Published:Updated:

வரலாற்று சாதனை படைத்த ஆப்ரிக்கா கால்பந்து அணி! - வாசகர் பார்வை| My Vikatan

Moracco player

மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்த அணியின் கேப்டன் ஹாரி கேன், ஆட்டத்தின் இறுதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மட்டும் தவறவிடாமல் இருந்திருந்தால்..

வரலாற்று சாதனை படைத்த ஆப்ரிக்கா கால்பந்து அணி! - வாசகர் பார்வை| My Vikatan

மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்த அணியின் கேப்டன் ஹாரி கேன், ஆட்டத்தின் இறுதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மட்டும் தவறவிடாமல் இருந்திருந்தால்..

Published:Updated:
Moracco player

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

கத்தாரில் விறுவிறுப்பும் சுவாரஸ்யமுமாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றின் இறுதிப் போட்டிகள் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்திருக்கின்றன...

நெதர்லாந்தை வீழ்த்தி அர்ஜெண்டினா அணியும், பிரேசிலை வீழ்த்தி குரோஷியா அணியும் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற சூழலில், சனிக்கிழமையன்று கால்பந்து ரசிகர்கள் திகைக்கும் வகையில் கட்டுக்கோப்புடன் விளையாடி போர்ச்சுகல் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது மொரோக்கோ அணி.

Moracco player
Moracco player

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் முதல் ஆப்ரிக்கா அணி எனும் வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது மொரோக்கோ அணி. தொடரின் ஆரம்பம் முதலே கூட்டு முயற்சி மற்றும் மிக சிறப்பான தடுப்பு அரண் விளையாட்டின் மூலம் மொரோக்கோ அணி தனிக் கவனம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன், பெனால்டி ஷூட் அவுட்டில் 3-0 என்ற கோல் கணக்கில் 2010ம் ஆண்டின் உலக சாம்பியன் ஸ்பெயின் அணியின் கோப்பை கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த கோல் கீப்பர் யாசீன் புனுவின் திறமையையும் குறிப்பிட வேண்டும்.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறக்கப்படாத போதே எழுந்த கால்பந்து ரசிகர்களின் முணுமுணுப்புகள், மொரோக்கோவிடம் போர்ச்சுகல் மண்ணை கவ்வியவுடன் உச்சத்தைத் தொட்டுவிட்டன.

ஐந்து முறை தங்கக் கால்பந்து விருது பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ மொரோக்கோவுக்கு எதிரான போட்டியின் 51வது நிமிடத்தில் களமிறக்கப்பட்டதையும், ஆட்டத்தின் முடிவில் அவர் வாய்விட்டு அழுத காட்சியையும் உலக கால்பந்து ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பதே உண்மை.

Representational Image
Representational Image

"எதிரணிக்கு ஈடுகொடுக்கக் கூடிய வியூக அமைப்பு தேவை காரணமாகவே ரொனால்டோ களமிறக்கப்படவில்லையே தவிரத் தனிப்பட்ட காரணங்கள் எதுவும் கிடையாது"

என்ற போர்ச்சுகல் பயிற்சியாளர் பெர்னான்டோ சாந்தோஸின் பதிலில் போர்ச்சுகல் கால்பந்து ரசிகர்களும் ரொனால்டோவின் சுற்றமும் திருப்தி அடையவில்லை...

சாந்தோஸின் முடிவினால் ஒரு தேசத்தின் வெற்றியே சிதைக்கப்பட்டு விட்டதாக ரொனால்டோவின் தங்கை எல்மா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் பிரான்சுக்கு இடையேயான விளையாட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காலிறுதி போட்டிகளில் ஒன்று…

1998ல் உலகக் கோப்பையை வென்றதுடன், கடந்த 2018ம் ஆண்டின் கோப்பையையும் வென்ற நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி. 1966ம் ஆண்டில் உலக சாம்பியன் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்குத் தொடர்ந்து காலிறுதி போட்டியில் கோட்டைவிடும் கசப்பான அனுபவம் உண்டு.

"டியர் ரிஷி சுனக், நடைபெறப் போகும் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி வென்றால் (நிச்சயம் வெல்லும் ,) அரையிறுதியிலும் நாங்கள் வெற்றிபெற வாழ்த்துவீர்கள்... சரியா ?,"

எனப் பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோன் ஹாஸ்யத்துடன் பதிவிட்ட டிவிட்டருக்கு.

