Published:Updated:

தீபாவளி தந்த மகிழ்ச்சி தருணங்கள்! | My Vikatan

தீபாவளி

நாம் வளர வளர குறையும் குழந்தைதனம் மிகவும் ஆபத்தானது. நம்மை அவ்வளவு சீக்கிரம் மகிழ விடாது.

தீபாவளி தந்த மகிழ்ச்சி தருணங்கள்! | My Vikatan

நாம் வளர வளர குறையும் குழந்தைதனம் மிகவும் ஆபத்தானது. நம்மை அவ்வளவு சீக்கிரம் மகிழ விடாது.

Published:Updated:
தீபாவளி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

"தீபாவளி வந்துடுச்சி.. ட்ரெஸ் எடுத்தாச்சா.. பலகாரம் வாங்கியாச்சா..? "

இரண்டு மூன்று நாட்களாக இப்படி கேட்கப்படும் கேள்விகளிலே பாதி தீபாவளி பிறந்துவிட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த கட்டுப்பாடுகள் தளர இந்த ஆண்டோ சற்று பொலிவுடன் வந்தது தீபாவளி

நாம் வளர வளர குறையும் குழந்தைதனம் மிகவும் ஆபத்தானது. நம்மை அவ்வளவு சீக்கிரம் மகிழ விடாது.

என்னதான் இப்பொழுது பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இருந்தாலும் சிறு வயது நினைவையே மனம் ஆசையாய் அசைபோடும்.

தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்து கொள்ள அதிகாலையில் எண்ணெயும் கையையுமாய் வந்து அம்மா எங்களை எழுப்பிவிடுவார்.

நானோ அரை தூக்கத்தோடு எழுந்து கையில் மருதாணி எவ்வளவு சிவந்து இருக்கின்றது என்று பாதி கண்ணில் பார்த்து விட்டு மருதாணியின் வாசத்தை நுகர்ந்து கொண்டே மீண்டும் உறங்குவேன்.

வெளியிலே வெடி சத்தங்கள் கேட்க தொடங்கும். மனம் உற்சாகத்தில் எழுந்து அமரும்.

அப்பா குளித்து முடித்து சாமி கும்பிட்டு விட்டு அதே ஊதுபத்தியில் முதன் முதலில் ஒரு லட்சுமி வெடி கட்டைப் பிரித்து வைப்பார்.

எங்கள் வாசலுக்கும் தீபாவளி வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த முதல் வெடி தந்த சத்தமும் சிதறிய குப்பையும் தரும்.

பின் ஊதுபத்தியை அப்பா என் கையில் கொடுப்பார். அம்மாவோ "சின்ன பட்டாசா அவ கைல கொடுங்க" என்பார். அப்பாவோ "எல்லா பட்டாசுக்கும் ஒரே திரி தான பயப்படாம வெச்சிட்டு நகர்ந்துக்கோ" என்றவாறு லக்ஷ்மி வெடியை திரி கிள்ளி கொடுப்பார்.

தீபாவளி
தீபாவளி

முதல் முறை குனிந்து வைக்கும் பொழுது சிறு பயம் இருக்கும். 'பத்திக்கிச்சி' என்று நினைத்து இரண்டு முறை ஓட.. மூன்றாம் முறை வைத்து விட்டு பத்திரமாக ஓட வைத்த பட்டாசும் வெடிக்க.. ஏதோ சாதித்த மகிழ்ச்சி வரும்.

காலையில் இட்லிக்கு முன் சாப்பிடும் பலகாரத்தின் சுவை அந்நாளிற்கு மேலும் இனிப்பை கூட்டும்.

அந்த இட்லியை அம்மா பரிமாறும்போது அவரின் தீபாவளி நினைவுகளை பகிர்வார்.. "எங்க வீட்லலாம் அப்போ தீபாவளிக்கு மட்டும் தான் இட்லி சுடுவாங்க.. முன்னாடி நாள் உரல்ல விடிய விடிய மாவு ஆட்டுவோம். என் அக்கா முறுக்கு சுடுவா... அந்த இட்லிக்காக காத்திருந்து சாப்பிடுவோம். தீபாவளிக்கு மட்டும் தான் புதுத்துணியும். எண்ணெய் தேச்சி குளிச்சிட்டு சாப்டுட்டு கொட்டாய்க்குப் போய் படம் பார்க்கிற சந்தோசமே தனி"

அவரின் கதையையும் தொலைக்காட்சியில் பட்டிமன்றத்தையும் பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க பாட்டி வீட்டில் இருந்து அழைப்பு வரும்.

பிஜிலி வெடியும் இன்னும் கைக்கு கிடைக்கும் வெடிகளையும் எடுத்து பையில் போட்டுக்கொண்டு பாட்டி வீட்டிற்கு நடையை கட்ட.. அண்ணன் தங்கைகளும் வெடிகளோடு அங்கு காத்திருப்பார்கள்.

தொடங்கும் எங்களது சேட்டைகள்.. கையில் பட்டாசு வெடித்த கதை.. தீபாவளி புதுத்துணியில் ஓட்டை போட்ட கதையெல்லாம் இங்கு அரங்கேறும்.

இரண்டு மூன்று ஊசி வெடியின் திரியை ஒன்றாக சுத்தி பற்ற வைப்போம். குப்பைகளை சேர்த்து அதற்கு நடுவில் ஊசி பட்டாசை வைத்து வெடித்து காகிதங்கள் பறக்க செய்வதில் அப்படி என்னதான் சந்தோசம் இருந்ததோ. அதையும் செய்திருக்கிறோம்.

கையில் ஊதுபத்தி வைத்திருப்பதை உணராமல் திரி கிள்ளும் போது பட்டாசு பற்றிக் கொண்டு புகை வர கையில் இருந்து வேகமாக வீச பட்டாசு என் அருகிலேயே வெடித்து பாவாடையில் ஓட்டைப் போட்டுவிட்டது. அம்மாவிடம் திட்டு வாங்குவது ஒருபுறம் இருந்தாலும் அந்த துணியை எப்பொழுது போட்டாலும் ஏதோ ஒரு சுக உணர்வு வரும்.

காகிதங்களின் குப்பைகளை அளவிட்டும் மத்தாப்பின் ஒளியில் மின்னியும் நிறைவடையும் தீபாவளி.

இன்றைய நாட்களில் புது துணிகளை வேண்டிய போது வாங்கும் சூழலும்.. பட்டாசுகளின் மேல் உள்ள ஆர்வம் குறைந்தும் இருக்கலாம்.

எனினும் சித்தப்பா பெண்களும் அக்கா பசங்களும் நம்மையும் சேர்த்துக்கொண்டு பட்டாசுடன் செய்யும் சேட்டைகளை காணும் பொழுதும்.. பக்கத்து வீடுகளில் இருந்து இனிப்புகள் வரும்பொழுதும்.. அலுவலகத்தில் இருந்து வாழ்த்துகள் குவியும் பொழுதும் மீண்டும் உயிர் பெருகின்றன தீபாவளி கொண்டாட்டங்கள்.

தீமையை புரியும் அசுரர்களை அழித்த நாளாக தீபாவளியை கொண்டாடி வரும் நாம்.. நம்மை சுற்றி நிகழும் தீய அதிர்வுகளை களைந்து புத்துணர்ச்சியும் அமைதியும் தரும் நாள் என்பதற்காகவே சற்று நிதானித்து இந்த நாளை மகிழ்வோடு கடத்துவோம். பல நீங்கா நினைவுகளை உருவாக்கி பத்திரப் படுத்துவோம்.

-செ. ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.