Published:Updated:

கொஞ்சம் தகவல், கொஞ்சம் சுயபுராணம்! - பிரான்ஸ் தமிழரின் முதல் டோஸ் தடுப்பூசி அனுபவம்

Representational Image
Representational Image

பள்ளிக்கூடத்தின் நீண்ட வராண்டாவில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு சிரிஞ்சுகளை ஸ்டெரிலைஸ் பண்ண சுடுதண்ணீர் கொதிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வாழ்க்கையில் மிக குறைந்தபட்ச தடுப்பூசிகளை போட்டுக்கொண்டவர்களில் நானும் ஒருவன்! தடுப்பூசி பற்றிய என் தாய்வழி பாட்டியின் பயம் தான் இதற்கான மூல காரணம். பாட்டியின் காலத்தில் காலரா தடுப்பூசி போட வீடு வீடாக வரும் செவிலியர்களிடமிருந்து தப்பிக்க நெல் நிரப்பும் பத்தாயத்தில் மண்ணெண்ணெய் விளக்குடன் ஒளிந்திருந்துவிட்டு, கரி சூழ்ந்த மூக்குடன் வெளியே வந்ததை கதையாக சொல்லி வளர்த்ததுடன் என் பால்யத்தின் தடுப்பூசிகளுக்குத் தடுப்பணை போட்டதும் பாட்டிதான்!

பிரான்சில், கட்டாய ராணுவ சேவையின்போது நான் போட்டுக்கொண்ட தடுப்பூசி தான் எனது முதல் ஊசி.

தடுப்பூசி போட பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்கள் என்ற தகவல் தெரிந்தால் ஊசி போடாமலேயே எனக்கு ஜுரம் வந்துவிடும்.

"As i am suffering from fever " என லீவ் லெட்டர் எழுத தொடங்கிவிடுவேன்.

அப்படியும் ஒரு முறை திடுப்பென வந்துவிட்டார்கள்.

பள்ளிக்கூடத்தின் நீண்ட வராண்டாவில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு சிரிஞ்சுகளை ஸ்டெரிலைஸ் பண்ண சுடுதண்ணீர் கொதிக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள்...

திமிறும் மாணவர்களை அழுத்தி பிடிக்க பெரிய பி டி சார் சட்டை கையை சுருட்டிவிட்டுக்கொண்டு இரண்டு பெரிய கிளாஸ் லீடர்களுடன் தயாராக நிற்கிறார்...

மாணவர்கள் வரிசையில் நிற்கிறோம்...

சின்ன கிளாஸ் பிள்ளைகளின் கூச்சல்கள்...

Representational Image
Representational Image

பள்ளி நிகழ்வுகள் அனைத்திலும் முன்னால் நிற்கும் சில "பெரிய பையன்கள்" ஊசியை போட்டுக்கொண்டு அழுகையும் சிரிப்பும் ஒன்று சேர்ந்த ஒருவகை இளிப்புடன் புஜத்தை தேய்த்துக்கொண்டு திரும்புகிறார்கள்...

குணா பட "பார்த்த விழி பார்த்தபடி" பாடலில் வருவது போல மாணவர் வரிசை ஸ்லோ மோசனில் ஆடி ஆடி முன்னேறுகிறது !...

" பாட்டிக்கு உடம்பு சரியில்ல சார்! "

வில்லனிடம் சிக்கிக்கொண்ட கதாநாயகியின் குரலுக்கு சட்டென தோன்றும் கதாநாயகனைப் போல என் சித்தப்பா. எப்போது பள்ளிக்குள் நுழைந்தார், எப்படி என்னை கண்டுபிடித்தார் என்பது இன்று வரையிலும் புரியவில்லை.

ஆசிரியர்கள் சுதாரிப்பதற்கு முன்னதாகவே நான் சித்தப்பாவின் சைக்கிளில் அமர்ந்திருந்தேன். எப்படித்தான் விசயத்தை மோப்பம் பிடித்தாளோ பாட்டி...

அன்று தன் உடல்நிலையை பொய்யாக பணையம் வைக்க செய்து என்னை தடுப்பூசியிலிருந்து மீட்டாள். அதுமட்டுமல்லாமல் வீட்டினுள் நுழைந்த எனக்கு ஏதோ பெரும் ஆபத்திலிருந்து மீண்டு வந்ததை போல ஆனந்தக் கண்ணீருடன் உச்சிமுகர்ந்து அப்படியொரு வரவேற்பு.

இப்படியான ஒரு பரம்பரை பயம் ஆழ் மனதில் அமிழ்ந்திருந்ததாலோ என்னவோ குடும்பத்தினர்கள் நண்பர்கள் என பலருக்கும் கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துகொடுத்த நான், எனக்கு மட்டும் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன்.

ஐரோப்பிய யூனியனின் இங்கிலாந்தும் ஜெர்மனியும் தடுப்பு மருந்தில் காட்டிய வேகத்திலிருந்து முதலில் பின்தங்கியிருந்த பிரான்ஸ் பின்னர் சிலிர்த்து எழுந்து தடுப்பூசியை படிப்படியாக கட்டாயமாக்க தொடங்கியதில் என் தள்ளிப்போடும் படலம் முடிவுக்கு வந்தது.


1998ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலக கால்பந்தாட்ட போட்டிக்காக தலைநகர் பாரீஸுக்கு அருகில் கட்டப்பட்ட "Stade de France" ஸ்டேடியம் நாட்டின் சமகால பெருமைகளில் ஒன்று. எண்பதாயிரம் இருக்கைகளை கொண்ட இந்த பிரம்மாண்ட ஸ்டேடியம், மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாமாக செயல்படுகிறது.

Stade de France
Stade de France

உள்ளுக்குள் உதறல் இருந்தாலும் வெளியே நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு முதலாவதாக நிற்கும் வகை நான்! அதுமட்டுமல்லாமல் சிங்கிள் டீக்காக விவாதத்தில் மிங்கிள் ஆகும் வடிவேலுவை போல யாருடனும் எளிதாக பேச்சை ஆரம்பித்துவிடுவேன். நினைவு தெரிந்த நாளிலிருந்து "கண்டது அனைத்தையும்" படிப்பதால் எந்த தலைப்பிலும் கலந்துகொள்ள முடிந்த பேச்சுடன் டைமிங்கான எதுகை மோனை காமெடியும் எனக்கு கைகூடும் என்பதால் வரிசையில் காத்திருக்கக்கூடிய இடங்களில் நான் "Humor generator" ஆகிய சம்பவங்கள் நிறைய உண்டு! எனக்கு தெரிந்த உண்மைகளை மட்டுமே பேசுவதாலும், சிங்கிள் டீக்கெல்லாம் டார்கெட் பண்ணாததாலும் இதுவரையிலும் யாரிடமும் தர்ம அடி வாங்கியதில்லை!

எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்துக்கு சற்று முன்னரே நான் உள்ளே செல்ல வேண்டிய வாயிலுக்கு வந்துவிட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"பாரீஸ் பிரான்ஸ் ஆகாது" எனும் ஒரு சொலவடை பிரான்சில் புழக்கத்தில் உண்டு. தலைநகரை மட்டும் பார்த்து ஒரு நாட்டை மதிப்பிடக்கூடாது எனும் அர்த்தத்தில் சொல்லப்படும் இந்த வழக்கு உலக நாடுகள் அனைத்தின் தலைநகரங்களுக்கும் பொருந்தும். பாரீஸ் நகரின் புறநகரங்களில் ஒன்றான சேன் தெனியில் அமைந்திருக்கும் ஸ்டேடியத்தில் வெளிநாட்டு முகங்களே அதிகம் தென்பட்டன. முன்னால் பிரெஞ்சு காலனியாதிக்க ஆப்ரிக்க நாடுகள் தொடங்கி, போர் மற்றும் அரசியல் காரணங்களுக்காக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் என பல நாட்டு முகங்களுக்கிடையே, மண்ணின் மைந்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே தென்பட்டது!


நுழைவு வாயிலுக்கு வெளியே வரிசை நீளமானதாக இருந்தாலும் மிக வேகமாக நகர்ந்தது. உள்ளே நுழைந்தவுடன் மெட்டல் டிடெக்டர் பரிசோதனை கட்டாயம். கண்ணுக்கு தெரியாத கொரோனா கிருமியின் தாக்குதலுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாத மனித கிருமிகளின் தாக்குதல்களினால் சூடுபட்டதால் பொது மக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளில் இது வழக்கமாகிவிட்டது!

Representational Image
Representational Image

சோதனையிடும் இடத்திலேயே என் வாய் முகுர்த்தத்துக்கான வாய்ப்பு கிட்டிவிட்டது. எனக்கு முன்னால் நின்ற வயதான பிரெஞ்சு மூதாட்டியின் சிகையலங்காரம் அழகாக இருப்பதாக கூறினாள் சோதனையில் ஈடுபட்ட பெண் அதிகாரி...

" எல்லாம் தடுப்பூசி பயத்தை மறைக்கத்தான்! "

என மூதாட்டி கூறி சிரிக்க,

" தடுப்பூசிக்கு பிறகு இன்னும் அழகாக மாறிவிடுவீர்கள்!" என நான் திருவாய் மலர்ந்து வைத்தேன். சுற்றியிருந்தவர்களின் சிரிப்புடன், அதிகாரியின் முகமும் மலர்வதை கண்டு, அவள் என்னை சோதனையிடும் போது, "All’s well that ends well" எனும் ஷேக்ஸ்பியரின் வாசகத்தை கூறி, ஷொட்டு வாங்கிக் கொண்டேன். உள்மன உதறலையெல்லாம் மெட்டல் டிடெக்டரால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் கெளரவமாக தப்பித்தேன்.

டுத்ததாக கொடுக்கப்பட்ட, தடுப்பூசியின் பெயர் தாங்கிய படிவத்தில் கடந்த நாட்களில் தொற்றுக்கு ஆளானீர்களா என்பது தொடங்கி, நமது வயது, நமது உடல் உபாதைகள், நாம் தொடர்ந்து உட்கொள்ளும் மருந்துகள், ஒவ்வாமைகள் என பல கேள்விகள். அதனை பூர்த்தி செய்து கணினியில் பதிவேற்றிய பிறகு தடுப்பூசி போடும் படலம்.

வரிசை வரிசையாக அமைக்கப்பட்ட கேபின்களில் "Pompiers" என்றழைக்கப்படும் தீயணைப்பு படை வீரர்கள் பணியிலிருந்தனர். தீயணைப்பு படை என்றாலும், அவசர தொலைப்பேசி எண் 18ல் தொடர்பு கொள்ள முடிந்த இவர்கள் தான் பிரான்ஸ் நாட்டின் ஆபத்பாந்தவர்கள். தீ விபத்து மட்டுமல்லாமல் சாலை விபத்துகள், மாரடைப்பு தொடங்கி மருந்து குடித்துவிடுவது வரை அனைத்து உயிர்காக்கும் அவசரங்களுக்கும் முதலில் வருவதும் அதற்குத் தேவையான மருத்துவ சேவைகளை ஒருங்கிணைப்பதும் இந்த படைதான்!

Representational Image
Representational Image

அத்லெடிக் உடம்புடன் உயிர்காப்பு பணிகளில் ஈடுபடும் இந்த இளம் வீரர்கள் பிரெஞ்சு டீனேஜ் பெண்களின் ஆல் டைம் கிரேஸ் ! ஒவ்வொரு புதுவருடப்பிறப்பின் போதும் தீயணைப்பு நிலையங்களில் ஏற்பாடு செய்யப்படும் விழாவில் கலந்துக்குகொண்டு இந்த நெருப்பு சாக்லெட் பாய்ஸுடன் நடனமாட இளம்பெண்கள் கூட்டம் அலைமோதும்!

" ஊசி பற்றிய வதந்திகளால் பயமெல்லாம் இல்லையே ? "


மருந்து நிரப்பி பேக் செய்யப்பட்ட யூஸ் அண்ட் த்ரோ சிரிஞ்சை பிரித்தபடி தீயணைப்பு படை இளைஞன் கேட்ட கேள்விக்கு என் நீண்ட பிரசங்கத்தை தொடங்கி விட்டேன்.


" மருந்துகளின் மீதான பயம் ஒன்றும் புதிதல்ல... இன்று சர்வசாதாரணமாகிவிட்ட இன்சுலின் ஊசி கூட ஒரு காலத்தில் மிகப்பெரிய பயத்தை உண்டு பண்ணியது ! தொடக்க காலத்தில் டெஸ்ட் பண்ணாமல் அதனை போட்டவர்களே கிடையாது!

