Published:Updated:

கார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் தன்னம்பிக்கையை தருகின்றனவா..? - வாசகர் வாய்ஸ்

தொழிலாளியின் பார்வையில் பார்த்தால் வேறு ஒரு தோற்றம் காணலாம். சொற்களில் தோரணங்கள் கட்டும் நிலையினை காணும்போதெல்லாம் சி ஆர் ரவீந்திரனின் 'சராசரிகள்' கதை நினைவுக்கு வரும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கடைசியாக மிச்சமிருப்பது இது ஒன்றுதான். நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்தோடு மோதிவிடுவது மட்டும் தான்.
தஸ்தயெவ்ஸ்கி

வாசிப்பின் துவக்க நிலையில் வரலாற்று நாவல்களை படித்த பின் அனைவரும் தேர்ந்தெடுத்து வாசிப்பது சுயமுன்னேற்ற நூல்கள் தான். தமிழில் வந்த சுயமுன்னேற்ற நூல்களை விட கார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூல்கள் அதிகம் வாசிப்போர் உண்டு. எழுந்திரு, ஓடு, லட்சியம் மொட்டை மாடியில் துணி காய்வது போல காய்ந்து கொண்டிருக்கிறது ஓடிப்போய் எடுனு நம்மை உசுப்பேற்றும் வாசகங்கள் அதிகம் இருக்கும். கொஞ்சம் தெலுங்கு டப்பிங் படம் பார்ப்பது போல அது ஒரு அனுபவமாய் இருக்கும். அந்த போதையில் இருந்து விடுபடாமல் அதிலேயே பயணிப்பது சுகம்.

விதி, எண்ணங்கள், ஆசைகள், மனப்பான்மைகள், குறிக்கோள்கள், ஆன்மா, முயற்சி, திட்டவட்டம், கற்பனை, யோசனை, வெற்றி, தோல்வி, துறைசார் அறிவு,பணம், தன்னம்பிக்கை, தூண்டுதல் போன்ற நூறு வார்த்தைகள் பக்கத்துக்கு பக்கம் இடம் பெற்றிருக்கும். அட்டைப் படத்தின் மேல் மானே தேனே மாதிரி 5 கோடி பிரதி விற்றது, 6 கோடி பிரதி விற்றது என அச்சிட வேண்டும். இது தான் கார்ப்ரேட் சுயமுன்னேற்ற நூலுக்கான பிள்ளையார் சுழி.

Representational Image
Representational Image

ஃபோர்டு, எடிசன், ஐன்ஸ்டீன் வாழ்வியல் கதைகள், சம்பவங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் தெய்வக் குத்தம் ஆகிடும். சில பக்கங்களுக்கு ஒரு முறையாவது கும்கியை மாணிக்கமாக மாற்ற பார்கே பார்கேனு சொல்வது மாதிரி நம்பிக்கை நம்பிக்கைனு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அயல்நாட்டு கிராமத்தில ஒரு செண்ட்/டாலர்/யென் என விரும்பிய பணத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறுவன் முன்னேறி பெரிய தொழிலதிபரான கதையை சிலாகித்து சொல்ல வேண்டும்.

கொஞ்சம் பைபாஸ் சாலையில் இருந்து இறங்கி ஊருக்குள் போவது மாதிரி உளவியல் பக்கம் போய் ஆழ்மனம், அமானுஷ்ய சக்தி, பேராற்றல் எல்லாம் நீங்க பொறக்கும் போதே டீஃபால்ட்டா இருக்குனு நம்ப வைக்கனும். குறிப்புச்சட்டம் இல்லாமல் ஒவ்வொரு கட்டுரையிலும் பத்து மார்க் கேள்வி எழுதற மாதிரி புல்லட்டின் பாய்ண்ட் போட்டு பேரா பேராவா எழுது கிறங்கடிக்கனும்.

அறிவு என்பது தானா முளைக்கிற முருங்கை மரம் இல்ல அது பாதுகாப்பா பொத்தி பொத்தி வளர்க்க வேண்டிய குரோட்டன்ஸ் செடிங்கிற மாதிரி கம்பி கட்டனும்.

பெல் அடிக்கும் போது விலங்கியல் பீரியடில் மூளை பாடம் நடத்துற மாதிரி அவசர அவசரமா மூளையின் படம் வரையாமலேயே அதன் பாகம்,பணி,செயல்பாடுனு அவசர அவசரமா சொல்லி விளக்கனும். சுருக்கமா அந்த மூளைய வச்சு சிபில் ஸ்கோர் இல்லாமலேயே பர்சனல் லோன் வாங்கலாங்கிற ரேஞ்சுக்கு சொல்லனும். அதுக்கு உதாரணமாய் மொராக்கோ, சிக்காக்கோவில் நடந்த வெற்றிக் கதையை வெறி புடிச்ச மாதிரி சொல்லனும்.

சமயத்தில இருட்டில் வரும் வின்னர் கைப்புள்ள மாதிரி யார்னே நீ இம்புட்டு வெவரமா பேசுறனேனு நம்மையே கேட்க வெச்சிடுவாங்க.

Representational Image
Representational Image

அடுத்தது தலைமைப் பண்பை பத்தி க்ளாஸ் எடுப்பாங்க.இது அசத்தும் புலி, இது அசராப்புலினு டி ஆர் பேசும் வசனம் போல தலைமைப்பண்பு என்பது சுயமாய் முடிவெடுக்கனும், தடுமாற்றமில்லாமல் முடிவெடுக்கனும், சீராக முடிவெடுக்கனும்,அறிவார்ந்து பேசனும், புரிதல் இருக்கனும், திட்டமிட்டு எடுக்கனும்னு அடேய் இப்பிடி எல்லாம் இல்லாம இருந்தாலே ஈசியா முடிவெடுத்திருப்பனேனு யோசிக்க வைப்பாங்க.

இதுக்குப் பின் என்ன.. தோல்வியைப் பத்தி தான். அடிச்சு துவைச்சு கிழிஞ்சு போன சண்டே மார்க்கெட் துணி மாதிரி தோல்வியைப்பத்தி பத்தி பத்தியா எழுதனும்.நார்மலா நாம தோற்றுப் போனால் எல்லாம் விதி, எல்லாம் நேரம் சரியில்லனு சொல்வோம். ஆனால் கார்ப்ரேட் உலகில் அப்படி சொல்லக்கூடாது. குறிக்கோளின்மை, இலட்சியமின்மை சுயஒழுங்கின்மை, சுய கட்டுப்பாடின்மை, நலக்குறைவு, தாக்கங்கள், காலம் தாழ்த்துதல், திறமையின்மை,போல இன்மை, விடாமுயற்சியின்மைனு சொல்லி 30 வகையான ரெசிபி செய்யறது மாதிரி அடுக்கிக்கிட்டே போகனும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உன்னையே நீ எண்ணிப்பாரு னு பிதாமகன் சித்தன் சொல்லுவது மாதிரி சொல்லுவாங்க. மூன்று டாபிக் முன்னால் முடிவெடுத்தலில் சொதப்பியதற்கு போரிங் பவுடர் போடுவது மாதிரி.. அடுத்து விரைவாய் எப்பிடி முடிவெடுக்கிறது என்பதை விக்கிரவாண்டி மோட்டலில் சாப்பிட்டுக்கிட்டே சொல்வது மாதிரி சொல்லுவாங்க. அபிப்ராயம், திட்டமிடு, மூளையும் மனமும் ஒன்றாய் இருக்கும் போது முடிவெடு, மேலபாரு, கீழபாரு என்று சொல்லி.. முடிவெடுத்தலால் மாறிய வரலாற்று சம்பவங்களை எல்லாம் வானலியில் போட்டு வறுக்கனும். எல்லா ராசிபலனிலும் வரும் ஓபன் வரிகளை போட்டு ஃபில்ட் அப் பன்னனும்.

சின்ன வயசுல நோட் மேக்கிங் எழுதும் போது என்ன எழுதறோம்னே தெரியாம Rough copyயை அடித்துவிடுவது போல.. என்னன்னே தெரியாம படித்து படித்து பக்கத்தை திருப்பிக் கிட்டே இருப்போம்.

Representational Image
Representational Image

*பணத்தைத் தேடி ஓடாதே. பணம் உன்னைத் தேடி வரும். (அடப் போங்க பாஸ் இ.எம்.ஐ தான் தொரத்து தொரத்துனு தொரத்துது)


*உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் கூற்று ( அப்ப நாங்க மட்டும் யாரு)

*உங்கள் அணுகுமுறையை மாற்றுங்கள் வெற்றி அடைவீர்கள்

(நேர்மையா இருக்கோம், உண்மையா இருக்கோம் என ஆழ்மனசில் இருப்பதால் எச்சரிக்கையா இருக்கிறோம் இதுக்குமேலயும் வெற்றி வரலைனா சர்வர் பிரச்சனை இருக்குனு மனசை தேத்திக்கிறோம்)


*நேர்மறை சிந்தனை எப்போதும் இருக்கனும் (அதுக்காகத்தான் ஒவ்வொரு கையிலும் கருப்பு, சிவப்பு கயிறு கட்டியிருக்கோம்)


*சிந்தனையைக் குவி (ஏங்க அதென்னா எம் சாண்டா குவிச்சு விளையாட)


*சதுரங்க வேட்டை நட்டி மாதிரி உன்னிடம் முடிவிலா பேரறிவு இருக்கு, அதில் சேகரிக்கப்பட்ட அனுபவத்தையும், ஒருங்கமைக்கப்பட்ட ஆற்றலையும் சேர்த்தா அந்த முயற்சி உன்னை மூலாதாரத்துக்கே கூகுள் மேப்பில் கொண்டு சேர்க்குனு படிக்கும் போது உடல் சிலிர்க்கும்.

*உங்கள் ஆழ்மனசிலிருக்கும் சிந்தனையைத் தூண்டுங்க (நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பன்றேன்)

இவையனைத்தையும் படிக்கும் போது உத்வேகம் வரும். ஆனால் யதார்த்த வாழ்வு கனவு குமிழி போல் இவைகளை எளிதில் உடைத்துவிட்டு சென்றுவிடும். இவைகள் அனைத்தையும் நெஞ்சில் நிறுத்தினாலும் சூழலும் காலமும் தான் சில விஷயங்களை தீர்மானிக்கின்றன. இவைகள் பெரும்பாலும் முதலாளிகளின் பார்வையிலிருந்தே சொல்லப்படுகின்றன. தொழிலாளியின் பார்வையில் பார்த்தால் வேறு ஒரு தோற்றம் காணலாம். சொற்களில் தோரணங்கள் கட்டும் நிலையினை காணும்போதெல்லாம் சி ஆர் ரவீந்திரனின் 'சராசரிகள்' கதை நினைவுக்கு வரும்.


கருவேல மரங்கள் நிரம்பிய ஒரு காட்டில் துரை எனும் இளைஞன் தேர்வு நேரம் என்பதால் அந்திவரை அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறான்.அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு பாம்பினை இருவர் துரத்தியபடி வருகின்றனர். நாகப்பாம்பு என்று தெரிந்தவுடன் ஒருவன் கையில் கற்கள்,உண்டிவில் சகிதம் கையில் இருக்கிறது. இரையைத் தின்ற பாம்பு ஐந்து பேர்கூடியவுடன் படமெடுக்கிறது. யாரும் அடிக்காமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

Representational Image
Representational Image

அதில் ஒருவர் பாம்பை அடித்தால் மாமா திட்டுவார் என்றும், மற்றவர் கைவலிப்பதால் தன் குறி தவறிவிடும் எனவும், தன் மனைவி கருவுற்றிருப்பதால் அடிக்கக்கூடாதென ஒருவரும், இருட்டிவிட்டதால் தன் கன்பார்வை சரியில்லையென்று ஒருவரும் சொல்ல.. இறுதியில் பாம்பை கொல்லும் முயற்சியை கைவிட்டு எல்லோரும் திரும்புகிறார்கள்.அந்த பாம்பு தான் பல அம்சங்களின் குறியீடாக உள்ளதென எழுத்தாளர் பாவண்ணன் குறிப்பிடுவார்.வறுமை, சாதி, ஊழல், பொறாமை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டியவை.ஆனால் அவற்றை அகற்றும் செயலில் ஈடுபட தயக்கம் இருக்கவே செய்கிறது. எல்லா அறிவும் வெற்றிக்கான ஃபார்முலாவாக இருந்தாலும் உண்மையான யதார்த்தத்தை காணும் போது தோற்றுதான் போகிறோம்.

அந்த யதார்த்தத்தை அஞ்சாமல் நோக்கும் துணிவுதான் ஒவ்வொருவரும் வளர்க்க வேண்டிய சுயமுன்னேற்றம்.விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையுறு மனங்கேட்டேன்- நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன் எனச் சொல்லும் பாரதி போல யதார்த்தமாக மனம் சொல்வதை உடல் செய்யும் அற்புதத்தைத் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தொழிலதிபர் விழாவில் பேசும் போது..ஒரே ஒரு மஞ்சப்பையை கொண்டுதான் இந்த பட்டணத்துக்கு வந்தேன்.அதை வைத்துத்தான் வெற்றி பெற்றேன் என்றார்.அதைக்கேட்டு கூட்டமே சிலாகித்து கைதட்டி கலைந்தது. ஒரே ஒருவர் மட்டும் அந்த பையில் என்ன இருந்தது எனக் கேட்க அதற்கு அவர் அதில் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இருந்தது என்று கூறி சிரித்தாராம்.

Representational Image
Representational Image

சிரித்ததோடு அனைவரும் கேட்டுவிட்டு சென்றனர் ஆனால் நீ ஒருவன் மட்டும் அதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்ததை சொல்லி பாராட்டினாராம். எந்த வெற்றிக்கும் ஒரே ஃபார்முலா இல்லை. அது கண்டுபிடிக்கவும் இல்லை.சுய முன்னேற்றம் நம் உழைப்பில் தான் இருக்கிறது.

கரை ஓரமாய் நின்று கால் நனைப்பது நன்றாகத் தான் இருக்கும்.கடலில் இயங்கினால் தான் உண்மை தெரியும்.அப்போது கற்றது பலவும் மதிப்பிழந்து புதிதாய் ஒன்றை கற்றுக் கொள்வோம். அதுவே அனுபவ கற்றல்.சுய முன்னேற்ற நூல்களில் நம் வாழ்வுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்வில் செயல்படுத்தி பார்த்து அல்லவைகளை தவிர்த்து நல்லவைகளை பயன்படுத்திப் பார்க்கலாம்.எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லப்பட்டிருக்கும் சில புத்தகங்கள்.சில கருத்துக்கள் சுயநலம்தான் சுய முன்னேற்றமோ என தவறாய் புரிந்து கொள்ளப்படும்.

ஒவ்வொரு மனிதனின் பலவீனங்களை அவர்களே நீக்கி தன்னை வெற்றி கொள்ளுதலே சுயமுன்னெற்றம்.அதற்கு பேராற்றல் சூழல் காலம் அறிவினைக் கொண்டு, தான் பெற்ற அனுபவங்கள் மூலம் அதை அடையும் போது இன்னும் உயரம் தொடலாம்.


-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு