Published:Updated:

முதுமை காதலும் காமமும்! | My Vikatan

Representational Image

இந்த படைப்புகள் இன்றைய தலைமுறையினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக நிஜ சமூகத்தில் நடக்கும் முதியோர் காதலையும் அதன் நீட்சியாக நடக்கும் முதியோர் திருமணங்களையும் வரவேற்கவே செய்கின்றனர்.

முதுமை காதலும் காமமும்! | My Vikatan

இந்த படைப்புகள் இன்றைய தலைமுறையினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக நிஜ சமூகத்தில் நடக்கும் முதியோர் காதலையும் அதன் நீட்சியாக நடக்கும் முதியோர் திருமணங்களையும் வரவேற்கவே செய்கின்றனர்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

“புதுமலர் அல்ல; காய்ந்த

புற்கட்டே அவள் உடம்பு..!

சதிராடும் நடையாள் அல்லள்

தள்ளாடி விழும் மூதாட்டி

மதியல்ல முகம் அவட்கு

வறள்நிலம்..! குழிகள் கண்கள்..!

எது எனக்கின்பம் நல்கும்..?

‘இருக்கின்றாள்’ என்ப தொன்றே..!”

- புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தன்னுடைய “குடும்ப விளக்கு” புத்தகத்தில் முதியோர் காதல் குறித்து எழுதிய வரிகள் இது. இந்த வரிகளுக்கேற்ப கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான தமிழ் சினிமாக்களில் காட்சிகள் இடம்பெற துவங்கியுள்ளன. எஸ்.யூ. அருண்குமாரின் “பண்ணையாரும் பத்மினியும்” படத்தில் “உனக்காக பொறந்தேனே எனதழகா” என்ற பாடலிலும், பா. ரஞ்சித்தின் “கபாலி” படத்தில் “மாயநதி இன்று மார்பில் வடியுதே… தூய நரையிலும் காதல் மலருதே” என்ற பாடலிலும், ஹலிதா சமீமின் “சில்லுக்கருப்பட்டி” படத்தில் டர்டுல்ஸ் என்ற பிரிவிலும் முதியோரின் காதலை மிக அழகாக காட்டியிருப்பார்கள்.

“பேட்ட” படத்தில் தனக்கு கல்லூரி படிக்கும் வயதில் மகள் இருக்கும்போது அவரது தாயாரான சிம்ரன், மகளின் கல்லூரி நண்பனின் கார்டியனான ரஜினியுடன் காதலில் விழுவது போலும், முதிய வயதிலும் அவர்களுக்குள் புதிதாக காதல் பிறக்கும்போது அவர்களுக்குள் ஏற்படும் வெக்கம், கூச்சம், துள்ளல், புத்துணர்ச்சி போன்றவற்றை “இளமை திரும்புதே” பாடலில் அழகாக காட்டியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ்.

 `பேட்ட’
`பேட்ட’

இந்த படைப்புகள் இன்றைய தலைமுறையினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக நிஜ சமூகத்தில் நடக்கும் முதியோர் காதலையும் அதன் நீட்சியாக நடக்கும் முதியோர் திருமணங்களையும் வரவேற்கவே செய்கின்றனர். அவ்வாறு கடந்த சில வருடங்களுக்கு முன்பு, கேரளா திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் அறுபது வயதை கடந்த கோச்சானியன் மற்றும் லட்சுமி அம்மாள் ஆகிய இரண்டு முதியவர்களிடம் பூத்த காதலை அறிந்த சமூக ஆர்வலர்கள் அதே முதியோர் இல்லத்தில் அந்த மூத்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தனர். அந்த நெகிழ்ச்சியான திருமண நிகழ்வை கேரள அமைச்சர் சுனில் கிருஷ்ணன் அவர்கள் அரசு சார்பில் செலவுசெய்து முன்னின்று நடத்திக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் “பவர் பாண்டி”, மதுமிதாவின் “கேடி என்கிற கருப்புத்துரை”, பா. ரஞ்சித்தின் “காலா” போன்ற படங்களில் பேரன் பேத்தி எடுத்துவிட்ட முதுமை நாயகர்கள் தங்களது முன்னாள் காதலியை தேடிச் சென்றும், யதர்ச்சையாக சந்தித்த போதும் அவர்களிடம் சில நிமிடங்கள் மனம்விட்டு பேசுவது போலும் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். இவையும் முதியவர்களின் காதல் உணர்வுக்கு மதிப்பளிக்கப்பட்ட காட்சிகள் என்று இன்றைய தலைமுறையினரிடம் வரவேற்பு பெற்றன.