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

"அப்படியான சூழல் நேராது ஆனாலும் உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். அடுத்த சுற்றில் இங்கிலாந்து அணி முன்னால் நிற்பதை காணக் கட்டுக்கடங்காத ஆவலுடன் இருக்கிறேன் "

என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதே ஹாஸ்யத்துடன் பதிவிட்டது போட்டி பற்றிய சுவாரஸ்யத்தை மேலும் கூட்டியது.

2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் வெற்றியைப் பறிகொடுத்ததின் மூலம், தொடர்ந்து காலிறுதியில் வெற்றியைத் தவறவிடும் அணி எனும் அனுதாபத்துக்கு மீண்டும் ஒரு முறை ஆளாகிவிட்டது இங்கிலாந்து அணி ,

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளுமே சிறப்பாக ஆடினாலும் "டாமினேட்" செய்தது இங்கிலாந்து அணிதான் , அதிகமான கோல் முயற்சிகளை மேற்கொண்டதும் இங்கிலாந்து அணிதான். மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாவது பாதியில் கோல் அடித்து சமன் செய்த அணியின் கேப்டன் ஹாரி கேன், ஆட்டத்தின் இறுதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மட்டும் தவறவிடாமல் இருந்திருந்தால் முடிவு இங்கிலாந்துக்குச் சாதகமாகக் கூட அமைந்திருக்கலாம்.

France Team
France Team

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் அந்துவான் கிரீசுமன் கடத்திய பந்தை மிக லாவகமாகக் கோலுக்குச் செலுத்தி பிரெஞ்சு கோல் கணக்கை ஆரம்பித்து வைத்தார் ஒரேலியன் சுவாமெனி. 78ம் நிமிடத்தில் கார்னரிலிருந்து கிளம்பி, மீண்டும் கிரீசுமனின் கடத்தலின் உதவியால் தன்னிடம் வந்த பந்தைத் தலையால் கோலுக்கு அனுப்பி பிரான்ஸ் வெற்றியை உறுதி செய்தவர் ஒலிவியர் ஜிரூட் , இது ஜிரூட் சர்வதேச போட்டிகளில் அடித்த 53வது கோல்.

கிலியான் எம்பாப்பே அடக்கி வாசித்த இந்த போட்டி முழுவதும் "டிபன்ஸ், மிடிள், அட்டாக்” என நீக்கமற நிறைந்திருந்தது அந்துவான் கிரீசுமன் தான் , பிரான்சின் இரண்டு கோல்களுமே "இடம் பொருள் ஏவல்" அறிந்து அந்துவான் கிரீசுமன் கடத்திய "பாஸுகள்" தான்.

ஆல்ரவுண்டர் அந்துவானுக்கு அடுத்ததாக இங்கிலாந்தை திணற வைத்தது பிரான்ஸ் கோல்கீப்பர் ஹூயூகோ லோரிஸ். பிரெஞ்சு அணியின் பலவீனம் என ஆங்கில ஊடகங்கள் கணித்த ஹூயூகோ, இங்கிலாந்து கேப்டன் கேனின் மூன்று கோல் முயற்சிகளை மட்டுமல்லாது பெல்லிங்ஹாம் மற்றும் சாக்கா ஆகியோரின் கோல் முயற்சிகளையும் முறியடித்தார். ஹாரி கேனின் இரண்டாவது பெனால்டி முயற்சியில் பந்து விண்ணை நோக்கிப் பாய்ந்ததற்கு ஹியூகோ லோரிஸ் ஏற்படுத்திய உளவியல் பயமும் ஒரு காரணம் .

Olivier Giroud
Olivier Giroud

இங்கிலாந்தை வென்றதன் மூலம் 1998ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நான்கு முறை உலகக் கோப்பை அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்த ஒரே நாடு எனும் சாதனையைப் படைத்திருக்கிறது பிரான்ஸ். உலகக் கோப்பை போட்டிகளில் எதிர் அணிக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புகளைக் கொடுத்த பின்னரும் வெற்றி பெற்ற முதல் அணியும் பிரான்ஸ் தான்.

ஒன்றுக்கு ஒன்று சளைக்காத அர்ஜெண்டினாவும் குரோஷியாவும் செவ்வாய்க்கிழமை அரையிறுதியில் மோத, புதன்கிழமையன்று நடக்கப்போகும் போட்டியில் முழு முனைப்புடன் மோதும் மொரோக்கோவை எதிர்த்து, மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் மோதப்போகிறது பிரான்ஸ்.

இந்த நான்கு அணிகளில், ஆருடங்களை மெய்ப்பித்தோ அல்லது மீறியோ இறுதிச் சுற்றுக்குள் நுழையப்போகும் இரண்டு அணிகள் யார் யார் என்பது புதன்கிழமை இரவு தெரிந்துவிடும் ,

-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.