வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இயற்கையைப் போர்த்திக் கொண்டு எப்போதும் போல் அமைதியுடன் வீற்றிருக்கிறது கோட்டூர் ..
ஊரின் மேலத்தெருவில் தொல்லியல் துறை கண்டெடுத்த பழங்கால நாகரிகத்தின் பண்டையர் வாழ்ந்த அடையாளத்தின் நிகழும் சாட்சியைப் போல ஓர் பாழடைந்த ஓட்டு வீடு,
பழைய ஓடுகள் வேய்ந்த அந்த வீடு முழுவதும் மண்ணால் கட்டப்பட்டிருந்தது, அந்த வீட்டின் சுவர்களில் ஆங்காங்கே மண் பூச்சுக்கள் விழுந்து பழைய தட்டையான செங்கற்கள் தொக்கிக் கொண்டிருப்பது தெரிந்தன...
சாளரத்தின் வழியே மழை நீர் இறங்கி இருபுறமும் உள்ள சுவற்றில் ஈரப்பதம் ஓர் வரையப்பட்ட ஓவியம் போல் புரவிக் கிடந்தது...
உத்திரங்கள் யாவும் கரையான்களின் பசியாற்றியதுபோக மிச்சமுள்ளது மட்டும் மேற்கூரையை தாங்கி நின்றது...

ஜன்னல்களின் கதவுகள் வயது மூப்பின் காரணமாய் தோல் சுருங்கி, மரக் குச்சியை வைத்து தட்டினாலே தெறித்து விழும் பலவீனத்தில் சாத்தப்பட்டிருந்தது...
ஜன்னல் கம்பிகள் யாவும் பல ஆண்டுகளாய் ஆடை அணியாத பெருந்துறவி போன்று வர்ணம் பூசாமல் துருவேறிக் கிடந்தது...
வீட்டின் வாசலை அலங்கரிக்கும் பழைய மரக்கதவு, அதில் ஆங்காங்கே செதில்கள் தெறித்து பல் குத்தும் குச்சிகளைப் போன்று பல துருத்திக் கொண்டிருந்தன..
தேக்கு மரப்பலகைகளால் பின்னப்பட்ட கதவின் இடுக்குகளின் வழியே வீட்டின் உட்கூட்டை காணும் விதம் மரப்பலகைகள் தெறித்திருந்தன...
கதவின் உள்ளே பாதுகாப்பு சாதனமான தாழ்ப்பாளாக நாதாங்கி எனும் ஓர் ஆணியில் அடிக்கப்பட்ட இரும்பு பட்டை தொங்கவிடப்பட்டு அருகில் இருக்கும் வாசல் நிலையில் ஓர் இரும்பு கவ்வையில் இந்த இரும்பு பட்டையை சாய்த்து தாளிடப் பட்டிருந்தது...
இது தவிர அவ்வீட்டினுள் சில பழங்கால பீங்கான்களும் ஒரு மரத்தாலான வாசனைமிகு கப்பீரோ பெட்டி, ஒருசில எவர்சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்தி பலகாலம் ஆனதன் குறியீடாய் தூசுகள் படர்ந்து தூங்கி கொண்டிருந்தன..

மேலும் இவற்றோடு ஒரு ஆள் படுப்பதற்கென்று பின்னப்பட்ட ஈச்சம்பாயும், அதற்குத் தலையணையாய் பழைய பிய்ந்துபோன துணிகளை உட்கூட்டில் வைத்து திணிக்கப்பட்ட பழைய கோணிப்பையும் அதோடு தலைமாட்டில் ஒரு பழைய டேப் ரெக்கார்டர், ஒரு முட்டை விளக்கு மற்றும் சில உபயோகமில்லாத பொருட்கள் இருந்தன....
வீட்டின் வாசலில் இரு திண்ணைகள் மனிதப் புட்டங்களை சுமந்து பலவாண்டு ஆனதின் அடையாளமாய் ஆங்காங்கே மண் பூச்சுக்களை துப்பி நின்றது. அதன் இண்டு இடுக்குகளில் சிறு புற்கள் தடுமாறி முளைகட்டி நின்றது...
வீட்டின் வாசலில் ஓர் புங்கை மரம் அந்த வீட்டை ஓர் புனிதக் குறியீடாய் கருதி வளர்ந்து நின்றது....
மொத்தத்தில் அந்த வீடு, ஆள் அரவமற்ற ஓர் அகிம்சையின் அடையாளக் குறியீடாகி இருந்தது...
ஆனால்..
அந்த வீட்டின் உள்ளேதான் இன்னமும் ஓர் ஜீவன் ஒற்றை உயிரோடு உலாவிக் கொண்டுள்ளது.....

வயது தொன்னூரைத் தொட இருக்கும் இவ்வேளையில், வதங்கிய உடம்போடும், வாடிய முகமோடும் வாழும் அந்த ஜீவன்...
"முத்தாச்சி" ... என்பது ஊரார் விளிக்கும் அவர் பெயர்..
முதுமையின் அடையாளமாக, துவண்டு போய் உள்ள அவரது தேகங்களில் சுருங்கிப் போயிருக்கும் தோல்கள் அவர் வாழ்வின் நீட்சியானது சுருக்கமாகிப் போனதை அடையாளப் படுத்தின...
பல்வேறு சோகங்களையும், பிரிவுகளையும் கண்ட அவரின் பழுப்பு நிற கண்களில் இன்னமும் வாழ்வைக் காண வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் கருவிழியில் தெரிந்தது...
பல ஆண்டுகள் பேசிய பேச்சின் தேய்மானமாக முன் வரிசைப் பற்கள் எப்போதோ மரணித்து விட்டது...
இப்போது ஒட்டுமொத்த வாயையும் தாங்கி நிற்கும் தூணாக மேலும், கீழும் எண்ணி நான்கே பற்கள் அவர் பேச்சை பிறர் விளங்கிக் கொள்ள உதவி செய்து வந்தது...
கூன் விழுந்த தேகமும், துவைப்பதற்கு அவசியமற்று மடிந்துபோன மலேசிய பத்தை கைலியும், அச்சுப் பூக்கள் உதிர்ந்ததுபோல் வெளுத்துப் போன மல்லிகைப் பொட்டு தாவணி தள்ளாத வயதிலும் அவரின் தலையை மறைக்க உதவியது...
அவ்வப்போது தலையிலிருந்து நழுவி விழும் தாவணியை மறக்காமல் எடுத்து போட்டுக் கொள்வார், பல்லாண்டு பழக்கம் இன்னும் மாறவில்லை.....
இப்படி பழைய தலைமுறை ஒன்றின் அடையாளமாக ‘முத்தாச்சி’ அந்த வீட்டில் உலாவிக் கொண்டிருந்தார்..
எந்நேரமும் மியாவ்’ மியாவ் என்ற சத்தத்தோடு அந்த வீட்டை வலம் வரும் பூனைதான் ‘முத்தாச்சியின் இப்போதைய ஒரே உறவு...
தனக்குப் பசிக்கிறதோ! இல்லையோ! மறக்காமல் தன் பூனைக்கு உணவு கொடுக்கும் புரவலர் நம் ‘முத்தாச்சி’ ...
சில ஆண்டுகளுக்கு முன்புவரை இரவு நேரங்களில் அவரிடமுள்ள அந்த பழைய டேப் ரெக்கார்டரில் பெரும்பாலும் அவர் பழைய நாகூர் ஹனிபாவின் பாடல்களை கேட்டுக் கொண்டிருப்பார் தூக்கம் வருவதற்காக...

இப்போது அந்த பாடல் கேசட்டில் உள்ள நாடாக்கள் டேப் ரெக்கார்டரில் சிக்கிக் கொண்டு அறுந்து போய்விட்டது, டேப் ரெகார்டரும் தூசு படிந்து பழுதாகி விட்டது, பேச்சு துணையாய் நின்ற ஒற்றை சாதனமும் போனது...
தினமும் காலையில் தொழுகைக்கெல்லாம் இந்த தள்ளாத வயதிலும் மறக்காமல் எழுந்து விடுவார்.
பள்ளிவாசலில் மோதினார் பாயின் பாங்கொலியோடு ‘முத்தாச்சி ’ கதவை திறக்கும் சத்தமும் ஒன்றாய் எப்போதும் கேட்கும்...
எப்பேர்ப்பட்ட பனி காலங்களிலும் இது தொன்றுதொட்டு வரும் பண்பாகவே! அவரோடு வந்தது...
தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் ஒரு பழங்கால அடி’பைப்பு’ துருவேறிக் கிடந்தாலும் இவரைப் போல் இன்னும் ஆரோக்கியமோடுதான் இருந்தது..
கடந்த ஆண்டு வரை அதுதான் ‘முத்தாச்சி'க்கு தண்ணீர் வழங்கிய தோழன்..
இப்போது கொல்லைப் புறத்தில் பெருமளவில் புற்கள் மண்டிக் கிடப்பதால், பூச்சிகளும், பாம்புகளும் இருக்கலாம் என எண்ணிக் கொண்டு அதைத் தவிர்த்தார்...
அவர் ஒளு செய்வதற்கென்றே ஏற்படுத்தப் பட்டதுபோல் வீட்டின் வெளியே வலது மூலையில் பஞ்சாயத்து சார்பாக வைக்கப் பட்டிருக்கும் ஒரு திருகு ‘பைப்’ அவருக்கு இப்போது வசதியாயிற்று...
அதுதான் முத்தாச்சியின் இப்போதைய தண்ணீர்த் தேவைகளை பூர்த்தி செய்கிறது..
காலை நேரம் தொழுது விட்டு வரும் ‘உமர்’ தான் ‘முத்தாச்சியின் பொதுநல சேவகன்...

அவனுக்காகவே காலை தொழுகை முடியும் நேரம் வரை தமது பழுப்பு நிறக் கண்களை சுருக்கிக் கொண்டு போவோரையும், வருவோரையும் அது ‘உமர்’ தானா எனப் பார்த்து நிற்பார்...
கையில் ஒரு சிறிய ‘எவர்சில்வர்’ தூக்குவாளி இருக்கும், அது அவரின் வயிற்றின் கொள்ளளவைக் கொண்ட “டீ’ யைத் தாங்குமளவு இருக்கும்..
நினைத்தது போலவே ‘கிணிங்’ என்ற பெல் சத்தத்தோடு சைக்கிளில் வந்து நிற்பான் ‘உமர் ’..
“வந்துட்டியளா! என் சீதேவியலே, எங்கன உம்ம இன்னமும் கண்ணுல காணலியே'ன்னு பாத்தேனாக்கும்”....
மெல்லிய வரவேற்போடு திண்ணையில் இருந்து எழுந்து வருவார் ‘முத்தாச்சி ’...
தனது வயிற்றோடு ஒட்டியிருக்கும் மலேசிய பத்தை கைலியின் வலது பக்க இடுப்பிலிருந்து தனது சுருக்குப் பையின் முடிச்சை அவிழ்த்தவாறே...
அவர் தரையில் இறங்கும் முன் சைக்கிளை விட்டு தாவி இறங்கி அவரது கைகளை இறுகப் பற்றிக் கொள்வான் ‘உமர் ’
பின்னர் தனது சுருக்கிய கண்களோடு, சுருக்குப் பையினுள் துளாவி சில சில்லறைகளை எடுத்துக் கொடுப்பார் முத்தாச்சி ..
“ எம்மட அப்பாவு, இதுல இருக்கிற சில்லரக்கி, டீயும் அப்பறம் கொஞ்சம் சீமன்னயும்-(மண்ணெண்ணெய்) வாங்கியாங்க”...
