்க்கிறேனோ அந்த மாட்சை இந்தியா ஜெயிக்காது என்ற செண்டிமெண்ட். இன்றைக்கு பாரு டெண்டுல்கர் வெளுக்கப்போறான் என்று உட்காருவேன். அவர் தடவி தடவி 7-9 ரன்னில் வீடு திரும்புவார். மனைவிக்கு கோபமாக வரும். நீங்கள் மேட்சே பார்க்காதீர்கள் என்று சொல்லுவார். அப்படியெல்லாம் நான் விட்டுவிடுவேனா? போன வாரம் கூட இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் துபாயில் பார்த்தோம். சொதப்பல்ஸ், மீண்டும். தோற்றோம். மனைவி என்னை குற்றவாளி போல பார்த்தார்கள். நம்ம ஆட்கள் சீக்கிரம் வீட்டுக்கு சென்று தோசை சாப்பிட்டு தூங்க ஆசைப்பட்டால் நான் எப்படி பொறுப்பாக முடியும்?

சரி, வந்த வேலையை முடித்தாகிவிட்டது. முடிவு சாதகமில்லைதான். வாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் வெற்றி தோல்விகள் சகஜமப்பா என்று தேற்றிக்கொண்டு அடுத்த வீடு பார்க்க கிளம்பினோம். அடுத்த வீடு கார்டிஃப், வேல்ஸ். (Wales). 170 கிமீ. கார்டிஃப் சிறிய ஊர்தான். மக்கள் தொகை நாலு லட்சத்துக்கும் கீழ். கார்டிஃப் விரிகுடா (Cardiff Bay) ஒட்டியே அமைந்த ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் என்ற விடுதி. ரம்மியமான இடத்தில் அமைந்தது. சரி எங்கேயும் செல்லவேண்டாம், முற்றிலும் ஓய்வெடுப்போம் என்று நினைத்தாலும் அடுத்த நாளே கிளம்பி பிரிஸ்டல் (Bristol), பாத் (Bath, ரோமானிய குளியல் அறைகளுக்கு பெயர் போன இடம், பெயரும் இதனால்தான்) என்று ஒரு சுற்று சுற்றினோம்.

Cardiff Bay
Cardiff Bay

என்ன சொல்வது, இயற்கை அழகு, அமைதி, பசுமை, ஆறுகள் (Avon), புராதன கலைநயமிக்க கட்டிடங்கள் மற்றும் எங்கு செல்லினும் நம் இந்திய உணவு (சமைப்பது என்னவோ பங்காளதேஷிகள்) என ஒரு மயக்கும் சூழ்நிலை. அதாவது நீங்கள் செலவைப்பற்றி கவலைப்படாத வரை. நான் மற்றவன் சொத்தை ஆட்டையைப்போட்டோ, கொத்தடிமைகள் வைத்தோ சம்பாரிப்பவன் இல்லை. அம்பானி அதானி வாரிசும் இல்லை. அவ்வப்போது தோன்றும், தம்பி, ஓவரா போகாதே என்று. உடனே உட்கார்ந்து சொத்துக்கணக்கு பார்த்து (Excel, my firend) பரவாயில்லை, எல்லாம் கட்டுக்குள்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று உறுதி செய்துகொள்வேன்.

நீங்கள் கார்டிஃப் சென்றால் மறக்காமல் விட்சர்ச் (Whitchurch) சாலையில் உள்ள மின்ட் அண்ட் மஸ்டர்ட் (Mint and Mustard) செல்லுங்கள். பார்க்கிங் பிரச்சினையில்லை. அப்புறம் ஸ்வான்சயே சென்றால் ரசோய் (Rasoi) செல்லுங்கள். ஸ்வான்சயே விரிகுடா ஒட்டியே அமைந்துள்ள இடம். கட்டண பார்க்கிங் வசதி உண்டு. இரண்டு இடங்களிலும் நல்ல உணவு உறுதி. உள்ளாடைகள் துவைக்க விட்சர்ச் சாலையிலேயே மின்ட் அண்ட் மஸ்டர்ட் பக்கத்தில் லாண்டர்ரூம் என்ற இடம் உள்ளது. ஷாரன் என்ற பெண்மணி நல்லவர். நீங்கள் வெளியே சென்று வருவதாக கூறினால் அழகாக துவைத்து துணிகளை மடித்தே வைப்பார்.

Whitchurch
Whitchurch

என் பயணங்களில் நான் அனுபவபூர்வமாக பார்த்த ஒன்று, மக்கள் எங்கு செல்லினும் நல்ல மக்களே. அவர்களுடைய நடவடிக்கைகள் உங்களுடைய நடவடிக்கைகளை பிரதிபலிக்கும். ஒரு நல்ல புன்னகை உங்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் நல்ல மன நிலையை உருவாக்கும். நீங்கள் அவர்களை மதித்தால் அவர்கள் உங்களை மதிப்பார்கள், இன்னும் அதிமாக. என்னால் முடிந்தவரை, ஓட்டுனரோ, உணவு பரிமாறுபவரோ, துணி சலவை செய்பவரோ மரியாதையுடன்தான் நடத்துவேன். அடிப்படையில் அவர்களும் உணர்வுக்குவியலாகிய மனிதர்கள்தான். அதை புரிந்து மதித்தால், நல்லது. இதையெல்லாம் மீறி சில விதிவிலக்குகள் இருக்கும். அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் குறைந்தபட்சம் அனுதாபத்தை கொடுங்கள். என்ன கஷ்டமோ பாவம்.

வேல்ஸில் இன்னுமொரு முக்கிய இடம், ஸ்கந்தவேல் என்ற கோவில். சற்றே குன்று மாதிரி உள்ள இடத்தில ஒற்றையடிப்பாதையில் வாகனத்தில் சென்று (எதிரில் வண்டி வந்தால் ஓரம்கட்டி நிற்கவேண்டும்) பார்க்கலாம். ஸ்ரீலங்காவை சேர்ந்த ஒரு பக்தர் 1973இல் ஆரம்பித்தது. இப்போது முற்றிலும் வெள்ளையர்கள் பராமரிப்பில் உள்ளது. பூஜை, ஆர்த்தி எல்லாம் அவர்கள்தான். வேஷ்டியில், அவர்கள் வழவழவென்று மந்திரம் சொல்லுவது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஆனால் நாம் வந்தது சாமியை பார்க்க, சாமியாரை இல்லை. ஆகவே, பவ்யமாக சாமி கும்பிட்டு, நல்ல பிரசாதத்தை சாப்பிட்டு மரியாதையாக கிளம்பவேண்டும். நீ இவன் நீ அவன் என்றெல்லாம் பேசப்படாது.

இன்னும் ஒக்ஸ்விச் விரிகுடா (Oxwich Bay), த்ரீ கிலிஃப்ஸ் விரிகுடா (Three Cliffs Bay), க்ளோஸ்டேர் (Gloucester) மற்றும் ஸ்வான்சயே (Swansea) என்ற இடங்களுக்கெல்லாம் சென்று இயற்கையின் அழகை கண்டு, நல்ல உணவை உண்டு, இறைவனுக்கு நன்றி சொல்லி மூட்டை கட்ட ஆரம்பித்தோம். முன்பே பார்த்த லண்டன், மான்செஸ்டர், நாட்டிங்ஹாம், ஸ்டோன்ஹென்ஜ் பற்றி சுருக்கமாக அடுத்தவாரம் பார்க்கலாம்.

Dublin, Ireland
Dublin, Ireland

வேல்ஸ் பற்றி சொன்னேன். அயர்லாந்து பற்றி சொல்கிறேன். இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு பிராந்தியங்களுமே தங்கள் புராதன மொழியான வெல்ஷ் மற்றும் ஐரிஷ் மறந்து ஏறக்குறைய ஆங்கிலமே என்ற நிலைக்கு வந்துவிட்டன. இந்த மொழிகளுக்கும் ஆங்கிலத்துக்கும் சம்பந்தம் குறைவே என்று நினைக்கிறேன். இரு மொழி பெயர்பலகைகள் பார்த்தால் அப்படிதான் தெரிந்தது. இரு மொழிக்கொள்கை பேருக்கு. எல்லாவற்றிலும் ஆங்கிலம்தான். காலம் மாற்றிவிட்டது.

என் நெருங்கிய உறவினர் (ஒரிஜினல் அயர்லாந்துக்காரர்) டப்ளின் இல்லை டுப்லின் (டவும் இல்லை டுவும் இல்லை, இரண்டுக்கும் இடை) தான் சரி என்று சொல்லுவார். எதுவானால் என்ன. நமக்கு செல்லவேண்டும்.

