வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
சிலு சிலுவென்று காற்று.. மெலிதான தூறல்... மனம் எதையெதையோ நினைக்க வைத்தது. எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் நம் மனதிற்கு என்று சில பாடல்கள் மிகவும் நெருக்கமானதாக இருக்கும் அப்படிப்பட்ட பாடல்களை சற்றே நினைவு கூர்ந்ததன் விளைவே இந்த பதிவு.... மனதை ஏதோ செய்கிறது.. .ஆனால் அதுவும் நன்றாகவே இருக்கிறது...
ஆதிரையின் விவித பாரதி கேட்கலாமா...
'உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே'...
என்னை இன்றுவரை கட்டிப்போட்டு வைத்திருக்கும் பாடல்களில் ஒன்று. நான் எந்த மனநிலையில் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்க மனம் தன்னாலே சமநிலைக்கு வந்துவிடும். அதேபோல நான் ஏதாவது வருத்தத்தில் இருந்தால் இந்தப் பாடல் எங்கிருந்தாவது என் காதுகளில் ஒலிக்கும் .
'உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன்'
கங்கை அமரனின் வரிகள் ... நமக்கு ஆறுதலாக இருக்கும்.
'தொடுவதென்ன தென்றலோ... மலர்களோ...
பனியில் வந்த துளிகளோ... கனிகளோ..
உடலெங்கும் குளிராதென்ன
என் மனமெங்கும் நெருப்பாவாதென்ன..'
பதின்ம வயதில் கேட்ட ( பிடித்த )பாடலிது.
ஜி வெங்கடேஷ் அவர்களின் இசையில் இளமை ததும்ப பாடலை பாடி இருப்பார் எஸ்பிபி . இந்த பாடலில் எஸ்பிபி கொஞ்சுவார் குழைவார். ஆஹா ஹாஹா என்ன இன்பம். அதிலும் அவர் குறிப்பாக ம்ம்ம்.. என்று ஹம்பண்ணும்விதம் அவரைத் தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது.ஜில்லென்ற தண்ணீரில் நாமே குளிக்கிற மாதிரி என்னமா ஒரு இசை போட்டிருப்பார் ஜி.கே. வெங்கடேஷ்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆதிரையின் விவிதபாரதியில் நாம் கேட்க விரும்பும் அடுத்த பாடல்..
'பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே..'
கவிதை போன்ற உரையாடலுக்கு பின்வரும் இந்த இனிய ஆபேரி ராகத்தில் அமைந்த பாடலை எம்எஸ்வி அவர்களின் இசையில் பி. ஜெயச்சந்திரன் அவர்கள் அருமையாக பாடி இருப்பார். அழகான வர்ணனைகள் கொண்ட இந்தப் பாடலை இலங்கை வானொலியில் கேட்டு மெய் மறந்ததெல்லாம் பொற் காலம்.
'நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா?..
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா'
என் கல்லூரி காலத்தை நினைவுபடுத்தும் இந்த பாடலில் ஒரு மென் சோகம் இருக்கும் சோகம் கஷ்டமானது தான் அதுவே சுகமான சோகம் என்றால் அது இந்த பாடல் தான் . கண்ணை மூடிக்கொண்டு கேட்க அந்த அற்புத உணர்வை நாம் ஃபீல் பண்ண முடியும் .
ஆதிரையின் விவிதபாரதியில் அடுத்து கேட்க விரும்பும் பாடல்
'தங்கைக்கோர் கீதம்' படத்தில் இடம்பெற்ற
'தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம் உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதற் கட்டம்...' இந்தப் பாடலின் வெற்றிக்கு அற்புதமான வரிகள் காரணமா ? ஆனந்த்பாபுவின் நடனம் காரணமா? இசை காரணமா?? பள்ளி பருவத்தில் மனப்பாடம் செய்து பாடும் அளவுக்கு இந்த பாடல் எனக்கு பிடிக்கும்.
அடுத்த பாடல் 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தில் இடம்பெற்ற
'காதல் வைபோகமே.. காணும் நன்னாளிலே
வானில் ஊர்கோலமாய்
ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண் பாடுமே...'
இந்தப் பாடலுக்கு பிறகு மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களைத் தேடித்தேடி கேட்டதெல்லாம் அழகான கனாகாலம் . அதிலும் கோடை காலத்தில் தென்றல் குளிரும் பௌர்ணமி திங்கள்... கண்ணை மூடி கேட்டுப் பாருங்களேன் மலேசியா வாசுதேவன் எவ்வளவு அழகாக கணீரென்று பாடி இருப்பார் தெரியுமா?
'பருவராகம் 'படத்தில் இடம் பெற்ற
'பூவே உன்னை நேசித்தேன்
பூக்கள் கொண்டு பூசித்தேன் கண்ணில் பாடம் வாசித்தேன்
காதல் கீதம் யாசித்தேன் சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே...' .
நான் திருமணமாகி வந்த போது என் கணவர் என்னை பார்த்து பாடிய முதல் பாடலிது. அதனால் இந்த பாடல் எப்போதுமே எனக்கு ஒரு ஸ்பெஷல். காரில் தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் போது இந்த பாடலை தான் முதன்முதலாக ஒலிக்கச் செய்வோம் . அழகான மலரும் நினைவுகள் இந்த பாடல்.

ஒரு முறை பிரபல பத்திரிகை நடத்திய சமையல் போட்டிக்கு நடுவராக சென்றிருந்தேன். அதனுடைய கான்செப்ட்.. 'சமையலும், பாட்டும் '.
அவர்கள் மும்முரமாக சமையல் செய்யும்போது நாம் ஒரு பாடலுக்கு க்ளூ கொடுக்க அவர்கள் கண்டுபிடித்து பாடவேண்டும். இந்த நிகழ்வின் முடிவில் அனைவரும் ஒன்று சேர்ந்து நீங்கள் ஒரு பாடலை பாடி தான் ஆக வேண்டும் என்று கூறிவிட்டனர். எனக்கும் பாடலுக்கும் தூரம் அதிகம் என்று சொன்னாலும் அவர்கள் கேட்காததால் எனக்கு மிகவும் பிடித்த தன்னம்பிக்கை நிறைந்த' முள்ளும் மலரும்' படத்தில் இடம்பெற்ற 'ராம ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை' என்ற பாடலை பாட ..அரங்கம் முழுவதும் கைத்தட்டலில்அதிர்ந்தது.
வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுஅது. எப்போதெல்லாம் நான் சோகமாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் இந்தப் பாடலை நான் வாய்விட்டு சத்தமாக பாட நிமிடத்தில் சோகம் மறந்து சுகம் தன்னால் வரும்.
ஒரே பாட்டில் எத்தனை விதமான தாளங்கள். பறை இசையை வெளுத்து வாங்கிய அருமையான பாடல் இது. (தலைவரின் ஸ்டைல் வேற லெவலில் இருக்கும்)
'அன்பே சங்கீதா' படத்தில் இடம்பெற்ற 'சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில் வண்ணம் கெடாமல் வாழ்கின்றது.. நினைவில் உலவும் நிழல் மேகம் நூறாண்டுகள் நீ வாழ்கவே.. நூறாண்டுகள் நீ வாழ்கவே...'
எனக்கு உடன் பிறந்த சகோதரர் யாருமில்லை .என் சித்தப்பாவின் மகனுக்கு (அண்ணன்)இது மிகவும் பிடித்த பாடல். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் . அதனாலேயே இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல் ஆனது. மனித உயிரை உறைய வைக்கும் சக்தி இப்பாடலுக்கு உண்டு. உயிர்ப்போடு பாடியிருப்பார் எஸ்பிபி அவர்கள். இந்தப் பாடலின் 'ஹம்மிங்' கேட்டாலே நம்மையறியாமல் விழிகளில் கண்ணீர் வரும்.
கல்லூரி படிக்கும் காலங்களில் நான் பாவாடை தாவணிக்கு மிகவும் பொருத்தமாக கலர்கலராய் கண்ணாடி வளையல்கள் அணிந்து செல்வது வழக்கம் .எங்க ஊரில் இருந்து டவுன் பஸ்ஸில் பயணிக்கும்போது நான் ஏறியவுடன் இந்தப் பாடல் தவறாமல்ஒலிக்கும் 'வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது சில நேரம் சிலு சிலுவென சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது' என்ற பாடல்.
இந்தப் பாடலை இப்பொழுதும் வானொலியில் கேட்டால் நான் பேருந்தில் பயணித்த அந்த நினைவு தான் வரும். மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்.(அந்தப் பாடலில்அமலாவின்புடவையைபோலவே கட்டிச் சென்றதெல்லாம் நினைவில் வந்து வந்து போகும்)

நான் சந்தோஷமான தருணங்களில் கேட்கும் பாடல்' சூரியகாந்தி' படத்தில் இடம்பெற்ற' நான் என்றால் அது நானும் அவளும் .. அவள் என்றால் அது நானும் அவளும்' என்ற பாடல் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் புத்தம்புதிதாக கேட்பது போலவே இருக்கும் .அதுதான் இந்த பாடலின் ஸ்பெஷல். இளவயது எஸ்பிபியின் குரல் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்....
இப்படி ஒவ்வொரு பாடலிலும் ரசிப்பதற்கு ஏதேதோ காரணங்கள் மொத்தத்தில் ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு கதை உண்டு.(இன்னும் நிறைய பாடல்கள் ...நிறைய கதைகள் உண்டு ..அடுத்த பதிவில் பார்ப்போம்) .
பாடல்களைப் பற்றிய
ஞாபகங்கள்
நல்லதாக இருந்தாலும்சரி கெட்டதாக இருந்தாலும் சரி
நம்ம கூடத்தான் இருக்கும்
மறக்க முடியாது அல்லவா!
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம். இந்தப் பாடல்கள் எல்லாம் உங்களுக்கும் பிடிக்கும் கேட்டுத் தான் பாருங்களேன்!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.