Published:Updated:

கல்வி ஏன் மாநில பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்? - வாசகர் வாய்ஸ்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர்கள் கல்வியை ஒன்றிய பட்டியலில், மாநில பட்டியலில் அல்லது பொது பட்டியலில் சேர்ப்பதா என்பது பற்றிய நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதியில் கல்வி மாநில பட்டியலில் இருப்பதே சரி என்று மாநில பட்டியலில் சேர்த்தனர். ஆனால்,

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி நீட்டுக்கு எதிராக தன் உயிரை மாய்த்து கொண்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த 13 செப்டம்பர் 2021, தமிழக சட்டமன்றத்தில் நீட் நிரந்தர விலக்கிற்கான தீர்மானம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப் பட்டது. சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டாலும், அதற்கு ஆளுநர் காலம் தவறாமல் ஒப்புதல் அளிப்பரா? அதன் பின் குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் கொடுப்பாரா? சட்ட போராட்டம் மூலம் விலக்கு பெற முடியுமா? இப்படியான விவாதங்கள் ஒருபக்கம் தொடர்ந்து வந்தாலும் அதற்கான மூல காரணம் என்னவென்றால் கல்வி என்பது இன்று பொது பட்டியலில் இருப்பதே. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் , எப்போது வரை கல்வி என்பது பொது பட்டியலில் இருக்கிறதோ, அதுவரை கல்வியில் மாநிலங்களின் உரிமை என்பது கேள்விக்குறியே.

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்


1976, இந்தியாவில் திருமதி.இந்திரா காந்தி அவர்களால் அவசர நிலை அறிவிக்கப் பட்ட நிலையில் , அரசியலமைப்பு சட்டம் 57வது பிரிவில் ,42 வது சட்ட திருத்தம் மூலமாக கல்வியானது பதிவு 11(என்ட்ரி 11) மாநில பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு, பதிவு 25(என்ட்ரி 25) ஆக பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதன்பின் , தமிழ்நாடு போன்ற மாநில சுயாட்சியை வலியுறுத்தும் சில மாநிலங்களில் இதற்கான எதிர்ப்பு குரல் எழுந்தாலும், பெரிய அளவிலே அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வில்லை.

இதன் விளைவாக , இன்றுவரை கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கை நிறைவேறாமலே இருக்கிறது. 1976 க்கு முன்பு கல்வி இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 246, ஏழாவது அட்டவணையில் பட்டியல் இரண்டில் (மாநில பட்டியல்)இருந்தது. அப்போது, கல்வி மீதான அனைத்து முடிவுகளும் எடுக்க மாநிலங்களுக்கு உரிமை இருந்தது, குறிப்பாக ,பாடத் திட்டம், பாடத் தொகுப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தொடர்பாக முடிவெடுக்க மாநிலங்களுக்கு உரிமை இருந்தது. மேலும் ஒருங்கிணைப்பது மற்றும் உயர் கல்வியில் தரத்தை பராமரிப்பது மட்டுமே ஒன்றிய அரசிடம் இருந்தது. ஆனால் இந்த 42 வது சட்டதிருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசு கல்வி கொள்கைகளில் தலையிட வழிவகுக்கிறது. அதுவே இன்றைய நீட் மற்றும் புதிய கல்வி கொள்கை போன்றவைகளாகும்.

இது தவிர, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர்கள் கல்வியை ஒன்றிய பட்டியலில், மாநில பட்டியலில் அல்லது பொது பட்டியலில் சேர்ப்பதா என்பது பற்றிய நீண்ட விவாதத்திற்கு பிறகே இறுதியில் கல்வி மாநில பட்டியலில் இருப்பதே சரி என்று மாநில பட்டியலில் சேர்த்தனர். ஆனால் இந்த 42 வது சட்டத்திருத்தம் என்பது மாநிலங்களுக்கு கல்வியில் அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமையை முழுக்க முழுக்க பறிப்பதாகவும் ,கூட்டாட்சி தத்துவத்திற்கு உகந்ததாகவும் இல்லை.

