Published:Updated:

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த எளியவனின் சில கோரிக்கைகள்! | My Vikatan

அரசுப் பள்ளி மாணவர்கள்!

தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம் என்று பலதரப்பட்ட காரணங்கள் பொதுமக்களால் கூறப்படுகின்றன. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த என்னுடைய சில கோரிக்கைகளை இங்கு பகிர்கிறேன்.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த எளியவனின் சில கோரிக்கைகள்! | My Vikatan

தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம் என்று பலதரப்பட்ட காரணங்கள் பொதுமக்களால் கூறப்படுகின்றன. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த என்னுடைய சில கோரிக்கைகளை இங்கு பகிர்கிறேன்.

Published:Updated:
அரசுப் பள்ளி மாணவர்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

தமிழ்நாடு முழுவதும் 40 அரசுப்பள்ளிகள் மூடல் மற்றும் 669 அரசுப்பள்ளிகளில் ஒற்றை எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை என்ற சமீபத்திய செய்தியை பார்க்கும்போது வேதனையாக இருந்தது. தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம் என்று பலதரப்பட்ட காரணங்கள் பொதுமக்களால் கூறப்படுகின்றன. அரசுப்பள்ளிகளை மேம்படுத்த என்னுடைய சில கோரிக்கைகளை இங்கு பகிர்கிறேன்.

அரசுப்பள்ளி மணவர்கள்
அரசுப்பள்ளி மணவர்கள்

1. பள்ளிப்பாட புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சமகால சாதனையார்களின் அனுபவங்களை தொகுத்தல்
அழகிய பெரியவன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கே.வி. ஷைலஜா, தமிழ்நதி போன்ற பல இலக்கிய துறை சாதனையாளர்களின் பெயர்கள், மாரியப்பன் தங்கவேலு, விஸ்வநாதன் ஆனந்த் போன்ற விளையாட்டுத்துறை சாதனையாளர்களின் பெயர்கள், ஏ.ஆர். ரகுமான், இளையராஜா போன்ற இசைத்துறை கலைஞர்களின் பெயர்கள், மயில்சாமி அண்ணாத்துரை, சிவன் போன்ற அறிவியல் துறை சாதனையாளர்களின் பெயர்கள், செழியன், அஜயன் பாலா போன்ற திரைத்துறை சார்ந்த சாதனையாளர்களின் பெயர்கள், நர்த்தகி நடராஜ் போன்ற நடன கலைஞரின் பெயர் போன்ற நம் கண்முன்னே நமக்கு முன்னோடியாக வாழும் பலதரப்பட்ட சாதனையாளர்களின் பெயர்கள் பள்ளிப்பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. பள்ளிப்பாட புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும் நிகழ்கால சாதனையாளர்களிடம்

அவர்கள் உடைந்து அழுத தருணங்கள்

*தற்கொலைக்கு முயன்று பிறகு அதிலிருந்து மீண்ட தருணங்கள்

*தோல்விகளை எதிர்கொண்ட தருணங்கள்

*வெற்றியின் முதல் படியை தொட்ட, அடுத்தடுத்த வெற்றியை அனுபவித்த தருணங்கள்

*தங்களது துறையில் சாதிக்க எப்படி ஆர்வம் வந்தது... அதை உணர்ந்த தருணங்கள்

*குடும்பம் அடைந்த உயிர் இழப்பு, வறுமை போன்றவற்றை கடந்து வந்த தருணங்கள்


போன்ற அனுபவங்களை ஒரே கட்டுரையில் இடம்பெறும் வகையில் உணர்ச்சிகரமாக எந்த ஒளிவுமறைவுமின்றி எளிய முறையில் எழுதி தர சொல்லி பள்ளி பாடபுத்தக சாதனையாளர்களிடம் அரசு கோரிக்கை வைக்கலாம். அவ்வாறு அந்த சாதனையாளர்கள் எழுதி தந்த வாழ்க்கை அனுபவ கட்டுரைகளை ஒரு புத்தகமாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொகுத்து ஒவ்வொரு அரசுப்பள்ளிகளுக்கும் ஐம்பது புத்தகங்கள் என்ற முறையில் அரசு அனுப்பி வைக்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாட வேளையில் போர் அடிக்கிறது என்று மாணவர்கள் உணரும் தருணத்தில் அல்லது ஆசிரியர் விடுப்பு, ஆசிரியருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தருணத்தில் அந்தப் புத்தகத்தை மாணவர்களிடம் கொடுத்து ஒவ்வொரு மாணவர் ஒவ்வொரு கட்டுரை என்ற முறையில் அனைத்து மாணவர்களுக்கும் கேட்கும்படி சத்தமாக வாசிக்க வைக்கலாம். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு இக்கட்டான சூழலை கடந்து வரும் திறன், தற்கொலை எண்ணத்தை தவிர்க்கும் திறன், கடுமையான சூழலையும் கடந்து சாதிக்கும் திறன் போன்ற பல திறன்கள் வளரும்.

அரசுப்பள்ளி மாணவர்கள்!
அரசுப்பள்ளி மாணவர்கள்!

2. அரசுப்பள்ளியில் படித்து/அரசுப்பள்ளியில் பணியாற்றி மத்திய மற்றும் மாநில அரசு விருது பெற்றவர்களின் அரசுப்பள்ளி அனுபவங்களை தொகுத்தல்.

எழுத்தாளர் இமையம், எழுத்தாளர் சோ.தர்மன், எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ போன்றோர் இலக்கியத்திற்கான மத்திய அரசின் சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள். ஆனால் இவர்களின் பெயர்கள் பள்ளிப்பாட புத்தகங்களில் இடம்பெறவில்லை.

(2018க்குப் பிறகுதான் இவர்களுக்கு விருது வழங்கப்பட்டது என்பதால் சேர்க்க இயலாமல் போயிருக்கலாம்). மூவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால் மூவருமே அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.

சமீபத்தில் தமிழக அரசின் இலக்கிய மாமணி விருது பெற்ற எழுத்தாளர் கோணங்கி முன்னாள் அரசுப்பள்ளி மாணவர். அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இதே போல அரசுப்பள்ளியில் படித்து கலைமாமணி போன்ற தமிழக அரசின் விருது பெற்ற சாதனையாளர்கள், அரசுப்பள்ளியில் படித்து உயர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் போன்றோர்களின் அரசுப்பள்ளி வாழ்க்கை குறித்த நிறை குறைகளை, அரசுப்பள்ளியில் கிடைத்த பாராட்டுக்களை அவமானங்களை போன்றவற்றை கட்டுரைகளாக எழுதி தர சொல்லி அக்கட்டுரைகளை பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தகமாக தொகுத்து அரசுப்பள்ளிகளுக்கு வழங்கி ஆசிரியர் இல்லாத நேரங்களில் ஒவ்வொரு கட்டுரையையும் ஒவ்வொரு மாணவரை எழுப்பி அனைவருக்கும் கேட்கும்படி சத்தமாக வாசிக்க வைக்கலாம்.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

3. நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்களின் அனுபவங்களை தொகுத்தல்

"தங்க மீன்கள்" திரைப்படத்தில் "நல்லாசிரியர்" விருது வாங்கிய ஒருவர் தன் பேத்தியை தனியார் பள்ளியில் சேர்த்துவிட சொல்வதை காட்சியாக வைத்திருப்பார் இயக்குனர் ராம். நல்லாசிரியர்களே இன்று மனம் தளரும் அளவுக்கு தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அளவு கடந்துள்ளது. நம் தமிழகத்திலிருந்து நல்லாசிரியர் விருது பெற்ற (மத்திய அரசு கொடுக்கும் விருது) அத்தனை ஆசிரியர்களிடமும் தங்களது ஆசிரியப்பணி வாழ்க்கை அனுபவங்களை, சவால்களை சந்தித்ததை, ஆசிரியர்களுக்குள் நிகழும் சாதிய பாகுபாட்டை கடந்து சாதித்ததை, குடியரசு தலைவரிடம் விருது வாங்கிய தருணத்தை தொகுத்து கட்டுரைகளாக எழுதி தர சொல்லி அவற்றை பள்ளிக்கல்வித்துறை சார்பில் "நல்லாசிரியர்" என்ற பெயரில் புத்தகமாக தொகுத்து அந்தப் புத்தகங்களை தமிழகத்தில் உள்ள அத்தனை அரசு ஆரம்பப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் கைகளில் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.

4. ஒவ்வொரு அரசுப்பள்ளிக்கும் தனித்தனி இணையதளம் தொடங்குதல் அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் தங்களது கல்லூரி மாணவர்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் வகையில், முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும் வகையில் தனி இணையதளம் தொடங்கி நிர்வகித்து வருகின்றன. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றிற்கு தனித்தனி இணையதளம் உள்ளது. மலர் மன்னன் மெட்ரிக் பள்ளி என்றால் www.malarmannanschool.com என்று இணையதளம் உள்ளது. அந்த இணையதளத்திற்குள் சென்றால் அந்தப் பள்ளியின் உட்கட்டமைப்பு, பள்ளியின் சாதனைகள் போன்றவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அது போல தமிழகத்தில் உள்ள அத்தனை அரசு ஆரம்பப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி அனைத்திற்கும் தனித்தனி இணையதளம் (உதாரணம்: மோகனூர் மேல்நிலைப்பள்ளி என்றால் www.mohanurghss.com என்று) தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கப்பட்ட இணையதளத்தில் "வரலாறு" என்ற தலைப்பை வைத்து அதில் பள்ளி தொடங்கப்பட்ட வரலாறு... உதாரணத்திற்கு காமராசர் திறந்து வைத்த பள்ளி, கருணாநிதி திறந்து வைத்த பள்ளி போன்ற பள்ளி திறக்கப்பட்ட தகவல்களை அப்போது நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவங்களை, பள்ளிக்கு நிலம் தானமளித்தவர்கள் பற்றிய தகவல்களை, பள்ளி உருவாக நன்கொடை அளித்தவர்கள் பற்றிய தகவல்களை இடம்பெற செய்யலாம்.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

அதே இணையதளத்தில் "ஆசிரியர் சாதனைகள்" என்ற தலைப்பை வைத்து அதன் கீழ், தொடர்ச்சியாக தங்களது பாடத்தில் தோல்வியே இல்லாமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய வைத்த ஆசிரியர்கள், தங்களது பாடத்தில் 100/100 எடுக்க வைத்த ஆசிரியர்கள், சிறந்த ஆசிரியர் என்ற முறையில் அவர்கள் வாங்கிய தனியார் பத்திரிக்கை நிறுவன விருதுகள், அரசு விருதுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

"விளையாட்டு சாதனைகள்" என்ற தலைப்பை வைத்து அப்பிரிவின் கீழ், பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகள் மற்றும் கராத்தே, சிலம்பம் போன்ற போட்டிகளில் வாங்கிய மாநில, மாவட்ட, வட்டார அளவிலான வெற்றி சாதனைகளை பதிவிடலாம்.

"கலை - இலக்கிய போட்டி சாதனைகள்" என்ற தலைப்பை வைத்து அதன் கீழ், மாவட்ட மாநில வட்டார பள்ளி அளவிலான கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினா, ஓவியப்போட்டி, இதர கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களின் சாதனைகளை பதிவிடலாம்.

"பள்ளியின் முதல் மூன்று இடம்" என்ற தலைப்பை வைத்து அதன் கீழ், இதுவரை பத்தாம் வகுப்பு, பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் பற்றிய தகவல்களை பதிவிடலாம்.

அரசுப்பள்ளி மாணவர்கள்
அரசுப்பள்ளி மாணவர்கள்

"பள்ளி உருவாக்கிய சாதனையாளர்கள்" என்ற தலைப்பை வைத்து அதன் கீழ், அப்பள்ளியில் படித்து மருத்துவராக, பொறியாளராக, பத்திரிக்கையாளராக, எழுத்தாளராக, வழக்கறிஞராக, ஆராய்ச்சியாளராக, அரசு அதிகாரியாக உயர்ந்தவர்கள் பற்றிய விவரங்களை பதிவிடலாம்.

இவ்வாறு ஒவ்வொரு அரசுப்பள்ளிக்கும் தனித்தனி இணையதளம் தொடங்கி அதில் அப்பள்ளியின் கடந்தகால சாதனைகள், நிகழ்கால சாதனைகள் போன்ற தகவல்களை தொடர்ந்து அப்டேட் செய்து வந்தால் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் காலங்களில் பெற்றோர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

5. "அரசுப்பள்ளி சாதனையாளர்கள்" என்ற சமூக வலைதள பக்கத்தை/ இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொடங்குதல்

"Chief minister of Tamilnadu" என்று முதல்வருக்கென பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்களில் தனி கணக்கு உள்ளது. அதில் தினந்தோறும் முதல்வரின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன. அதுபோல "proud of government school" என்ற இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கம் தொடங்கப்பட்டு அதில் தினந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டி, இலக்கிய போட்டி, இதர சிறப்பான நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர் குறித்த விவரங்கள், அரசுப்பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட வேண்டும். அதற்கென ஒரு மின்னஞ்சல் முகவரி உருவாக்கினால் தங்களது பள்ளி சாதனைகள் குறித்து தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க அது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டால் பொதுமக்களால் கவனிக்கப்படும். சாதிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் ஊக்கமாக இருக்கும். (ஏற்கனவே இருக்கும் "தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை" என்கிற முகநூல் பக்கத்தை முறைப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.)

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து

6. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி

ஈரோடு பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் மாவட்டம் மூப்பர் காலனி ஊச்சம்பட்டு அரசு ஆரம்பப்பள்ளி போன்ற சில அரசுப்பள்ளிகளில் பள்ளி மாணவர்களுக்கென்றே தனியார் பள்ளியில் இருப்பது போல் மஞ்சள் நிற பேருந்து வாங்கி தந்து "அரசு மேல்நிலைப்பள்ளி வாகனம்" "அரசு தொடக்கப்பள்ளி வாகனம்" என்ற பெயருடன் பயணிக்க வைத்துள்ளனர் அப்பள்ளிகளின் முன்னாள் மாணவர்களும் அப்பள்ளி ஆசிரியர்களும்.

*"அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள்"

*"தேர்வு நேரத்தில் அரசுப் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்து கையை உடைத்துக்கொண்ட மாணவன் - உயிரிழந்த மாணவன்"

*"அரசுப் பேருந்தில் இடம் கிடைக்காததால் மினி ஆட்டோவில் லிப்ட் கேட்டு சென்று விபத்தில் சிக்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்"

*"படியில் இருந்து தவறி விழுந்த மாணவி"

*"மது அருந்திய பயணியால் உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி"

*"ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தகாத வார்த்தையால் பேசி தாக்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்",

*"நிறுத்தாமல் சென்ற பேருந்தை துரத்திச்சென்று வழிமறித்து சாலை மறியல் செய்த மாணவ மாணவிகள்"

*"படியில் தொங்கிச் சென்ற மாணவனின் பை கிழிந்து சாலையில் சிதறிய புத்தகங்கள்" போன்று அரசுப்பள்ளி மாணவர்கள் சந்திக்கும் பயணங்கள் குறித்தான செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற செய்திகள் வராத வகையில், அனைத்து அரசு ஆரம்பபள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மஞ்சள் நிற பேருந்துகள் வாங்க வேண்டும். அந்த மாதிரி பள்ளி பேருந்துகள் வாங்க தேவையான நிதியை முழுவதுமாக அரசு ஒதுக்குமா என்பது கேள்விக்குறி.

ஆதலால் அரசு சார்பில் ஓரளவுக்கு நிதியும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் போன்றோர் (விருப்பமிருந்தால்) ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை நிதியும் அளிக்கலாம். அப்பள்ளியில் படித்து நல்ல நிலைமையில் இருக்கும் முன்னாள் மாணவர்களும் ஊர்ப்பொதுமக்களும் தங்களால் முடிந்த நிதி அளித்து பள்ளி வாகனம் வாங்கலாம்.

அதேபோல பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் குடிநீர் வசதி சரியாக இருப்பதில்லை. தண்ணீர் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுவதுமில்லை. ஆதலால் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் water dispenser கிடைக்க செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

7. அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தனியார் கல்வி நிறுவன மற்றும் இதர நிறுவன விளம்பரங்களை தவிர்த்தல்

அரசுப்பள்ளி சுற்றுச்சுவரில் எந்த ஒரு கட்சியின் விளம்பரமோ அல்லது தனியார் பள்ளிகளின் விளம்பர போஸ்டரோ விளம்பர பலகையோ, அட்டையோ எதுவும் இடம்பெறக் கூடாது, மீறினால் அந்த தனியார் பள்ளிக்கு அபராதம் விதிக்கப்படும் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். அரசு பேருந்துகள் மற்றும் இதர அரசு அலுவலக சுற்றுச்சுவர்கள் மீது தனியார் பள்ளிகளின் விளம்பர பலகைகள், தனியார் கோச்சிங் மையங்களின் (NEET, JEE) விளம்பர பலகைகள், போஸ்டர்கள் இடம்பெற கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். அரசு அதிகாரிகள்... தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகள், தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையங்கள் போன்றவற்றிற்கு சிறப்புரை ஆற்ற செல்லக்கூடாது என்றும் மீறினால் சஸ்பெண்ட் செய்யப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மாறாக அரசு சார்பில் போட்டித்தேர்வு மையங்கள் தொடங்கப்பட வேண்டும். நூலகங்களை பயன்படுத்தி போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்த அங்கு அரசு அதிகாரிகள் சிறப்புரை ஆற்ற முன்வர வேண்டும். தமிழகத்தில் இருந்து உருவாகும் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்றோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற தகவல் சமீபத்தில் விவாதத்துக்குள்ளானது கவனிக்க வேண்டிய விஷியம். அதேபோல, அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்குச் சென்று ஸ்பெசல் கிளாஸ் எடுக்க கூடாது என்றும் மீறினால் சஸ்பெண்ட் செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும்

8. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து பள்ளி சுற்றுச்சுவரில் விளம்பரம் செய்தல்

*அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு வழியாக மருத்துவம் படிக்க மற்றும் இதர படிப்புகளில் இட ஒதுக்கீடு...

*அரசுப்பள்ளியில் காலை மற்றும் மதியம் உணவு வசதி...

*அரசுப்பள்ளியில் மாதந்தோறும் திரைப்பட விழா...

*அரசுப்பள்ளியில் வாரந்தோறும் நடக்கும் கலை பண்பாட்டு கொண்டாட்ட வகுப்புகள்...

*அரசுப்பள்ளியில் படித்து மத்திய அரசு கல்லூரிகளில் படிப்போரின் முழுக்கல்விச் செலவையும் அரசு ஏற்கும் திட்டம்...

*1-12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்தவருக்கு அரசுப்பணியில் முன்னுரிமை...

*6-12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி படிப்பிற்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை...

*அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி...

போன்று கடந்த சில மாதங்களில்/வருடங்களில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த சில திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் மற்றும் இன்னும் சில முக்கியமான திட்டங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுப்பள்ளி சுற்றுச்சுவரில் எழுதுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

9. பாலியல் சமத்துவம் மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்துக்களை பாடத்திட்டத்தில் சேர்த்தல்

இந்தந்த வேலைகள் ஆண்கள் தான் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்று காலங்காலமாக நிலவி வரும் சில அபத்தங்களை அகற்றும் வகையிலும், சக மாணவிகள் கல்லூரி தோழிகள் பணியிட தோழிகள் மற்றும் வாழ்வில் அடுத்தடுத்து நம்முடன் பயணிக்கும் பெண்களுடன் எப்படி நடந்துகொள்வது என்பது மாதிரியான பாலியல் சமத்துவம் பேசும் கட்டுரைகளையும், பாலியல் வழக்கில் கைதானால் சட்டம் என்னென்ன தண்டனைகள் கொடுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் எந்த சட்டம் கைகொடுக்கும் என்பதை (போக்சோ சட்டம்) விளக்கும் வகையிலான கட்டுரைகளையும் பள்ளிப்பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் "ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - பெண்கள் மேல்நிலைப்பள்ளி" என்று இருக்கும் தனித்தனி பள்ளிகள் இனிவரும் காலங்களில் ஆண்-பெண் இருவரும் இணைந்து படிக்கும் பள்ளிகளாக மாற்றப்படும் என கேரள அரசு அறிவித்தது. அது போல தமிழ்நாட்டிலும் பாலியல் சமத்துவம் உண்டாக்கும் நோக்கில் இருபாலினத்தவரும் இணைந்து படிக்கும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்.

10. அரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் - சிறுவர் மாத இதழ் கிடைக்க செய்தல்

சில தனியார் பள்ளிகளில் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் படிப்பதற்கான JEE நுழைத்தேர்வுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதுபோல அரசுப்பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளின் மகன் அருண்குமார் அரசுப்பள்ளியில் படித்தவாறே JEE நுழைவுத்தேர்வு எழுதி தற்போது சென்னை ஐஐடி-யில் படித்து வருகிறார். அருண்குமார் போல் அரசுப்பள்ளியிலிருந்து ஐஐடி நோக்கி பயணிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அரசு சிறப்பு வகுப்புகளை தொடங்க வேண்டியது அவசியம்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

சிறுவர் நலனை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான விஷியங்களுடன் தமிழில் சில சிறார் மாத இதழ்கள் வெளிவருகின்றன. அவற்றில் தரம் வாய்ந்த மாத இதழை தேர்ந்தெடுத்து அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் வகுப்பிற்கு ஒரு மாத இதழ் என்ற வீதத்தில் கிடைக்க செய்ய வேண்டும். அந்த இதழை மாணவர்கள் தினமும் ஐந்து நிமிடம் முதல் பத்து நிமிடங்கள் ஒதுக்கி வாசித்தாலே போதுமானது. நம்பிக்கை விகடன் விருது பெற்ற "குக்கூ" சிவராஜ் அவர்களின் "தும்பி" மாத இதழ் சில அரசுப்பள்ளிகளில் வாங்கப்படுகின்றன. அந்த மாதிரியான இதழ்களுக்கு அரசு முன்னுரிமை தரலாம். அல்லது அரசாங்கமே பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறார் நலத்துறை வல்லுநர்களை கொண்டு ஒரு சிறுவர் மாத இதழை நடத்த வேண்டும். அதை அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் மாதந்தோறும் கிடைக்க செய்ய வேண்டும்.

இனி வரும் காலங்களில் "அரசுப்பள்ளி மூடப்பட்டது" என்று செய்தி வெளியாகாத வண்ணம் தமிழக அரசும் அரசுப்பள்ளி ஆசிரியர்களும் நடந்துகொள்ள வேண்டுமென்பது எளியவனின் தாழ்மையான வேண்டுகோள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.