Published:Updated:

வயிறு, குடல் மற்றும் ஈரலின் தொல்லைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

முதுமைக் காலத்தில் இரைப்பை, குடல் தொடர்பாக அறுவைச் சிகிச்சைகளே மிகுதியாக நடைபெறுகின்றன. உணவு செரித்தல் தொடர்பாக முக்கிய நோய்களையும் அவற்றுக்குரிய சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ளுவோம்.

வயிறு, குடல் மற்றும் ஈரலின் தொல்லைகள்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

முதுமைக் காலத்தில் இரைப்பை, குடல் தொடர்பாக அறுவைச் சிகிச்சைகளே மிகுதியாக நடைபெறுகின்றன. உணவு செரித்தல் தொடர்பாக முக்கிய நோய்களையும் அவற்றுக்குரிய சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ளுவோம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

பசி குறைதலும், உண்ட உணவு செரிக்காமையும், வயிற்று வலியும், மலச்சிக்கலும் முதியவர் பலருக்கு அன்றாட வாழ்க்கையில் பல தொல்லைகளைத் தருகின்றன. முதுமைக் காலத்தில் இரைப்பை, குடல் தொடர்பாக அறுவைச் சிகிச்சைகளே மிகுதியாக நடைபெறுகின்றன. உணவு செரித்தல் தொடர்பாக முக்கிய நோய்களையும் அவற்றுக்குரிய சிகிச்சை முறைகளையும் தெரிந்து கொள்ளுவோம்.

 பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன்

நெஞ்சு எரிச்சல்

இந்நோயின் முக்கிய அறிகுறிகள் :

  • அடிக்கடி நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது.

  • வாயில் ஒரு வித புளிப்பு சுவையை உணருதல்

  • தொண்டையில் எரிச்சல்

  • தொடர்ந்து சளியின்றி இருமல் ஏற்படுதல்

  • குரல்வளம் மாறுதல்

  • உணவு உண்ணுவதில் சிரமம்

  • குமட்டல், ஏப்பம், வாயுத் தெல்லை

சிலருக்கு உதரவிதானம் (Diaphragm) வழியாக இரைப்பை நெஞ்சுக்குள் சென்றுவிடும் (Hiatus hernia) வேறு சிலருக்கு இரைப்பையிலிருந்து அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்வதுண்டு (Gastroesophageal reflux disease (GERD).

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கீழ்க்கண்ட காரணங்களினால் தொல்லைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு

  • ஒரே நேரத்தில் அதிக உணவை உண்பது

  • கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவை உண்பது

  • மது அதிகமாக அருந்துவது

  • உடல் பருமன்

சிலருக்கு இந்நோயை உறுதி செய்ய என்டோஸ்கோபி பரிசோதனை தேவைப்படும்.

சிகிச்சை முறை

  • மிக்க கொழுப்புள்ள உணவினைக் குறைக்க வேண்டும்

  • உண்ணும் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்

  • பருத்த உடல் உள்ளவர்கள் எடையைக் குறைக்க வேண்டும்

  • தலையும், உடலும் அடிக்கடி முன்புறமாக வளைவதைத் தவிர்க்க வேண்டும்

  • படுக்கையின் தலைப்பகுதி சற்று உயர்வாக இருக்கவேண்டும்

  • இரத்த சோகை உள்ளவர் இரும்புச் சத்துள்ள மாத்திரையை உண்ண வேண்டும்

  • உணவு உண்டபின் சுமார் 1- 2 மணி நேரம் கழித்து தான் உறங்கச் செல்ல வேண்டும்.

  • மருந்துகள் : ராணிட்டிடின், ஓபிபிரசோல், பேண்டோபிரசால் போன்ற மாத்திரைகள் நல்ல குணமளிக்கும். தினம் ஒரு மாத்திரை உணவிற்கு முன்பு காலையிலும் இரவிலும் சுமார் 4 8 வாரங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதிலும் குணம் அடையவில்லை என்றால் பேக்லோபேன் (Baclofen) எனும் மாத்திரையை பரிந்துரைக்கப்படும்.

  • சிலருக்கு அறுவைச் சிகிச்சை முறை தேவைப்படலாம்.

