வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
2018 இல் நடந்த புராரி மரணங்களை அவ்வளவு எளிதாக அன்று ஜீரணித்து விட முடியவில்லை. ஏனெனில் அன்று மொபைலில் வலம் வந்தவை எல்லாமே சென்சார் செய்யப்படாத ரா (raw) புட்டேஜ்கள். சாதாரணமாக ஒரு வீட்டின் மாடிக்கு செல்லும் படி மேல் ஏறி வருவது போல் ஆரம்பிக்கும் அந்த வீடியோவில், மாடியில் இருக்கும் அறைக்குள் நுழைந்த பின்பு இறந்து போயிருக்கும் 11 சடலங்களை, அதுவும் உத்தரத்தில் தொங்கி ஊசலாடிக்கொண்டிருக்கும் சடலங்களை பார்த்தபின் மறந்தும் சில நாட்கள் இருட்டில் இருந்தது கிடையாது. அப்படி ஒரு காட்சி அது. தற்கொலையா கொலையா என்று போலீசாரே தலையை பிய்த்துக்கொண்ட நேரம்.

மறதி ஒரு அற்புதமான மருந்து என்பது போல, அந்த நிகழ்வை நன்றாகவே மறந்து விட்ட தருணத்தில், 2021 இல் House of Secrets வெப் சீரிஸ் வெளிவந்திருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது. கடமைக்கேனும் வழக்கை பற்றி ஆராயாமல் ஆதியோடு அந்தமாய் துப்பு துலக்கி இருக்கின்றனர். மூன்று எபிசோட்கள். தரமான கவரேஜ். முதல் எபிசோடில் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை பற்றியும், இரண்டாவது எபிசோடில் துப்பு துலக்குவதற்கு மிகவும் உதவிய ஆதாரமான டயரி குறிப்புகள் பற்றியும், மூன்றாவது எபிசோடில் இந்த விபத்து நடப்பதற்கான காரணங்கள் என்ன போன்றவற்றையும் பதிவு செய்துள்ளனர். அதிலும் அந்த மூன்றாவது எபிசோடில் உபயோகப்படுத்தப்பட்ட 'psychological anatomy ' என்ற வார்த்தை மிகவும் புதிதாகவும் அடர்த்தியான அர்த்தம் நிறைந்ததாகவும் விளங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டாலும், மனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க பரிந்துரைக்கிறேன்.
ஒவ்வொரு எபிசோடை பற்றியும் நீண்ட பதிவு எழுதலாம் என்ற திட்டத்தை தற்போது எழுதும்பொழுது முற்றிலுமாக தவிர்க்க நினைக்கிறன். பிரச்சினை என்னவென்றால் அதை பற்றிய நீண்ட பதிவிற்காக ஒவ்வொரு எபிசோடின் காட்சிகளையும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டித்துள்ளது. அந்த காட்சிகளுக்குள் மீண்டும் சென்று விட்டு வெளிவருவதற்கு மனதளவில் நான் தைரியமாக இல்லை. என்ன நடந்தது என்பதையும் அதனால் தோன்றும் உள்ளக்கிடக்கைகளையும் சுருக்கமாக பதிவு செய்கிறேன்.
சம்பவம் நடந்து விட்டது. போலீசார் அந்த வழக்கை விசாரிக்கும் பொழுது தடுமாறுகின்றனர். அந்த டைரி கிடைத்த மறு நிமிடம் தான் இந்த வழக்கில் ஒரு தெளிவான பாதை கிடைத்திருக்கிறது. அன்று இரவு மட்டும் அல்ல சில நாட்களாக ஏன் வருடங்களாகக்கூட அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் எப்படி செய்யவேண்டும் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் அடிப்படையில் சைக்கலாஜிக்கல் அனாடமி செய்து இதை தற்கொலை என்று நிரூபிக்கின்ற்னர். விஷயம் இதுதான். அந்த குடும்பத்தின் முதியவரான தாத்தா இறந்து விடுகிறார். அவரது பிரிவை தாள முடியாத அவரது குழந்தைகள் (எல்லோருமே 50 வயதை நெருங்குகிறவர்கள்) வருத்தப்படுகின்றன. அதிலும் மூத்த மகனுக்கு ஒரு விபத்தின் போது வாய் பேச முடியாமல் போகிறது. மருத்துவம் பார்த்தும் பலனில்லை. இவர் மீண்டும் வாய் பேச வேண்டுமென்றால் வீட்டில் உள்ள எல்லோரும் இணைந்து 'அனுமான் சாலிசா' படிக்க வேண்டும் என்று அவரது இறந்து போன தந்தை சொன்னதாக குடும்பத்தினரிடம் தெரியப்படுத்துகிறார்.
அனைவரும் படிக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு நாள் 'அனுமன் சாலீஸாவை' பாடிக்கொண்டிருக்கும்போதே மூத்தவருக்கு பேச்சு வந்துவிடுகிறது. இவரும் இறந்து போன தனது தந்தையின் ஆசை இன்னது தான் என்றும் அவர் தன்னுடன் எப்பொழுதும் பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவர் சொன்னது போல் நடந்தவுடன் குடும்பமே அவரது வார்த்தையை தெய்வ வாக்காக நினைக்கிறது.
இப்படியாக குடும்பத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை மூத்தவர் சொல்வதை மட்டுமே மறுபேச்சின்றி கேட்டுக்கொண்டு அதன்படி நடக்கின்றனர். 70 வயது முதல் பத்து வயது வரை என எல்லா வயதினரும் இதில் அடக்கம். சம்பவம் நடந்த சில நாட்கள் முன்பு, அதாவது 2018ல் தனது பெண்ணுக்கு மணமுடிக்க ஏற்பாடு செயகின்றார். திருமணம் நெருங்கி வரும் வேளையில் இந்த சம்பவம் நடக்கிறது. இதை banyan tree பூஜை என்று டைரியில் குறிப்பிட்டிருக்கின்றனர். அதாவது ஆலமரத்தின் விழுதுகள் போல எல்லோரும் கயிற்றில் தொங்கி கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த பூஜைக்கு பிறகு எல்லோரும் மீண்டும் உயிர்த்துவருவோம் என்று நம்பிக்கையூட்டியிருக்கிறார். இதை நம்பியே எல்லோரும் அவர் பேச்சை கேட்டு இதுபோன்ற முடிவை எடுத்திருக்கின்றனர்.
மனநல மருத்துவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு முடிவு எட்டிய பின் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. அதாவது அதுவரை தன பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அந்த குடும்பம், தனது பெண் இன்னொரு வீட்டிற்கு மருமகளாக சென்ற பின் எங்கே அந்த மரியாதை கிடைக்காமல் போய்விடுமோ என்ற எண்ணத்தில், மூத்தவர் எடுத்த முடிவு என்று அனுமானிக்கினறனர். இதில பொதிந்திருக்கும் ஆச்சர்யம் என்னவெனில் அந்த வீடு ஒன்றும் தனித்திருக்கவில்லை. அடர்த்தியான ஜன நெருக்கடி உள்ள ஒரு தெரு.
ஒரு வீடு கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக எவ்வாறு இயங்குகிறது என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாத சமூகத்தில் தான் நாம் இருக்கிறோம் என்பது மிகப்பெரிய சாபக்கேடு. விபத்து நடக்கும் முன்பு ஒரு வாரத்திற்கும் மேலாக இதற்கான திட்டமிடலை அந்த குடும்பம் மேற்கொண்டுள்ளது. அந்த குடும்பத்தாரும் இதை பற்றி வெளியில் தெரிவிக்கவில்லை. அந்த சிறு குழந்தை உட்பட. புறத்தில் உள்ளவர்களும் விசாரிக்கவில்லை. அந்த குடும்பத்தை மட்டும் 'சைக்கலாஜிக்கல் அனாடமி' செய்தால் பத்தாது. மொத்த சமூகத்தையும் 'சைக்கலாஜிக்கல் அனாடமி' செய்து நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்ற அடிப்படை மனித உணர்வுகளாவது இருக்கிறதா என்று டைசெக்ட் செய்து பார்க்க வேண்டிய தருணமிது.
நான் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள விழைவது இதுதான். இருபது வருட பழைய நட்பென்றாலும் தயங்காமல் பேசுங்கள். வேலையிலேயே ஒருவர் மூழ்கி கிடைக்கிறார் என்றால் அவரை தொந்தரவு செய்தாவது அளவளாவுங்கள். ஏனெனில் மனச்சோர்வு என்பது நம்மை அறியாமலேயே நம்மை விழுங்கும் ஒரு கொடிய நோய். பல நாட்கள் கழித்து பேசிய பள்ளி தோழி ஒருத்தி, யாரிடமும் பகிர்ந்துகொள்ளாத தனது தோல்வியுற்ற பழைய காதலை பற்றி பகிர்ந்துகொண்டாள்.
ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் விளித்த அவள், வெகு நாட்களாக சுமந்துகொண்டிருந்த, என்னவென்று அறியாத ஒரு வகை பாரம் தற்போது தன்னிடம் இல்லை என மகிழ்ச்சியாக கூறினாள்.

கொரோனா காலத்தில் மனச்சோர்வின் காரணமாக தான் பார்த்துக்கொண்டிருந்த அரசு வேலையை விடுத்து கால் தோன்றின போக்கில் பாத யாத்திரை மேற்கொள்ளுவதாக முடிவு செய்திருந்த நண்பன் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு பேசிய பிறகு சற்று தெளிச்சியாக இருப்பதாக உணர்வதாக கூறினான்.
தொடர்ந்த தவறான புரிதல்களால் முடிவு பெற இருந்த மணவாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது. எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம். அருகில் இருக்கும் நபர் என்ன உணர்வில் இருக்கிறார் என்ற ஒரு அடிப்படை மனிதாபிமான உணர்வு கூட இல்லாமலா நாம் பொழுது மூச்சுடும் வேலை செய்து கொண்டிருக்கிறோம்? அப்படியே செய்தாலும் யாருக்காக அந்த வேலை? நமக்கும் நம் குடும்பத்திற்கும் என்றால் நமது குடும்பம் மற்றும் தனியாக இருந்து என்ன சாதித்துவிடப் போகிறோம். சுற்றம் சூழ இருப்பதுதான் என்றுமே இன்றிமையாதது. இன்றும் நாம் புரிந்து வைத்திருக்கும் 'நம்மில்' பலர் கண்ணுக்கு புலப்படாமல் பொதிந்திருக்கின்றனர். அந்த பலர் இங்கு இல்லையென்றால் நம்முடைய 'நமக்கு' இங்கு அர்த்தம் இல்லை. நம்முடைய மனது சமநிலையில் இருப்பதற்கும் சுற்றம் சமநிலையில் இருப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய தருணமிது.
பேசுங்கள். தொடர்பில் இருங்கள். முடிந்த வரை ஆறுதலான சில வார்த்தைகள். கடும் கோடையில் பெய்யும் சிலநிமிட மழைத்துளி போல உங்களின் அந்த ஓரிரு வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையை குளிர்விக்கும்.
அன்பை பகிர்ந்து வாழ்வோம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.