Published:Updated:

முதல் தொலைக்காட்சி பெட்டி அனுபவம்! | My Vikatan

Representational Image

என்னுடைய ஆறு வயதில் சென்னை சென்ற பொழுது முதன் முதலாக தொலைக்காட்சி பெட்டியை பார்த்திருந்தாலும் அது எங்கள் வீட்டிற்கு வர அதன் பிறகு ஒரு 8 வருடங்கள் தேவைப்பட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது..

முதல் தொலைக்காட்சி பெட்டி அனுபவம்! | My Vikatan

என்னுடைய ஆறு வயதில் சென்னை சென்ற பொழுது முதன் முதலாக தொலைக்காட்சி பெட்டியை பார்த்திருந்தாலும் அது எங்கள் வீட்டிற்கு வர அதன் பிறகு ஒரு 8 வருடங்கள் தேவைப்பட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது..

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எங்கள் ஊரில் இருபது முப்பது இசுலாமிய குடும்பங்கள் உண்டு. அவர்களில் நிச்சயம் வீட்டிற்கு ஒருவர் குவைத்திலோ சௌதியிலோ ஏதேனும் ஒரு வேலையில் இருப்பார்கள். வருடத்திற்கொருமுறை அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை(பெரும்பாலும்) குடும்பத்தை பார்க்க வருவார்கள்.

ஒவ்வொரு முறை வரும்போதும் குறைந்தது இரண்டு பெரிய பெட்டிகள் எடுத்து வருவார்கள். அதில் சென்ட் பாட்டில்களும் துணிகளும் கூடவே ஒரு டெக் எனப்படும் வி சி ஆர் அல்லது வி சி பி (Video Cassette Player OR Video Cassette Recorder) தவறாமல் கொண்டுவருவார்கள். சிலர் TV யும் கொண்டு வருவார்கள். கூடவே சில தமிழ் பட வீடியோ காஸெட்களும்.

என்னுடைய ஆறு வயதில் சென்னை சென்ற பொழுது முதன் முதலாக தொலைக்காட்சி பெட்டியை பார்த்திருந்தாலும் அது எங்கள் வீட்டிற்கு வர அதன் பிறகு ஒரு 8 வருடங்கள் தேவைப்பட்டது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, 1988 ம் வருடம் என்னுடைய பிறந்த நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவழியாக என்னுடைய அப்பாவை தொலைக்காட்சி பெட்டி வாங்க சம்மதிக்க வைத்து சரியாக என் பிறந்த நாளன்று காலை எங்கள் கிராமத்திற்கு காலை ஐந்தே முக்கால் மணிக்கு வரும் ஸ்ரீ காமாட்சி பஸ்ஸில் எங்கள் அப்பா தொலைக்காட்சி பெட்டியுடன் வந்து இறங்கினார்.

Representational Image
Representational Image

எங்கள் வீட்டில் நாங்கள் வாங்கிய அந்த கருப்பு வெள்ளை (Bush Brand) தொலைக்காட்சி பெட்டிதான் எங்கள் ஊரின் முதல் தொலைக்காட்சி பெட்டி. இதை ஏன் நான் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால்

"வரலாறு ரொம்ப முக்கியம் இல்லையா..!"

முதல் நாள் இரவெல்லாம் எங்களுக்கு குறிப்பாக எனக்கு தூக்கம் வரவில்லை. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. பேருந்து வந்தவுடன் ஆவலாக காத்திருந்தேன். அப்பா யாரோ ஒருவரின் உதவியுடன் நன்கு கவனமாக பேக் செய்யப்பட்டிருந்த பெரிய அட்டை பெட்டியுடன் வீட்டிற்கு வந்தார்.

அதற்கான ஆன்டெனாவை (Antenna) பொருத்தி செயல்முறை விளக்கம் கொடுக்கும் மெக்கானிக் மதியம் வருவார் என்ற தகவலையும் கூறினார். அன்று பார்த்து காலையிலிருந்து மதியம் வரை உள்ள கால இடைவெளி நீண்டு கொண்டே செல்வது போல தோன்றியது. அதன் பிறகு எங்கள் கிராமத்திற்கு திருச்சியிலிருந்து வரும் ஒவ்வொரு பேருந்தையும் (மொத்தமே இரண்டு பேருந்துகள்தான் உண்டு) எதிர் பார்த்து மனதிற்குள்

"சே ..என்ன இந்த காமாட்சி பஸ் இன்னும் வரலையே...ஏன் இந்த SMT பஸ் இன்னைக்கி இவ்ளோ லேட்..." போன்ற எண்ணவோட்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலையிலிருந்து சாப்பாடு கூட இறங்க வில்லை. டிவி இருந்த அட்டை பெட்டியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தோம். ஒரு வழியாக பனிரெண்டு மணி வாக்கில் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த சேவை என்ஜினீயர் வந்து சேர்ந்தார். எங்களுக்கெல்லாம் எதோ கடவுளை பார்த்தது போல் ஒரே கொண்டாட்டம். ஒருவழியாக வந்து எங்கள் வீடு மடியில் ஒரு இடம் பார்த்து ஜம்பர் மூலம் துளையிட்டு ஒரு 20 அடி நீளமுள்ள இரும்பு பைபிள் ஆன்டெனாவை இணைத்து ரிஸீவரிலிருந்து ஒயரை பூஸ்டருடன் இணைத்து ஆன்டெனாவை நிலைநிறுத்தியாகிவிட்டது. கீழே வீட்டு ஹாலில் டிவி யை வைத்து பூஸ்டரிலிருந்து வந்த ஒயரை டிவி இல் இணைப்பு கொடுத்தார். டிவி இல் மின் இணைப்பு கொடுத்து ஸ்விட்சை ஆன் செய்தவுடன் சில நொடி கழித்து டிவி ஒளிர்ந்து கருப்பு வெள்ளை புள்ளிகள் தெரிய ஆரம்பித்தது. டிவி திரையில் அந்த கருப்பு வெள்ளை புள்ளிகளை பார்த்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சி நான் 50 இன்ச் LED டீவியை வாங்கியபோது கூட ஏற்படவில்லை.

Representational Image
Representational Image

பின்பு மேலே கொடைக்கானல் இருக்கும் திசை நோக்கி மெதுவாக ஆன்டென்னாவை திருப்பி சரிசெய்து சென்னை தொலைக்காட்சி சானலை ஒருவழியாக வரவைக்க எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அன்று ஞாயிற்று கிழமை என்பதால் டெல்லி நிகழ்ச்சிகள் மதியத்திலிருந்து தொடங்கும். இல்லையென்றால் மாலை ஐந்து மணிக்கு தான் நிகழ்ச்சிகள் தொடங்கும். மாலை ஐந்தரை மணிக்கு தமிழ் நிகழ்ச்சியில் திரைப்படம் போடுவார்கள். அன்று நாங்கள் பார்த்த முதல் திரைப்படம் "பாதாள பைரவி" மிக பழைய படம் என்றாலும் எங்கள் வீட்டு தொலைக்காட்சியில் பார்த்த முதல் படம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. அன்றிலிருந்து கிட்டத்தட்ட ஒரு ஆறு மாத காலத்துக்கு அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்ப்போம் மத்திய நேரத்தில் வரும் UGC நிகழ்ச்சி உட்பட.

பெரும்பாலும் பழைய சினிமாக்களும் எப்போதாவது அதி பூத்தார் போல சமீப கால திரைப்படங்கள் (பத்து வருடத்திற்கு முந்தய) சினிமாக்கள் ஒளிபரப்புவார்கள்.

திங்கள் இரவு ஒளிபரப்பாகும் சித்திர மாலா எனும் நிகழ்ச்சியில் பாடல்கள் பல மொழிகளிலிருந்து ஒளிபரப்பாகும். நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இருவாரங்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு தமிழ் பாடல் ஒளிபரப்பாகும். அதே போல புதன் கிழமை வரும் சித்திரஹார் நிகழ்ச்சி. ஹிந்தி பாடல்கள் மட்டும் ஒளிபரப்பாகும். அப்பொழுது ஹிந்தி தெரியாதுதான் (இன்று வரை தெரியாது) இருந்தாலும் அதை பாப்போம். டிவி வாங்கிய புதிதில் மாலை ஐந்தரை மணிக்கு தான் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒருமணிநேரம் மட்டும் ஒளி பரப்பாகும். அதனை பிராந்திய ஒளிபரப்பு (Regional Program Continues) என்று சொல்வார்கள்.

Representational Image
Representational Image

ஐந்தரை மணிக்கு பின்னணி இசையுடன் தேசிய தொலைக்காட்சி சின்னம் சுழல ஆரம்பிக்கும் முன்பே பார்க்க தொடங்கி விடுவோம். இந்த நிகழ்ச்சி என்றில்லை ஐந்தரை மணி தொடங்கி அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்ப்போம் (பெரும்பாலும் ஹிந்தி நிகழ்ச்சிகள், புரியாது என்றாலும் கூட). பிற்பாடு என் நண்பன் வெங்கட் சொன்னது போல இது ஒரு காட்சி ஊடகம் (Visual Medium) இதற்கு மொழி தேவை இல்லை என்பான். அது உண்மையும் கூட. வசனங்களை விட காட்சி அமைப்பின் மூலமே அந்த கணம் விளக்க படவேண்டும் என்பதே என்னுடைய கருத்தும். உதாரணத்திற்கு இயக்குனர் மணிரத்னத்தின் திரைப்படங்களை சொல்லலாம். ஆனால் ஏனோ அது பல பேருக்கு அது கை கூடியதில்லை. புதன் கிழமை இரவு எதிரொலி என்ற நிகழ்ச்சியில் அந்த வார நிகழ்ச்சி பற்றி வரும் கடிதங்களை வாசிப்பார்கள். அதன் இறுதியில் அந்த வாரம் ஞாயிற்று கிழமை என்ன திரைப்படம் என்று சொல்லுவார்கள். அதனை தெரிந்து கொண்ட பின்பு வார இறுதிக்காக காத்திருப்போம்.

ஒவ்வொரு சனிக்கிழமை அன்று ஹிந்தி தொடர் சர்க்கஸ் வரும். ஷாருக்கான் நடித்த முதல் தொடர். அப்பொழுது நிச்சயமாக எதிர்பார்க்காத ஒன்று அவர் இவ்வளவு பெரிய ஹீரோவாக வருவார் என்பது. ஜுனூன், மால்குடி டேஸ் (Malgudi Days) எழுத்தாளர் RK நாராயண் எழுதியது (அவர் ஒரு தமிழர் என்பதும் சேலம் அருகே இருக்கும் ராசிபுரத்தை சேர்ந்தவர் என்பதும் பிற்பாடு தெரிந்து கொண்ட விஷயம்) போன்ற தொடர்களை தவறாது பாப்போம். தமிழ் தொடர்களான மேல் மாடி காலி, நா. பாவின் தலைமுறைகள் போன்ற தொடர்கள் வாரம் ஒரு நாள் மட்டும் ஒளிபரப்பாகும். அந்த காலத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் Door Darshan எனப்படும் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ஆனால் வர்ணனை ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும்.

Representational Image
Representational Image

சென்னை வானொலியில் வரும் தமிழ் வர்ணனையை கீழே வைத்து விட்டு தொலைக்காட்சி வர்ணனை சத்தத்தை குறைத்து விட்டு தமிழ் வர்ணனையுடன் கிரிக்கெட் பார்த்திருக்கிறோம்.

ஞாயிற்று கிழமையானால் எங்கள் வீடு நிறைந்து காணப்படும். ஒரு இருபத்தியைந்து பேர் இருப்பார்கள். அனைவரும் நெருக்கியடித்து உட்கார்ந்து கொண்டு பார்ப்போம். எம் ஜீ ஆர் இறந்தபோது கிட்டத்தட்ட நூறுபேர் அவருடைய இறுதி ஊர்வலத்தை இரண்டரை மணிநேரம் பார்த்தோம்.

இரவு நேரங்களில் இரண்டாவது ஆன்டெனாவை இலங்கை பக்கம் திருப்பி (ஆன்டெனாவை திருப்புவது ஒன்றும் அவ்வளவ்வு சுலபமில்லை. எங்கள் வீடு மாடியில் இருக்கும் அறைக்கு மேலே வேயப்பட்ட ஓட்டின் மீது ஏறி திருப்ப வேண்டும். மற்றொருவர் கீழிருந்து பார்த்து சேனல் வருகிறதா என்று சொல்லவேண்டும்) ரூபா வாகினி (Ruba Vaahini) என்ற இலங்கை தொலைக்காட்சி சிக்னல் கிடைக்கிறதா என்று பாப்போம்.

அதிர்ஷ்டம் இருந்தால் கிடைக்கும். புதன் கிழமைகளில் புத்தம் புதிய தமிழ் திரை படங்கள் ஒளிபரப்பாகும். லோட்டோ என்ற லாட்டரி நிகழ்ச்சி மற்றும் சில நேரங்களில் இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் என பார்த்திருக்கிறோம். இது போன்ற பலவிதமான சர்க்கஸ் வேலைகள் செய்திருக்கிறோம். இன்று போல நாள்முழுவதும் இரவு உட்பட நிகழ்ச்சிகளும் நூற்றுக்கணக்கான சேனல்களும் அப்போது இல்லை.

தொடர்களின் ஒவ்வொரு பகுதிக்காகவும் வாராவாரம் காத்திருந்த அந்த நாட்கள் மிக அழகானவை. இன்று நாம் குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை தவற விட்டாலும் பின்பு இணையத்தில் OTT மூலம் காண முடியும். இன்றைய தலைமுறைக்கு காத்திருப்பது என்பது சில நொடிகள் மட்டுமே. என்றேனும் இணையத்தின் வேகம் குறைவாக இருந்தால் திரையின் நடுவில் சுற்றும் வட்டத்தை பார்த்து பொறுமை இழந்து என்னிடம் ஓடி வரும் என் மகனை பார்த்து எனக்கு வியப்பு தான் ஏற்படும்.

மீண்டும் சந்திப்போம்,

அன்புடன்

ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.