நேற்று என்பது முடிந்து போகாத தொடர்ந்து நம்முடனே பயணிக்கும் நிஜம். பல நேரங்களில் நமது நடவடிக்கைகள் பேச்சுகள் இவற்றை முன்னே நின்று கவனித்து.. நாம் முன்பு இருந்ததை கண் முன் ஒளிபரப்பி மனசுக்குள் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கும். சிலருக்கு பாடமாகவும் சிலருக்கு குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு எதிரியாகவும் இருக்கும். நேற்று நாம் யார்... யோசித்துப் பார்க்க நேரம் யாரும் ஒதுக்குவதில்லை. காரணம் இன்றைய வேலை பளு அதிகமாக இருக்கிறது. அந்த ஸ்டேட்மெண்ட் இன்னைக்கே போகணும்னு மேனேஜர் படுத்தி எடுக்கிறார்... தக்காளி விலை ஏறிட்டு இருக்கு ராத்திரி எத்தனை மணி ஆனாலும் லோடு இறக்க வந்திடுங்க... நம்ம தலைவர் படம் ரிலீஸ் முதல் நாள் முதல் ஷோ பாத்தாகணும்...இப்படி பல வேலைகள் இன்றைக்கு இருக்கும் போது எங்கேயிருந்து நேற்று...?

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வரையில் விளிம்பு நிலையில் வாழ்ந்த மனிதர்களின் தினசரிப் பயணங்கள் வேறு விதமாக இருந்து வந்தது. குறிப்பாக கிராமங்களில் பெண்கள் வயல் வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளுக்கு செல்வார்கள். மாலை வீடு திரும்பும் போது அடுப்பெரிக்க தேவையான சுள்ளிகளை - அதாவது கீழே கிடக்கும் காய்ந்து போன மரக்குச்சிகளை பொறுக்கி எடுத்துக்கொண்டு போய் இரவு சமையலுக்கு பயன்படுத்துவார்கள். ஐந்து ரூபாய் கூலிக்கு அரிசி, உப்பு. புளி, மிளகாய் வாங்கவே சரியாக இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSவிறகு எப்படி வாங்க முடியும். அப்போதெல்லாம் சிவன் கோயில்களை சுற்றி நிறைய இலுப்பை மரங்கள் இருக்கும். ஏழை எளிய மக்களுக்கு அதுதான் இலவசமாக விறகுகளை காய்ந்து கீழே விழும் குச்சிகளை தரும். இப்போது அந்த மரங்கள் வெட்டப்பட்டும், மீதி ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி விட்டன . சற்று வருமானம் கூட பெற்றவர்கள் உமி அடுப்பும், அதற்கு மேல் இருந்தவர்கள் மண்ணெண்ணை ஸ்டவ் அடுப்பும் வைத்திருந்தார்கள்.
1980களில் சாண எரிவாயு பிரபலமானது. அதற்கு மான்யத்தோடு வங்கிகள் கடனும் கொடுத்தன. 3 க்கு மேற்பட்ட மாடுகள் வைத்திருந்த பலர் தங்கள் வீடுகளில் சாண எரிவாயு அடுப்பை பயன்படுத்த ஆரம்பித்தனர். கோடைக்காலங்களில் நன்றாகவும் குளிர்காலங்களில். சுமாராகவும் பயன்பட்டதால் பின்னாளில் அது கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது. 100 நாள் வேலை வந்த பிறகு சாதாரண மனிதர்களும் கேஸ் அடுப்புக்கு மாறிவிட்டார்கள். சிலிண்டர் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த போதிலும் பயன்பாடு குறையவில்லை. நேற்றைய சாண எரிவாயு குறித்த புதிய கண்டுபிடிப்புகள் இந்த நேரத்தில் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணையை நம்பி சாகுபடி வேலைகளை மே மாத இறுதியிலே தொடங்குவார்கள். ஆட்டுக்கிடை, மாட்டுக்கிடை வயல்களில் போடப்படும். வண்டி வண்டியாக சாம்பல் எரு கொண்டு போய் கொட்டுவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் எருக்குழி நிச்சயம் இருக்கும். அடுப்பு சாம்பல் இலை தழைகள் அதில் கொட்டி நன்கு மக்கிப்போகும்படி செய்வார்கள். அதிகமாக இயற்கை சார்ந்த விவசாயம் நடந்து கொண்டு இருந்தது. தண்ணீருக்கான பிரச்சனைகள் அதிகம் எழவில்லை. குறுவை, தாளடி என்று இரு போகம் நெல் சாகுபடியும் சில நிலங்களில் சம்பா என்ற ஒரு போகம் சாகுபடியும் செய்து வந்தார்கள். பிப்ரவரி கடைசியில் உளுந்து, பயிறு தெளித்து ஏப்ரல் மாதம் அதை எடுக்கும் பணிகள் தொடங்கும். விளை நிலங்களை தெய்வமாக போற்றி வழிபட்டு வந்தார்கள். அதனால்தான் வயலில் யாரும் செருப்பு போட்டு நடக்கமாட்டார்கள்.
Also Read
விதை தெளிப்பதற்கு முன்பு நல்ல நாள் பார்த்து ஐயரை அழைத்து விதை முகூர்த்தம் நடத்துவார்கள். 1970 களில் விவசாயக் கூலி நிலவரம் ஆண்களுக்கு ரூ.7.00 பெண்களுக்கு ரூ.5.00/- வயல்களில் நடவு வேலைப் பார்த்துக்கொண்டே பெண்கள் பாடும் பாட்டு கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கும். "தன்னே நானே தானே நானே..." ராகம் இதுவென்று அறியாத பாமரமக்கள் பாடும் பாட்டை அப்படியே 'சேரன் பாண்டியன்' படத்தில் பாடலை இயற்றி இசையமைத்து தமிழகம் முழுவதும் ஒலிக்க/ஒளிக்க விட்டார் இசையமைப்பாளர் சௌந்தர்யன். இன்று ரியல் எஸ்டேட் வியாபாரிகள் எடுத்துக்கொண்டது போக மீதமுள்ள வயல்களில் இயந்திரம் மூலம் சிலர் நடவு நடுகின்றனர். மற்றவர்கள் ஆட்களை நம்பி இருக்கிறார்கள். ஆனால் அந்த 'தன்னே நானே' மட்டும் காணாமல் போய்விட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
"மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைக்கட்டி போரடித்த தென்மதுரை" என்று 'அல்லி அரசாணி மாலை' யில் வரும் பாடல் இன்று பழம்பெருமை மட்டுமே பேசும் நிலைக்கு தள்ளப்பட்டது. அறுவடைக்கும் இப்போது இயந்திரம் வந்துவிட்டது. பள பளவென்று பொழுது விடியும் வேளையில் கையில் கதிர் அரிவாளோடு வயலில் இறங்கும் விவசாயிக்கு இப்போது அந்த வேலை கிடையாது. முன்பு விவசாயத்தில் மறைமுக வேலைவாய்ப்பின்மை (DISGUISED UNEMPLOYMENT) இருந்தது. இப்போது உண்மையான வேலையில்லாத் திண்டாட்டம் அறுவடை காலத்தில் வந்துவிட்டது. அறுவடை, போரடித்தல் என்று தொடர் விவசாயப் பணிகள் இருந்ததால் அக்டோபர் மாதம் முழுவதும் வேலை பார்த்து கிடைத்ததை சேர்த்து வைத்து அடுத்து வரும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவார்கள். அதற்கான வாய்ப்புகள் சுத்தமாக இல்லை. இவர்களில் சிலர் வேலை வாய்ப்பு தேடி திருப்பூர் பக்கம் சென்றுவிட்டார்கள். விவசாயம் நவீன மயமாகப் போனதால் பல நல்ல விஷயங்கள் இல்லாமல் போய்விட்டது.

இயற்கையோடு இணைந்து பணியற்றுவது குறைந்து போனது. ரசாயான உரங்கள் ஆட்சிக்கு வந்தன. விவசாயத்தை ஊக்குவிக்க வங்கிகள் கடன்கள் கொடுக்கின்றன. திருப்பி செலுத்தும் பழக்கம் குறைந்து கொண்டே போகிறது. தள்ளுபடி அறிவிப்புகள் பற்றி அரசியல்வாதிகள் அடிக்கடி பேசி வந்த காரணத்தால் டெல்டா மாவட்டங்களில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள வாரக்கடன்களில் விவசாயக் கடன்களே முதலிடத்தில் இருக்கின்றன. மழை வெள்ளம் பாதிப்பு இல்லாத காலங்களில் கூட வாங்கிய கடன்கள் முறையாக திருப்பி செலுத்தப்படுவதில்லை.
