Published:Updated:

இறப்பும் - ஏற்பும்! |முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

இதுகாறும் பிள்ளைகளைப் பெற்று, குடும்பம் எனும் ஒரு கூட்டமைப்பை கட்டிக்காத்து வாழ்ந்து வந்த தம்பதிகளில் ஒருவர் இறந்து போகும் பொழுது, எப்படி அக்குடும்பம் நிலைகுலைந்து போகிறது?

இறப்பும் - ஏற்பும்! |முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

இதுகாறும் பிள்ளைகளைப் பெற்று, குடும்பம் எனும் ஒரு கூட்டமைப்பை கட்டிக்காத்து வாழ்ந்து வந்த தம்பதிகளில் ஒருவர் இறந்து போகும் பொழுது, எப்படி அக்குடும்பம் நிலைகுலைந்து போகிறது?

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இறப்பு ஒரு குடும்பத்தில் ஏற்படுத்துகின்ற இழப்பு, அந்தக் குடும்பத்தில் இருந்தவர் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைப் பொறுத்தே அது அமையும். ஒவ்வொரு குடும்பத்திலும், வாழ்க்கையிலும் இது ஒரு கட்டாய நிகழ்வாக இருந்தால் கூட இதை மற்ற நிகழ்ச்சிகள் போல் ஏற்றக்கொள்கிற மனப்பக்குவம், மனதைத் தேற்றிக் கொள்ளுதல், போன்றவை எளிதில் ஒருவர்க்கு வந்துவிடாது. இறைவன் ஒரு கதவை மூடி இன்னொரு கதவைத் திறந்து வைத்து சமன் செய்தாலும், இதற்கு சில நாட்களில் அல்லது சில மாதங்களில் மனதால் பக்குவம் அடைவது அவ்வளவு எளிதல்ல. அதிலும் குடும்பத் தலைவன் அல்லது பாசத்திற்குரிய இளம் வயதினரை நாம் இழக்கும் போது அழுதாலும் உடன் பிறந்தவர்கள் புரண்டாலும் தீராத வேதனை அது.

இதுகாறும் பிள்ளைகளைப் பெற்று, குடும்பம் எனும் ஒரு கூட்டமைப்பை கட்டிக்காத்து வாழ்ந்து வந்த தம்பதிகளில் ஒருவர் இறந்து போகும் பொழுது, எப்படி அக்குடும்பம் நிலைகுலைந்து போகிறது? பெற்றோர் இறப்பினால் அதன் தாக்கம் பிள்ளைகளை எவ்வாறு பாதிக்கிறது. அதுபோல், முதியோர் இருக்கும் பொழுது பிள்ளைகள் இறப்பது போன்ற பெரும் துயரங்களும் முதியவர்களை எவ்வாறு தாக்குகிறது. இவையெல்லாம் அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் மரணங்கள் நமக்குப் பாடம் புகட்டுகின்றன.

Representational image
Representational image

ஆனால் நமக்கென்று வரும்பொழுது, நாம் தடுமாறுகிறோம், தவிக்கிறோம். ஒருவர் இறக்கும் பொழுது சுற்றி இருப்பவர்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறார் என்பது அவர்கள் எந்த அளவிற்கு, நெருக்கமாகவும், பாசமாகவும் ஒருவரோடு ஒருவர் பழகுகிறார்கள் என்பதைப் பொருத்தது.

நெருக்கமானவரின் மரணத்தைத் தாங்க முடியாமல் இறந்தவர்களும் உண்டு. மனநிலை மாறி சித்தபிரமை அடைந்தவர்களும் உண்டு. உலகை வெறுத்துத் துறவரம் சென்றோரும் உண்டு. ஆகவே மரணத்தைத் தொடர்ந்து வரும் காலகட்டத்தில் நாம் உதாரணமாகவும், தெளிவாகவும், நிலைகுலையாமலும் இருக்கவும் மனதைத் தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

வயதான காலத்தில் கணவன் மனைவி இருவருக்குள் யார் முதல் இறந்து விடுவோம் என்கின்ற ஆதங்கம், மனக்கவலை எல்லா முதியோர்களுக்கும் உண்டு. முதுமையில் கணவனுக்கு மனைவி, மனைவிக்கு கணவன் என்கின்ற துணை மிக மிக அவசியம். ஒருவர் இறந்துவிட்டு ஒருவர் முதுமையில் தனிமையாகவும், குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்க முடியாத நிலையிலும் வாழ்வதென்றால் அது மிகவும் கொடுமை.

