வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள்.
மே 3 ந் தேதி, 2021- இந்த நாளை என்னால் மறக்க முடியாது. காலை 9 மணிக்கு நானும் என் கணவரும் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். பெங்களூரிலிருந்து அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவிற்கு போக வேண்டும். நான் சற்று கண்களை மூடி நடந்தவற்றை அசை போட்டேன்.
2020ம் வருடம் மார்ச் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரானா எல்லா நாடுகளையும் பயமுறுத்திக் கொண்டிருந்தது. கொத்துகொத்தாக மக்கள் மடிந்து கொண்டிருந்தார்கள். கொரானா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ஆனால் மற்ற நாடுகளை விட குறைவான மரணங்கள்தான் இங்கே.. .. .. அரசும் முன்ஜாக்கிரதையாக எல்லா தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்ததால் கொரானாவின் கோரப் பிடியிலிருந்து சீக்கிரமே மீண்டு விட்டோம்.

எல்லாமே படிப்படியாய் நார்மல் ஆனவுடன் எனக்கும் என் கணவருக்கும் என் மகள்களையும், பேரப் பசங்களையும் பார்க்கிற ஆசை வந்து விட்டது.
“போன வருஷம்தான் எங்கும் போக முடியாம, வீட்டு வேலைக்கும் ஆள் இல்லாம திண்டாடி தெருவில் நின்னோம்; இந்த வருஷமாவது அமெரிக்காவில் இருக்கிற பெரியவ சாயா வீட்டுக்கும், கனடாவிலே இருக்கிற சின்னவ மாயா வீட்டுக்கும் போலாமே?”
என் கணவரும் புதிதாய் ஆன்லைன் கோர்ட்டில் “மை லார்ட்!” சொல்லி நொந்து போயிருந்தார். அதனால் “சரி, சரி!” என்று தலையாட்ட, என் பொண்ணுகளும் எங்களைப் பார்க்கும் ஆவலில் இருந்தார்கள்.
சீக்கிரமே சாயா பெங்களூரிலிருந்து சான்பிரான்சிஸ்கோ போகும் ஏர் இந்தியா விமானத்தில் 2021 மே மாசம் 3 ந் தேதி எங்களுக்கு டிக்கட் எடுத்து அனுப்பி விட்டாள். பின் என்ன? சந்தோஷமாய் அவர்களுக்கு டிரஸ், சமையல் சாமான்கள், பலகாரங்கள் என்று வாங்கி சேர்க்க ஆரம்பித்து விட்டோம். என் பேத்திகள் தியா, ரியா இருவரும் “தாத்தா! எங்களுக்கு காஜு கட்லி நிறைய வேணும்!” என்று ஆர்டர் வேறு! செல்லக் குட்டிகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பதுதானே தாத்தா, பாட்டிக்கு அழகு! ஆவலாய் மே மாதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

மார்ச் போய் ஏப்ரல் வந்தது; சட்டமன்ற தேர்தல் காரணமாய் அரசியல் கட்சிகள் பரப்புரைகள், பேரணிகள் என்று தினமும் திருவிழா காட்சிகள்; வீட்டில் பதுங்கிக் கிடந்த மக்கள் கூட்டம் கூட்டமாய் வெளியே வந்தவுடன் கொரானாவுக்கு ஒரே கொண்டாட்டம்!
இடையில் மக்கள் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள், சினிமா, பீச், மால் என்று ஜாலியாக ஊர் சுற்ற ஆரம்பித்தார்கள். சாதுவாய் அடங்கியிருந்த கொரோனா தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டது. கொரானா இரண்டாம் அலை சுனாமிப் பேரலையாக மாறி சற்று அசட்டையாக இருந்தவர்களை வாரி சுருட்டி தன் வாயில் போட்டுக் கொள்ள, அப்பப்பா! .. .. ஒரே நாளில் எவ்வளவு நோயாளிகள்; எவ்வளவு மரணங்கள்; நாடும், அரசும் திணறிப் போய் விட்டன.

