Published:Updated:

உண்மையில் பறப்பதை உணர்ந்த தருணம்! | My Vikatan

Representational Image

பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் கல்லூரியில் சேர்வதற்காகச் சென்னை வர நேரிட்டது. அப்பொழுது தான் விமானத்தை சற்று அருகே பார்த்த நியாபகம்.

உண்மையில் பறப்பதை உணர்ந்த தருணம்! | My Vikatan

பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் கல்லூரியில் சேர்வதற்காகச் சென்னை வர நேரிட்டது. அப்பொழுது தான் விமானத்தை சற்று அருகே பார்த்த நியாபகம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

மெல்லியதாய் ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியது. வெளியில் இருந்து வந்த அந்த சத்தம் போகப் போக தெளிவாகக் கேட்டது. நானும் என் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

"அந்த சத்தம் மாதிரி தான இருக்கு" என்றாள்.

பதில் கூறக் கூட நான் நிற்கவில்லை. வேக வேகமாக முன்னே ஓட அவளும் என்னோடு வெளியே ஓடி வந்தாள்.

இருவரும் வானில் தேடினோம். வெகு தொலைவில் ஓர் ஒளி அணைந்து அணைந்து மின்னியது.

கண்டுகொண்டேன் என்றாள் கை நீட்டியபடி.

முகம் முழுதும் சிரிப்போடு வெறித்து பார்த்தோம் விமானத்தை!

"பெரிய பொண்ணு ஆனதும் அதுல போணும்டி சீக்கிரமே" நானும் அவளும் சொல்லிக் கொண்டோம்.

அப்படித்தான் அரும்பியது விமான ஆசை.

பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் கல்லூரியில் சேர்வதற்காகச் சென்னை வர நேரிட்டது. அப்பொழுது தான் விமானத்தை சற்று அருகே பார்த்த நியாபகம்.

"என்ன ஃப்லைட் இவ்ளோ கீழயே போகுது"

"பக்கத்துல தான் ஏர்போர்ட் இருக்கு மா... ஃப்லைட் டேக் ஆஃப் லேண்ட் ஆகிறப்போ ரொம்ப கிட்ட தெரியும்.. தலைக்கு மேல பறக்கும். இங்க இருக்கவங்களுக்கு அது பார்த்து பார்த்து பழகிடுச்சிமா" சித்தி கூறினார்.

'நம்ம எப்போ விமானத்துல போறது.. எங்க போலாம் .. எவ்ளோ செலவு ஆகும்.. எப்படி போணும்' என் மனம் என்னிடம் கேட்டது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றதும் விமானத்தில் பறப்போம் எனை தேற்றிக் கொண்டேன்.

எனினும் அவ்வப்போது உடன் இருப்பவர்கள் யாராவது விமானத்தில் சென்று வந்ததாகக் கூறினால் பயணத்தை பற்றி விசாரித்து அறிவதில் ஒரு வகை ஆனந்தம்.

"நிறைய செலிப்ரிட்டிஸ் இருப்பாங்க டி ஏர்போர்ட்ல.." தோழி பார்த்த நட்சத்திர மனிதர்களை பற்றிக் கூறினாள்.

"ஃபிலைட்டுக்கு இரண்டு மணி நேரத்து முன்னாடியே போகணும்.. நாங்க தெரியாம கோவா போறப்ப கடைசி நேரத்துல போய் ஃபிலைட் மிஸ் பண்ணிட்டோம்" தோழன் அனுபவத்தை பகிர்ந்துள்ளான்.

அதே சமயம் ஒன்றிரண்டு பயம் தரும் செய்திகளும் நம் காதில் விழச் செய்யும். பயம் எழும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருப்பினும் மனம் மீண்டும் கேட்கும் 'நம்ம எப்போ பறக்கிறது?'

திருமணத்திற்குப் பின் அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கினோம்.

முதல் பயணம் தலை நகர் டெல்லிக்கு காதல் சின்னத்தை காண!

அடையாள அட்டை, பற்று அட்டை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு மடிக்கணினி முன் அமர்ந்து கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நானும் அவரும் என் பெரியம்மா பையன் செல்வாவும் அவன் மனைவி ராதாவும்.. இரண்டு ஜோடிகளும் செல்லத் திட்டம்.