குடும்பத்தாரோடு இருக்க முடியாத காரணத்திற்காக முதியோர் இல்லத்தில் இருப்பது அதைவிடக் கொடுமை. முதுமையில் மகன், மருமகள், பேரன், பேத்தி என்று உறவுகளோடு வாழ்ந்தால் துணையில்லாமல் தனிமையில் துன்பப்படுவதை ஓரளவிற்கு குறைக்கலாம்.

காலமெல்லாம் உழைத்து களைத்துப் போன வயதில் தன் துணையோடும், உறவுகளோடும் உறவாட மட்டும் தான் மனம் ஏங்கும். முதுமையில் துணையில்லாமல் தனிமையில் வாழ்வது என்பது கொடிய ஆயுள் தண்டனைக்குச் சமமானதாகும்.

ஒரு குழந்தை பிறந்தவுடனே அது முதுமையின் வாழ்க்கையில் தன் முதல்படியைத் தொடங்கிவிடுகிறது. பல பருவங்களைத் தாண்டிக் குழந்தை முதுமையடைகிறது, மரணம் அவ்வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

மரணத்திற்கு மருந்தில்லை. மரணம் அறிவித்து விட்டு வருவதும் இல்லை. மரணம் உலக வாழ்வில் புதியதும் இல்லை.

'மரணபயத்தைத் துாக்கி எறிந்து விட்டு முழுமையான வாழ்க்கை வாழ்ந்திருங்கள்' என்கிறது ரிக்வேதம்.

Representational image
Representational image

‘மரணம் தவிர்க்க முடியாதது என்பதை மனிதன் எண்ணிப் பார்ப்பதில்லை' என்கிறது கீதை. மரணத்தைக் காட்டிலும் மரண பயம் கொடுமையானது.

மனிதனைத் தேடி மரணம் வருவதில்லை. மரணம் தேடியே மனிதன் போகிறான்.

கிரேக்க நாட்டின் பெரும் பணக்காரரான ஒனாசிஸ் பல்லாண்டுகள் வாழ்ந்தும் மரணத்தைக் கண்டு பயந்தார். அவருக்கு நோயின் தாக்கம் அதிகமானது.

“இனி எங்களால் எதுவும் செய்ய இயலாது" என்று டாக்டர்கள் சொல்விட்டார்கள். கோடிக்கணக்கில் பணம் இருந்தும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. காலம் முடிந்துவிட்டது. இருப்பினும் அவருக்கு உயிர் மீதான ஆசை போகவில்லை.

தன் நெருங்கிய உறவினர்களையும், நண்பர்களையும், டாக்டர்களையும் அழைத்து “நான் இறந்த பிறகு என் உடலைப் புதைத்துவிடாதீர்கள். சீனாவுக்கு அனுப்பி பனிக்கட்டியில் வைத்துப் பாதுகாத்து வாருங்கள். எதிர்காலத்தில் இறந்தவர்களின் உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்பும் மருத்துவம் வரலாம். அதைப் பயன்படுத்தி என்னை எழுப்புங்கள்” என்றாராம். இந்த உலகில் யாருமே மரணம் அடைவதற்குத் தயாராக இல்லை.

மரணம் என்ன என்று அறியாமலேயே மரணமடைகிறவர்கள் பாக்கியசாலிகள். அதாவது ஒருவர் மரணத்தை விட மரணத்தின் போது ஏற்படும் கஷ்டங்கள் பற்றியே கவலைப்படுகிறார் என்றோ, எங்கேயோ எப்படியோ ஏற்படப்போகும் மரணத்தைப் பற்றிக் கவலைப்படுவதில் எந்த பலனும் இல்லை. அப்படி இருக்க அதை நினைத்து நினைத்து பயப்படுவானேன்? “வந்தால் வரட்டும் போடா” என்ற மனோ தைரியத்துடன் மரணத்தை வரவேற்க பழகிக்கொள்ள வேண்டும்.

“காலனே, என் காலடியில் வாடா!

உன்னை என் காலால் எட்டி உதைக்கிறேன்.”

என்று பாரதியார் பாடினார். அதை அடிக்கடி நினைவில் வைத்துக் கொண்டால் மரண பயம் இல்லாமல் இருக்கலாம்.

Representational Image
Representational Image

ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது:

சேமிப்பிற்கு ஒரு நேரம் போல் தொலைப்பதற்கும் ஒரு நேரம்.

வருந்துவதற்கு ஒரு நேரம் போல் ஆனந்தத்திற்கும் ஒரு நேரம்.

அழுவதற்கு ஒரு நேரம் போல் சிரிப்பதற்கும் ஒரு நேரம். –

பிறப்பதற்கு ஒரு நேரம் போல் இறப்பதற்கும் ஒரு நேரம்.

உடைந்த மண்பாண்டத்திற்கும், சிதறிய பாலுக்கும் அழுது பயன் இல்லை. கோபம், தாபம், அழுகை, ஆதங்கம் போன்ற உணர்வுகளை இந்தக் காலகட்டத்தில் அடக்கக் கூடாது. துணையோ அல்லது உடன் இருப்பவரையோ இழந்தவர் தனித்திருக்கவே கூடாது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்திருக்க வேண்டும். நண்பர்களும், உறவினர்களும் அவருக்கு ஆறுதல் சொல்த் தேற்ற வேண்டும். குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு வாழ்க்கை முறையை சற்று மகிழ்ச்சிகரமாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களின் மனம் ஓரளவிற்கு பக்குவம் அடைந்திருப்பதால், இழப்பு அவ்வளவாக பாதிப்பதில்லை.

குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அந்த குடும்பத்தாரிடம் துக்கம் விசாரிப்பதும், அவர்களுக்கு ஆறுதல் கூறுவதும் மிகவும் இன்றியமையாதது. நல்ல காரியங்களுக்கு ஒரு சில காரணங்களினால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் பரவாயில்லை. ஆனால் துக்க காரியங்களுக்கு அவசியம் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். அக்குடும்பத்தில் “எனக்கு தெரிந்த நபர், என் நண்பர் ஒருவர் மட்டும் தான், அவரே போன பின் நான் அங்கு சென்று யாரிடம் என்ன விசாரிப்பது” என்று எண்ணவே கூடாது. அச்சமயத்தில் தான் உங்களுடைய ஆறுதல் வார்த்தை உடைந்த மனதை தேற்ற உதவும். "எனது கணவரின் நண்பர், இதுவரை அவரைப் பார்த்ததே இல்லை எனது கணவருக்கு அஞ்ச செலுத்த வந்திருக்கிறார் என்று எண்ணி”, மனைவியின் மனம் சற்று ஆறுதல் அடையும். இறந்த நண்பனின் ஆத்மாவும் சாந்தி அடையும்.

Representational Image
Representational Image

நெருங்கிய நண்பர் அல்லது உறவினரின் குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டால் துக்கம் விசாரிப்பதை ஒரு தடவையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது. சில நாட்கள் கழித்து, உங்கள் ஆறுதல் அவர்களுக்கு இன்னமும் தேவைப்படலாம். ஆறுதல் வார்த்தையோடு இல்லாமல் வேறு ஏதாவது அக்குடும்பத்தாருக்கு தேவைப்பட்டால் உடனே செய்யுங்கள். உதாரணம்: நிதி உதவி, உறவினர்கள் வந்து போக வாகன வசதி, வீட்டில் சமையலுக்கு தேவையான உதவி, இதுபோல் பல காரியங்களில் நீங்கள் உதவும்போது, உடைந்த உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் அடையும்.

துக்கம் விசாரிக்கும் உறவினர்களிடம், முதல் இறந்தவர்களின் அருமை பெருமைகளை பற்றி சிறிது நேரம் பேசினால் போதும். ஒரேடியாக இறந்தவர்களைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் அது உறவினர்களிடம் துயரத்தை அதிகரிக்கத் தான் செய்யும். ஆகையால் சற்று நேரத்திற்கு பின்பு, உறவினர்களின் மனப்பாங்கை அறிந்த பொதுவாக ஏதாவது பேசுவது நல்லது. இது அவ்வுறவினர்களின் சோகத்தை சிறிது நேரமாவது மறக்க உதவும். மருத்துவ ரீதியாகத் துணையை, இழந்தவர் குறுகிய காலத்திற்கு மன அமைதியைக் கொடுக்கும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வது நலம்.

உடைந்து போன உள்ளங்களுக்கு, கால தேவன் தான் ஒரு அருமருந்து !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.