நாட்கள் செல்ல, செல்ல எங்களுக்கு நினைத்தபடி அமெரிக்கா போக முடியுமா என்ற சந்தேகம் வந்து விட்டது. முன்னெச்சரிக்கையாய் நாங்கள் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டோம். கிளம்ப 5 நாட்கள் இருக்கையில் கர்நாடகா அரசு லாக் டவுன் அறிவித்து விட்டது. அதனால் காரில் போக வேண்டிய எங்கள் பயணத்தை விமானப் பயணமாக மாற்றினோம்.
மூன்று நாட்களுக்கு முன்பு செய்த கோவிட் டெஸ்ட் ரிசல்ட் முதல் நாள் இரவுதான் கிடைத்தது. சாதாரணமாக 24 மணி நேரத்தில் கிடைக்கும் ரிசல்ட் திடீரென்று அதிகரித்து விட்ட டெஸ்ட் எண்ணிக்கை காரணமாக லேட்டாகி எங்கள் பிபியை அதிகரிக்க வைத்தது. எங்களுக்கு கொரானா இல்லை என்று அந்த ரிசல்டை காட்டினால்தான் நாங்கள் ஏர்போர்ட்டுக்குள் நுழைய முடியும்.

இந்த டென்ஷனில் டிவி செய்தி வேறு எங்கள் கலக்கத்தை அதிகரித்தது. இந்தியாவில் கொரானா பரவல் மிக அதிகமாகி விட்டதால் மே 4 ந் தேதியிலிருந்து இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வரக் கூடாது என்று அமெரிக்க அரசு தடை விதித்து விட்டது. நல்ல வேளையாக, கடவுள் அனுக்கிரகத்தில் மே 3ந் தேதி மாலையே நாங்கள் அமெரிக்க மண்ணை மிதித்து விடுகிறோம்.
டக்கென்று இண்டிகோ விமானம் கெம்பேகவுடா விமான நிலைய ஓடுதளத்தில் இறங்கியதும் விழித்துக் கொண்டேன். அதிக லக்கேஜ்களை டிராலியில் தூக்கி வைத்து அவற்றை சர்வதேச விமான முனையத்துக்கு கொண்டு போவதற்குள் முழி பிதுங்கி விட்டது. பெங்களூர் ஏர்போர்ட்டில் கெடுபிடிகள் அதிகமாகவே இருந்தன.
செக் இன் முடிந்து செக்யூரிட்டி செக்கப்பில் எங்கள் தரவுகளை சரிபார்த்துக் கொண்டு மேலே போனால் இரண்டாவது தடவையாக செக்யூரிட்டி சோதனை செய்த பின்புதான் விமானத்தில் ஏற விட்டார்கள். அப்போதே மாஸ்க், முக கவசம், உடல் கவசம், கிருமி நாசினி என்று எல்லா சீர்களும் கொடுத்து அனுப்பினார்கள்.

என் கணவர் ஏதோ சந்திராயணப் பயணம் செய்பவர் போல முழு கவசத்துடன் நடுவில் உட்கார்ந்துக் கொள்ள, நானும் அவஸ்தையுடன் முக கவசத்தை மட்டும் போட்டுக் கொண்டு அருகில் உட்கார்ந்து கொண்டேன்.
முன்சீட்டில் ஒரு பெண் தூங்க முடியாமல் கைக்குழந்தை அழுகும் போதெல்லாம் கையில் வைத்து ஆட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாயிருந்தது.
முதியவர்கள்தான் நிறைய! தங்கள் மகன், மகள் வீட்டுக்குப் போகும் பெற்றோர்கள்! மொத்தம் 16 மணி நேரம் பறந்து சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் கால் பதித்த பின்புதான் எல்லோருக்கும் மனம் நிம்மதியானது.

ஏர்போர்ட்டில் சாயாவும் அனிலும் தியா, ரியாவுடன் வந்து எங்கள் வருகைக்கு காத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் குடியுரிமை சோதனையை (immigration checkup) முடித்துக் கொண்டு வெளியே வர மூன்று மணி நேரமாகி விட்டது.
அப்பாடா! கடைசியில் மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகளைப் பார்த்தவுடன் எங்கள் கஷ்டம் எல்லாம் பறந்தோடி விட்டது. மனதில் ஒரே பரவசம்! கடவுளே! உனக்கு கோடானு கோடி நன்றி!
-மோகனா சுகதேவ்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.