வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
அறிகுறிகள்
மூன்று இரத்த குழாயின் வழியாக இதயத்திற்கு இரத்தம் செல்கிறது. வயது ஆக ஆக இரத்த குழாய்கள் சுருங்குகின்றன. அக்குழாய்களுள் கொழுப்புச் சத்து சேர்வதால் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
நடுத்தர வயதில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சில் கடுமையான வலி ஏற்படும். அது பரவலாக இருக்கும். இடது தோள்பட்டை மற்றும் இடதுகை உள்புறம் பரவும். பின்பு வலதுகை மற்றும் முதுகிற்கும் வலி பரவிச் செல்லும். நெஞ்சில் ஏற்பட்ட வலி கழுத்து பக்கவாட்டிலும், தாடைக்கும் செல்லும். இத்தோடு உடம்பு சில்லென்று வேர்த்துக் கொட்டும். மயக்கமும், வாந்தியும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள் முதுமைக்காலத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கும். பலருக்கோ, நோயின் அறிகுறிகள் மாறுபட்டுக் காணப்படும். அதாவது நெஞ்சில் வலி ஏதுமின்றி உடல் சோர்வு, களைப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், கீழே விழுதல், பக்கவாதம் போன்ற தொல்லைகளே மாரடைப்பின் அறிகுறிகளாய்த் தோன்றும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வலியின்றி வரும் மாரடைப்பு
ஒரு சிலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். இவர்களுக்கு நெஞ்சுவலியோ அல்லது மாரடைப்பைச் சார்ந்த எந்த விதத் தொல்லைகளுமே இருக்காது. ஆனால் இ.ஸி.ஜி.யில் மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வரும். இதை வலியின்றி வரும் மாரடைப்பு (Silent heart attack) என்று கூறுவார்கள்.
காரணங்கள்
முதுமையில் நரம்புகள் தளர்வடைவதால் வலியை உணரும் திறனை அவை இழக்கின்றன. முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நெஞ்சுவலி அதிகமாகத் தெரிவது இல்லை.
வயதாக ஆக மூன்று பெரிய ரத்தக் குழாய்களைத் தவிர, சிறிய ரத்தக் குழாய்களின் (Collaterals) மூலமும் இதயத்துக்கு ரத்தம் செல்கிறது. அதனால், பெரிய ரத்தக் குழாய்கள் அடைப்பட்டாலும் சிறிய ரத்தக் குழாய்கள் வாயிலாக ரத்தம் செல்கிறது. ஆகவே, நெஞ்சுவலி மிகுதியாக வருவதில்லை.
முதுமையில் சிலருக்கு மறதி நோய் இருக்கும் ; அதனால், தமக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியைக் கூட சிலர் சொல்ல மறந்துவிடுகிறார்கள்.
தொல்லைகள்
வயதான காலத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டால் அது வாயுத் தொல்லை என்று அலட்சிபடுத்தி விடுகிறார்கள். அதனால் மாரடைப்புக்குத் தேவையான சிகிச்சை பெறுவதில் கால தாமதம் ஏற்பட்டு மரணம் அடைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர இதயம் வமையிழத்தல், இதய ஓட்டம் மாறுபடுதல், நுரையீரல் நீர்க்கோர்த்தல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு. இரத்த ஓட்டம் தீடீரென்று மற்ற உறுப்புகளுக்கு குறைந்தால் பக்கவாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்ற தொல்லைகள் அதிகம் வரலாம்.
மாரடைப்பினால் ஏற்படும் பல தொல்லைகளை தவிர்க்க உரிய காலத்தில் சிகிச்சை பெறுவது அவசியம். நெஞ்சு பகுதியில் இனம் புரியாத ஒரு வேதனை, எரிச்சல் அல்லது ஏதோ ஒரு விதமான தொல்லை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது டாக்டரிடம் சென்று இ.ஸி.ஜி., இரத்த பரிசோதனை மற்றும் தேவைப்பட்டால் எக்கோ (Echo) போன்ற பரிசோதனைகள் செய்து கொண்டு தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

சிகிச்சை முறைகள்
மருந்தா ? ஆஞ்சியோ பிலாஸ்டியா ? பைய்பாஸ் சர்ஜரியா ?
மருந்து : சுமார் 70 வயதுள்ள ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியைக்கு மாரடைப்புக்கு பின் நெஞ்சுவலியோ, மூச்சு விடுவதில் சிரமமோ ஏதுமில்லை. உடல் பருமன் இல்லை. தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்கிறார். இவருடைய அன்றாட வாழ்க்கை முறையில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்பட போவது இல்லை. இவருக்கு மருந்து சிகிச்சையே போதுமானது.
ஆஞ்சியோ பிலாஸ்டி: சுமார் 60 - 70 வயதுள்ளவர்கள் மாரடைப்புடன் நீரிழிவு நோய் மற்றும் உயர்இரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து போன்றவைகளோடு அடிக்கடி நெஞ்சில் வலி ஏற்படுமேயானால் அவர்களுக்கு ஆஞ்சியோ பிலாஸ்டி சிகிச்சை முறை தேவைப்படும்.
ஆஞ்சியோகிராம் என்பது கை அல்லது காலில் உள்ள ஒரு இரத்தக் குழாயின் வழியாக மருந்ததைச் செலுத்தி, இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் பற்றி அறியும் ஒரு பரிசோதனை. இந்தப் பரிசோதனை மூலம் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தால் அதை ஆஞ்சியோகிராம் செய்யும் முறை போலவே அடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஒரு பலுானை விரிவடைச் செய்து அடைப்பு நீக்கப்படும். மறுபடியும் அடைப்பு வராமல் இருக்க, அந்த இடத்தில் ஊதுகுழல் போன்ற ஒரு சிறு குழாயைப் பொருத்தி விடுவார்கள். இரத்தக் குழாயிலுள்ள அடைப்பு விரிவு செய்யப்பட்டு இரத்தம் ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் மயக்கமோ, தையலோ கிடையாது. இச்சிகிச்சையின் மூலம் மாரடைப்பின் தொல்லையின்றி பல ஆண்டுகள் நலமாக வாழ முடியும். ஆனால் டாக்டரின் ஆலோசனைப்படி 6 - - 12 மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று மறுபரிசோதனை செய்து அதற்கு தக்கவாறு மருந்துகளை சாப்பிடுவது அவசியம்.

பைய்பாஸ் சர்ஜரி : இருதய பைபாஸ் சர்ஜரி என்பது நவீன அறுவை சிகிச்சை முறை. ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் ஒருவருக்கு இருதய இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், இருதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படும். இதற்கு காலிலுள்ள இரத்தக் குழாயை எடுத்து இருதய இரத்தக் குழாயில்அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொருத்தி, இரத்த ஓட்டம் மாற்று வழியில் சீராகச் செல்ல அறுவை சிகிச்சை செய்யப்படும். இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் முதுமை காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வயது ஒரு தடை இல்லை. எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும், சுமார் 60 வயதுள்ள
ஒரு கம்பெனி நிர்வாகிக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, இரண்டு இரத்த குழாய்களுக்கு மேல் அடைப்பு இருந்தால் பைய்பாஸ் சர்ஜரி செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் நேரமின்மை மற்றும் வேலைப்பளுவினால் ஒழுங்கான உணவு கட்டுப்பாடோ அல்லது தவறாமல் உடற்பயிற்சியோ அவரால் செய்ய முடியாது. இவர் அறுவை சிகிச்சையின் மூலம் சுமார் 10 15 ஆண்டுகள் வரை முன்பு இருந்ததைப் போலவே ஆரோக்கியாமாக வாழ முடியும்.
வயதான காலத்தில் மாரடைப்புக்கு மருந்தா? ஆஞ்சியோ பிலாஸ்சிடியா? அல்லது பைய்பாஸ் சர்ஜரியா? என்பதை அந்த அந்த நோயாளியின் நோயின் தன்மை, வயது, அவருக்கு இருக்கும் பிற நோய்கள், அவரின் வாழ்க்கை முறை ஆகியவற்றை பொறுத்தே முடிவெடுக்க முடியும்.

மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும்?
மாரடைப்பு எல்லோருக்கும் வருவதில்லை. குடும்பத்தில் (இரத்த சம்மந்தப்பட்ட உறவு) யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இரத்ததில் கொழுப்புச் சத்து மற்றும் எடை அதிகம் உள்ளவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும், உடல் உழைப்பு ஏதுமின்றி சும்மா இருப்பவர்களுக்கும், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் எப்பொழுதும் பதட்டத்துடனே இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
பரிசோதனைகள்
மாரடைப்பை உறுதி செய்ய ஈ.சி.ஜி. மார்பு எக்ஸ்ரே, டி.எம்.டி - டிரெட்மில், எக்கோ, ஆஞ்ஜியோகிராம் மற்றும் சில இரத்த பரிசோதனைகள் தேவைப்படும்.
ஈ.சி.ஜி. (இதய சுருள் படம்)
ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் இதயத் துடிப்பின் வேகத்தை தெரிந்து கொள்ளலாம். சாதாரணமாக இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60 - 100 வரை இருக்கும். துடிப்பு 60க்கு கீழ் குறைந்தால் குறைவான துடிப்பு என்றும் 100க்கு மேலே இருந்தால் அதிகமான துடிப்பு என்றும் தெரிந்து கொள்ளலாம். இதயத் துடிப்பு சீராக இல்லாமல் மாறி மாறி துடிப்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதயத்தின் இரத்தக் குழாயில் மிதமான அடைப்பு ஏற்படும் மாரடைப்பை (Ischaemic heart disease) இப்பரிசோதனை தெரிவிக்கும். மேலும் இதய இரத்தக் குழாயில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழாய்களில் அடைப்பு ஏற்படும் நிலையில், மாரடைப்பிற்கான மாற்றத்தை இப்பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் மார்பில் வலி ஏற்பட்ட ஒரு சில மணி நேரத்தில் எடுக்கும் ஈ.சி.ஜி. மாரடைப்பு இருந்தாலும் இதில் எந்த மாற்றமும் இல்லாமலும் இருக்கலாம். இச்சமயத்தில் எடுக்கும் தொடர் ஈ.சி.ஜி. மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதையும் தெரிவிக்கும். உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதயம் பெரியதாகி இருப்பதையும் இது காட்டும்.
மார்பு எக்ஸ்ரே
இதயம் திடீரென வலிமை இழக்கும் பொழுது இதயம் சற்று பெரிதாகும், இத்தோடு நுரையீரலில் இரத்த நாளங்கள் விரிவடைந்து இருப்பதையும் காணலாம்.
டி.எம்.டி - டிரெட்மில் (வேகமாக நடக்கச் சொல்லி, எடுக்கும் ஈ.சி.ஜி.)
இப்பரிசோதனை மூலம் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு குறைவாக உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எக்கோ
இது இதயத்தின் மிக முக்கியமான திறன் அறியும் பரிசோதனையாகும். மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் வேறு ஏதாவது காரணங்களால் இதயம் பாதிக்கப்பட்டு அது தன் வலிமையை இழப்பதை இப்பரிசோதனை மூலம் எந்த அளவிற்கு இதயம் பலவீனம் அடைந்துள்ளது என்பதை நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்தப் பரிசோதனைக்குப் பிறகு இதய பலவீனத்திற்கு ஏற்ப தக்க மருந்தை பரிந்துரை செய்ய இது மருத்துவர்களுக்கு பெரிதும் உதவும்.
இதயத்தின் வலு - சரியான அளவு – 50 - 70%
குறைவான அளவு - 40%க்கு கீழ்
ஆஞ்ஜியோகிராம்
இதயத்தில் உள்ள இரத்த குழாய்களில் அடைப்பு உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய உதவும் பரிசோதனை. எந்த விதமான சிகிச்சை முறை தேவைப்படும் என்பதையும் இதன் மூலம் முடிவு செய்யலாம். உதாரணமாக ஒரு இரத்தக் குழாயில் மட்டும் அடைப்பு இருந்தால் ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சையே போதுமானது. இரண்டு அல்லது மூன்று குழாய்களில் அடைப்பு இருந்தால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
இரத்த பரிசோதனை டிராப் ஜ.டி.
இதயத்தின் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் பொழுது, இதயத்தின் தசை இறக்க நேரிடும். அப்பொழுது சில திரவம் வெளியேறும். அதன் அடிப்படையில்மாரடைப்பு உண்டு அல்லது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இதயம் நலம் காக்க
பிறந்தது முதல் நமது இறுதி மூச்சு வரை இடைவிடாமல் துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தைப் பற்றி இதுவரை ஒரு வினாடியாவது நாம் சிந்தித்துப் பார்த்ததுண்டா? இதயம் மட்டும் ஒரே ஒரு வினாடி ஓய்வெடுத்தால் நமது நிலை என்னவாகும்? பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஓய்வின்றி உழைக்கும் இதயத்தை பாதுகாப்பது நமது தலையாய கடமை. இதோ சில வழிமுறைகள்.
காலமுறைப்படி மருத்துவப்பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோய் பல தொல்லைகளின் நண்பன். இதில் அதிகம் பாதிப்பது இதயம் தான். இந்நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிக அவசியம்.
எடையை சரியான அளவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உணவிலும் சற்று கவனம் இருக்கட்டும். அரிசி, சர்க்கரை, கிழங்கு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பண்டங்களை நாடாதீர்கள். தினமும் கீரை, கோதுமை, கேழ்வரகு, கம்பு, தினை, கொள்ளு, முட்டையின் வெள்ளைக் கரு, மீன், ஓட்ஸ், சோயா, காளான் மற்றும் பழ வகைகள் உணவில் அதிகம் இருக்கட்டும்.
பாதாம் பருப்பு, வால் நட், அத்திப்பழம் இதயத்தை வலிமை அடையச் செய்யும்.
தினசரி செய்யும் உடற்பயிற்சி மிக மிக அவசியம். இதை மறக்கவே கூடாது.
மது, புகை பிடித்தல் மற்றும் வேறு எந்த தீய பழக்கம் இருந்தாலும் அதை அறவே தவிர்க்கவேண்டும்.
சிறிது உப்பை குறைத்து கொள்ள வேண்டும்.
தியானம், பிராணாயமம், மனதிற்கு மட்டுமல்லாமல், உடல்நலத்திற்கும் நல்லது.
ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபட்டு மனதை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நல்ல கொலஸ்ட்ராலை எச்டிஎல் (HDL) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். எச்டிஎல் (HDL) உடலில் அதிகமாக உள்ள கொழுப்பை உரிஞ்சுகிறது. இவ்வாறு இரத்த குழாய்களின் கொழுப்பை சுத்தப்படுத்தி, மாரடைப்பு ஏற்படாமல் தடுத்து, இதயத்தின் நண்பனாக எச்டிஎல் (HDL) திகழ்கின்றது.
எச்டிஎல் (HDL) 40 மில்லிகிராமிற்கு கீழ் குறையும் போது, இதயத்தில் உள்ள இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து, அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது. எச்டிஎல் (HDL) லின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, இதயத்திற்கு ஏற்படும் நன்மைகளும் அதிகரிக்கின்றது.

நல்ல கொலஸ்ட்ராலை (HIDL)அதிகரிக்க சில வழிமுறைகள்
உடற்பயிற்சிகள் - தினமும் 30 நிமிடங்கள் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகள் செய்யும்போது எச்டிஎல் (HDL) அளவு கூடுகிறது.
கடினமான உடற்பயிற்சியை விட, நீண்ட நேரம் மற்றும் தினமும் நாள் தவறாது உடற்பயிற்சி செய்வதே முக்கியமாகும்.
உடல் எடையை குறைத்தல்
புகை பிடிக்காமல் இருத்தல்.
கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்தல்
பாதாம் போன்றவைகள் நல்ல கொலஸ்ட்ராலை இரத்தத்தில்
உயர்த்தும் திறன் கொண்டது.
ஆலிவ் எண்ணெய், ஓட்ஸ், பழவகைகள் மற்றும் பச்சைப்பட்டாணி போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
ஓமெகா -3 fatty acids நிறைந்த மீன்களை எடுத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலும் மாத்திரைகளினால் எச்டிஎல் (HDL)யை அதிகரிக்க முடியாது.
நல்ல இதயம் உள்ளவர்களுக்கு நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாக நாம் ஏன் நினைக்கக்கூடாது! மேற்கண்ட வழி முறைகளை தவறாமல் கடைப்பிடித்து இதயத்தைப் பேணி பாதுகாத்து வந்தால் நாம் இன்னும் ஒரு நுாறாண்டு காலம் மாரடைப்பு இன்றி வாழ்வது என்பது நிச்சயம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.