" அட ! நான் இந்த கோணத்தில் யோசித்ததில்லை ! "

சிலாகித்தபடி அந்த இளைஞன் குத்திய ஊசி மற்ற சராசரி ஊசிகளை விடவும் குறைவான வலியை தான் ஏற்படுத்தியது !

தடுப்பூசி போட்டுக்கொண்டதை பதிவு செய்துவிட்ட ஒரு பத்து நிமிடங்களில் அந்த தகவல் கணினி மூலம் "Sécurité sociale" என்றழைக்கப்படும் சமூகப் பாதுகாப்பு துறையின் தகவல் வங்கியின் நமது பயனர் பக்கத்தில் பதியப்பட்டு, நம் குடும்ப மருத்துவரின் பார்வைக்கும் சென்றுவிடும். தடுப்பூசி சான்றிதழ் இல்லாமல் மயக்கமான நிலையில் மருத்துவமனைக்குச் சென்றால் கூட இந்த தகவல் வங்கியிலிருந்து தெரிந்துகொள்வார்கள் !

Representational Image
Representational Image

நீண்ட கால பலாபலன்களை கணக்கிட்டுவிடும் தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்களையும், தகவல் ஒருங்கிணைப்பு திறமைகளையும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கான காரணங்களில் சில என குறிப்பிடலாம்.

த்து நிமிட காத்திருப்பில் லேசாக கை வலிப்பது போல தோன்றியது. ஆழமாக யோசித்ததில் அதற்கான காரணம் முதல் நாள் அரிசி மூட்டையைத் தூக்கிக்கொண்டு லிப்ட்டை தவிர்த்து மாடிப்படிகளில் ஏறியது என ஞாபகம் வந்துவிட்டது! அடுத்து பிடரியிலும் வலி. அதுவும் முந்தைய இரவு மைவிகடனுக்காக நீண்ட நேரம் கணினிக்கு முன்னால் தட்டச்சு செய்ததினால் !! ஆக, கோவிட் தடுப்பூசி என்னுள் காய்ச்சல், தலைவலி என எந்த பெரிய சிரமங்களையும் ஏற்படுத்தியதாக தோன்றவில்லை !

மேலும் சொல்லப்போனால் வழக்கத்தை விடவும் சுறுசுறுப்பு அதிகமானது போன்ற உணர்வு. தடுப்பூசி பற்றிய ஆழ்மனதின் பயம் அகன்றதுகூட அந்த உணர்வுக்கான காரணமாக இருந்திருக்கலாம்.

கோவிட் 19 தடுப்பூசியினால் தீங்குகள் தான் அதிகம் என்பது எந்த அளவு அபத்தமோ அதே அளவு அபத்தம் பக்கவிளைவுகள் முற்றிலும் கிடையாது என்பதிலும் உண்டு. நபருக்கு நபர் மாறுபடக்கூடிய இந்த பக்கவிளைவுகள் இல்லாத நோய் நிவாரணிகள் எந்த மருத்துவத்திலும் கிடையாது. கட்டாயம் பத்தியத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாட்டு மருந்துகளைப் பத்தியம் இல்லாமல் உட்கொண்டாலும் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கொஞ்சம் தகவல், கொஞ்சம் சுயபுராணம்! - பிரான்ஸ் தமிழரின் முதல் டோஸ் தடுப்பூசி அனுபவம்
Guillaume Bontemps/Ville de Paris

ஒரு பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து மிகக் குறுகிய காலத்தில் பயன்பாட்டுக்கு வருவதோடு மட்டுமல்லாமல் அந்த மருந்து உலகம் முழுவதும் ஒரே காலகட்டத்தில் பயன்படுத்தப்படுவதும் மனிதக்குல வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை ! உலகம் முழுவதும் கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும், அந்த மருந்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால், உடல் பருமனைக் குறைக்கும் சில மாத்திரைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட கோவிட் 19 தடுப்பு மருந்தின் பாதிப்பு எண்ணிக்கை குறைவுதான் !

எந்த மருந்தாக இருந்தாலும் நம் உடல்நலன் மற்றும் உபாதைகளை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு உட்கொள்வது சாலச்சிறந்தது !

மற்றபடி, எதுவும் மாறும் … நன்மையாகவே மாறும் !!!


All's well that ends well!


-காரை அக்பர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு