பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
மதராசப்பட்டினம், சென்னப்பட்டணம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட சென்னை இன்று ஸ்மார்ட் சிட்டியாக மாறி இருக்கலாம். 382-வது பிறந்தநாளை கொண்டாடும் இந்த நகரம், இன்னமும் பழைமை மாறாமல் பல விஷயங்களை தன்னகத்தை கொண்டிருக்கிறது.
ஜார்ஜ்கோட்டை
சென்னை 1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே நாளில் உருவாக்கப்பட்டது. அதாவது, கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள். இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக முதலில் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை விற்ற சென்னப்ப நாயக்கர் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர், சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் சென்னப்பட்டினம் சென்னை என மருவியது என்பது வரலாறு.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்னை அப்போது சிறிய கிராமமாகவே இருந்தது. இப்போது நெரிசல் மிகுந்த பகுதிகளாக இருக்கும் எழும்பூர், வேப்பேரி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், வடபழனி போன்றவை அக்கம்பக்க கிராமங்களாக இருந்திருக்கின்றன. திருவான்மியூர், திருவொற்றியூர், பல்லாவரம், திருநீர்மலை, மாங்காடு முதலிய ஊர்கள், ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னரே சிறப்பு பெற்று விளங்கி இருக்கின்றன.
முதன் முதலில் 1688 ஆம் ஆண்டு சென்னை, நகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை பெற்றது. பின்னர் அருகே இருந்த கிராம பஞ்சாயத்துக்கள் இணைந்ததால், சென்னை மாகாணம் என்ற அந்தஸ்தை பெற்றது.
ரயில் போக்குவரத்து
1856 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் மூன்றாவது ரயில் நிலையமும் அதுவே. இப்போது எம்.ஜி.ராமச்சந்திரன் ரயில் நிலையம் என்று அழைக்கப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1873 ஆம் ஆண்டு ஹென்ரி இர்வின் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் 2-வது ரயில் நிலையம் இது.
எழும்பூர் ரயில் நிலையம் 1908 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையத்தை முதலில் ஆயுத கிடங்காக வெள்ளையர்கள் பயன்படுத்தினர். இங்கிருந்து நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. சென்னையில் இருந்து அரக்கோணம் வரை முதல் ரயில் சென்றது. 1931-ம் ஆண்டு சென்னை கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையே புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இப்போது மெட்ரோ ரயில் போக்குவரத்தும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திருக்கிறது.

தொழில் வளர்ச்சி
ஆட்டோமொபைல், மருத்துவம், மென்பொருள், சுற்றுலா போன்ற துறைகள் வளர்ந்து வருவது சென்னையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம். சென்னை பெருநகரத்தின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னை பகுதியில் இருக்கின்றன. தென் சென்னையில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் இயங்குகின்றன.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது நம் சென்னை பட்டினம். வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை மற்ற நகரங்களை ஒப்பிடும்போது நம்ம சென்னை அதிகம். எனவே ஆபத்பாந்தவனாக விளங்குவதில் சென்னைக்கு முதலிடம் தான்.

வர்த்தகத்துக்கு துணை நின்ற சென்னைத் துறைமுகம் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ரயில் மற்றும் கப்பல் போக்குவரத்துதான் சென்னையை ஒரு மிகப் பெரிய மாநகரமாக உருவாக்கின. சென்னை காசிமேடு மீன் சந்தை, அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் இன்றும் முக்கியத்துவம் பெற்று விளங்கிறது. இப்போதும், ”வா.. அண்ணாத்தே.. வா நைனா உனக்கு இன்னா மீனு வேணும் வாங்கினுபோ..” என வாஞ்சையோடு அழைக்கும் எளியவர்களால் தான் சென்னை தென்னிந்தியாவின் வர்த்தக தலைநகராக உருமாறியது. கூவம், அடையாறு நதிக்கரையோரம் வசிக்கும் மக்கள் இன்னமும் சார்பட்டா பரம்பரை படத்தின் நிகழ்கால சாட்சிகளாக இருக்கின்றனர்.
புகழ்பெற்ற கோவில்கள், நட்சத்திர ஹோட்டல்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், பொழுது போக்குவதற்காக தியேட்டர்களுடன் கூடிய ஷாப்பிங் மால்கள், சங்கீதம் வளர்த்த இசை சபாக்கள் சென்னைக்கு மேலும் மெருகூட்டினாலும், சென்ட்ரல் ஜெயிலு இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அங்கே இப்போது, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியும், மாணவர் விடுதியும் இயங்கி வருகிறது.

1664-ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் போர் வீரர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட மருத்துவமனை, ராஜிவ்காந்தி மருத்துவமனை என்ற பெயரில் இன்று பல மாடிக் கட்டடமாகச் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிர்ப்புறத்தில் செயல்படுகிறது. கலைஞர் கருணாநிதி காலத்தில் பார்த்து பார்த்து கட்டி திறக்கப்பட்ட புதிய தலைமை செயலகம் இன்றைக்கு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது.
சென்னை விமான நிலையம், மெட்ரோ ரயில் வழித்தடம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பேருந்து நிலையம் என மேம்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் வந்தாலும், பழைமையை மறக்காத ஜனங்கதான் சென்னைவாசிகள். குழந்தைக்கு உடம்புக்கு சரியில்லை எனில், மவுன்ட் ரோடு தர்காவில் மந்திரிச்சு தாயத்து கட்டுவதும், புதுவண்டி வாங்கினாலே முதல் பூஜை பாடிகாட் முனீஸ்வரனுக்குத்தான் என்பதை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

பொழுது போக்கு தளம்
காலாற நடந்து சென்று காற்று வாங்க மெரீனா, கொஞ்சம் தள்ளிப்போனா பெசன்ட்நகர் எல்லியர்ட்ஸ் பீச், அதையும் தாண்டி அந்தப்பக்கம் போனால் திருவான்மியூர் கடற்கரை. பைக் ரைடுக்கு இ.சி.ஆர். பாரம்பரிய சின்னங்களுக்கு மாமல்லபுரம் என என்றைக்குமே சென்னைன்னா தனி கெத்து தான். தமிழ்நாட்டிலேயே ‘பஸ் டே’ என்று கொண்டாடுவதும், ‘ரூட்டு தல’ என்ற கலாச்சாரமும் இருப்பது நம்ம சென்னையில் மட்டுமே. கத்தி எடுத்தால் ரத்தம் பார்க்காமல் வைக்க மட்டோம் என்ற புள்ளிங்கோ சிலபேர் இங்கு உண்டு.
பிறப்பு, இறப்பு என இரண்டையும் சமமாக பார்ப்பது நம்ம சென்னைவாசிகள் தான். எனக்கு தெரிஞ்சு குழந்தையின் முதல் பர்த்டேவை பிரியாணி பார்ட்டியோட கொண்டாடுவது சென்னைவாசிகள் தான். மற்ற ஊர்களில் ஒரு சாக்லேட்டோடு முடிந்துவிடும் பிறந்தநாள் கொண்டாட்டம். அதேபோல், இறப்பு வீட்டிலும் ஒப்பாரி வைத்து அழுவது இல்லை. துக்க வீட்டில் தொடங்கிய நடனம் மயானம் வரை தொடர்கிறது. அப்படி ஆட்டம் பாட்டத்துடன் இறுதி ஊர்வலம் நடந்தால்தான், இறந்தவரின் ஆன்மா சாந்தியடையுமாம்.

2004-லில் சுனாமி, அப்புறம் வர்தா புயல், தானே புயல், 2015-ல் பெருவெள்ளம் என எத்தனையோ இயற்கை சீற்றங்களையும் சந்தித்துள்ளது சென்னை மாநகரம். ஆனால், எந்தவொரு நிலையில் சென்னை அதன் வளர்ச்சியை கைவிட்டதில்லை. மற்ற மாவட்டங்களில் வசிக்கும் மக்களும், சென்னையை கைவிட்டதில்லை. 2015 டிசம்பரில் வெள்ளத்தில் சென்னை மிதந்தபோது, கடைகோடி கன்னியாகுமரி முதல் அனைத்து மாவட்டங்களில் இருந்து உதவிப் பொருட்கள் சென்னைக்கு வந்து சேர்ந்தன.
சுமார் ஒரு கோடி பேர் சென்னையில் வசிப்பார்கள். அவர்களில் 40 சதவீதம் பேர் பூர்வ குடிகள். மற்ற 60 சதவீதம் பேர் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தொழில் நிமித்தமாக இங்கு வந்து சென்னைவாசிகளாக மாறியவர்கள். ஆனாலும், அவர்கள் சொந்த ஊர் சென்றால், மெட்ராஸ்காரன் வந்திருக்கான் என்பார்கள் உறவினர்கள். அது தான் மெட்ராஸுக்கான கெத்து.!
-அ.ஹரிகரன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.