வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
என் சமையறையை ஒட்டிய ஜன்னல் எதிரில் சில மரங்கள் இருக்கின்றன.அம்மரங்கள் பறவைகள், பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றின் வீடு. காலையில் நான் ஜன்னலின் ஓரத்தில் இவைகளுக்காக நடத்தும் ஹோட்டலிற்கு இவைகள் அனைத்தும் வாடிக்கையாளர்கள்.. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் இவைகள் வந்து க்யூவில் நிற்கும். காக்கைகள் தான் அதிகம் வரும். காக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.

ஒன்று நான் உணவு வைக்கும் வரை பொறுமையாக அங்கேயே இருந்து , வைத்தவுடன் நிதானமாக சாப்பிட்டு விட்டு செல்லும். ஒன்று பறந்து வரும்போது நான் உணவு வைப்பதைப் பார்த்தால் அப்படியே யு- டர்ன் அடித்து நான் அங்கிருந்து நகர்த்தவுடன் வந்து சாப்பிடும். ஒன்று வந்து உட்கார்ந்து அதன் நண்பர்களை அழைக்கும். ஒன்று பெரியண்ணா விஜயகாந்த் போல்.. தன் தம்பி காக்கைகள் சாப்பிடும் வரை அங்கேயே இருந்து பாசமாக பார்த்துக் கொண்டே இருக்கும்.
பிறகு அவை அனைத்தும் சாப்பிட்டு விட்டு முடித்ததை ஊர்ஜிதம் செய்து பின் மிச்சமிருப்பதை சாப்பிடும். ஒன்று attention seeker.. அதை அருகிலிருந்து சாப்பிடு என்று சொல்லவேண்டும். இல்லாவிட்டால் கரைந்து கொண்டே இருக்கும். ஒன்று தங்க மனசுக்காரன்.. மைனாக்கள் வந்தால் அவை சாப்பிடும் வரை பொறுமை காக்கும். அவை சாப்பிட்டு விட்டு ஒரு சிறிய ஒலி எழுப்பி பறந்தபின் தான் இது சாப்பிடும்.

ஒரு சில காக்கைகள் 2k கிட்ஸ் போல்.. உப்புமாவையும், நூடுல்ஸையும் வைத்தால் நூடுல்ஸை ஒரு பிடி பிடித்து விட்டு, உப்புமாவைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிக்கும்.. இப்படி தினம் தினம் இவைகளின் நிகழ்ச்சி நிரலில் மாற்றமில்லை.
ஆனால் ஒரு நாள் காலையில் ஏகப்பட்ட காக்கைகளின் சத்தம் ஒரு சேர கேட்கவே, சென்று பார்த்ததில் ஒரு காகம் இறந்து கிடந்தது. சோகம் தாளாமல் மற்றவை கரைந்துக் கொண்டிருந்தன. துப்புரவுப் பணியாளர் அங்கு வந்து அந்த இறந்துபோன காகத்தை வாரி எடுக்கும் வரை அவைகள் கரைந்து கொண்டே இருந்தன. சிலமணி நேரம் கழிந்தபின் கூட சில காக்கைகள் கரைந்து கொண்டேதான் இருந்தன.

அன்றைக்கு முழுவதும் ஒரு காக்கை கூட உணவருந்த வரவில்லை. குயிலின் முட்டையை தன் பிள்ளை போல் காக்கும் குயிலுக்கு இந்தக் காக்கையின் மரணச் செய்தி போய் சேர்ந்ததா எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அதுவும் வருத்தப்பட்டிருக்குமோ!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.