வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அன்று உலகக் கோப்பை காற்பந்தாட்டம் பார்த்துவிட்டுப் படுத்தான் பரசு. நல்ல தூக்கம். மேட்சுன்னா இப்படியா நட்ட நடு ராத்திரி 12.30க்கு ஆர்ம்பிச்சு நாள் போறது தெரியாம விளையாடி, விடியலில் முடிக்கறது?! நல்லாவா இருக்கு!?’ என்றாலும், பார்த்துவிட்டுத்தான் படுத்தான். காரணம் காற்பந்தாட்ட மோகம், அது தந்த ஆர்வம். பிறகு நல்ல தூக்கம்.
கனவில் கடந்த காலம் நிழலாடியது. அப்போது பள்ளியில் படிக்கிற கால கட்டம் அந்த ரம்மியங்களெல்லாம் இந்தக் காலப் பசங்களுக்கு வாய்க்க வாய்ப்பே இல்லை. இப்போ, மெஸ்ஸிக்காக பத்தாம் நம்பர் ஜெர்ஸி வாங்கி மாட்டிக் கொண்டு எல்லாரும் கனவில் சஞ்சரிக்கிறார்கள்.

அவன் காலத்தில், அரசு பள்ளியில் ஒரு ஸ்கூல் பனியன் ஆர்டர் பண்ணி வாங்கிக் கொடுப்பார்கள். வருஷம் பூராவும் அதுதான். கேம்ஸ் பீரியட் இருக்கிற அன்னைக்கு மட்டும் கட்டாயம் அதைப் போடணும். கேம்ஸ் பீரியட்ல சட்டையைக் கழற்றிவிட்டு பனியனோடு விளையாடின சுகம் பத்தாம் நம்பர் ஜெர்ஸி மாட்டலில் வருமா தெரியவில்லை.
அந்த ஸ்கூல் பனியனும் முண்டா பனியன்தான். முதுகில பள்ளி பெயர், ஊர், வயிற்றுப் பகுதியில், ஸ்கூல் எம்பளம். பி.டி பீரியட்ல விளையாட ஸ்கூலுக்கே ஒரே ஒரு புட்பால்தான் இருக்கும். முந்தின பீரியடே போய் கேம்ஸ் மாஸ்டரைக் காக்கா பிடிச்சு, எடுத்து வைத்திருந்து கேம்ஸ் பீரியட்ல புட்பால் ஆடுவார்கள். பந்தைக் கைப் பற்றத் தெரியாத அல்லது திராணியற்ற மற்றொரு வகுப்பு கோல் போஸ்ட் இல்லாத இடத்தில் கற்களால் கோல் போஸ்ட் அமைத்து, புட்பால் இல்லாமால் விளையாடின சுகம் தெரியுமா? டைம்டேபிளும் அப்படித்தான் இருக்கும்.

புட்பால் கிடைக்கலைனு கவலைப் பட மாட்டார்கள். பி.டி மாஸ்டரை கைக்குள் போட்டுக்கொண்ட கிளாஸ், சீனியர் கிளாஸா இருக்கும். அவனுகளோட சண்டையெல்லாம் போட முடியாது. அவனுக வாட்ட சாட்டமா வேற இருப்பானுக. பி.டி வாத்தியாரே அதுக்கு பயந்துதான் முதல் பீரியடே பாலை எடுத்துப் போக அவனுகளை அனுமதிப்பார்னு இப்பத்தான் புரிபடுது.
புட்பால் இல்லாட்டாலும், புட்பால் மேட்ச் நடக்கும். எப்படித் தெரியுமா?
ஸ்கூலுக்கு எதிரில் வாட்ச் மேன் தாத்தா பெட்டிக்கடையில் மாங்காய் விற்பார். அது புளிப்புமில்லாமல் இனிப்புமில்லாமல் அது ஒரு தனிச் சுவையாய் இருக்கும். அதை பத்துபைசாவுக்கு வாங்கி உப்பு, மிளகாய்த்தூள் தொட்டுத் தின்றுவிட்டு, கொட்டையைச் சூப்பிச் சூப்பி ஒன்றுமில்லாமல் போனதும் கிரவுண்டில் எவரோ போட்டுப் போன மாங்கொட்டைதான் அவர்கள் புட்பால், அதை , எத்தி எத்தி இரு கற்களைக் கோல் போஸ்ட்டாக வைத்து இரு டீமாக பிரிந்து விளையாடுகையில், வகுப்பு முடியும் ஐந்து நிமிஷம் முன்பாகவே பி.டி. மாஸ்டர் விசில் ஊதி வரச் சொல்வார்.

இருந்தாலும் மாங்கொட்டைப் பந்து அப்போதுதான் கோல் போஸ்ட்டை எட்டி இருக்கும். எட்டி உதைக்கையில், பயந்த சுபாபமுள்ள கோலி, பி.டி வாத்தியாரின் விசிலுக்குப் பயந்து, மாங்கொட்டையை மறந்து பிடிக்காமல் விட்டுவிட்டு வகுப்புக்கு ஓடிப்போவான்., கோல் விழும். கத்துற கத்தலில் நிஜ புட்பாலில் விளையாடும் சீனியர் மாணவர் ஆட்டத்தைவிட, இது சிலிர்ப்பைக் கொடுக்கும்.
இந்த ஆனந்தத்தை அனுபவிக்க முடியாத ஆத்திரப்பட்ட சீனியர் மாணவர், மாங்கொட்டைப் பந்தைப் பிடுங்கி தூக்கித் தூர எறிய, ‘டேஏ ..ஏ’ என்று கத்திக் கொண்டே, எதோ மெஸ்ஸிக்கு மஞ்சள் கார்டைக் காட்டிய ரப்ஃரிக்கு எதிர்ப்புக் காட்ட எழுந்தவன் போல் எழுந்தான் பரசு.

ஆடாத ஆட்டத்தின் ஆனந்தமும், ஓடாத ஓட்டத்தின் களைப்பும் வியர்வையைச் சொட்ட வைக்க வியப்பில் துயில் நீங்கி எழுந்தவன் ஜெர்ஸியில்லாத மஞ்சள் கார்டு மெஸ்ஸியைவிடவும், மாங்கொட்டை இல்லாத பரசுவாய் பள்ளி பரிதவித்தான் பாவம்.
கனவு ஆட்டங்கள் நனவு ஆட்டங்களைவிடவும் கம்பீரமானவை. மஞ்சள் கார்டுகள் ஜெர்ஸி எண்கள்களின் இடையூறுகள் இல்லாமல் மூளைக்கு உறுத்தல் இல்லாத உற்சாகம் கொடுப்பதால் உறக்கம் ஒரு அத்திப் பழம். முன்பாதி சுகமாய் பின்பாதி ரணமாய் எல்லா வயதிலும், எல்லார் உறக்கத்திலும் .
*****
-வளர்கவி, கோவை.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.