(எப்போதும் சூரியன் மறையும் அந்தி நேரம் வந்து விட்டால் வீட்டில் உள்ள பழங்கால முட்ட விளக்கு ஒன்றை திண்ணையில் ஏற்றி வைப்பது அவர் வழக்கம், மறக்காமல் காலை தொழுகைக்கு வரும்போது அதனை அணைத்து விடுவார்.)
விளக்கிற்கு தேவையான மண்ணெண்ணெயை ரேஷன் கடையில் வாங்கி வைத்துக் கொள்வார் அது தற்போது தீர்ந்து விட்டிருந்தது.
“நீங்க நல்லா நூறு வயசுக்கு இருப்பிய ராஜா, என்ட புள்ளதான் இத்தன நாளக்கி இந்த ஒண்டிக் கட்டக்கி ஒதவிக் கொண்டு இக்கீது”...
அவரது வாழ்த்தை காதுகளில் வாங்கிக் கொண்டே புன்முறுவலோடு, புறப்படுவான் உமர். சில நேரம் முத்தாச்சியின் சில்லறைகள் குறையும் இருப்பினும் தன்னிடமுள்ள சில சில்லறையைக் கொடுத்து மறக்காமல் அவர் கேட்ட அனைத்தையும் வாங்கிவிடுவான்.
ஆனால் ‘உமர் ’ வந்ததும் மறக்காமல் கேட்பார் ‘முத்தாச்சி’...
“என்ட அப்பாவு சில்லற பத்துனிச்சுதா!”....
“சரியா இருந்துச்சு முத்தாச்சி” என சொல்லி விட்டு செல்வான் உமர்...
தேகம் சிறுத்த அவரின் எடையைத் தாங்குவதற்கென்றே இன்னமும் இருப்பதுபோல் இருக்கும் அவர் வீட்டுத் திண்ணையில் தெறிப்புகள் இல்லாத ஓர் சிறிய மூலையில் அமர்ந்து கொள்வார்...

அன்றைய தினம் காலை வேளையில் அவ்வழியே செல்லும் ஏதாவது சில வீட்டுப் பெண்களிடம் ஒரு சிறிய பீங்கான் கோப்பையைக் கொடுத்து அதில் இன்று அவர்கள் வீட்டில் செய்யும் ஏதாவது குழம்பு கொஞ்சம் மட்டும் கொடுத்து அனுப்பச் சொல்வார்...
பாவம் அவரின் ஒட்டிய வயிறு எவ்வளவு சாப்பிட்டு விடப் போகிறது...
பலர் சந்தோஷமாக வாங்கிச் செல்வர் ஆனால் வெகு சிலரோ முனகிக் கொண்டே..
“ஆமாம் இதுக்கு வேற வேல இல்ல, பொழுதுபோனா போதும் வாசல்ல நிண்டுக்கிட்டு ஏதாவது கொடையும்” என வாய்க்குள் சொல்லிச் செல்வர்..
அவர்கள் சற்று சத்தமாய்ச் சொன்னாலும் ‘முத்தாச்சி'க்கு கேட்டுவிடும் நிலையில் அவரின் செவிகள் தற்போதில்லை என அவர்களும் தெரிந்தே வைத்திருந்தனர்...
ஆனால் சோறு மட்டும் யாரிடமும் வாங்க மாட்டார், இப்பவும் யாரேனும் அறுவடை முடிந்து மரக்கால் அல்லது படி கணக்கில் என தர்மமாக கொடுத்துச் செல்லும் நெல்லை சிறிது சேர்ந்தவுடன் ஏதாவதொரு ஆளிடம் கொடுத்து ஆலையில் அரைத்து வைத்துக் கொள்வார்...
அந்த அரிசியை வைத்துக் கொண்டு அவருக்கென உள்ள சிறிய பித்தளை பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர்விட்டு உலை வைத்து விடுவார்...
யாரேனும் கொடுக்கும் குழம்பை வைத்து அன்றைய ஒரு நாளை எப்படியோ ஓட்டிவிடுவார், சிலபொழுதில் சிலர் தேவைக்கு அதிகமாய் ஏதேனும் குழம்பை கொடுத்துவிட்டால் இரண்டு நாட்கள் வரையில் கூட வைத்துக் கொள்வார்...

இப்படியாக அவரின் ஆயுட்காலம் ஓடிக் கொண்டிருந்தது..
பெரும்பாலான இரவு நேரங்களில் அக்கம் பக்கத்து பெண்கள் அவரிடம் வந்து பழங்கதை கேட்க சில சமயம் கூடுவார்கள்...
அவரும் பழங்கால மனிதர்களைப் பற்றிய கதைகளை தமது பொக்கை பல் தெரிய கூறும் அழகே! தனிதான்...
அவரின் வீடு கவனிப்பதற்கு ஆளின்றி குப்பை கூலங்களாகி நிற்கும்..
இவரின் நிலையை அறிந்து பக்கத்து வீட்டு ‘பாத்திமுத்து’ வாரத்துக்கு ஒருமுறை வந்து வீட்டை பெருக்கி சுத்தம் செய்து கொடுத்து உதவி செய்வாள்...
முத்தாச்சிக்கு சொந்தம் என்று யாரும் இல்லை, அவரது கணவர் எப்போதோ! மரணித்து விட்டார், ஒரு மகன் மட்டும் இருந்தார்...
ஆனால் அவரும் தற்போது எங்கே இருக்கிறார் என்பதுதான் இதுவரை யாருக்கும் தெரியவில்லை...
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு பிழைப்புக்காக ஏதோ ஓரிடம் சென்றவர், இன்று வரை தன் தாயை வந்து பார்க்கவில்லை, அவரைப் பற்றிய விவரங்களும் யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை..
மகனை பிரிந்த சோகம் ஒரு புறம் அவரை ஒருபுறம் வாட்டினாலும், அவருக்குள் உலகின் மிச்ச வாழ்வை தமது சொச்ச காலம் வரை வாழ்ந்து விட வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் உள்ளத்தில் குடிகொண்டிருந்தது, பழைய கால மனுஷியல்லவா?,,
கணவனை இழந்தபின் எவ்வாறு இதுவரையில் வாழ்கிறாரோ? அவ்வாறே ! இன்னமும் அவருக்குள் இருக்கும் வைராக்கியம் அவருக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது ..
இதுதவிர அவருக்கென்று ஊரில் நான்கு’மா’ நிலமும் உள்ளது..
அந்த நிலத்தைக் கேட்டு சில மிராசுகள் வருவார்கள் அவ்வப்போது அந்த நிலத்தைக் கேட்பார்கள்.. நிறைய பணம் தருவதாக அவரிடம் சொல்வார்கள் ..
அவர்களிடம் ‘முத்தாச்சசி“
எம்மட மக்களா!! இனிமேப்பட்டு இந்த கெளடு கட்டக்கி எதுக்கு இம்புட்டு பணம் தர்றிய, இத வச்சு நான் அப்டி என்னத்த இனிமேப்பட்டு வாங்க போறேனாக்கும், நீங்க போயிட்டு வர்ரியலா”.. என கறாராக சொல்லி விடுவார்.

அவர்களும் வீட்டிற்கு வெளியில் வந்து...
“இந்த கெளம் அந்த நெலத்த வெச்சு இனிமேப்பட்டு என்ன செய்யப் போவுது, பேசாம கொடுத்துட்டு போக வேண்டிய வயசுல, போயி சேருரதுக்காகவாவது சேத்து வெக்கலாமுள்ள”
என வெளிப்படையாக சொல்லிச் செல்வார்கள்...
இது “முத்தாச்சி'க்கு சகஜமாகிப் போனது...
அன்றொரு மழைநாளில்!!!...
அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பமான மழை மணி எட்டைத்’ தாண்டியும் விட்டபாடில்லை, தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது...
எப்போதும் காலை தொழுகை வேளையிலேயே அணைத்து வைக்கப்படும் ‘முத்தாச்சி’ வீட்டு திண்ணையில் எரியும் முட்ட விளக்கு இன்னமும் எரிந்து கொண்டுதான் இருந்தது...
முத்தாச்சி’ வளர்க்கும் பூனை இன்னமும் பசியால் கத்திக் கொண்டிருந்தது..
எப்போதும் காலை ’தொழுகை முடித்துவிட்டு வந்துவிடும் ‘உமர்’ இன்று மழையின் காரணமாக தாமதமாக மழை விட்டதும் எட்டரை மணிக்கு வந்தான்..
‘முத்தாச்சியை வெளியில் காணாததால், பெல்லடித்து சப்தமெழுப்பி கூப்பிட்டான்...
“முத்தாச்சி ”...”முத்தாச்சி ...
ஒரு சத்தமும் வீட்டிலிருந்து வரவில்லை, மாறாக பூனை மட்டும் சற்று வேகமாக கத்தியது...
குழப்பத்துடன் அந்த இடத்தை விட்டுச் சென்றவன் சிறிது நேரம் கழித்து நடுத்தர வயதுடைய சில வாலிபர்களை அழைத்து வந்தான் ...
அவர்களும் வந்து கூப்பிட்டு பார்த்தனர்..உள்ளே இருந்து எந்த சலனமும் இல்லை, அதற்குள் வாசலில் கூட்டம் குழுமி விட்டது...
“யாராச்சும் கதவ ஒடைச்சு உள்ள போங்கப்பா ” என ஒருவர் குரல் கொடுத்தார் ..
இரண்டு வாலிபர்கள் கதவின் அருகே சென்றனர்...
அதற்கு அவசியமே இல்லாது வெளியிலிருந்து கைகளைக் கொண்டு நாதாங்கியைத் தள்ளிவிட்டனர்..
திறந்து கொண்டது...
அங்கே உள்ளே!...
எல்லா இடங்களிலும் மழை தண்ணீர் ஒழுகி ஈரமாக இருந்தது. அறையின் பக்கவாட்டில் ஒரு பகுதியில் மட்டும் ஒழுகாமலிருந்தது..

அந்த இடத்தில் தொழுகின்ற பாயின் மீது தமது விலா எலும்பினை குறுக்கியவாறே ஒரு கையை தமது விலாவிலும், மறுகையால் தமது அருகே குர்ஆன் வைக்கப் பட்டிருந்த மரப்பலகையை பிடித்தவாறே படுத்திருந்தார்...’முத்தாச்சி ’
முன்னே! சென்ற வாலிபர்கள், ‘முத்தாச்சியின் தாடையை இருபக்கமும் அசைத்து பார்த்து அவரை அழைத்தனர்..
“முத்தாச்சி ”...”முத்தாச்சி ”... ஒரு அசைவும் இன்றி படுத்திருந்தார் .
கண்கள் இலேசாக திறந்து..மரப்பலகையில் உள்ள குர்ஆனைப் பார்த்தபடி இருந்தது...
அதற்கிடையில் இருவர் சென்று நாட்டு வைத்தியரை அழைத்து வந்து விட்டனர்.,
அவர் ‘முத்தாச்சியின் நாடியைப் பார்த்து விட்டு...
“உசுரு போயாச்சு விடிகாலை நாலரை மணிக்கு போயிருக்குனு நெனக்கிறேன் மேலும் ஆக வேண்டியத பாருங்க!” என்றார்...
இந்த விஷயம் ஊர் முழுக்க பரவ எல்லாத் தெருக்களிலிருந்தும், துப்பட்டி போர்த்திய வெள்ளை ராணுவமாக பெண்கள் கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது..
அதே நேரம் பள்ளியில் மோதினார், ‘முத்தாச்சியின் மரணச் செய்தியை பள்ளிவாசலின் ஒலிப்பானில் அறிவித்துக் கொண்டிருந்தார்...
ஆம்! ஊருக்கே! ஒரு பழைய தலைமுறையின் அடையாளமாக இருந்த “முத்தாச்சி’ இறைவனடி சேர்ந்தார்..
இதுவரை ஒற்றை ஆளாக நின்று வாழ்வோடும், மரணத்தோடும் போராடியவர், இறுதியில் இறைகட்டளையான மரணத்திற்கு அடிபணிந்தார்...
இதற்கிடையில் ஊரின் நாட்டாமை வந்து கூடியிருந்தவர்களுக்கு உத்தரவிட்டார் ..
“முத்ததாச்சிக்குத் தான் யாரும் இல்லயே நம்ம ஊருதான் நின்னு கடமய செய்யனும் இருந்தாலும் எங்கயாச்சும் அவங்க புள்ளையோட நெலவரம் பத்தி ஏதாவது கெடைக்குதான்னு பாருங்களேன்.”..
“ஊஹூம்”
வீட்டுக்குள் அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை, அனைவரும் வெறுங்கையோடு திரும்பினர்..
“சரி, இனி ஆக வேண்டியத பார்ப்போம்”.. என உத்தரவிட்டார்...
“முத்தாச்சியின் நல்லடக்கத்துக்காக ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஆளுக்கு கொஞ்சம் காசு பணம் கொடுத்து நல்லடக்க வேலைகளை பகிர்ந்து கொண்டனர்..
அவரின் ஒரு பிள்ளை விட வேண்டிய கண்ணீரை, ஊர் பிள்ளைகள் அனைவரும் இட்டு அவரது நல்லுடலை இவ்வுலகை விட்டு வழியனுப்பி வைத்தனர்...
நல்லடக்கம் முடிந்து, அனைவரும் போய்விட நாட்டாமையும் ஊர் பெரியவர்களும்,’முத்தாச்சியின் வீட்டு வாசலில் சிறிது அமர்ந்து அவரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்...
அப்போது சைக்கிளில் வேகமாக வந்த பட்டாமணியார் ‘மணியன்’ இவர்கள் அருகே வந்து சைக்கிளை நிறுத்தி அவசரமாக இறங்கினார்,,
“நாட்டாமை அண்ணே! வெளியூருக்கு மவ வீட்டுக்கு போயிருந்தேன்! இப்பதான் பஸ்சுல வந்து எறங்குனேன், விசயத்த சொன்னாங்க, ஒரு நல்ல மகராசிய பாக்க முடியலயே கடவுளே! கண்ணீருடன் நின்றார்...
அவரிடம் நடந்த விவரங்களை நாட்டாமை விவரித்தார்...
எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுவிட்டு, தனது சைக்கிளின் கைப்பிடியில் மாட்டியிருந்த ஒரு பிளாஸ்டிக் காது வைத்த பையை எடுத்து அவசரமாக திறந்தார் ..
அதன் உள்ளே இருந்து ‘முத்தாச்சி’ என்று பெயர் எழுதியிருந்த ஒரு கவரை எடுத்து நாட்டாமையிடம் நீட்டினார்...
“என்ன இது மணியண்ணன்”...என்றார் நாட்டாமை..
அவசரமாக அதைப் பிரித்து கவரை தனது மடியில் கிடத்தி விட்டு அதனைப் பார்த்தார்.
அது ‘முத்தாச்சி’ எழுதிக் கொடுத்திருந்த சொத்து பத்திரம்.....
பட்டாமணியார் ‘மணியன்’ தொடர்ந்தார்...
“ஒரு வாரம் முன்னதான், என்னோட வூட்டுக்கு ‘முத்தாச்சி’ வந்தாங்க, ரொம்ப தட்டுத் தடுமாறி வந்தவங்கள பார்த்து பதறிப் போயிட்டேன், அவங்கள உட்கார சொல்லி என்ன விஷயமா வந்துருக்கீங்க கூப்புட்டா நானே வந்துருப்பேன்ல அப்டின்னேன்"..
“பரவால்ல புள்ள என்னட காரியமால வந்தேனாக்கும் அப்படின்னு சொன்னாங்க”..
"அது என்னன்னு தீர விசாரிச்சப்போ தான் தெரிஞ்சுது அவுங்களோட இந்த வூட்டையும், நாலு’மா நெலத்தையும் ஊருக்கு எழுதி வைக்கோனும்னாங்க”...
“நாங்கூட கொஞ்ச நேரம் அப்படியே மலைச்சி போயிட்டேன்"
"ஒடனே நானும் ஏன்மா நீங்க ஊருக்கு எழுதி வைக்கணும் நாளக்கே உங்களோட புள்ள வந்தாக்கா" அப்டின்னேன்..
"அதுக்கு ஒத்த வார்த்த சொன்னாங்க என்னோட மனசு ஒடஞ்சி கொஞ்ச நேரம் அழுதிடுச்சிங்க"...
“என்னட புருசனும், புள்ளயும் போனதுக்கு பின்னயும், அல்லா கொடுத்த இந்த உசுரு ஓடுதுன்னாக்கா, அந்த எஜமானோட ஒதவிய கொண்டு, இந்த ஊர்ல உள்ள புள்ளைங்க கொடுத்த ஆகாரமும், ஆதரவும்தான..”
"அதாம் புள்ள!, எனக்கு ஜீவனங் கொடுத்த இந்த ஊருக்கு உபகாரமா எனக்குன்னு இருக்கறத கொடுக்கணும் புள்ள!,”
“இதக் கேட்டு செல மெராசுலாம் கூட வந்தாங்க, நெறைய பணமும் தாறேன்னாங்க அதுலாம் இனிமேப்பட்டு எனக்கு எதுக்கு புள்ள, இந்த ஊரு மக்கதான என்னட ஒறவுக"...
“எனக்கு கொஞ்சமா நீங்க ஒரு ஒதவி செய்ரியலா?,
"இத கொஞ்சம் எழுதி தாங்களேன்” ..அப்படின்னாங்க ..”
"அத்தோட இந்த நாலுமா நெலத்துல வெளையிற நெல்ல என்னமாரி ஆதரவில்லாத ஏழமாருக்கு குடுத்து ஒதவ சொல்றீங்களா புள்ள” அப்டின்னும் கேட்டுக்கிட்டாங்க...
அவ்விடத்தில் சிறிது அமைதி நிலவுகிறது...
எல்லோர் கண்களும் ஈரமாகிறது...

மேலும் மணியன் தொடர்ந்தார்..
"அந்த மகராசி கேட்ட ஒத்த வார்த்தைக்காக இதுக்கான ரிஜிஸ்டர் செலவ நானே ஏத்துக்கிட்டு எனக்கும் கொஞ்சம் புண்ணியம் தேடி எழுதிக் கொடுத்துட்டேன்"...
"இது உங்க கிட்டயே இருக்கட்டும் நேரம் வரும்போது வாங்கிக்கிறேன்னாங்க மகராசி இப்போ போய் சேர்ந்துட்டாங்க, இப்போ அதுக்கான நேரமா இத நான் நெனக்கிறேன்"..
"அதான் இத ஜமாத்துல ஒப்படைக்கலாம்னு எடுத்தாந்தேன்..”
பட்டார்மணியாரின் பேச்சை கேட்க,கேட்க தன்னிடம் வரும் அழுகையை அடக்க எண்ணி ‘நாட்டாமை' தனது தலையை கீழே கொண்டு போனார்...
அவரின் கண்ணிலிருந்து உதிர்த்த ஒற்றை கண்ணீர்த்துளி,,.
அவரின் மடியில் கிடந்த லெட்டர் கவரில் எழுதப்பட்டிருந்த “முத்தாச்சி” என்னும் பெயரில் விழுந்து நனைத்தது...
அதே நேரம்...
கப்ருஸ்தானில் “முத்தாச்சியின் கப்ரின் மீது போர்த்தப் பட்டிருந்த பூவாள பூவின் பூக்கள் வாடிக் கொண்டிருந்தன...
ஆனால்....
ஒரு பூவாய் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார்..
ஊருக்கு ‘உயில்’ எழுதிய மயிலாய் .....
“முத்தாச்சி"...
எண்ணமும், எழுத்தும்...
பாகை இறையடியான்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.