'பவர் பாண்டி'
'பவர் பாண்டி'

நித்திலனின் “புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்” என்கிற குறும்படத்தில் பேரன் பேத்தி எடுத்துவிட்ட ஒரு முதியவர் கருவுறுவது போன்றும் அந்த விஷியமறிந்த மகன் கருவுற்றிருக்கும் தன் தாயை யாருமில்லாத ஒரு காட்டில் சிறிது பணக்கட்டுடன் கைவிட்டுவிட்டு வருவது போன்றும், தன் தாய்க்குப் பிறந்த குழந்தை வளர்ந்து அந்த பணக்கட்டுகளை அந்த மகனிடம் கொடுப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். கமல் அந்தக் குறும்படத்தை வெகுவாக பாராட்டி இருந்தார். “பதாய் ஹோ” என்கிற இந்திப் படத்தை தழுவி எடுத்த “வீட்ல விஷேசம்” படத்தில் திருமண வயதுக்கு வந்த மகனும் மாணவப்பருவத்திலிருக்கும் மகனும், வக்கிரமும் ஆணவமும் இல்லாத தங்களது பெற்றோரான முதியோரின் காமத்துக்கு மரியாதை செலுத்துவார்கள்.

மேற்கண்ட படைப்புகளில் காலம் கடந்தும் முதியோரின் மாறாத காதல், முதியோரின் சமவயது ஒத்த வாழ்க்கைத்துணை தேடல், முதியோரின் வக்கிரமில்லாத காமம் போன்றவை குறித்து பேசப்பட்டிருக்கும். இந்த விஷியங்களில் பெரிதாக எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் முதியோரின் தனிமையை தீர்க்கும் பொருட்டு வாழ்க்கைத்துணை தேடும் பொருட்டு இளம் வயதினரோடு காதல் கொள்ளும்போதுதான் அவை விவாதத்துக்கு உள்ளாகின்றன.

குறிப்பாக, “தர்பார்” படத்தில் திருமண வயதில் தனக்கு மகள் இருக்கும்போது ரஜினிக்கு இளம்வயது நயன்தாரா மீது காதல் வருவது போன்றும், அவருடைய காதலை உணர்ந்த மகள், தன் அப்பாவிற்கு கடைசி காலத்தில் துணை வேண்டும் என்று நயன்தாராவை அப்பாவுக்கு திருமணம் செய்து வைக்க முயல்வார். அப்போது நயன்தாராவின் அண்ணனாக நடித்த ஸ்ரீமன், “உங்க பொண்ணு உங்கள மாதிரி ஒருத்தரோட வந்து நின்னா உங்களுக்கு எப்படி இருக்கும்" என்று கேட்க, அந்த கேள்வியிலிருந்த நியாயத்தை உணர்வார்கள் ரஜினியும் அவரது மகளும். இந்த படங்களில் எல்லாம் இரு உள்ளங்களின் புரிதல் குறித்து தான் பெரும்பான்மையாக பேசப்பட்டுள்ளது. ஆனால் வாழ்க்கைத் துணை இல்லாமல் தனிமையில் வாடும் முதியவரின் பாலியல் ஆசைகள் குறித்து மிகச்சில படங்களே பேசியுள்ளன.

தர்பார்
தர்பார்

அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை மிஷ்கினின் “சித்திரம் பேசுதடி” மற்றும் லோகேஷ் கனகராஜின் “விக்ரம்”. “சித்திரம் பேசுதடி” படத்தில் மனைவியை இழந்து திருமண வயதில் இருக்கும் ஒரேயொரு மகளுக்கு ஆதரவாக இருக்கும் தந்தை தன் உடல் தேவைக்காக, விபச்சார விடுத்திக்கு சென்று பிறகு அந்த விஷியம் தன் மகளுக்கு தெரிய வந்ததும் மகள் முகத்தில் விழிக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்வார். “விக்ரம்” படத்தில் பேரன் எடுத்துவிட்ட கமல், விபச்சார விடுதிக்குச் சென்று அழகான இளம்பெண்ணின் அறையில் தங்குவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த இளம்பெண்ணை கமல் காம உணர்வுடன் தொட மாட்டார் என்ற போதிலும் நிஜ உலகில் தனிமையில் வாடும் முதியவர்கள் உடல் தேவைக்காக விபச்சார விடுதிக்குச் சென்று மகள் வயதுடைய இளம்பெண்ணை தொடும் சம்பவங்கள் குறித்து பேச வைத்துள்ளது.

“சிந்து சமவெளி” படத்தில் வாழ்க்கைத்துணை இல்லாத முதியவர்/ நடுத்தர வயதினர் தன் மகளாக நினைக்க வேண்டிய மருமகளிடம் தவறாக நடந்துகொள்வது போலும் இறுதியில் மருமகள் தற்கொலை செய்துகொள்வது போன்றும் தன் தகப்பனை மகன் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று அங்கு அவரை கொல்வது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

“அருவி” படத்தில் மனைவி இல்லாமல் மகள் ஒருத்தியுடன் வாழும் தந்தை ஒருவர் தன் வீட்டிற்கு தங்க வரும் மகளின் தோழியை(அருவி) வக்கிர புத்தியுடன் அணுகியது குறித்து வசனங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த வக்கிரம் பிடித்த முதியவனின் மகளின் அதாவது அருவியின் தோழியின் மனநிலை என்னவாக இருக்கும் எதிர்காலத்தில் அவர் தன் தந்தையுடன் எப்படி நாட்களை கடத்துவார் என்பது குறித்து கேள்விகள் எழுகிறது.

கார்கி
கார்கி

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான,“கார்கி” திரைப்படத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வாழும் முதியவர் ஒருவர் வக்கிரத்துடன் ஒரு சிறுமியை அணுகி அவளை சிதைக்க அவரது குடும்பமே அவரால் அவமானத்தை சந்திக்கிறது. ஒரு ஆண் பாலியல் வழக்கில் சிக்கினால் அவர்களது குடும்ப பெண்கள் வேலையை இழந்து கல்வியை இழந்து கடைசிவரை அவமானங்களையும் அருவருப்பான பார்வைகளையும் சுமந்தபடியே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பது குறித்து அழுத்தமாக பதிவு செய்துள்ளது இந்தப்படம்.

சமீப நாட்களாக பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், தாளாளர்கள், முதியவர்கள் என பாதி வாழ்க்கையை கடந்தவர்கள், மரணத்தை நெருங்கும் வயதுடையவர்கள் அதிகமாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். “சாணிக்காயிதம்” படத்தில் இயலாமையுடன் உயிருள்ள ஒரு பெண்ணின் ஆடையற்ற உடல் கிடைத்துவிட்டால் அந்த உடலை முதியவர்கள் முதல் சிறுவர்கள் வரை எப்படி அணுகிறார்கள் என்பது குறித்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக, முதியவர்கள் தான் சிறுவர்களை அழைத்து அந்த செயலில் ஈடுபட ஒத்துழைப்பார்கள். ஆக மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமின்றி முதியவர்களுக்கும் இங்கு காதல், காமம் குறித்த தெளிவும் கண்ணியமும் அவசியமாகிறது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.