வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
மீன் தொட்டிகளை எங்காவது பார்த்தால் ஐயோ பாவம் இதிலுள்ள மீன்கள் என்றிருக்கும் எனக்கு. அதுவும் மிகச்சிறிய குடுவையில் சுற்றி சுற்றிவரும் ஒரே ஒரு மீனைப் பார்த்தால் அப்படியே அதைக் கொண்டு போய் கடலுக்குள் விட்டு விடலாமா எனத் தோன்றும். இந்த உலகம் முக்கால்வாசி நீரால் சூழப்பட்ட ஒன்று. அதில் வாழும் உயிரினம் தான் மீன். கடல் என்பதை நாம் அளக்க முடியுமா?? அவ்வளவு பெரிய கடலில் சுற்றி வரும் மீன்களை நாம் ஏன் நிலத்திற்குக் கொண்டு வந்து செயற்கையான முறையில் வளர்க்கிறோம் எனப் புரிவதில்லை.
ஒரு நாள் ஒரு மிகப் பெரிய மீன்கள் வையகம் இருக்கும் இடத்திற்குச் சென்றிருந்தேன். கண்கவர் மீன்கள் சிறியது முதல் பெரியது வரை ராட்சத தொட்டிகளில் வைத்துப் பராமரிக்கிறார்கள். எண்ணிலடங்கா மீன்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகு.. கடலின் அமைதியிலும், சுத்தமான நீரிலும் வாழ்ந்த மீன்கள் எப்படி இந்தத் தொட்டிகளில் மனித இரைச்சலைக் கேட்டுக் கொண்டே நீந்திக் கொண்டிருக்கின்றன எனத் தெரியவில்லை. மீன்களின் மொழி தெரிந்தால் அவைகளோடு பேச முயற்சித்து இருக்கலாம்.

ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு ரகம். ஒன்று வேகமாய் நீந்திக் கொண்டும், ஒன்று தவம் செய்வது போல் அமைதியாக நீந்திய படியும், ஒன்று அந்தத் தொட்டிக்குள் நீந்தப் பிடிக்காமல் கண்ணாடிக் கதவை முட்டி முட்டி வெளியேறத் துடித்து அதன் முகம் கோணலாகியதுதான் மிச்சம் ..
ஒரு பெரியத் தொட்டியில் சின்ன சைஸ் மீன்கள் ஏராளமாக இருந்தது. அந்தத் தொட்டியை வலம் வருவதில் அவ்வளவு அவசரம் அவைகளுக்கு, அதில் ஒன்று, லெஃப்ட் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் திரும்பி பின் நேராக பயணிக்கிறது.. இன்னோருத் தொட்டியில் ஒரு பெரிய சைஸ் மீன் போலிஸ் போல் காவல் காக்கும் ரோந்து பணியில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

அங்கிருந்த குட்டி மீன்கள் அதற்குப் பயந்து எதிர் திசையில் வலம் வந்து கொண்டிருந்தன. எல்லா இடங்களிலும் காதல் ஜோடி இருப்பது போல் இங்கும் ஒரு ஜோடி மீன்கள் சேர்ந்தே சுற்றிக் கொண்டிருந்தன. பட்டாம்பூச்சிகளின் நிறங்களும் அதன் டிஸைன்களும் எவ்வளவு அழகோ,. மீன்களுக்கும் அவ்வாறே தான். அடடா என்ன ஒரு கலர் காம்பினேஷன் இவற்றின் உடலில் என வியக்கும் படி இருந்தன சிலவற்றின் நிறங்கள்.. பறவை போல் முகமும், பட்டத்தைப் போல் உடலும், நீண்ட நேர்த்தியான வாலும் கொண்ட ஒரு மீன் வகை பார்க்கவே அற்புதமாக இருந்தது.
கிட்ட வந்தா குத்திடுவேன் என்பது போல் உடல் முழுவதும் முட்களை உடைய மீன்கள் சில. என்ன இங்கிருந்து காப்பாத்துங்க என்பது போல் கண்களை உடைய சில மீன்கள், கடலில் இருந்தா என்ன? உள்ளூர் தொட்டியில் இருந்தா என்ன? என ஒய்யாரமாக படுத்திருக்கும் சில மீன்கள்.. இன்னிக்கு நைட்டுக்குள்ள இங்கிருந்து தப்பிக்கறோம்டா என ப்ளான் போடுவதைப் போல் தோன்றும் சில மீன்கள்..

சில மீன்களின் முகத்தில் கோபம், சிலவற்றில் திருப்தி, சிலவற்றில் சோகம் என எல்லாவிதமான மீன்களைக் காணமுடிந்தது. ஒருஇடத்தில் நாமும் அந்த மீன் தொட்டியின் உள்ளேச் சென்று அதனுடன் நீரில் இருப்பது போல் உணர்வைப் பெறுமாறு அமைக்கப்பட்டிருந்தது.அதில் நுழைந்து ஒருமீனைப் பிடிப்பது போல் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.என் கையில் சிக்கிய மீன் Finding Nemo திரைப்படத்தில் வரும் குடும்பத்தை விட்டுப்பிரிந்த குட்டி Nemo போலவே இருந்தது. அதை அப்படியே கையில் வைத்துக் கொண்டு தண்ணீரில் நிற்கிறேன்.. அதன் குடும்பம் வந்து கேட்டால் அதை ஒப்படைக்கக் தயாராக....
-Mrs . J.Vinu
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.