என் மனைவி வீட்டை விட்டு கிளம்பி சில தூரம் போன பிறகு நல்ல கேள்விகள் கேட்ப்பார், வீட்டை பூட்டினோமா, காஸ் மூடினோமா என்று. இது சாதாரணம்தான். உங்கள் வீட்டிலும் அந்தமாதிரி இருந்தால் மருத்துவரை பார்க்க தேவையில்லை. அன்று லிவர்பூல் போக ஆயத்தமான போதுதான் நம்முடைய UK விசா அயர்லாந்துக்கு செல்லுமா என்று ஒரு கேள்வியை கேட்டார். நான் சற்று தொண்டையை கனைத்து பிக் பாஸ் கணக்கில் "இது சரியான கேள்வி. ஆனால் விடை தெரிந்தவனிடம் கேட்காமல் கேள்வியே புரியாதவனிடம் கேட்டால் பதிலே கேள்வியாகி" என்று ஏதோ உளறினேன். ஏனென்றால் அந்த சந்தேகமும் எனக்கும் அப்போதுதான் எழுந்தது. சென்றோமா? பார்ப்போம் அடுத்த வாரம்.

Ireland Street
Ireland Street

பின் குறிப்பு: துபாய் பற்றிய போன வார கட்டுரை நிறைய விருப்பங்களை எழுப்பியுள்ளது. இதை விட்டுவிட்டீர்களே அதை விட்டுவிட்டீர்களே என்று சில பேர். இன்னும் சில பேர் துபாய் பற்றியே இன்னும் 2-3 வாரம் எழுதலாமே என்றார்கள். எழுதலாம். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று எங்கள் அம்மா எப்போதும் சொல்வார்கள்.

சுருக்கமாக சில விஷயங்கள். முதலில், சத்வா (Satwa) என்ற இடம். நிறைய பிலிப்பினோக்களும் பாகிஸ்தானிகளும் வாழும் இடம், ஜுமேரா என்ற இடத்திற்கு மிக அருகில். அங்கே உள்ள "ராவி" (Written as Ravi, but stands for the river Raavi) என்ற பாகிஸ்தானிய உணவிடம் பல வருடங்களாக மக்களின் நன்மதிப்பை பெற்றது. என் விருந்தினர்களை தவறாமல், ராவிக்கு அழைத்து செல்வேன். அதே போன்று "அல் மல்லா" (Al Malla) என்ற இடம் அவர்களின் ஃபிலாஃபில் மற்றும் ஷவர்மாவிற்கு பெயர் போன இடம். போன வாரம் என் வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் விரும்பி சாப்பிட்டார்கள். (தருவித்தோம். விடுதியில் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இன்னும் கோவிட் பயம் தெளியவில்லை). அவர்கள் விரும்பி சாப்பிட்ட மற்றொன்று கராச்சி தர்பார் என்ற இடத்தில அதிகாலை 0500 - 0630 மணிக்குள் கிடைக்கும் ஆட்டுக்கால் பாயா.

Dubai's Satwa
Dubai's Satwa

இது என் வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடையே பெரிய ஹிட். மக்கள் பற்றியும் இன்னும் சொல்லவேண்டும். என் வீட்டுக் தண்ணி குடுவைகள் (Bottles) கொண்டுவரும் பாகிஸ்தானி அன்பர், தோட்ட வேலை செய்யும் நேபாளி, கடின தோட்ட வேலைக்கு அவ்வப்போது வரும் பாகிஸ்தானியர்கள் (கடின உழைப்பாளிகள்), என்னுடைய தோட்டத்துக்கு தேவைப்படும்போது உபயோகப்படுத்திய டீத்தூள் தரும் மலையாளி சேட்டன், உபயோகப்படுத்திய காபி தூள் தரும் பிலிப்பினோ பெண் சிப்பந்தி, தூக்கிப்போடும் காய் கறிகளை நான் என் தோட்டத்தில் புதைக்க கேட்கும்போது எடுத்துவைத்து தரும் கராமா கடைகள், மராமத்து வேலைக்கு வரும் பங்களாதேஷி ஆட்கள், என் வீட்டுக்கு தினசரி செய்தித்தாள்கள் போடும் சாமி (நம்மூர்க்காரர்) மற்றும் அனீஸ் (பாகிஸ்தானி) என, துபாய் எனக்கு கடுமையாக உண்மையாக உழைக்கும் மனிதர்களின் நல்ல பக்கத்தையே காட்டியுள்ளது.

-சங்கர் வெங்கடேசன்

(shankarven@gmail.com)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு