Published:Updated:

ஊரான் உடைமை! | My Vikatan

Representational image

CGST, SGST என்று எல்லாம் வக்கணையாக பரிமாறப் பட்டிருந்தது. தவறுதலாக நூறு ரூபாய் அதிகமாகக் கொடுத்துவிட்டார். பக்கத்து மேசையில் காத்திருப்பவர்களுக்கு எடுத்துவர உள்ளே சென்ற சர்வர் இன்னும் திரும்பவில்லை.

ஊரான் உடைமை! | My Vikatan

CGST, SGST என்று எல்லாம் வக்கணையாக பரிமாறப் பட்டிருந்தது. தவறுதலாக நூறு ரூபாய் அதிகமாகக் கொடுத்துவிட்டார். பக்கத்து மேசையில் காத்திருப்பவர்களுக்கு எடுத்துவர உள்ளே சென்ற சர்வர் இன்னும் திரும்பவில்லை.

Published:Updated:
Representational image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

சிற்றுண்டியை அடுத்து பில்டர் காபியும் முடித்தபின், பரிமாறிய சர்வர் பில்லை கொண்டு வந்தார். நானும் மனைவியும் சாப்பிட்டுவிட்டு, பேரக் குழந்தைகளுக்கு நொறுக்குத்தீனிகள் வாங்கிய வகையில் ரூ.380/- என்றிருந்தது. சரிபார்த்தபின், ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை வைக்க, எடுத்துச்சென்றவர் ரூ.220/-மீதி கொண்டு வந்து வைத்தார்., சமீபகாலமாக கண்ணாடியை மாற்றுங்கள் என்று என் மனைவி அடிக்கடி சொல்லிவருவதால், நான்தான் சரியாக பார்க்க வில்லையோ என்று, கண்ணாடியைக்கழற்றி, கைக்குட்டையால் நன்கு துடைத்துக்கொண்டு, பில்லைப்பார்த்தேன். மீண்டும் ஒருமுறை வாய்விட்டு கூட்டிப்பார்த்தேன்.

CGST, SGST என்று எல்லாம் வக்கணையாக பரிமாறப் பட்டிருந்தது. தவறுதலாக நூறு ரூபாய் அதிகமாகக் கொடுத்துவிட்டார். பக்கத்து மேசையில் காத்திருப்பவர்களுக்கு எடுத்துவர உள்ளே சென்ற சர்வர் இன்னும் திரும்பவில்லை. தவறுதலாக கூடுதலாகக்கொடுத்த தொகையினை நைசாக பாக்கெட்டில் போட்டுக்கொள்ளும் பழக்கம் எனக்கில்லை. சிறுவயதில் கற்பிக்கப்பட்ட பாலபாடத்தின்படிதானே, நாம் எப்போதும் நடந்துகொள்வோம். மின்வெட்டு போல், மலரும் நினைவுகளிருந்து ஓரிரு காட்சிகள் மனக்கண் முன்னே வந்து மின்னி மறைந்தன.

Representational Image
Representational Image

பள்ளியில் படிக்கும்போது, முதன்முதலாக காய்கறிக்கடைக்காரர் மீதிக்கு அதிகமாகக்கொடுத்ததை வீட்டிற்கு எடுத்துவந்துவிட்டேன். அம்மாவோ, 'ஊரான் வீட்டுக்காசு நமக்கு எதற்கு? கொண்டுபோய் திருப்பிக்கொடுத்துவிட்டு வா!" என்றாள். "அவர் எல்லோரிடமும் அதிக லாபத்திற்காகத்தானே விற்கிறார். இந்த சிறுதொகை குறைந்ததால், அவருக்கு ஒன்றும் பெரிய நஷ்டமாகிவிடாது" என்று விவாதித்துப் பார்த்தேன். பயனில்லை. "மற்றவர்கள் செய்கிறார்களோ இல்லையோ: நாம் நாள்தோறும் நற்செயல்களை செய்து கொண்டும், நல்ல சொற்களை பேசிக்கொண்டும், நல்லெண்ணத்தை விதைத்துக்கொண்டும்தான் இருக்கவேண்டும்" என்று அறிவுறுத்தி அதிகமாகக்கொடுத்த தொகையை திருப்பிக்கொடுக்க, கடைக்கு அனுப்பினாள் மீதியை சரியாக எண்ணிப்பார்க்காமல் வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டேன் என்று கூறி அதிகமாக கொடுத்ததை திருப்பிக்கொடுக்க, அவர் வியப்புடன் என்னைப்பார்த்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அம்மா சொன்னது சரிதான் என்பதை பலமுறை கண்கூடாக கண்டிருக்கிறேன். கல்லூரிக்காலங்களில், ஒருமுறை பஸ்கண்டக்டர் மீதி சில்லறையை நிறுத்தத்தில் இறங்கும்போது திணித்துவிட்டு 'ரைட் ரைட்' என்று படியில் தொற்றிக்கொண்டு கிளம்பிய பின், அதிகமாக கொடுத்ததை, அடுத்து அவர் பணிமுறை வரும்போது, திருப்பிக்கொடுத்தேன். அதன் பின்னர் எப்போதும் என்னிடம் தொகையை முன்னதாக வாங்கிக்கொள்ளாமல் டிக்கட்டை கிழித்துக் கொடுத்துவிட்டு, பயணிகள் நெரிசலில் எல்லோருக்கும் டிக்கட் கொடுக்க போய்க் கொண்டேயிருப்பார். நான்தான் அவர் பின்னாலேயே போய் சில்லரையைக் கொடுத்துவிட்டு வரவேண்டியிருக்கும். நான் வேலை கிடைத்து வேற்றூர் சென்ற பின்புகூட அவர் நட்பு நீடித்தது.

Representational Image
Representational Image

வேலை என்றதும் நினைவுக்கு வருகிறது. அரசுப்பணி நியமன உத்தரவு இரண்டு துறைகளிலிருந்து வந்தது. ஒன்று, தினசரி அலுவல் செய்தாலே லஞ்சம் கிடைக்கக்கூடியது. இரண்டாவது, அதற்கு நேர்மாறானது. நான் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தேன். அப்பாவின் நண்பரின் மகன் அப்பாவிடம் சொன்னார். 'பொன் முட்டையிடும் வாத்தை இழந்துவிட்டான் உங்கள் மகன். அவன் இடத்தில் நான் இருந்திருந்தால், இப்படி முட்டாள்தனம் செய்திருக்க மாட்டேன்' அப்பாவும், பணம் சம்பாதிப்பதிலும் நேர்மை, நாணயம் தானே முக்கியம் என்று சொல்ல, அவரோ, ‘அவன் கொள்கைப்படியே, நேரடியாக யாரிடமும் கைநீட்டி கையூட்டு பெறத்தேவையில்லை. நாள் முடிவில், அவன் மேஜை டிராயரில், அவனுக்குரிய பங்கு தானே வந்துசேரும். என்ன செய்வது? வாய்ப்பை பறிகொடுத்துவிட்டான்' என்று ஆதங்கமாகக் கூறினார். ஆனால் எனக்கு இளமையில் சொல்லிக் கொடுத்தது பசுமரத்தாணிபோல் பதிந்து இருப்பதும், நான் அதன்படியே நடப்பதிலும், அப்பாவுக்கு பரிபூரண திருப்தி.

நேர்மையாக இருப்பதில் பெருமிதம் இருந்தாலும், அதற்காக கொடுக்கிற விலை மிகமிக அதிகம்தான்! நான் வேண்டுமானால் நேர்மையாக இருக்கலாம். ஆனால் மற்ற துறைகளில், நியாயமான ஒரு கோரிக்கை யுடனோ, விண்ணப்பத்துடனோ செல்லும் போதெல்லாம், அவர்களுக்கு கையூட்டு கொடுக்காததால் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டேன் என்பது கசப்பான அனுபவம். அவைகளைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தால் முடிவில்லாமல் நீண்டு கொண்டேபோகும். ஊழல் புரையோடிவிட்ட சமுதாயத்தில் நேர்மையானவர்கள் பைத்தியக்காரர்கள் போலத்தான். ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டு விட்டது என்பது வேதனையான உண்மை.

Representational Image
Representational Image

"என்னங்க! பில்லை அப்படி பாக்கிறீங்க?" என்று மனைவி கேட்டதும் நிகழ்காலத்திற்கு வந்தேன். சர்வரைக் கூப்பிட்டேன் அவர் ஏழ்மையை உத்தேசித்து ‘நூறு ரூபாயையும் அவருக்கு டிப்ஸ் ஆகக் கொடுத்தாலென்ன?’ என்றுகூட தோன்றியது. சீச்சீ! வேண்டாம். இன்னொருவர் ஏமாந்தால், அதை வைத்து நம்மை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்கோ, நம் சுயநலத்திற்கோ பயன்படுத்தக்கூடாது. அவரிடம் பில்லையும் மீதியையும் காண்பித்தேன். அப்படியே எடுத்துப்போய் கல்லாவில் உட்கார்ந்திருந்த மேனேஜரிடம் கொடுத்து சரியான மீதி வாங்கி வந்தார். அவருக்கு வழக்கமான டிப்ஸ் கொடுத்துவிட்டு வெளியேறும்போது, மேனேஜர் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக ஒரு புன்னகையை என் மீது வீசி வணக்கம் கூறினார். பதில் வணக்கம் கூறி வெளியேறினோம். நல்ல செயல் செய்த திருப்தியும், மகிழ்ச்சியும் மனதில் பரவியது.

வாழ்க்கையில் மகிழ்ச்சி தானே வருவதில்லை. நாம்தான் அதனை உருவாக்கிக்கொள்ளவேண்டும். வழக்கமான தினசரி அலுவல்களுக்கிடையே, இதுபோன்ற சிறு சிறு நிகழ்ச்சிகளால் கிடைக்கும் உற்சாகமும், மன நிறைவும், மகிழ்ச்சி அலைகளைப்பரவச் செய்யும்தானே! உலகம் பல்வேறு விதமான சிக்கல்கள் இல்லாத அந்த காலத்திலேயே, காலகட்டங்களுக்கேற்ப, பொல்லாததாகத்தான் இருந்து இயங்கி வருகிறது.

இன்னாது அம்ம இவ்வுலகம்!

இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே!

என்ற புறநானூற்றுப்பாடல் அதைத்தானே தெரிவிக்கிறது. வள்ளுவர் சொல்வாரே,

'நயனுடையான்' என்று: பலரும் விரும்பும் நற்பண்புடையவன், அவனிடத்தில் சேரும் செல்வம், ஊர் நடுவில் நல்லவர், கெட்டவர் எல்லோருக்கும் பயன் தரும், பழுத்துக்குலுங்கும் பழமரத்திற்கு ஒப்பாகுமாம். அவனிடத்தில் செல்வம் இருக்கிறதோ, இல்லையோ, நல்லியல்புகளுக்கு பஞ்சமிருக்காது அல்லவா? அது போதாதா? எனவே, நல்லொழுக்கத்தின் உன்னதத்தை பேணிக்காப்போம். இனியவற்றை என்றும் தேடிக்காண்போம். மகிழ்ச்சியை நாமும் பெற்று, பிறர்க்கும் பகிர்வோம்.

-தர்மபுத்ரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.