வாராக்கடன்கள் தொடர்ந்து அதிகரித்த காரணத்தால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெரிய வங்கிகளோடு இணைக்கும் நிலை உருவானது. பாரம்பரியம் கலந்த பழைய முறையோடு நவீன முறையும் கலந்து மீண்டும் விவசாயம் தொடங்கினால் அது அனைவருக்கும் நல்லது. மீண்டும் ஒரு பசுமைப்புரட்சி வரவேண்டும். அதோடு வாங்கிய கடனை திருப்பி செலுத்தவேண்டும் என்ற மன உறுதியும் வரவேண்டும்.
4 கிலோ மீட்டர் நடந்து போயி படிச்சவன் நான் என்று சொல்லும் தாத்தாக்களை பாத்திருக்கோம். பின்னர் நடைப்பயணம் மாறி சைக்கிள் பயணம் ஆரம்பமானது. ஓரளவு வசதி படைத்தவர்கள் சைக்கிள் வைத்துக்கொண்டார்கள். சாதாரண மக்கள் வாடகை சைக்கிளில் பயணம் செய்தார்கள். சொந்தமாக ஏதாவது தொழில் தொடங்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மனதில் முதலில் வருவது பெட்டிக்கடை மற்றும் சைக்கிள் கடை.
1970 களில் மணிக்கு 15 காசுகள் வாடகை வாங்குவார்கள். பஞ்சர் ஓட்ட 50 காசு. அப்போது சைக்கிளில் இரண்டு பேர் பயணம் செய்வது குற்றமாகும். பாண்டிச்சேரியில் அப்படி இல்லை. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்த பிறகு சைக்கிளில் இருவர் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர்கள் முக்கால்வாசி பேர் அப்போது சைக்கிளில்தான் கல்லூரிக்கு வருவார்கள்.

"ஒன்று எங்கள் ஜாதியே.. ஒன்று எங்கள் நீதியே..." "வந்த நாள் முதல் இந்த நாள் வரை.." "சந்திப்போமா இன்று சந்திப்போமா... " -தத்துவப்பாடல்கள் முதல் காதல் பாடல் வரையில் சைக்கிள் துணையாக வந்தது அக்கால திரைப்படங்களில். 1980 க்குப் பிறகு TVS 50 பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. இன்று சைக்கிளில் பயணிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
பைக்கிள் பறப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். சென்னையிலிருந்து மதுரைக்கும், கும்பகோணத்தில் இருந்து பெங்களூருக்கும் பைக்கிள் அதுவும் கணவன் மனைவி இருவருமே பயணிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்கள் எனக்கு சொந்தக்காரர்கள். பின்னாள் வரப்போகும் அவஸ்தைகளை உணராமலே நீண்டதூர பயணம் மேற்கொள்கிறார்கள்.
திருமணம் என்று வரும்போது மாப்பிள்ளைக்கு கட்டாயம் ஒரு லட்சம் கொடுத்து பைக் வாங்கிக்கொடுக்கிறார்கள். கடன் வாங்கி பெண்ணின் திருமணத்தை முடிப்பவர்கள்கூட தவிர்க்க முடியாமல் இதனைச் செய்கிறார்கள். மாப்பிள்ளை எந்த வேலையில் இருந்தாலும் இது கட்டாயமாக நடைபெற்று வருகிறது. அனைத்து சாலைகளிலும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அதிகமாக ஆக்கிரமிக்கின்றன. போதாக்குறைக்கு பல தனியார் நிதி நிறுவனங்கள்/வங்கிகள் தவணை முறையில் கடன் கொடுத்து ஊக்குவிக்கின்றன. பெட்ரோல் டீசல் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போகிறது. விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. இருந்தாலும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் குறையவில்லை.

இரு சக்கர வாகன பயன்பாடு அதிகரித்துக்கொண்டே போவதால் பொதுப்போக்குவரத்து பயன்பாடு படிப்படியாக குறைந்து போகும். ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் போக்குவரத்துத்துறை மேலும் மேலும் நலிவடைந்து போகும். பொருளாதாரம் பாதிக்கப்படும்.
புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாமல் போகும். உலக வெப்பமயமாதல் பிரச்சனைக்கு தீர்வு தேட தேவையில்லாமல் அதிக கவனம் செலுத்தவேண்டி வரும். இது குறித்து 1997 ஆம் ஆண்டில் ஜப்பானில் உள்ள க்யோட்டா நகரில் 160 நாடுகள் விவாதித்தது பற்றியும் பசுமை இல்ல வாயுக்கள் (GREEN HOUSE GAES).எனும் கழிவு வாயுக்கள் பற்றியும் சுஜாதாட்ஸ் புத்தகத்தில் திரு.சுஜாதா அவர்கள் விளக்கியுள்ளார். கழிவு வாயுக்கள் அதிகமாக காற்றில் கலந்து மாசு ஏற்படுத்துகின்றன. உலக சுகாதார அமைப்பு பலமுறை காற்று மாசு படுதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். நல்ல சுற்றுப்புறம் வேண்டுமென்றால் நாம் நேற்று பயணித்த சைக்கிளுக்கு 'முதல் மரியாதை' செய்ய வேண்டும். அப்போது சந்தோஷம் நம்மை தேடி வந்து 'அந்த நிலா' வ கையில பிடிக்கச் சொல்லி அன்புக்கட்டளை இடும்.
இயற்கையை ரசிக்க ஆரம்பித்தால் மனசு எப்பவும் லேசாக இருக்கும். அதிலும் குறிப்பாக பூக்களை ரசிக்க ஆரம்பித்தால் பூ மனம் - மென்மையான மனம் நமக்குள் உருவாகிவிடும் அப்புறம் எங்கேயிருந்து பிரஷர்....சுகர்...? மாடித்தோட்டத்தில் மலர்த்தோட்டம் வளர்த்தால் வீடே மணக்க ஆரம்பித்து விடும்.
இசையும் நமக்கு ஒரு தோழன்தான். அதிலும் புல்லாங்குழல் உயிர்த்தோழன். அதனால்தான் கண்ணதாசன் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களிடம் புருஷோத்தமன் புகழை பாடச் சொன்னார். இளையராஜாவின் பல பாடல்களில் புல்லாங்குழல் மட்டும் ஓங்கி மென்மையாக ஒலிக்கும். 'சின்னக்கண்ணன் அழைக்கிறான்...அள்ளி வச்ச மல்லிகையே...பூங்காற்று திரும்புமா...என்று சில இனிமையான பாடல்களை உதாரணமாக சொல்லலாம். பின்னணி இசையிலும் புல்லாங்குழலை அவர் அதிகமாக பயன்படுத்துவார். பூவையும் புல்லாங்குழல் இசையும் ரசிக்க கற்றுக்கொண்டால் ஒவ்வொரு நாளும் நமக்கு இனிமையாக இருக்கும்.

நேற்று என்பது நம் வீட்டில் இருக்கும் மிகப்பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி போன்றது. அது நமது இன்றைய பிம்பத்தை மட்டுமே பிரதிபலிக்கும். நேற்றைய நமது நிலையை சொல்லாமல் சொல்லும். மாற்றங்களை புரிய வைக்கும். நாம் வெளியில் செல்லும் முன்பு வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறோமோ இல்லையோ நிச்சயம் அந்த கண்ணாடியிடம் சொல்லிவிட்டுதான் செல்வோம்.
நமது சுயசரிதையை நாம் எழுதாவிட்டாலும் 'நேற்று' என்பது சொல்லாமலே எழுதி வைக்கும். நாம்தான் அதனை படிக்க நேரமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறோம். நாளை ஒரு அரசியல்வாதி வந்து தங்களின் இன்றைய நடவடிக்கைகளுக்கு நேற்றைய பேச்சு இடைஞ்சலாக இருக்குமே என்று கருதி நேற்று என்பதே இல்லாமல் போக ஏதாவது செய்ய நினைக்கலாம். அதற்குள் நாம் நமக்கான 'நேற்று' பதிவை சேமித்து வைத்து நம்மை தினசரி சரி செய்து கொள்ளவேண்டும். அப்படி ஒவ்வொரு வரும் நினைக்கத்தொடங்கினால் நேற்றும் இன்றும் இணைந்து செயல்பட்டு 'நாளை' ஒரு புதிய வல்லரசு இந்தியா உருவாகும்.
-திருமாளம் எஸ்.பழனிவேல்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.