Representational Image
Representational Image

இந்தியா போன்ற பன்முக தன்மை கொண்ட ஒரு துணை கண்டத்தில், அதுவும் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டு ,ஒவ்வரு மாநிலத்திற்கும் மொழி, கலாச்சாரம்,பண்பாடு என்று எல்லாம் மாறக் கூடிய ஒரு ஒன்றியத்தில், அந்த அந்த மொழிவழி தேசிய இனங்களோ அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மாநில அரசோ அவர்களுக்கான கல்வி திட்டத்தை தீர்மானிப்பதே முறையாகும். ஏனென்றால் கல்வி என்பது அந்த மொழிவழி இனத்தின் வாழ்கை முறை, பண்பாடு, கலாச்சாரம்,வரலாறு சார்ந்ததாக இருக்க வேண்டும். உதாரணமாக, வேலு நாச்சியாரை பற்றி தெரிந்து கொள்ளாமல் தமிழர்கள் ஜான்சிராணி பற்றி தெரிந்து கொள்வது என்பது ஏற்புடையது அல்ல . இருவரையும் சேர்ந்து அறிந்து கொள்வதே ஏற்புடையது. அதுபோலவே, சேர, சோழ, பாண்டியர்களை பற்றி அறியாமல் வேறு எந்த மன்னர்களை பற்றி அறிவதும் சரியானதாக இருக்காது.அனைத்து மன்னர்களை பற்றி அறிந்து கொள்வதே சரியானதாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற பட்ட 127 வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் , இதர பிற்படுத்த பட்ட மக்களை கண்டறிவது என்பது மாநிலங்களுக்கான உரிமை என்று அதை மாநிலங்களுக்கு அளித்தது. இது மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் அந்த அந்த மாநில மக்கள் சார்ந்த விசயங்கள், பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் என்ன என்பது ஒன்றிய அரசை விட அந்த அந்த மாநில அரசுகளுக்கே தெளிவாக தெரியும். அது போலவே, ஏற்கனவே சொன்னது போல வெவ்வேறு மொழி பேசக் கூடிய பன்முக தன்மை கொண்ட ,வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்த நாட்டில் அந்த மக்களின் கல்வி சார்ந்த கொள்கையை அந்த மாநில அரசுகள் தீர்மானிப்பதே சரியானதாக இருக்கும்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

இதை தவிர இங்கு அனைவரும் ஒரே மாதிரியான கல்வியை பெறுவதில்லை, சிபிஎஸ்சி முதல் மாநில கல்வி பாட திட்டம் என வெவ்வேறு பாடத்திட்டங்களில் கல்வி கற்கிறார்கள், இப்படி இருக்கையில் நீட் போன்ற அகில இந்திய தேர்வுகளில் மத்திய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டால் மாநில பாட திட்டத்தில் படிக்கும் பெரும்பாலான கிராமப்புற மாணவர்களுக்கு தேர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமே. இதனை தவிர்க்க வேண்டுமானால், கல்வி மாநிலங்களின் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் , அந்த மாநில மாணவர்களின் பொருளாதார, சமூக பின்புலங்களை அராய்ந்து அதற்கேற்ற முறையில் மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள முடியும்.


மேலும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவரும் பொருட்டு திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் அவர்கள் ,சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 14 செப்டம்பர் 2021 அன்று , எட்டு வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்யும்படி ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதால் என்ன நன்மைகள் ஏற்பட கூடும்? என்ற கேள்வி நமக்குள் வரலாம். கல்வி மாநில பட்டியலில் இருந்தது என்றால் , நமக்கான பாடத்திட்டங்களை நாமே வகுத்து கொள்ளலாம், பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் எப்படி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென்பதை மாநிலங்களே தீர்மானிக்கலாம். நுழைவு தேர்வு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை அந்த அந்த மாநிலங்களே தீர்மானித்து கொள்ளலாம்.

எது எப்படி இருந்தலும், இது போன்ற கல்வி கொள்கைகளின் மாற்றங்கள் என்பது சமூகத்தில் உள்ள அடித்தட்டு மற்றும் கிராமப்புற மாணவர்களையே அதிகம் பாதிக்கிறது. மேலும், மொழி, கலாசார, பண்பாட்டில் பன்முக தன்மை கொண்ட மற்றும் பொருளாதார, சமூக ரீதியாக பல ஏற்ற தாழ்வுகள் கொண்ட இந்த நாட்டில் கல்வியை சமூகத்தின் அடித்தளம் வரை எடுத்து செல்ல அதை மாநில பட்டியலில் சேர்த்து அரசியலமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு கொடுத்த உரிமையை நிலைநாட்டுவதே சரியானதாகவும், சிறந்ததாகவும் இருக்கும்.

-க. சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு