Published:Updated:

முதல் பருவமே முடியப் போகுது, இன்னும் நோட்டுகள் வழங்கல!- லாக் டெளனில் அரசுப் பள்ளிகள்

கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன என சொல்லப்பட்டாலும், செல்போன் வந்த பிறகு நகரத்தில் உள்ள மாணவ மாணவியர் கல்வித் தொலைகாட்சியை பார்ப்பதில்லை. அப்படியே பார்த்தாலும்..

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் 2021 மற்றும் 22ம் கல்வியாண்டில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும் அதில் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஒரு லட்சம் பேர் சேர்ந்திருப்பதாகவும் சமீபத்தில் கல்வி அமைச்சர் தெரிவித்தார். ஜூலை மாத இறுதி நிலவரப்படி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளி நோக்கி வந்திருக்கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

பொருளாதார இழப்பு, மூன்றாம் அலை குறித்த அச்சம், முந்தைய ஆண்டுகளில் தனியார் பள்ளிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை போன்றவை நடுத்தர மக்களை அச்சுறுத்த அரசுப் பள்ளிகளை இறுதிப் புகழிடமாய் நம்பி தஞ்சமடைந்துள்ளனர்.

ஜூன் மாத துவக்கத்தில் இருந்தே சேர்க்கை சூடு பிடிக்கத் தொடங்கியது.11 மாவட்டங்கள் ஜூலை 28ம் தேதி முதல் சேர்க்கைகளை ஆரம்பித்தன. மாற்றுச்சான்றிதழ் தேவையில்லை, சேர்க்கைக் கட்டணம் இல்லை என்ற அறிவிப்புகள் பெற்றோரை நிம்மதி பெருமூச்சு விட வைத்தன.

2019-20ல் துவங்கி 2021-22 வரை அரசுப் பள்ளிகளில் 5% சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், தனியார் பள்ளிகளில் 7% வரை சேர்க்கை குறைந்துள்ளதாகவும், 2.96% மாணவர்கள் தற்காலிக குழந்தை தொழிலாளர்களாகவும், 72% பேர் வீட்டில் பெரும்பகுதி நேரத்தை விளையாட்டில் கழிப்பதாகவும் அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சுட்டிக்காட்டிய ஆய்வில் தெரிவித்துள்ளது.

#நோட்டுகள் இல்லை


கொடி தந்தீர்

குண்டூசி தந்தீர்

சட்டை எங்கே?


எனும் வைரமுத்துவின் கவிதை போல சேர்க்கை சேர்ந்த பின் முதல் பருவம் முடியும் தருவாயில் ஆன பின்னும் இன்னும் நோட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால் ஆன்லைனில் பயில்வோரும், கல்வித் தொலைக்காட்சி பார்ப்போரும் கடைகளில் நோட்டுகளை வாங்கி எழுதுகின்றனர். கடந்த ஆண்டு முதல் பருவத்திற்கான நோட்டுகள் நவம்பர், டிசம்பர் மாதத்தில் தான் வழங்கினர். இந்த ஆண்டும் முதல் பருவம் முடிவதற்கு முன் வழங்குவார்களா என கேட்கின்றனர் பெற்றோர்கள். முந்தைய ஆண்டு நோட்டுகள், இருப்பில் உள்ள நோட்டுகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இருப்பதால் பள்ளிகளில் தருவதற்கு தயங்குகின்றனர் என்கிறார்கள். எனவே நோட்டுகள் கையில் கிடைத்தால் தான் நிதர்சனம் என்கின்றனர் பெற்றோர்கள்.

சேர்க்கைகள் முடிந்த பின் இரு மாதம் ஆகிய பின்னும் புதிதாய் சேர்ந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

#காலிப்பணியிடம்


முப்பந்தைந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டுமென அண்மையில் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் நகர்ப் பகுதிகளில் 60 பேருக்கு ஒரு ஆசிரியர்,சேர்க்கை அதிகமாய் இருக்கும் பள்ளிகளில் 90 பேருக்கு ஒரு ஆசிரியரும் உள்ளனர். 2014க்குப் பிறகு ஆசிரியர் நியமனமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு நடைபெறாததால் எவ்வளவு காலிப்பணியிடம் உள்ளது என்பதை கணக்கிட முடியாததாய் உள்ளது.

