ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் காணப்பட்டாலும், தட்டை சுற்றி சோற்றை இரைக்கும் மழலைகள் போல குப்பைத் தொட்டிகளை சுற்றியே கொட்டிக் கிடக்கின்றன குப்பைகள். கூடைப்பந்து விளையாட்டு வீரர் போல பலர் தூர இருந்து குப்பை பைகளை தொட்டிக்குள் எறிகின்றனர். உள்ளே சரியாக விழுந்தால் தனக்குத்தானே அர்ஜுனா விருது கொடுத்துக் கொள்கின்றனர். தவறி அது கீழே விழுந்தால் யாரும் நம்மைப் பார்க்கின்றனரா என சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு துப்பாக்கியின் தோட்டாக்கள் போல சீறி ஓட்டமெடுக்கின்றனர். எவனோ இதை பார்த்து மாநகராட்சிக்கு எழுதி போட்டுவிட்டான் போல. எனது தெருக்களில் இருந்த குப்பைத் தொட்டிகள் ஒன்றைக்கூட இப்போது காணவில்லை.

காலையில் வீடு வீடாக அவர்களே விசிலடித்து குப்பைகளை வாங்கி செல்கின்றனராம். நானோ நைட் ஷிப்டில் வேலை பார்பவன். தெருவில் நின்று விசில் அடித்தால் என்ன.. என் காதருகே ரெயில் ஓடினாலும் கேட்காது. இப்போது எப்படி குப்பைகளை எங்கு கொட்டுவேன் நான்? நம் ஊரல்லவா என்ற உணர்வால் தெரு ஓரத்தில் கொட்டவும் மனம் இல்லை. மாலை 4 மணிக்கு கண்விழித்தேன். என் வீட்டில் சேர்ந்த 2 குப்பை பைகளை எடுத்து பைக்கில் கோர்த்து தெரு தெருவாய் அலைந்தேன் குப்பை தொட்டிகளை தேடி. சென்னையின் புறநகர் பகுதி என்பதால் பல தெருக்களைக் கடந்து கிராமங்களுக்குள் வந்துவிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSநகரத்தின் சாயல் கிராமங்களுக்குள் ஊடுருவி விட்டதை பார்த்ததும் சிறிதாய் சுட்டது மனம். அங்கும் காணோம் தொட்டிகளை. என்னடா பெட்ரோலுக்கு வந்த சோதனை என புலம்பிக் கொண்டு இன்னும் சிறிது தூரம் வண்டியை உருள விட்டேன். ஆங்காங்கே சில 'சின்ன யானை' சிறிய சரக்கு வண்டிகள் இருந்தது. உற்றுப் பார்த்தேன். பல குப்பை மூட்டைகளை அந்த வண்டியில் இருந்து எடுத்து சாலையின் இரண்டு பக்கங்களிலும் உருட்டி விட்டு சிக்ரட்டை கொளுத்தி ஊதிவிட்டு வண்டியை எடுத்தான் அந்த டிரைவர். பல வண்டிகள் இதன் பொருட்டே அங்கு வருகின்றது என்று தெரிந்தது. இரு பக்கங்களும் நீரோடு நிற்கும் ஏரிகள். கரையில் கால் வைக்க முடியாத குப்பைகள்.

அந்த நீரை நம்பி ஏரியை ஒட்டி உழவு நிலங்கள். கடல்தானே பொங்கி சுனாமியாய் கோபத்தைக் காட்டும். இது ஏரி தானே எப்படிப் பொங்கும். அங்கு கிடந்த மூட்டைகளில் பல மாமிச கடை குப்பைகள் போல. போவோர் வருவோர் நாசிகளில் ஊசி ஏற்றியது வாடை. நாய்கள் சில அந்த மூட்டைகளை இழுத்து சாலையில் போட்டு குதறி ரோட்டை நாசம் செய்தன. தவறு செய்தது நாயா அல்ல நாமா? என்னிடம் இருந்த இரண்டு குப்பை பைகளை பார்த்தேன். நானும் நாயாக மாற விரும்பவில்லை. பைக்கை திருப்பி வீடு வந்து சேர்ந்தேன் பைகளோடு. குப்பை கொட்டக் கூட நேர்மை வேண்டும் போல. காலையில் விசில் வரும் நேரத்திற்கு என் மொபைல் போனில் அலாரம் வைத்தேன். கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு நம்ம நேர்மை என்று நொந்து கொண்டேன்.
-நாவலந்தீவினன்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.