வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஒரு முதிர்ந்த தம்பதியர் முதியோர் நல மருத்துவரிடம் சென்று எலும்பு, மூட்டு சார்ந்த தொல்லைகளைப் பற்றிய சந்தேகங்களைத் தெரிந்து கொள்கிறார்கள்.
நாங்கள் இருவரும் 70 வயதைக் கடந்தவர்கள். நோய்களின் தொல்லைகள் அதிகமின்றி நலமாகவே இருக்கிறோம். இருப்பினும் ஒரு சில சந்தேகங்களுக்கு உங்களிடமிருந்து விடை பெற விரும்புகிறோம். முதுமையின் முதல் அறிகுறி என்ன?
முதுமையின் தொடக்கம் எப்பொழுது என்று சரியாகத் தெரியாத நேரத்தில், முதுமையின் முதல் அறிகுறியைப் பற்றி கூறுவது சிரமத்திலும் சிரமம். எந்தவிதமான நோய்களின் தொல்லையும் இல்லாமல் இருப்பவர்கள் பலர் என்னுடன் பகிர்ந்து கொண்ட செய்திகளை வைத்து உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன்.
பொதுவாக முதலில் தோன்றுவது உடல்வலி தான். உடலின் எந்தப் பகுதியிலும், எப்பொழுது வேண்டுமானாலும் எந்தக் காரணம் இல்லாமலும் வலி வரும். முதுமையில் எலும்பு பலவீனம் அடைவதாலும், உடலில் வைட்டமின் டி குறைவதினாலும் உடலில் வலி தோன்றலாம். உடல் வலிக்கு அடுத்ததாக முதியவர்களை அதிகம் பாதிப்பது மூட்டு வலியும், எலும்பு முறிவும் தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எலும்பு வலிமை இழத்தல் என்றால் என்ன? அது யாருக்கெல்லாம் ஏற்படும்?
இளமைப் பருவத்தில் எலும்பு உறுதியாக இருப்பதற்கு அதனுடைய பொருள் திணிவு நிறைவாக இருப்பதினால் தான். வயது ஆக ஆக எலும்பிலுள்ள பொருள் திணிவு சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கும். இதுதான் எலும்பு வலிமை இழத்தல் எனப்படும் (Ostoeporosis). பெண்களுக்கு இத்தொல்லை அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக அவர்களின் மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவதால் எலும்பு எளிதில் பலவீனம் அடைகிறது.
எலும்பு வலிமை இழத்தல் யாருக்கெல்லாம் வரலாம்?
முதுமை
குடும்பத்திலுள்ள பெண்கள் யாருக்காவது எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது.
மாதவிடாய் முன்னதாக நின்றுவிடும் பெண்களுக்கு.
மாதவிடாய் ஏற்படும் காலத்தில் குறைந்த எடை உள்ள பெண்களுக்கு.
குழந்தை இல்லாத பெண்களுக்கு, சுண்ணாம்புச் சத்துள்ள உணவைக் குறைவாக உண்பதினால்.
தொடர்ந்து படுக்கையில் இருப்பவர்கள்.
ஸ்டீராய்டு மருந்துகள் உபயோகிப்பவர்கள்.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள்.

எலும்பு வலிமை இழத்தினால் எந்தவிதமான தொல்லைகள் ஏற்படக்கூடும்?
இந்த நோய்க்கென்று குறிப்பிடும்படியான தொல்லைகள் ஏதுமில்லை. இந்நோய் பல ஆண்டுகளாக மறைந்திருந்து கடைசியில் எலும்பு முறிவு ஏற்படும்பொழுதுதான் இதன் விளைவே முதலில் தெரிய ஆரம்பிக்கும். முதுமையில் ஒருவருக்கு உயரம் குறையக்கூடாது. அப்படி குறைந்தால் இந்நோயினால் அவர்களுடைய முதுகெலும்பு பாதிக்கப்பட்டதாக இருக்கக்கூடும். கீழே விழாமலேயே, எவ்வித அடியிம் படாமலேயே எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்நோயின் தனிச்சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு மற்றும் மணிக்கட்டு ஆகிய இடங்களில்தான் எலும்பு முறிவு அதிகமாகக் காணப்படும்.
இத்தொல்லையை ஆரம்பநிலைலேயே எப்படி கண்டு அறிவது?
சில பரிசோதனைகள் மூலம் இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். ஆனால், எலும்பிலுள்ள பொருள் திணிவு சுமார் 30% 50% குறைவு ஏற்பட்டால் தான் இதை எக்ஸ்ரே மூலம் கண்டறிய முடியும். அதற்குள் எலும்பு பலவீனம் அடைந்து முறிவு ஏற்பட்டு விடும். ஆகையால் இது உகந்த பரிசோதனை அல்ல. நவீன மருத்துவக் கண்டுபிடிப்பு டெக்ஸா ஸ்கேன் (Dexa scan) மூலம் இந்நோயை மிக எளிதாக ஆரம்ப நிலையிலேயே கண்டு கொள்ள முடியும்.
டெக்ஸா ஸ்கேனின் (Dexa scan) சிறப்பு அம்சம்
எலும்புமுறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பு வலிமை இழத்தலைக் கண்டுகொள்ள முடியும்.
வருங்காலத்தில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியும்.
எலும்பில் எந்த அளவிற்கு பொருள் திணிவு குறைவு (bone mass loss) என்பதைக் கண்டறியவும், சிகிச்சையின் போது அதன் பலனைக் கண்டறியவும் இது உதவும்.
ஆனால், இப்பரிசோதனைக்குச் சற்று பணம் அதிகம் ஆகும். இதனை எல்லோராலும் செய்து கொள்ள முடியாது. இந்நோயைச் சரியாகக் கண்டறிய எந்த இரத்தப் பரிசோதனையும் கிடையாது.
- டெக்ஸா ஸ்கேனுக்கு மாற்றாக, அல்ட்ரா சவுண்டு (Ultrasound) கருவியின் மூலம், குதிகாலை அக்கருவியின் மேல் வைத்து ஒரு சில நிமிடங்களிலேயே எலும்பின் வலிமையை எளிதில் கண்டுகொள்ளலாம். பரிசோதனைக் கட்டணமும் குறைவுதான்.
எலும்பு வலிமை இழத்தலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எளிய வழிமுறைகளை கூறுங்கள் டாக்டர்.
உங்களின் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன்.
இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்காக “அகில உலக ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம்” ஒரு குறிப்பைத் தயாரித்துள்ளது. அதற்கு "one minute osteoporosis risk test” என்று பெயரிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:(இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு 'ஆம்` என்று பதில் அளித்திருந்தால் உங்களுக்கு எலும்பு பலவீனம் அடைய வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம். உடனே மருத்துவரை அணுகவும்.
உங்களின் பெற்றோரில் யாருக்காவது சற்றே தடுக்கி விழுந்தாலோ அல்லது லேசான அடிபட்டோ இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதா?
கீழே விழுந்தோ அல்லது இலேசாக அடிபட்டோ உங்களுக்கு எலும்பு ஏற்பட்டுள்ளதா?
உங்களின் மாதவிடாய் 45 வயதிற்கு முன்பே நின்று விட்டதா?
உங்களின் உயரம் ஒரு வருடத்தில் மூன்று செ.மீ.க்கு மேல் குறைந்து உள்ளதா?
நீங்கள் தினமும் அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உள்ளவரா
நீங்கள் தினமும் 20 சிகரெட்டிற்கு மேல் புகை பிடிக்கும் பழக்கம் உண்டா?

இத்தொல்லையினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை எப்படி இருக்கும்?
இடுப்பு எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டவர்கள் தான் மிகவும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். சற்று வசதி படைத்தவர்கள் ஆபரேஷன் செய்து கொண்டு சுமார் ஒரு மாதத்திற்குள் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறார்கள். வசதி இல்லாதவர்கள் வீட்டிலேயே மாவுக் கட்டு முறையில் சிகிச்சை பெற்றுக் கொள்கிறார்கள் அல்லது தக்க சிகிச்சை ஏதுமின்றி படுத்தப்படுக்கையாய்ச் கிடக்கிறார்கள். இதனால் படுக்கைப்புண், மார்புச்சளி, சிறுநீரகத்தில் பூச்சித்தொல்லை, மலச்சிக்கல் மற்றும் மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு ஆளாகி விரைவிலேயே மரணமும் அடைய வாய்ப்புண்டு. மேலும், இப்படுக்கை நோயாளிகளைத் தொடர்ந்து கவனித்துக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையும் குடும்பத்தில் உருவாகும்.
இத்தொல்லை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இந்நோயினால் வலி மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு அதற்கு அறுவை சிகிச்சையோ அல்லது மாத்திரையோ எடுத்துக்கொண்டு சிரமப்படுவதைவிட வராமல் தடுப்பதே மிகச் சிறந்த வழியாகும்.
தினமும் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சியினால் எலும்பை உறுதி அடையச் செய்ய முடியும். உதாரணம்: வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துதல் மற்றும் ஆசனப்பயிற்சிகள். தினமும் 30 40 நிமிடங்கள் உடல் வெயிலில் படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மது அருந்துவதை, புகை பிடிப்பதை அறவே ஒழிக்க வேண்டும்.
அதிகமாக காபி அல்லது டீ (ஒரு நாளைக்கு 3 கப்புக்கு மேல்) அருந்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணம்: பால், கேழ்வரகு, முருங்கைக் கீரை, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, கருவேப்பிலை, மீன், நண்டு, இரால், சுறா ஆகியவற்றில் சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ளது. தினமும் ஒன்று முதல் இரண்டு கப் பால் மிகவும் அவசியம். பால் ஒத்துக்கொள்ளாதவர்கள் தயிரை சேர்த்துக் கொள்வது நல்லது.
சுண்ணாம்ச் சத்து அதிமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் தினமும் 500 மில்லிகிராம் கால்சியம் மாத்திரையை சாப்பிடலாம்.
ஸ்டீராய்ட்ஸ் போன்ற மாத்திரைகளை உண்ணாமல் இருத்தல் நல்லது.
எலும்பு வலிமையிழத்தல் ஒரு தடுக்கக்கூடிய தொல்லையே. இதற்கு என்று தனிப்பட்ட நோயின் அறிகுறிகள் இல்லாததினால், சுமார் 50 வயதிலிருந்தே சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகள் மற்றும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலம் இத்தொல்லையை வராமலேயே தடுத்து உறுதியான எலும்புடன் முதுமையை வெல்ல முயற்சிப்போம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.