வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இன்று பொன்வண்டு தரிசனம்...
இரு சக்கர வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி தலைகவசத்தைக் கழட்ட ஆயத்தமான தருணத்தில் ரீங்.ரீங்..ரீங்கென்ற ரீங்காரத்தைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பினேன்.
என்னை நோக்கி பறந்து வந்து என்னைச் சுற்றியே வட்டமடித்த பொன்வண்டு கண்டு பூரிப்பில் மிதந்தேன்.
இறக்கையொலியின் கானமும் விசிறியடித்தாற் போன்ற அசைவுகளும் என்னைச் சுண்டியிழுத்தன.
பல வருடங்களுக்குப் பிறகு கண்ட பூரிப்பை உடனே நினைவுப் பேழையில் சேமிக்க எண்ணி கைபேசி கேமிராவை ஆன் செய்தேன்.
வீடியோவா? போட்டோவா? என்று நான் முடிவு செய்வதற்குள்ளாகவே பொன்வண்டு ஏனோ என் காலடி அருகில் துவண்டு விழுந்தது.

பறப்பதை வீடியோவாக எடுக்க நினைத்த என்னுள்ளம் பொன்வண்டு படாரென்று கீழே விழுவதைக் கண்டவுடன் பரிதவித்துத் தான் போனது.
காணததைக் கண்ட பரவசம் சடீரென்று நின்றவுடன் ஒரு நிமிடம் நிசப்தமாக உற்றுநோக்கலானேன்.
விழுந்த போதிலும் எழும் உத்வேகத்துடன் சிறகுகளை மீட்டிய பொன்வண்டு என் பால்யகால நினைவுகளையும் மீட்டெடுக்க முனைந்தது.
தீப்பெட்டிக்குள் அடைத்து வைத்த பொன்வண்டை வெளியில் எடுத்துப் போட்டு மல்லாக்க படுக்க வைத்து அதன் இருபுறமும் உள்ளங்கையால் தரையில் தட்டி தட்டி பறந்தெழச் செய்யும் விளையாட்டு கண்முன் வந்து சென்றது. இப்பொழுது கைபேசியில் அதனை களவாடிக் கொண்டேன்.

சடாரென்று திரும்பியெழுந்த வண்டு பறக்க முனையாமல் நடக்க ஆரம்பித்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பறந்து செல்லும் முன் பத்திரப்படுத்த எண்ணி கைபேசியில் மீண்டும் பதிவு செய்தேன்.
மெதுமெதுவாக நடந்து என் இருசக்கர வாகனத்தின் முன்சக்கரத்தில் ஏற எத்தனிக்கத் தொடங்கியது பொன்வண்டு.
அதுவரை சிறுபிள்ளைத்தனமாக இருந்த மனநிலை திடீரென நிகழ்காலத்திற்கு திரும்பியது. அருகாமையில் சாக்காடை கால்வாய் அமைக்கும் பணிக்கான ஆட்களின் அரவம் கேட்கவே வந்த பணி ஞாபகம் வந்து வட்டார வள மைய அலுவலகத்திற்குள் நுழைய எத்தனித்தேன்.

உள்ளே சென்று புத்தகங்கள் எடுக்கும் பணிக்கான பதிலளிக்கும் வேளையிலும் பொன்வண்டே அகமெல்லாம் நிறைந்து இருந்தது. அதனால் தான் என்னவோ அங்கிருந்த யாரிடமும் சரிவர பேசவில்லையோ என்று சென்ற பணி முடித்து திரும்பி வரும் வழியில் உணர்ந்தேன்.
சிறுவயதில் நண்பர்கள் பொன்வண்டு பிடித்து தர அதை வைத்து விளையாடிய அனுபவங்கள் கண்முன் நிழலாடத் தொடங்கின.
பொன்வண்டு பிடித்து பழக்கமில்லாததாலும் தோட்டந்தொரவுகளுக்குப் போய் பழக்கமில்லாததாலும் பொன்வண்டை காசு கொடுத்து வாங்கிய முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன் என யூகிக்கிறேன்.
அருமை நண்பன் செல்லப்பாண்டி பொன்வண்டை பிடித்து வந்து தருவதுடன் நில்லாமல் கழுத்தில் ஒரு நூல் போட்டு கட்டித் தருவான். முடிச்சு கூட போடத் தெரியாமல் இருந்ததை நினைத்து இப்பொழுது வெட்கம் பின்னித் தின்கிறது.
அந்த நூலைப் பிடித்துக் கொண்டு வண்டை மேலே தூக்கியெறிய அது பறந்து ரீங்காரமிடும் ஓசை கேட்டு ஆனந்த குதூகலம் அடைந்த காலம் இன்று நெஞ்சில் நிழலாடுகிறது.
பட்டமிடுதலைப் போன்று பொன்வண்டை இப்படி நூலில் கட்டி தெருவெல்லாம் இழுத்துக் கொண்டு ஓடிய காலம் இன்று காலாவதி ஆகிவிட்ட போதிலும் கண்குளிர வைக்கிறது.

அதிலும் எதிரெதிர் திசையில் நின்று கொண்டு ஓடி வந்து வண்டுகள் மோதாமல் நூல்கள் அறுபடாமல் விளையாடிய நுட்பம் தனித்துவமானது.
பொன்வண்டிற்கான உணவென்று கருவேல மரஇலைகளை தீப்பெட்டியில் கொட்டி வைத்ததை நினைத்துப் பார்த்தால் இப்பொழுது திகைப்பூட்டுவதாகவே உள்ளது.
பொன்வண்டை பிடித்து செய்வதெல்லாம் செய்துவிட்டு, சித்ரவதைச் செய்கிறோம் என்று எண்ணாமல் ஜீவகாருண்யம் பேணியதை எண்ணிப் பார்த்தால் இப்பொழுது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
அதே கருவேல இலைதழையில் ஒன்றை உருவி பொன்வண்டின் கழுத்தில் வைத்து இரண்டாக வெட்ட வைத்து வேடிக்கை காட்டிய தருணங்கள் சிறுவயது அதிசயங்களன்றி வேறேது.
சரியாக பிடிக்காவிட்டால் நமது கையையும் பதம்பார்க்க தவறுவதில்லை பொன்வண்டின் கழுத்து. இதற்காகவே பொன்வண்டைத் தூக்க பயந்த அனுபவமும் அடியேனுக்கு உண்டு.
"இதற்கு ஏன் பொன்வண்டு என்று பெயர் வந்தது தெரியுமா?" என்று என் நண்பன் செல்லப்பாண்டி கேட்டான். நாங்களெல்லாம் திருதிருவென்று முழிக்க, அவன் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் , "இது உடம்பு அப்படியே தகதக வென்று மின்னுதுல... பொன்னு தானே இப்படி மின்னும்.... அதனாலதான் இது பொன்வண்டு!" என்று கூறினான்.
பச்சை வண்ணத்திற்கும் பொன்னிற்கும் என்ன சம்பந்தமோ? தெரியவில்லை. ஒரு வேளை அப்படி யாராவது கேட்டிருந்தால், "பச்சைத் தங்கம்" என்று சொல்லியிருந்தாலும் சொல்லியிருப்பான். பச்ச மண்ணுகளாக இருந்த நாங்களும் நம்பியிருப்போம்.

இப்பொழுது அதனை நினைத்துப் பார்த்தாலும் அது உண்மைதானோ என்றே எண்ணத் தோன்றுகிறது. பால்யத்தின் அறியாமையும் பாசாங்கில்லாத நட்பும் பசுமரத்தாணி போல் மனதில் நிலைத்திருந்து பரவசப்படுத்தக் கூடியது தானே!
பொன்வண்டு முட்டையிடுவதைக் காண காத்திருந்த தருணங்களும் அதற்காக முயற்சி செய்து பார்த்த தந்திரங்களும் தனிக்கதை. ஒரே தீப்பெட்டியில் இரு பொன்வண்டுகளை வைப்பதில் தொடங்கி செய்து பார்த்த மாயஜாலங்கள் ஏராளம்!
பொன்வண்டைக் கண்ட இன்றைய நாள் பொற்காலமான அறியா இளம்பருவத்தை மீட்டுணர வைத்த பொன்னாளாகவே ஜொலிக்கிறது என்றே கருதுகிறேன்.
பொன்வண்டே... பொன்வண்டே....
எங்கே போனாய் பொன்வண்டே...
திருப்ப உன்னைக் காணலையே பொன்வண்டே....
என்னைப் போல் பலரையும்
பழைய நினைப்பில் மூழ்கடித்து
பரவசத்தில் திளைக்கச் செய்ய
பறந்து சென்றாயோ... பொன்வண்டு!
-பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.
தேனி மாவட்டம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.