இப்போதைய காலகட்டத்தைப் பயன்படுத்தி ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் மாணவர் கல்வி நலன் பாதிக்காது என்கின்றனர் கல்வியாளர்கள்.

மேலும் காலிப்பணியிடம் எவ்வளவு இருக்கும் என்பதையும், உபரி ஆசிரியர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வ பணிகளை செய்ய முடியும்.

ஆட்சிப் பொறுப்பேற்ற அன்று விரைவில் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று கல்வியமைச்சர் தெரிவித்திருந்தார். வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வந்தால் அமைச்சரவை பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவடைய உள்ளது. வாரந்தோறும் புள்ளிவிபரம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆசிரியர்களைத் தான் நிரப்பவில்லை என்கின்றனர் தலைமையாசிரியர்கள்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

#எல்.கே ஜி, யூ கே.ஜி வகுப்புகள்

2019ம் ஆண்டு 2381 அரசு நடுநிலைப்பள்ளிகளில் செயல்படும் அங்கன்வாடிகளை எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளாக மாற்றியது அப்போதைய தமிழக அரசு. அப்போதைக்கு மாற்றுப்பணியில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து உத்தரவிட்டது.நடுத்தர குடும்ப பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால் இன்னும் முறையான ஆசிரியர்கள் நியமனங்கள் இல்லை.

தனியார் பள்ளியிலிருந்து வந்து சேர்ந்த சிலர் ஒரே மாதத்தில் மீண்டும் தனியார் பள்ளிக்கே மாறினர்.

இப்போது கொரொனா தொற்று காலமாக இருப்பதால் சிலர் மீண்டும் ஆர்வமாய் சேர்க்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டைப் போல் முறையான புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படவில்லை. இதனால் வெறும் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் தொடர்கின்றனர். கடந்த ஆட்சிகாலத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி வகுப்புகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பு கானல்நீராக உள்ளது. முறையாக அனைத்துப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் துவங்கினால் RTE சட்டப்படி தனியார்ப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு அரசு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதனால் அரசுக்கு நிதிச்சுமையும் குறையும்.

 அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

#விடுமுறை கால வகுப்புகள்

கல்வித் தொலைக்காட்சியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன என சொல்லப்பட்டாலும், செல்போன் வந்த பிறகு நகரத்தில் உள்ள மாணவ மாணவியர் கல்வித் தொலைகாட்சியை பார்ப்பதில்லை.

அப்படியே பார்த்தாலும் முக்கால் மணி நேரத்தில் பாடங்களையே முடித்துவிடுகின்றனர். ஒரே நாளில் பாடங்களை கல்வித் தொலைக்காட்சியில் முடிப்பதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பலருக்கு புரிவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இன்னும் சில பள்ளிகளில் வாட்ஸ் அப் மூலமும், கூகிள் மீட் மூலமும் வகுப்புகள் நடத்துகின்றனர். குழுவில் உள்ள சிலரின் பங்களிப்பால் குழு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிலர் வகுப்பில் இணைந்துவிட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் உள்ளதால் குறித்த நேரத்தில் வகுப்பினில் இணைய முடியவில்லை. இதனால் டிஜிட்டல் இடைவெளி கற்போரிடையே ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தினசரி காலை மாலை என ஐந்து வகுப்புகள் நடத்தி திணறடிக்க வைக்கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் பலருக்கு அடிப்படை திறன்களான வாசித்தல், கூட்டல், கழித்தல் ஆகியவற்றில் பின் தங்கியுள்ளனர். ஏழை மாணவர்கள் கூலித் தொழில் செய்து வருவதால் படிப்பை நிறுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே முதல் கட்டமாக கிராமப்புறங்களில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நகர்ப்புறங்களில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை அழைத்து கல்வியை துவங்கலாம் என யோசனை சொல்கின்றனர் கல்வியாளர்கள். அதன்படி 9முதல் 12ம் வகுப்புவரை 50% பேர் செப்டம்பர் முதல் அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

#கற்போர் எழுதுவோம்
கடந்த ஆண்டு எழுதப் படிக்கத் தெரியாத முதியவர்களுக்காக கற்போம் எழுதுவோம் திட்டம் துவங்கப்பட்டு தன்னார்வலர் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்த தன்னார்வலர்களுக்கு ஊதியம் இல்லை. அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் தான் ஊதியம் வழங்கினர். ஆர்வமில்லாத முதியவர்கள் வேண்டா வெறுப்பாக ஒரு சில இடங்களில் வந்தனர். அவர்களுக்கு ஜூலை மாதம் 29,30,31 ஆகிய தேதிகளில் தேர்வு வைக்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளிக்கும் 20 பேர் வீதம் தேர்வு எழுதினர். இவர்களின் விபரங்கள் அனைத்தும் அந்தந்த பள்ளியின் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடைபெற்றது.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

#அரசுப் பள்ளிகளின் நிலவரம்
ஆகஸ்ட் இரண்டு முதல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். EMIS மூலம் ஆன்லைன் வருகைப்பதிவு உள்ளதால் அனைவரும் காலையிலேயே வந்துவிடுகின்றனர். கொரொனா காலம் என்பதால் இன்னும் சேர்க்கை நடைபெறுகிறது. வாட்ஸ் அப் மூலம் பாடம் அனுப்பப்படுகிறது. கூகுள் மீட் மூலம் கலந்துரையாடுகின்றனர். கிராமத்தில் உள்ளோர் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்துவது,சந்தேகம் தீர்ப்பது என களத்தில் இறங்கியுள்ளனர். இந்த ஆண்டும் பதிவேடுகள் பராமரிக்க சொல்லியிருக்கின்றனர். சிலர் பதிவேடுகள் மட்டும் பராமரித்து வருகின்றனர்.

*பல்வேறு பகுதிகளில் வட்டாரக்கல்வி அலுவலர் பணியிட்ம் நிரப்பப்படாததால் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை கண்காணிக்க முடியாதநிலை.


*16 மாதங்களால் பள்ளிகள் திறக்கப்படாததால் பல்வேறு பள்ளிகளின் கட்டிடங்கள் பழுந்தடைந்துள்ளன.


*கடந்த காலங்களில் பள்ளி மானியத்தில் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் குறிப்பிட்ட கம்பெனிகள் தான் வழங்கும். இதனை மாற்றி தரமான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் பள்ளியின் மூலம் வாங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

#தனியார் பள்ளிகள்

கொரோனா காலம் சோதனை காலமாய் அமைந்தது தனியார் பள்ளிகளுக்குத் தான். மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை என சொன்னதால் பல்வேறு பெற்றோர்களும் நிலுவைத் தொகையை கூட செலுத்தாமல் சென்றுவிட்டனர். 75% கட்டணம், 85% கட்டணம் வசூலித்தாலும் ஆசிரியர்களுக்கு பகுதி ஊதியமே வழங்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், துப்புரவு பணியாளர் பலர் பணி இழந்தனர். ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நம்பி துவக்க வகுப்புகளில் நான்கு முதல் ஐந்து வகுப்புகள் நடத்துவதால் மனதளவில் சோர்ந்து விடுகின்றனர்.

பள்ளி திறந்தால் மட்டுமே கற்றலுக்கான சூழலை ஏற்படுத்த முடியுமென கல்வித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்திருப்பது முக்கியமானது. ஆகவே உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் பள்ளி செயல்பட வேண்டுமென்பதே பல பெற்றோர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


-நிரஞ்சனா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு