மனிதன் விரும்பாத ஒரு சொல் மரணம். விரும்பாவிட்டாலும் ஏற்றே தீருவது மரணம். சிலர் மரணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஆசை வைத்திருப்பார்கள். சிலர் இப்படித்தான் அமைய வேண்டும் என்று இறைவனிடம் கோரிக்கை வைப்பார்கள். சிலர் மரணம் எண்ணி நிகழ் காலத்தையும் நொந்து கொண்டே கழிப்பார்கள். சிலர் மரணம் முன்பே உருப்படியாய் எதாவது செய்து விட வேண்டும் என்று விழைவார்கள். சிலர் மரணம் ஒத்திப்போகாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். சிலரோ மரணம் விரைவில் நம்மைத் தழுவாதா என தத்தளித்துக் கொண்டிருப்பார்கள்.

மேற்கண்ட அனைத்துத் தரப்பினரும் மரணம் குறித்த ஒரு விஷயத்தில் ஒருமித்த கருத்து ஒன்றை வைத்திருப்பார்கள். அதுவே நாம் மாண்ட பின்னரும் உயிர் வாழ வேண்டும். நம்மை உலகம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் இந்த உலகில் அங்கமாக இருந்திட வேண்டும் என்றே. அது சாத்தியமா. நிச்சயம் சாத்தியம். கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் ஒரு செயலை செய்வோமே ஆனால் நிச்சயம் உலகம் நம்மை நினைவில் வைத்துக் கொள்ளும்.
1. நமக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஏதேனும் பொதுவான இடத்தில் மரங்களை வளர்க்கலாம். நம்மால் அவ்வாறான இடங்களை கண்டுபுடிக்க இயலாவிட்டால் சில NGO அமைப்புகளுடன் சேர்ந்து அவர்கள் கண்டறிந்த இடங்களில் நாம் வளர்க்கலாம். நட்டதோடு இல்லாமல் முறையாக நாம் பராமரிக்கவும் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இச்செயல் மூலம் வருங்கால சந்ததியினருக்கு காற்றை பரிசாக அளிக்கலாம். அவர்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் நம்மை நினைவுபடுத்தும்.
2. ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள்,மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் நம்மால் முடிந்த சில பொருள்களை வழங்கலாம். உதாரணமாக சக்கர நாற்காலி (WHEELCHAIR), அமரும் பலகை, கைத்தடி போன்றவற்றை வழங்கலாம். நாம் இல்லையென்றாலும் நாம் அளித்த பொருட்கள் மூலம் சிலர் நம் வாழ்க்கையை வாழ்வார்கள். அவர்கள் இறைவனை தரிசிக்கும் போதோ, பலகையில் ஓய்வு எடுக்கும் போதோ அவர்கள் விடும் நிம்மதி பெருமூச்சில் நாம் நிறைந்திருப்போம்.

3. உங்களிடம் கொஞ்சம் பண வசதி இருந்தால் சின்னதாக ஒரு அன்னதானக் கூடமோ, திருமணம் நடத்த ஏதுவாக ஒரு அறையோ (HALL) கட்டிக் கொடுத்தீர்கள் என்றால் அங்கே ஏழை எளியவர்களின் திருமணம் நடந்தேறும் போது ஒரு வாழ்க்கையின் தொடக்கத்தை தொடங்க உதவியாக இருந்த உங்களை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து நன்றி தெரிவிப்பார்கள்.
4. உங்கள் பகுதியில் உள்ள நூலகத்திற்கோ, அல்லது உங்களால் முடியுமே ஆனால் ஒரு சின்ன நூலகத்தையே அமைத்துக் கொடுக்க இயன்றால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புத்தகம் படிக்கப்படும் போதும் வாசிப்பவரின் அறிவு விரிவடையும் போதெல்லாம் நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்.
5. பண வசதி இல்லாத குழந்தைகளுக்கு புத்தகம் வழங்கியோ, அவர்களைப் படிக்க வைத்தோ உங்களால் உதவி செய்ய முடியுமே ஆனால் அக்குழந்தையின் வாழ்க்கை மூலம் நீங்கள் உங்களது வாழ்க்கையை நீட்டித்து வாழலாம். பணம் மூலமே உதவி செய்ய வேண்டும் என்றில்லை. உங்களது அறிவையோ, நேரத்தையோ அவர்களுக்காக நீங்க இலவசமாக செலவு செய்ய முடியுமே ஆனால் அதுவும் சாலச் சிறந்ததே.
6. கூடுமானவரை நெகிழியை தவிர்த்து, தண்ணீர், மின்சாரம், மண் இவற்றின் பயன்பாட்டை குறைத்து, வாகனப் புகை குறைக்க பொது பேருந்தில் பயணம் செய்து நம்மால் இயன்ற சிறிய செயல்களை அவ்வப்போது செய்து வந்தோமே ஆனால் வருங்கால தலைமுறைக்கு கொஞ்சம் இயற்கையையும் பரிசளித்து விட்டு செல்லலாம். அவர்கள் ரசிக்கும்/வாழும் ஒவ்வொரு இயற்கைவெளியும் நம்மை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.

7. வெட்டியான, வீணான, ஒன்றிற்கும் பயன்படாத பழக்க வழக்கங்களை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் சில நல்ல செயல்களை கற்றுக்கொடுத்து இதைக் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவே நம் குடும்பத்தின் பெருமை, தாத்தாவிற்கு நீ செய்யும் தொண்டு என்று சொல்லலாம். உதாரணமாக கோடையில் நீர்மோர் பந்தல், தண்ணீர் பந்தல் வைப்பது, குறிப்பிட்ட நாளன்று ஏழைகளுக்கு அறுசுவை உணவு வழங்குவது, குளிர் காலத்தில் கம்பளி தருவது என்று செல்லக் கட்டளைகளை சொல்லி வைக்கலாம். அவர்கள் செய்யும் ஒவ்வொரு கொடையும் உங்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.
8. நாம் அனைவரும் கேட்டறிந்த உடல் தானம், கண் தானம், இரத்த தானம் போன்றவை செய்யலாம்.
9. கிராமங்களில் இருந்தால் தண்ணீர்த் தொட்டியோ, உயிர்வாயு (BIOGAS) கலனோ அமைத்துத் தரலாம். உங்களுக்கு சிறிதேனும் ஓய்வு காலம் கிடைத்தால் சில இளைஞர்களை வைத்து குளம், ஏரி போன்றவற்றை தூர் வார செய்யலாம். அவர்களுக்கு சமுதாய பொறுப்பை முறையாக கற்றுக்கொடுக்கலாம். உங்கள் பேச்சு, எண்ணம், செயல் மூலம் நான்கு இளைஞர்கள் மாறினாலும் அது மிகப்பெரிய மாற்றமே.

10. எனக்குப் பின்னரும் நீ அவனை பழி வாங்க வேண்டும் என்று வக்கிர புத்தியை திணித்து விட்டுப் போகாமல் எனக்குப் பிறகாவது நீங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நற்கருத்துகளை விதைத்து விட்டுச் செல்லுங்கள். அது உங்கள் குடும்பமாக, கிராமமாக, சமுதாயமாக, தெருவாக எதுவாக இருப்பினும் சரி.
மேற்கண்ட அனைத்தும் செய்ய இயலா விட்டாலும் அவ்வப்போது நம்மால் முடிந்த ஒன்றிரண்டு செயல்களை செய்ய முற்பட்டோமேயானால் நாம் மாண்ட பிறகும் நம்மை இந்த உலகம் நினைவில் வைத்துக்கொள்ளும். நம்மால் இந்த உலகம் ஒளி வீசிக்கொண்டே இருக்கும். நமக்காக இந்த உலகம் ஏங்கிக்கொண்டே இருக்கும்.
சிந்திப்போம். நல்லதொரு BUCKETLIST யை தயார் செய்து செயல்படுத்துவோம்.
-நாக சரஸ்வதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.