"ஹே.. டிக்கெட் போட்டர்லாம் தானா" என் அண்ணன் கேட்க...

"போடு பாத்துக்கலாம்" என்று என் கணவர் கூற...

"அவ்ளோ தூரம் போய் தான் ஆகணுமா" என் அண்ணன்.

நம்ப முடியாமலும் பயத்திலும் முதல் பயணத்தை உறுதி செய்வதில் அனைவருக்குள்ளும் தயக்கம்.

"டேய் இதெல்லாம் இவ்ளோ நாள் கழிச்சி இப்போ நமக்கு அமையுது. மறுபடியும் எப்போ வாய்ப்பு கிடைக்கும் தெரியாது.." என்றேன்

"அதும் சரிதான்.. பண்ணிரலாம்" என்றான் அண்ணன்

"பகல் நேர பிலைட்யே புக் பண்ணுங்க.. நைட்ல வேண்டாம்" தீடிரென ஏதோ ஓர் பயம் எனக்குள் வர..

"ஏன் நைட்ல பைலட்க்கு கண்ணு தெரியாதோ.." அண்ணி சிரிக்க...

"அதெல்லாம் ஒரு பயமும் இல்லை. பாதுகாப்பா தான் இருக்கும்... அந்த டைமிங்க் தான் நமக்கு ரிட்டன்க்கு செட் ஆகும்" அவர் முடிவு எடுக்க..

"என் பேர் ஆதார்ல ஒரு மாதிரி வோட்டர்ல ஒரு மாதிரி இருக்கே" அண்ணிக்கு சந்தேகம் வர

"நான் ரெண்டு மூணு வீடியோஸ் பாத்துருக்கேன்.. அவ்ளோ பயப்பட தேவை இல்லை. ஆதார்ல இருக்க மாதிரி பண்ணிக்கலாம்.. சிம்பிள் தான் புக் பண்ணிரலாம்" என்றார்

ஒரு வழியாக பயணச்சீட்டு பதிவு செய்துவிட்டோம். எங்கள் பெயரை அதில் பார்த்துப் பார்த்து ஆனந்தம் கொண்டோம்.

முதல் விமானப் பயணச் சீட்டு.. அத்தனை பூரிப்பு!

இன்னும் பயணத்திற்கு இரண்டு மாதங்கள் இருந்தன.

திருமண நாளை எண்ணியதற்குப் பிறகு இப்பொழுது இந்த பயண நாளை எண்ணிக் கொண்டிருந்தேன்.

அவ்வப்பொழுது கடைகளுக்கு செல்லும் பொழுது பயணத்திற்கு இது தேவையோ அது தேவையோ என ஆசை ஆசையாக வாங்கி சேர்த்தாயிற்று.

வரும் சனிக்கிழமை விமானப் பயணம். கடைசி நேரத்தில் வெள்ளிக்கிழமை எனக்கு விடுப்பு கிடைக்கவில்லை.

வெள்ளிக்கிழமை அலுவலகம் முடித்து விட்டுத்தான் சென்னை கிளம்ப முடியும்.

"அவசர அவசரமா வர மாதிரி வேணாம். 6 மணிக்கு பிலைட் நம்ம 4 மணிக்கு ஏர்போர்ட்ல இருக்கனும்" எங்களுடன் பயணிக்க இருந்த என் அண்ணன்.

"பாத்துக்கலாம்.. 3 மணிக்குள்ள ரயில்வே ஸ்டேஷன் வந்துருவோம். அங்க இருந்து கொஞ்ச நேரம் தான்" அவர் கூற அப்படியே திட்டமிட்டுக் கொண்டோம்.

வெள்ளிக்கிழமை காலையில் சீக்கிரமே விழித்துவிட்டேன். என்னைச்சுற்றி புது உற்சாகம் பரவிக் கிடந்தது.

Representational Image
Representational Image

முடிந்தவரை தேவையானவற்றை எடுத்து வைத்து ஆயிற்று. எனினும் சரிபார்க்கும் பட்டியலை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டும் நினைவு வரும்பொழுது தவற விட்டதை சேர்த்துக் கொண்டும் இருந்தேன்.

மாலை அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே வீட்டிற்குச் சென்று ஊருக்கு கிளம்ப ஆயத்தமனோம்.

"எல்லாமே எடுத்து வெச்சிட்டியா" என்னவர் மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டார்.

"எடுத்தாச்சு எல்லாம்.. பிரஷ்,டவல், பேஸ் வாஷ் அதெல்லாம் குட்டி பேக்ல.. சார்ஜர் பெரிய பேக்ல.. ட்ரெஸ்ஸஸ் எல்லாமே எடுத்தாச்சு.. செக் லிஸ்ட் பாத்துட்டே தான் இருக்கேன்"

"உன் ஆதார் ப்ரூஃப் லாம் எடுத்தாச்சுல.. ஏர்போர்ட்ல கேப்பாங்க.."

"எடுத்தாச்சு.. இருந்தாலும் நீங்க கேட்டப்புறம் சந்தேகம் வருது.. ஒரு தடவ பாத்துக்கிறேன்"

"நான் பாக்கறேன்.. நீ போய் சாப்பிடு.. ட்ரெயின் க்கு டைம் ஆகுது"

இருவரும் வயிரை ஏமாற்ற பேச்சுக்கு மட்டும் சாப்பிட்டோம்.

கிளம்பும் பொழுது இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து அவர் அம்மா திருநீர் வைத்து விட்டார்.

"பத்திரமா போய்ட்டு வாங்க.. நல்லா சுத்தி பாத்துட்டு வாங்க"

"அங்கே இங்கனு போட்டோ எடுக்கிறேன்னு நிக்க போறான்மா.. கூட்டமா இருக்க இடத்துல தான் இருக்கனும்" அவர் அப்பா என்னிடம் அவர் காதில் விழும்படி கூறினார்.

"இந்த எலுமிச்சைய பேக்ல வெச்சிக்கோ" என் அம்மா அவர் பங்குக்கு கொடுத்தார்.

"செலவுக்கு கைல தேவையான அளவுக்கு பணம் இருக்குல்ல" என்று கேட்டுக்கொண்டே அப்பா அவரிடம் இருந்த 500 மற்றும் 100 ரூபாய் தாள்களை என்னிடம் நீட்டினார்.

எவ்வளவு பணம் இருந்தாலும் இந்த பணம் அதிர்ஷ்ட பணம் போல் எனக்கு. அதை வாங்கி அலைபேசியின் உரையில் வைத்துக் கொண்டேன்.

"எனக்கு வரப்ப நிறைய வாங்கிட்டு வாடி.. அதுக்கு தான் அந்த காசு" என் தங்கை சிரித்தபடி கூறினாள்.

ஹாரன் சத்தம்

"கேப் வந்துருச்சுமா.. வரோம்மா"

எல்லாவற்றையும் வண்டியில் ஏற்றி விட்டு வழியனுப்பினர்.

வண்டியில் ஏறி அமர்ந்து கதவை மூடிய நொடியில்

"அய்யோ.. மாஸ்க் மறந்துட்டேன்.. அம்மா.. மாஸ்க் எடுத்து கொடுமா.."

என்னவர் என்னை ஓரப்பார்வை பார்க்க..

"ஹாஹா.. அத ஒன்னு மட்டும் மறந்துட்டேன்"

ரயில்நிலையம் வந்து சேர்ந்தோம்.

"நம்ம ட்ரெயின் பத்து நிமிஷம் லேட்.. ட்ரெயின் விட்டு இறங்கி வெளில வர கொஞ்சம் தூரம் நடக்கணும்.. அங்க இருந்து ஆட்டோ இல்ல கேப் பிடிச்சி ஏர்போர்ட் போகணும்.. லேட் ஆயிடுமோ.." பதற்றமானார்.

"டென்ஷன் ஆகாதீங்க.. பாத்துக்கலாம்"

ரயில் வாயிலில் நின்றிருக்கும் மக்களை பார்க்கும் பொழுது நாங்கள் சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக அவர்கள் காத்திருந்து எங்களுக்கு உதவுவது போல் இருந்தது.

ஒவ்வொரு ரயில்வே கேட்டிலும் பலர் நின்று கொண்டு எங்களை வழியனுப்பினர். (அங்கே காத்திருப்பவர்களுக்கு என்ன அவசரமோ மனதில் என்ன திட்டுகிறார்களோ!)

"ட்ரெயின் இன்னும் பத்து நிமிஷத்துல போய்டும் சென்னை.. எழுந்திரு" நான் சற்று உறங்கிப் போக.. என் கணவர் காலனி அணிந்து கொண்டே என்னை எழுப்பினார்.

"சரியான டைம்க்கு போய்டுவமா.. ஓகே யா"

"செல்வா கேப் ஓட வெளிய வெயிட் பண்றான்.. ட்ரெயின் விட்டு இறங்கி வேகமா வெளிய போய்ட்டு கேப் ஏறிட்டா போதும்.."

ரயில் நின்றதும் முதல் ஆளாக இறங்கி நடை மேடையில் மூட்டை முடிச்சிகளை தூக்கிக்கொண்டு வேக வேகமாக சென்றோம்.. கிட்டத்தட்ட ஓடினோம்.

என் அண்ணன் வெளியில் காத்திருந்தான். வண்டியில் ஏறி அமர்ந்து பெரு மூச்சி விட மனம் சொல்லிக்கொண்டது.. 'அய்.. நம்ம பிலைட்ல போக போறோம்'

நாங்கள் திட்டமிட்ட படி விமானத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உள்ளே சென்று விட்டோம்.

நுழைவு வாயிலில் அனைவரது ஆதார் கார்டையும் சரிபார்த்தனர்.

எங்களை உள்ளே அனுப்பினர்.

செல்வாவை மட்டும் நிறுத்தினர்.

"நீங்க தானா இதும்...? வித்தியாசமா இருக்கே" வாயிலில் சரிபார்த்துவர் கேட்டார்.

"சார் அந்த போட்டோ எடுத்து கொஞ்சம் வருஷம் ஆயிடுச்சி.. வேற ப்ரூப் காமிக்கவா?"

பதட்டத்தில் அவன் கையில் இருந்த அடையாள அட்டைகளையெல்லாம் நீட்டினான்.

"ஆதார்ல போட்டோ சீக்கிரம் அப்டேட் பண்ணிடுங்க" என்று கூறியபடி உள்ளே அனுப்பினார்.

கையில் இருந்த 15 கிலோ பையை லக்கேஜ்ஜில் கொடுத்து விட்டு 7 கிலோ கைப்பையை சரிப்பார்க்க வரிசையில் நின்றோம்

நானும் அண்ணியும் ஒரு வரிசையில் அவரும் என் அண்ணனும் மற்றொரு வரிசையில்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

ஃபோன் சார்ஜர் இவையெல்லாம் தனியாக எடுத்து வைக்க சொன்னார்கள். எடுத்து வைத்தோம்.

சரிபார்த்து வெளியே வந்தது

எங்களையும் சரிபார்த்து உள்ளே அனுப்பினார்கள்.அவர்களுக்காக காத்திருந்தோம்.

அவர் மட்டும் வந்தார் என் அண்ணனை காணோம்.

"எங்க செல்வா?"

"முதல் தடவ வந்தான்.. பெல்ட் கழட்டி ட்ரே ல வைக்க சொன்னாங்க.. அடுத்து ப்ளூடூத் ஹெட் செட் மறுப்படியும் போய் நின்னான். இப்போ பேக் செக் பன்னிட்டு இருக்காங்க.. பேக்ல கம்மல் செயின்லாம் இருக்கா என்ன.. "

"ஆமா.. கம்மல் வளையல் கிளிப்லாம் இருக்குமே.. " என்று கூறியப்படியே பரிசோதனை நடக்கும் இடத்திற்கு ஓடினாள் ராதா.

நாங்களும் அவளுடன் சென்றோம்.

"உனக்கே இன்னிக்கு எல்லாம் நடக்குதே" வரிசையில் நின்றுருந்த அவனைப் பார்த்து நான் சிரிக்க.. அவனும் சிரிக்க.. ஒரு வழியாக பரிசோதனை முடிந்து அனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்தான்

"இவ்ளோவா கொண்டு வருவன்னு கத்றாங்க.. ஹிந்தி புரியாம இங்கிலிஷ்ல சொல்லி புரிய வெச்சி... முடில"

"ஆமா கொஞ்சம் ஸ்ட்ரிக்டா பாக்ராங்க.. எண்ணெய்லாம் கூட இருந்தா வாங்கி தூக்கிப்போட்டாங்க.."

"இதுல உன்னமாதிரி ஒருத்தன் வேற எனக்கு முன்னாடி மாட்னான்" என்று என்னை பார்த்து செல்வா கூற "என்ன மாதிரியா! என்றேன் ஆச்சர்யமாக"

"ஆமா.. போய்ட்டு வந்த ஊர்ல இருந்து கல்ல எடுத்துட்டு வந்துட்டான்.. கேட்டா இங்க வந்துட்டு போன மெமரீஸ் சார்ன்னு சொல்றான்.."

"பின்ன அதும் மெமரீஸ் தான"

"அது மெமரீஸ் இல்லை.. கவர்மென்ட் ப்ராபர்ட்டி"

சிரிப்பலைகளோடு ஒரு வழியாக பரிசோதனை முடிந்து விமானத்திற்காகக் காத்திருந்தோம்.

"இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு பிலைட்க்கு"

"பரவால்ல.. முதல் தடவ வரோம் கொஞ்சம் சீக்கிரம் வந்துருக்கோம்"

"எனக்கு ரெஸ்ட் ரூம் போணும் போய்ட்டு வரேன்" நான் எழுந்தேன்.

"பசிக்கிற மாதிரி இருக்கு ஏதாவது வாங்கி வைங்க" என்னோடு எழுந்தவள் அவர்களிடம் கூறிவிட்டு வந்தாள்.

நாங்கள் திரும்பி வரும்பொழுது ஒரு டம்ளர் பாலும் ஒரு தட்டில் தோசையும் இருந்தன.

"ஒரு தோசை போதுமா.. நீங்களும் வாங்கிற்கலாம்ல"

"என்னடி விலை இங்க இவ்ளோ.. வெளில ஒரு தோசை 50 ரூபாய்னா இங்க 500 ரூபாய்.." என்னவர் புலம்பினார்.

"ரேட் அதிகம் எல்லாமே.. பால் 100 ரூபாய்.. இங்க உள்ள கடை வைக்க அவங்க வாடகை குடுக்கணும்ல.. நாங்க வெளில சாப்டுக்றோம்.. நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்க"

விலை பட்டியலை பார்த்ததிலே அவர்களுக்கு வயிறு நிறைய.. நானும் ராதாவும் சாப்பிட்டு முடித்தோம்.

நாங்கள் செல்லவிருக்கும் விமானத்திற்கான அறிவிப்பு வந்ததும் அதில் அறிவித்த நுழைவு வாயிற்கு வெளியில் உள்ள வரிசையில் நின்றோம்.

"என்ன வெளில பிலைட்ட காணோம் பஸ் நிக்குது"

எனக்கு வந்த அதே சந்தேகம் என் அண்ணிக்கும் வர

"அதுல தான் பிலைட்க்கு கூட்டிட்டு போவாங்க" விளக்கினான் அண்ணன்

"சில இடத்துல டைரக்ட்டா பிலைட்கே என்ட்ரி சில ஏர்போர்ட்ல இப்படி போல" என்றான் என் கணவன்

டிக்கெட் பரிசோதனை முடிந்து விமானத்திற்கு கூட்டிச் சென்றார்கள்.

இத்தனை பக்கத்தில் விமானத்தைப் பார்ப்பதே இதுதான் முதன் முறை.

வியந்து நோக்க..

"போட்டோ எடுத்துக்கலாமா?" செல்வா கூற

"இதுல இயல்பா பிலைட் உள்ள போறவங்க நம்ல பாத்து கண்டு பிடிச்சிருவாங்க.. நமக்கு இதுதான் முதல் தடவன்னு" என்றார் அவர் ..

"பரவால்ல கண்டுபிடிக்கட்டும்.. நமக்கு இதெல்லாம் ஒரு மெமரீஸ்" என்றேன்.

புகைப்படங்கள் எடுத்து முடித்து விமானத்திற்கு கீழ் மீண்டும் பயணச்சீட்டு பரிசோதனை முடிந்து உள்ளே சென்றோம். அழகு கசியும் சிரிப்புடன் வரவேற்றனர் ஏர் ஹோஸ்டஸ். இருக்கையை சரிபார்த்து அமர்ந்தோம்.

சிரித்த முகத்துடனே வலம் வந்த ஏர் ஹோஸ்டஸ் பாதுகாப்பு வழிமுறைகளை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தேவையான இடத்தில் சைகையிலும் விளக்கினர்.

"என்னங்க ஏதேதோ சொல்றாங்க.. ஆக்சிஜன் மாஸ்க் எங்க இருக்கு.. தண்ணில விழுந்தா லைப் ஜாக்கெட்ன்னு லாம்" கிட்டத்தட்ட பயந்தேன்.

"அதெல்லாம் சும்மா சேப்டிக்கு சொல்வாங்க.. ஒன்னும் பயம் இருக்காது. சீட் பெல்ட் போட்டு நல்லா உக்கார்ந்துத்துக்கோ.. பிலைட் மூவ் ஆகப்போகுது"

மெதுவாக சக்கரத்தில் நகர்ந்த விமானம் வேகமாக முன் சென்று பறக்கத் தொடங்கியது.

பறக்கிற மாதிரி இருக்கு என்று உவமை கூறித் தான் பழக்கம். உண்மையில் பறப்பதை உணர்ந்த தருணம்.

உடல் எடை குறைந்து மேலே தள்ளும் உணர்வு. மெல்ல மெல்ல மனிதர்களும் வீடுகளும் நிலமும் சிறியதாகிக் கொண்டே போய் மறைந்தன. மேகத்திற்குள் நுழைய தொடங்கினோம்.

கனவுகளில் வருமே ஜன்னல் போலே கம்பி வைத்திருக்கும் மேகத்தின் வெளியே எட்டிப்பார்த்தால் வானம் தெரியுமே அப்படி ஒரு காட்சி

இன்னும் சற்று மேலே சென்ற உணர்வு.

"எனக்கு ஒரு மாதிரியா இருக்கு" என்றேன்

"என்னடி ஆச்சு.. இவ்ளோ நேரம் ரசிச்சு ரசிச்சு பார்த்துட்டு இருந்த"

"இல்லை ரொம்ப மேல போற மாதிரி இருக்கு.. சத்தம் கேக்குதே என்ஜின் சவுண்ட் மாதிரி.. தலை பாரம் ஆகுது"

"இங்க பிரஷர் வேற மாதிரி இருக்கும். ஆக்சிஜன் லெவல் லாம் வித்யாசமா இருக்கும். அதனால மேல போகப் போக அப்படி இருக்கும். ஒன்னும் இல்ல.. முதல் தடவல"

அவரின் கைகளைப் பற்றிக்கொண்டும் ஏர் ப்ளேன் மோடில் இருந்த அலைபேசியில் ஓடும் பாடல்களின் துணை கொண்டும் இயல்பானேன்.

அங்கே சாப்பிட வெஜ் சாண்ட்விச் கொடுத்தார்கள்.

மேகத்தின் ஊடே சூரிய கதிர்களை ரசித்துக் கொண்டே ஆகாயத்தில் அமர்ந்து காலை உணவு

அவ்வப்போது எங்கு இருக்கிறோம் இன்னும் எவ்வளவு நேரப் பயணம் என்பது அறிவித்து கொண்டிருந்தனர்.

இன்னும் சற்று நேரத்தில் விமானம் தரையிரங்கப்போகிறது. சீட் பெல்ட் அணிந்து தயாராகக் கூறினார்கள்.

விமானம் மெல்ல மெல்ல கீழ் நோக்கி இறங்கியது

சக்கரம் தரையைத் தொட எத்தனித்தது

கண்களை இறுக மூடிக்கொண்டேன். இருக்கையில் நன்கு சாய்ந்து கை பற்றிக்கொண்டேன்.

காற்றை கிழித்து கொண்டு தட தட வென ஓசை அதிகரிக்க.. தட் என்ற ஓசையுடனும்  ஒய்யார குலுங்கலுடனும் விமானம் தரையிறங்கியது.

"ஃபிலைட் ஆசை தீர்ந்துந்துச்சா!" என் கணவர் மகிழ்ச்சியில் என்னைப் பார்த்து கேட்க

நிறைந்த புன்னகையை பதிலளித்தேன்.

வானத்தில் இருந்த மேகங்களும் எங்களோடு சேர்ந்து மழைத்துளிகளாய் மண்ணில் இறங்கின.

-ரேவதி பாலாஜி 

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.