Published:Updated:

மருந்துக்கு விடைகொடுப்போம்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

Representational Image

தற்பொழுது முதியவர்கள் உணவுக்கு அடுத்தபடியாக அதிகமாக எடுத்துக் கொள்வது பலவிதமான மருந்துகளைத் தான். அடிக்கடி சிறப்பு மருத்துவரை பார்ப்பதால் சில நன்மைகளுக்கிடையே பலவிதத் தொல்லைகளும் ஏற்படலாம்.

மருந்துக்கு விடைகொடுப்போம்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

தற்பொழுது முதியவர்கள் உணவுக்கு அடுத்தபடியாக அதிகமாக எடுத்துக் கொள்வது பலவிதமான மருந்துகளைத் தான். அடிக்கடி சிறப்பு மருத்துவரை பார்ப்பதால் சில நன்மைகளுக்கிடையே பலவிதத் தொல்லைகளும் ஏற்படலாம்.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

இளமைப் பருவத்தில் எல்லா உறுப்புகளும் நன்றாகவே இயங்கி வரும். இந்நிலையில் அவர்களுக்கு கொடுக்கும் மருந்தின் விளைவு நூற்றுக்கு நூறு சரியாகவே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக முதியோர்களின் உடல் உறுப்புகள் நோய்களினாலும், சிகிச்சைக்காக எடுத்துக் கொண்ட மருந்துகளினாலும், முன்னரே செய்து கொண்ட அறுவை சிகிச்சையினாலும் மற்றும் சத்துணவு குறைவினாலும் மிகவும் பாதிப்பு அடைந்த நிலையில் இருக்கும். இத்தகைய முதியோருக்கு மருந்தின் விளைவுகள் எதிர்பார்த்தபடி இருக்காது என்பது மட்டுமல்ல அதன் தீயவிளைவுகளும் அதிகமாக இருக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

வயதான எல்லோருக்கும் மருந்துகள் கெடுதல் விளைவிப்பது இல்லை. குறிப்பிட்ட ஒருசாராருக்கு மட்டுமே தீமையை விளைவிக்கின்றன. அவர்கள் :

  • ஆண்களைவிட வயதான பெண்கள்.

  • மெலிந்த உடல் உள்ளவர்கள்.

  • கடந்த காலத்தில் மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள்.

  • தன் குடும்பத்தில் யாருக்காவது மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள்.

  • ஒவ்வாமை சார்ந்த ஆஸ்துமா, எக்ஸிமா போன்ற நோய்கள் உள்ளவர்கள்.

  • பலவிதமான மருந்துகளை (multiple drugs) உட்க்கொள்பவர்கள். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள்.

Representational Image
Representational Image

பல மருத்துவர்கள் பல மருந்துகள்


தற்பொழுது முதியவர்கள் உணவுக்கு அடுத்தபடியாக அதிகமாக எடுத்துக் கொள்வது பலவிதமான மருந்துகளைத் தான். அடிக்கடி சிறப்பு மருத்துவரை பார்ப்பதால் சில நன்மைகளுக்கிடையே பலவிதத் தொல்லைகளும் ஏற்படலாம். சிறப்பு மருத்துவர்கள் அத்துறைக்கான தொல்லைகளுக்கு மட்டுமே (உதாரணம்: மாரடைப்பு, பக்கவாதம்) மருந்துகளை எழுதுவார். அவரால் தன்னிடம் வரும் முதியவர் வேறு என்னென்ன தொல்லைகளுக்கு என்னென்ன மருந்துகளை எடுத்துக் கொள்கிறார் என்பதைக் கேட்கவோ, பார்க்கவோ நேரம் இல்லாமல் இருப்பார். ஆகவே பல வித மருத்துவர்கள் பலவித மருந்துகள் என்று நிலை ஏற்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பல மருந்துகளின் பக்கவிளைவுகள்

  • பக்கவிளைவுகள் பல மருந்துகள் எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் வர வாய்ப்பு அதிகமாகிறது. இவற்றால் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படலாம்.

  • நிதிச் சுமை - பல மருந்துகளை வாங்கும் போது அதனுடைய விலையும் அதிகமாகி, நிதிச்சுமை ஏற்படுபிறது. பல முதியவர்களினால் மாத்திரைகளை, அவர்களின் நிதி நிலையின் காரணமாக வாங்க முடியாத நிலையில் இருப்பார்கள். நிதி வசதி காரணமாகப் பலரால் தொடர் சிகிச்சை செய்து கொள்ளவும் முடிவதில்லை.

  • மனச் சுமை முதுமையில் சற்று மறதியும் இருக்கும். அவர்களால் எல்லாதவிதமான மாத்திரைகளையும் நினைவில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து கொள்வது மிகவும் சிரமம். உதாரணம்: காலை, மாலை, உணவிற்கு முன்பு, உணவிற்கு பின்பு, பாதி மாத்திரை அல்லது முழு மாத்திரை.

Representational Image
Representational Image

மருந்து எழுதுவதற்கு முன்பு நோயாளி தற்பொழுது எடுத்துக் கொள்ளும் மருந்தின் விவரத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவாறு மருந்தின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். மருத்துவர் மிகவும் “அவசியம்” என்றால் மட்டுமே சிறப்பு மருத்துவர் மாத்திரையை எழுத வேண்டும். தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்தை குடும்ப மருத்துவர் கவனித்துக் கொள்வார்.

"ஒரு நோயை சரியாக கண்டறிந்து விட்டால் அதற்கு பலவித மருந்துகளை விட அதற்குண்டான ஒரே மருந்தே மிகவும் நல்ல பயனை தரும்.”

சுயசிகிச்சை முறை

சுயசிகிச்சை முறை (self medication) மிகவும் தொல்லை தரவல்லது. ஏனெனில், முதுமையில், நோயின் அறிகுறிகள் மாறுபட்டுக் காணப்படுவதால் தமக்கு என்ன நோயென்று சரியாகத் தெரியாத நிலையில் மருந்தினை உட்கொள்ளும் பொழுது அதன் விளைவுகள் மிகவும் தீமையானதாய் இருக்கும். சான்று: முதுமையில் நெஞ்சில் வலி ஏதுமின்றியே மாரடைப்பு நோய் வரலாம். அதாவது திடீரென்று உடல் வலிமை இழத்தல், மயக்கம் உண்டாதல், வியர்த்துக் கொட்டுதல் முதலிய தொல்லைகள் மாரடைப்பினால் வரலாம். ஆனால், இவற்றைச் சாதாரணமாய் முதுமையில் வரும் பலவீனம் என்று எண்ணி ‘டானிக்’ போன்ற மாத்திரையை உட்கொள்கின்றனர். அதனால் மாரடைப்பிற்கு உண்டான சிகிச்சையைப் பெறமுடியாமல், உயிருக்கே ஆபத்தான நிலையைச் சிலர் அடைகின்றனர்.

Representational Image
Representational Image

முதுமையில் மூட்டுவலி பலருக்கும் வருவதுண்டு. அதனைக் குறைக்க அவர்கள் மருந்துக்கடைக்குச் சென்று, ஆஸ்பிரின் போன்ற வலிதீர் மாத்திரையை (வலி நிவாரணி) வாங்கி உட்கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து உட்கொள்வதால் வயிற்றில் புண் ஏற்படும். வயிற்றுவலியும் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய இரத்த வாந்தியும் வரலாம். இருமல், சளி போன்ற தொல்லைகள் வந்தால் அவற்றுக்குண்டான மாத்திரையை முழுமையாய்த் தொடர்ந்து மூன்று அல்லது ஐந்து மாத்திரைகளோடு நிறுத்திவிடுதல் நல்ல தன்று. ஏனெனில் குறைவான மருந்துகளை உட்கொள்வதால் நோய்க்கிருமிகளின் எதிர்ப்புச் சக்தி மிகுதியாய் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதனால் மருத்துவர் ஆலோசனையின்றி எம்மருந்தினையும் உட்கொள்தல் கூடாது. சிறுசிறு தொல்லைகளுக்கெல்லாம் மருந்துக் கடைக்குச் சென்று மருந்தினை வாங்கி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

சுயசிகிச்சைமுறை சில சமயங்களில் தற்கொலைக்கு சமமானது என்றால் அது மிகையாகாது.


வைட்டமின் மாத்திரை தேவைப்படுபவர்கள்

  • சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்

  • சில நாட்களுக்கு சிகிச்சை பெற்று உடல் பழைய நிலைக்கு திரும்பி வரும் சமயம் (உதாரணம் : டைபாய்டு)

  • நீரிழிவு நோய், மாரடைப்பு, உயர்இரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் ஈரல் சார்ந்த நோய் உள்ளவர்கள்

  • மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். உதாரணம்: மனச்சோர்வு, மறதி நோய்.

  • சத்துணவு குறைவால் பாதிக்கப்பட்டவர்கள்

  • காச நோய் மற்றும் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் பல் இல்லாதவர்கள்

  • குடலில் உணவை உட்கிரகிக்கும் தன்மை குறைந்தவர்கள் (Malabsorption syndrome)

மேற்கண்ட எந்த தொல்லையும் இல்லாதவர்கள் வைட்டமின் மாத்திரைக்குப் பதிலாக தினமும் பழம், பால், தேன், பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், பாதாம் பருப்பு உட்கொண்டால் குறைந்த செலவில் உடல் நலத்துடன் வாழலாம்.

மாத்திரையை உட்கொள்ளும் பொழுது கவனிக்க வேண்டியவைகள்

முதியவர்கள் தங்கள் நோயை மருந்தினால் மட்டும் அகற்ற முடியும் என்ற எண்ணத்தை முதலில் அறவே நீக்க வேண்டும்.

  • மருந்தை தொடர்ந்து உட்கொள்ளும் பொழுது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.

  • மருத்துவர் கூறிய வழிமுறைப்படிதான் மருந்தை உட்கொள்ள வேண்டும். உதாரணம்: உணவிற்கு முன்பு அல்லது பின்பு

  • மருந்தின் அளவை தானாகவே கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

  • ஒருவரின் மருந்தை இன்னொருவருக்கு கொடுக்கக் கூடாது. உதாரணம்: வயிற்று புண்ணினால் ஏற்படும் வயிற்றுவலிக்கு கொடுக்கும் மாத்திரை, சிறுநீரக கற்களினால் ஏற்படும் வயிற்றுவலியை போக்காது.

  • மருந்தை திடீரென்று நிறுத்தக் கூடாது. உதாரணம்: வலிப்பு மாத்திரையை திடீரென்று நிறுத்தினால் வலிப்பு மறுபடியும் தோன்ற வாய்ப்புண்டு.

Representational Image
Representational Image
  • மருத்துவரின் ஆலோசனையின்றி டானிக் போன்ற மருத்துகளுக்காக பணத்தை வீண் செலவு செய்ய வேண்டாம்.

  • சுயசிகிச்சை செய்து கொள்வதை தவிர்க்கவும்.

  • மாத்திரை டப்பா மற்றும் பாட்டில்கள் மேல் எழுதியுள்ள சிறு எழுத்தை படிக்க கைவசம் பூதக்கண்ணாடி இருப்பது நல்லதே.

  • சிறிய மாத்திரையை உடைத்து பாதியாக உட்கொள் ஏதுவாக சிறுகத்தி உதவியாக இருக்கும்.

  • மருத்துவரிடமிருந்து மருந்தின் பக்க விளைவுகளைச் தெரிந்து கொள்ளுங்கள்.

  • மாத்திரைகளை வேறு டப்பா அல்லது பாட்டில்களில் மாற்றி போட்டு வைக்கக்கூடாது. இது மாத்திரையை மாற்றி எடுத்துக்கொள்ள ஏதுவாகும்.

  • அவ்வப்போது மாத்திரைகளின் காலாவதி ஆகும் நாளைக் கண்காணிக்க வேண்டும்.

  • சிலருக்கு ஒரே நேரத்தில் பல மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். மாத்திரையை உட்கொண்டு விட்டோம் என்று தவறாக எண்ண அதை உட்கொள்ளாமல் விட்டுவிட்டாலும் தொல்லையில்லை. ஆனால் உட்கொள்ளவில்லை என்று கருதி மாத்திரையை மீண்டும் எடுத்துக்கொண்டால் மருந்தின் தீயவிளைவு அதிகரித்து ஆபத்தை உண்டாக்கலாம்.

இதைத் தவிர்க்க ஒரு வழி. எடுத்துக் கொள்ளவேண்டிய மாத்திரைகளை எல்லாம் ஒரு தட்டில் முதலில் எடுத்து வைத்து விட்டு பின்பு அவைகளை ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்ளலாம்.

  • சில மாத்திரையை ஒரு நாள் விட்டு அல்லது வாரத்திற்கு இரண்டு நாட்களோ எடுத்துக் கொள்ள வேண்டி வரும். மாத்திரையை எடுத்துக் கொள்ளும் நாட்களை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம். அந்த நாட்களை ஒரு காகிதத்தில் எழுதி, மருந்து அட்டையின் அருகில் வைத்துக் கொண்டால் மாத்திரையை தவறாமல் எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

  • முடிந்தளவிற்கு குடும்ப மருத்துவர் அல்லது நோயாளியைப் பற்றி சிறிது காலமாவது தெரிந்த மருத்துவரையே முதலில் அணுக வேண்டும்.

  • மருத்துவரிடம் செல்லும் பொழுது உங்களுடைய தொல்லைகளைப் பற்றி மிகச் சுருக்கமாக எழுதிய குறிப்பைக் கொண்டு செல்லுங்கள்.

  • நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளையும், மறவாமல் உடன் எடுத்துச்செல்லுங்கள். இது மருத்துவருக்கு உங்களின் மருந்துகளைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும். ஏனெனில் சில நேரங்களில் மருந்து சீட்டில் எழுதிய மருந்துக்கும், முதியவர் எடுத்துக் கொள்ளும் மருந்துக்கும் நிறைய வேறுபாடு இருக்கும்.

  • மருத்துவரின் சீட்டு, சமீபத்தில் செய்து கொண்ட பரிசோதனைகளின் விபரங்கள் உடன் இருக்கட்டும்.

  • மருந்து ஒவ்வாமை இருப்பின் அதை மருத்துவரிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும்.

  • விளம்பரத்தில் வரும் தேவையற்ற டானிக் போன்ற மருந்துகளுக்கு பணத்தை விரையம் செய்யவேண்டாம்.

  • இணையதளம் மூலம் மருந்தைப் பற்றிய விபரங்களைத் தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் அதில் கொடுக்கப்பட்டுள்ள மருந்தின் பக்கவிளைவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அதற்குத் தான் மருத்துவர் இருக்கிறாரே!

முதுமை
முதுமை

இறுதியாக இதை மனதில் கொள்ளுங்கள்:


“சிறு துளி விஷத்தை தொடர்ந்து உட்கொண்டால் அதுவே நல்ல மருந்தாகக் கூட அமையலாம். ஆனால் மருந்தை தொடர்ந்து நீண்ட நாட்கள் உட்கொண்டால் அதுவே விஷமாகக் கூட மாறலாம்”.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.