வயிற்றுப் புண்
வயிற்றுப் புண்

வயிற்றுப் புண்


முதுமையில் வயிற்றில் புண்கள் வர பல காரணங்கள் உண்டு. அதிகமாக எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு போன்ற மாத்திரைகள், அளவுக்கு அதிகமாக புகை பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகள் முக்கிய காரணங்களாகும். சமீப காலத்தில் எச்.பைலோரி (H.Pylori) என்னும் கிருமி வயிற்றை பாதிப்பதால் புண்கள் உண்டாகிறது என்பதை உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதுமையில் வயிற்றுப்புண் உள்ளவர்க்கு அதிகம் பேருக்கு வயிற்று வலி ஏதும் இருக்காது. சுமார் 35% முதியவருக்கே வயிற்று வலியிருக்கும். பலருக்கு வலியில்லாமல் அஜீரணம், ஏப்பம், குமட்டல், பசியின்மை போன்ற தொல்லைகளே இருக்கும்.

வயிற்றுப் புண்ணில் இரண்டு வகைகள் உண்டு. அவை:

இரைப்பைப்புண் (stomach ulcer) நோயின் முக்கிய அறிகுறி வயிற்று வலியாகும். அப்புண் இருப்பவர்க்கு உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்குள் வயிற்றுவலி ஏற்படும். ஆனால் இரவில் மட்டும் வலி அதிகமாக இருக்காது. குடற்புண் உள்ளவர்க்கு (duodenal ulcer) பசி எடுக்கும் போது எல்லாம் (உணவு உண்டு 3-4 மணிகளுக்குப் பின்) வயிற்றுவலி ஏற்படும். நள்ளிரவில் வயிற்று வலியால் மிகவும் அவதிப்படுவர். எழுபது வயது தாண்டிய முதியவர்க்கு சராசரி 50% பேருக்கு வயிற்றுபுண்ணினால் ஏற்படும் தொல்லைகள் வர வாய்ப்பு உண்டு. இதில் முக்கியமானவை:

  • இரத்த வாந்தி : இது வயிற்று புண்ணின் முக்கிய தொல்லையாகும். பலருக்கு இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். (இறப்பின் விகிதம் 30%-60%) .

  • புண்களில் ஓட்டை ஏற்படுதல் (perforation) : வயிற்றுப் புண்ணில் ஓட்டை ஏற்படும் போது பலருக்கு அதிகமாக வயிற்று வலி ஏதுமிருக்காது. ஆனால் வயிற்றில் ஒருவிதமான சங்கடம் தொடர்ந்து இருக்கும். கூடவே வாந்தியும் ஏற்படலாம். இதை எளிதில் மருத்துவரால் கண்டுகொள்ள முடியும். தக்க நேரத்தில் செய்யும் அறுவை சிகிச்சை மூலம் இந்நோயிலிருந்து விடுபடலாம்.

  • அடைப்பு ஏற்படுதல்: நெடுநாட்களாக இரைப்பையிலோ அல்லது குடலிலோ புண்கள் இருந்தால் உண்ணும் உணவு உட்செல்லாமல் அடைப்பு ஏற்பட்டு தொடர்ந்து வாந்தி வந்து கொண்டேயிருக்கும். இத்தொல்லையை நுண் குழாய் (endoscopy) மூலமாக எளிதில் கண்டு தக்க அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தலாம்.

பரிசோதனைகள்

மாவு கொடுத்து படம் எடுப்பது மற்றும் இரைப்பை உள்நோக்கி கருவி (Endoscopy) ஆகிய பரிசோதனைகள் மூலம் இந்நோயை உறுதி செய்யலாம்.

சிகிச்சை முறைகள்

  • ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணி மாத்திரைகளும், புகை பிடிப்பதையும், காபி அருந்துவதையும் (மூன்று கப்புகளுக்கு மேல் கூடாது), மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும்.

  • உணவு பத்தியத்தினால் மட்டும் புண்கள் விரைவில் குணமடைவது இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனினும், காரம், புளிப்பு, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

  • மருந்து வகைகளினாலும் புண்களை குணமாக்க முடியும். ஆண்டாசிட்ஸ் மருந்தின் மூலம் வலி குறையும். H2 blockers (சிமெட்டிடின், பேமொட்டிடின், ராணிட்டிடின்) ஆகியவை வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் குறைத்து வயிற்று வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்க உதவும். சமீபக் காலத்தில் Proton pump inhibitors (ஒமிபிரேசோல் Omepraxole, லான்சோபிரசோல் Lansopraxole மற்றும் ராபிபிரசோல் Rabeprazole) மாத்திரைகள் மூலம் வயிற்றுவலிக்கு தக்க நிவாரணமளிக்க முடியும். 1

  • எச்.பைலோரியலினால் (H.Pylori) வரும் வயிற்றுப் புண்ணுக்கு தக்க கிருமி நாசினியை உபயோகிக்க வேண்டும். இதற்கு மூன்று அல்லத நான்கு மருந்துகள் கலந்த மாத்திரைகளை காலையிலும், மாலையிலும் சுமார் இரண்டு வாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இத்தொல்லையில் இருந்து பூரண குணம் கிடைக்கும் (85%).

மஞ்சள் காமாலை

இளமை பருவத்தில் மஞ்சள் காமாலை ஏற்படும் அளவுக்கு முதுமையில் மஞ்சள் காமாலை அதிகமாக ஏற்படுவதில்லை. இதன் முக்கிய அறிகுறியே பசி குறைதல், குமட்டல், வாந்தி ஏற்படுதல். இத்தோடு உடல்வலி, காய்ச்சல் போன்றவையும் சேர்ந்து வரலாம். கண்களில் மஞ்சள் நிறம் தோன்றும், சிறுநீர் மஞ்சள் நிறமாக வரலாம்.

Bacteria (Representational Image)
Bacteria (Representational Image)
Photo by CDC on Unsplas

காரணங்கள்

“வைரஸ்” என்னும் நுண்கிருமியால் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். சாதாரணமாக வரும் மஞ்சள் காமாலை Hepatitis A, B, C எனும் வைரஸ் நுண்கிருமியால் வருபவையே. இந்த வைரஸ் தாக்குதல் குழந்தைப் பருவத்திலும், இளமைப் பருவத்திலும்தான் மிகுதியாக வரும். முதியவர்களை அதிகம் இந்த வைரஸ் தாக்குவதில்லை. ஏதேனும் ஒரு காரணத்திற்காக உடலில் இரத்தம் ஏற்றப்பட்டு, அந்த இரத்தத்தில் வைரஸ் கிருமி (Hepatitis B) கலந்து இருப்பின் காமாலை வரலாம். மது அதிகமாக அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு காமாலை வரலாம்.

சில மாத்திரைகள் உட்கொள்வதினால் காமாலை வரலாம். காசநோய்க்குத் தரும் மருந்து, மனநோய்க்குத் தரும் மருந்து ஆகியவை கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி, காமாலையை தோற்றுவிக்கும். இது போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது கல்லீரல் செயல்பாட்டை அறியும் பரிசோதனைகளை குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை (மருத்துவரின் ஆலோசனைப்படி) செய்து கல்லீரலின் செயல் திறன் பற்றி அறிந்துக்கொள்ளுவது அவசியம்.

முதுமையில் ஒருவருக்கு காமாலை வந்தால் அதற்கு அநேகமாகப் பித்தநீர்ப் பாதையில் ஏற்பட்ட அடைப்பே காரணமாக இருக்கும். அதாவது பித்த நீர், கல்லீரலில் இருந்து பித்தநீர் குழாய் வழியாக சிறுகுடலுக்குச் செல்லும் வழியில் அடைப்பு ஏற்படுதல். இவ்வாறு அடைப்பு ஏற்பட காரணங்கள் : கல்லீரல் புற்றுநோய், பிற உறுப்புகளில் இருந்து கல்லீரலுக்குப் புற்றுநோய் பரவுதல், கணையத்தின் (சிறு குடல்) அருகில் புற்றுநோய், பித்தப்பையில் கல் அல்லது கட்டி, பித்தக்குழாய் சுருங்கி அடைப்பு ஏற்படுதல் ஆகியனவையாகும். இவ்வாறு ஏற்படும் காமாலை மிகவும் நாள்பட்டதாகவும், தீவிரமாகவும் இருக்கும். கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம் மிகவும் அதிகமாக இருக்கும். சிறுநீர் மிகவும் மஞ்சளாகப் போகும். மலம் வெளுத்து சாம்பல் நிறமாக மாறும். பசி குறையும். உடல் இளைக்கும். உடலில் ஒருவித அரிப்பு ஏற்படும்.

வயிற்றின் வலப்பக்கத்தில் லேசாக வலியும் வரலாம். சில முதியவர்களுக்கு வயிற்றுவலி இல்லாமலேயே காமாலை இருக்கலாம். இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ராசோனாகிராம் மூலம் இந்தக் காமாலை வைரஸ் கிருமியால் வந்ததா அல்லது பித்தநீர் அடைப்பால் வந்ததா என்பதைப் பற்றி சரியாகக் கண்டறிய முடியும். அடைப்பால் வரும் காமாலைக்கு நுண் குழாய் அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் குணமாக்க முடியும். புற்றுநோய் ஒரு காரணமாக இருந்தால் அதற்கும் தகுந்த சிகிச்சை அளிக்கமுடியும். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பயன் இருக்காது. முதுமையில் மஞ்சள் காமாலை வந்தால் தீவிரமாக கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும். இது இளமையில் வரும் சாதாரண மஞ்சள் காமாலைதான் (நுண்கிருமியால் வருவது) என்று கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது.

முதுமை
முதுமை

மலச்சிக்கல்

மலச்சிக்கலை முதுமையில் ஏற்படும் நோய் என்று கூறுவதை விட அது ஒரு தொல்லை தான் என்பது என்று தெரிந்ததே. தினமும் மலம் சரியாக செல்லாவிட்டால் அன்று நாளே ஒரு நல்ல நாளாக

இல்லையென்று பலர் கருதுவதுண்டு. மலச்சிக்கலின்றி ஒரு நாளை நல்ல நாளாக உணருவது நம் கையில் தான் உள்ளது.

காரணங்கள்

  • நார்ச்சத்து மிகுதியாய் உள்ள உணவினைக் குறைவாய் உண்ணுதல்.

  • குடலில் ஏற்படும் கட்டி, புற்றுநோய், அடைப்பு, நீண்ட காலக் குடலிறக்கம், மூலம், குதத்தில் ஏற்படும் வெடிப்பு (fissure) முதலான நோய்கள், தைராய்டு என்னும் நாளமில்லாச் சுரப்பு குறைவாய்ச் சுரத்தல், உடலிற் சுண்ணாம்பு சத்து மிகுதல்(hypercalcaemia), பொட்டாசியம் குறைதல் (hypokalemia), மனச்சோர்வு.

  • முதியோர் மிகுதியாய்த் தண்ணீர் குடிப்பதில்லை. அடிக்கடி சிறுநீர் கழித்தலைத் தவிர்க்கவே தண்ணீரைக் குறைவாய்க் குடிப்பர். இந்நிலையைப் பெண்களிடம் மிகுதியாய் காணலாம்.

  • மாத்திரைகள்; இரும்புச் சத்து மாத்திரை, கோடின் கலந்த வலி நிவாரணி, அலுமினியம் சேர்ந்த வயிற்று வலி மாத்திரை, சிறுநீர் வெளியேறப் பயன்படுத்தும் மாத்திரை முதலானவற்றை உண்ணுதல். துாக்க மாத்திரையை மிகுதியாய் உட்கொள்ளுதல் மூலமும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

  • போதிய உடற்பயிற்சியின்மை.

  • கழிவரை சரியாய் இல்லாமையாலும், இடுப்பு, முழங்கால் வலியாலும், முதியோர் அடிக்கடி மலம் கழிப்பதைத் தவிர்த்தல்.

மருந்தின்றி மலச்சிக்கலைப் போக்க

  • ஒரு நாளைக்கு 10 15 தம்ளர் தண்ணீர் அவசியம் (இதயம் மற்றும் சிறுநீரக நோயாளிகளைத் தவிர)

  • உடற்பயிற்சி அவசியம்

  • தேவையற்ற மாத்திரைகளை நிறுத்த வேண்டும்

  • தினமும் காலையில் கழிவரைச் சென்று மலம் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்

  • நார் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். உதாரணம்: தானியங்கள்: கேழ்வரகு, கோதுமை, தினை, வரகு, கொள்ளு, கைக்குத்தல் அரிசி

காய்கறிகள் : கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ்,

காளிப்பளவர், புடலங்காய், பாகற்காய்,

சுண்டைக்காய், பீன்ஸ், அவரைக்காய்,

பச்சைப்பட்டாணி, சோயா பீன்ஸ், புரக்கோளி,

சுரக்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய்,

பூசணிக்காய்

பழங்கள் : அத்திப்பழம், மாம்பழம், கொய்யா, வாழைப்பழம்,

முலாம்பழம், தர்பூசணி, விளாம்பழம்

இதர வகைகள்: மிளகு, சிரகம், ஓமம், கொத்தமல்லி, மிளகாய்

வற்றல், பேரிச்சம்பழம், உலர்ந்த திராட்சை,

வெந்தயம், கடுக்காய், இளநீர், மோர்

தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, சற்று அதிக தண்ணீர், நார்சத்து அதிகமுள்ள உணவுகள் மற்றும் பழங்கள் மூலம் மலச்சிக்கலை மருந்தின்றி போக்கலாம்.

கல்லீரல் கொழுப்பு நோய்
கல்லீரல் கொழுப்பு நோய்

கல்லீரல் கொழுப்பு நோய்

கல்லீரல் கொழுப்பு (Fatty Liver) என்பது குறித்த விழிப்புணர்வு தற்காலத்தில் அதிகரித்தே வருகிறது. மிகவும் அத்தியாவசியமான பல உடலியல் பணிகளை நமது கல்லீரல் செய்கிறது, குறிப்பாக நச்சு வெளியேற்றம், புரதப்பகுப்பு, சர்க்கரை சேமிப்பு, உடலுக்கு தேவையான இரத்தம் உறைவதற்கான காரணிகளை சுரத்தல் என சிலவற்றை கூறலாம். அத்தகைய கல்லீரலில் ஏற்படும் எந்தவொரு பாதிப்பும் நமது முழு உடலின் செயல்பாட்டினையே பாதிக்கும், கல்லீரல் செயலிழப்பினால் உயிருக்கே ஆபத்து நேரும்.

தீவிர மதுப்பழக்கம் என்பது கல்லீரல் நலத்தின் முதல் எதிரி என்பது நாம் எல்லோரும் அறிந்த தகவல் தான் என்றாலும், அதைத்தவிர உடற்பருமன், நாள்பட்ட சர்க்கரை நோய், ஹெபடைட்டிஸ் பி அல்லது சி தொற்று, தொடர்ந்து பல மருந்துகளை உட்கொள்ளுதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் கல்லீரலில் பல பாதிப்புகள் ஏற்படும். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டாலும், அவற்றிற்கு ஆரம்ப அறிகுறிகள் என பெரிதாக எதுவும் இருப்பதில்லை. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் போன் பரிசோதனைகள் மேற்கொள்ளாமல் அவற்றை கண்டறிவது சாத்தியமில்லை என்றே கூறலாம்.

இழைநார்கட்டி (Fibrosis) cirrhosis எனப்படும் கல்லீரல் இறுக்கம், இவற்றை தாண்டி கல்லீரல் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆரம்ப நிலையில் கல்லீரல் கொழுப்பு நோய் இருப்பதை நாம் கண்டறிந்தால் அதனை சிகிச்சை மூலமோ அல்லது வாழ்வியல் மாற்றங்கள் மூலமோ நம்மால் குணமாக்கி பழைய நிலைக்கு திருப்ப முடியும். ஆனால் ஆரம்ப நிலையில் மருத்துவ கவனிப்பு பெறாமல் போகும் தருவாயில் சிரோசிஸ் அல்லது புற்றுநோய் வரை பாதிப்பு அதிகரிக்கக் கூடும். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வது நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, மூளை பாதிப்பு உள்ளிட்ட இன்னபிற உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஏற்கனவே சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு, கல்லீரல் கொழுப்பு நோய் இருதய பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடும் என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.

ஃபைப்ரோஸ்கேன் (Fibroscan)

மருத்துவ அறிவியல் முன்னேற்றத்தின் கொடையாக இந்நாளில் நமக்கு கிடைத்திருக்கும் மிக முக்கியமான நோயறியும் முறை. கல்லீரலில் கொழுப்பு சேரும் பட்சத்தில் அதன் மென்மை சற்ற குறைந்து கடினமாக துவங்கும், இதுதான் இந்த நோய்க்கான முதல் அறிகுறி. இந்த நவீன பரிசோதனையின் மூலம் கிலோபாஸ்க்கால் (kPal) அளவீட்டில் கல்லீரலின் கடினத்தன்மையை அறிய முடியும். 7 kPa அவை தாண்டினால் அதனை ஆரம்பநிலை (early stiffness) என்றும், அதே அளவு 15 ஐ தாண்டினால் இழைநார்கட்டி (Fibrosis) எனவும் வகைப்படுத்தலாம். தொடர்ந்து Fibroscan பரிசோதனையை மேற்கொள்ளுவதன் மூலம் நம் கல்லீரலின் நலத்தை கண்காணிக்க முடியும்.

முதுமை
முதுமை

சிகிச்சை முறைகள்

மதுப்பழக்கம் இருந்தால் அதை முற்றிலும் தவிர்ப்பது, ஆரோக்கியமான சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை கைக்கொள்வது, தவறாத முழு உடல் பரிசோதனைகள், மருத்துவர் ஆலோசனை, சீரான உடல் எடையை தக்கவைப்பது, கோலா போன்ற குளிர்பானங்களை தவிர்ப்பது, மிதமான அளவுகளில் கொழுப்பு உவுகள், இரத்த சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைப்பது, தைராய்டு செயல்பாட்டினை இயல்பான நிலையில் வைத்திருத்தல், இவையெல்லாம் கல்லீரல் கொழுப்பினை கட்டுப்படுத்தி, உங்கள் கல்லீரலை பழைய ஆரோக்கிய நிலைக்கு திருப்ப உதவும்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.