வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
1916ல் ஆரம்பிக்கப்பட்ட Goldwyn Pictures என்ற பட நிறுவனம், அதன் அடையாளச் சின்னமாக எதைத் தேர்ந்தெடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தது.
யோசித்து யோசித்துப் பார்த்து பொறுமை இழந்த அந்நிறுவனம், அதற்காகவே ஒருவரை நியமித்தது. அவர் Howard Dietz.
Howard Dietz, Columbia University ன் முன்னாள் மாணவர். அப்போது, Columbia University கால்பந்து அணியின் சின்னமாக சிங்கம் இருந்திருக்கிறது.
Howard க்கு திடீரென அது நினைவில் வர... பிறகென்ன?
சிங்கம் பதிக்கப்பட்ட முத்திரையுடன் வலம் வரத் தொடங்கியது Goldwyn Pictures.
1924 வரை தனியாக இயங்கிக் கொண்டிருந்த Goldwyn Pictures, அதன் பின் உருமாறியது.
Marcus Loew என்ற தொழிலதிபர், தனித்தனியே இயங்கி வந்த Goldwyn, Metro மற்றும் Mayer ஆகிய மூன்று திரைப்பட நிறுவனங்களை ஒன்றாக விலைக்கு வாங்கி, Metro- Goldwyn- Mayer Pictures எனப் பெயரிட்டார். சுருக்கமாக MGM.

நம்மூரில் ஏ.வி.எம் எப்படி பிரபலமோ அப்படி உலகம் முழுக்க பிரபலம் இந்த MGM.
கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக இயங்கி வரும் இந்நிறுவனம், பல தரமான ஹாலிவுட் திரைப்படங்களை தயாரித்திருக்கிறது.
டை அனதர் டே, பென் ஹர், டார்ஸன் உள்ளிட்ட பலத் திரைப்படங்கள் இதில் அடங்கும்.
MGM நிறுவனம் உருவான பின்பு, Howard வடிவமைத்த சிங்கம் உயிர் பெற்றது.
ஆம்...
நிஜ சிங்கத்தை திரைக்கு கொண்டு வர முடிவெடுத்தது MGM நிறுவனம். அதாவது, திரைப்படம் ஆரம்பமாகும் முன்பு Metro Goldwyn Mayer Pictures என்ற பெயர் தோன்றும் போது, சிங்கம் தோன்ற வேண்டும். இது தான் திட்டம்.
சரி, சிங்கத்திற்கு எங்கே போவது?
ஸ்லாட்ஸ்(Slats) பற்றி அறிந்தனர் MGM குழுவினர்.
அயர்லாந்தின் டூப்ளின் உயிரியல் பூங்காவில் (Dublin Zoo) பிறந்த சிங்கம் ஸ்லாட்ஸ். நன்கு பயிற்சி பெற்றது. எளிதில் கையாளலாம்.
போதாதா?
சிங்கத்தை MGM க்கு கொண்டு வர எல்லா முயற்சிகளும் நடந்தது. அதில் வெற்றியும் அடைந்தனர்.
1924 ல் வெளியான, He Who Gets Slapped என்ற திரைப்படத்தில் முதன் முறையாக திரையில் தோன்றியது ஸ்லாட்ஸ் (Slats). MGM பெயரோடு ஸ்லாட்ஸ் தோன்றிய அந்த காணொளி தான், MGM ன் நிரந்தர அடையாளத்தின் முதல் வேர்.
ஆனால் சிங்கத்தின் கர்ஜனை, முதலில் தோன்றிய ஸ்லாட்ஸிடம் இருந்து வெளிப்படவில்லை. அது வெறுமனே இங்கும் அங்கும் நோட்டமிட்டபடி இருந்ததை படமெடுத்தனர். அதுவே திரையிலும் வந்தது.
1928 வரை MGM தயாரித்த படங்களில் ஸ்லாட்ஸை உபயோகித்தனர். அதன் பிறகு, கிட்டத்தட்ட எட்டு சிங்கங்களை இதுவரை மாற்றியிருக்கிறார்கள். ஆனால், MGM நிறுவனத்தின் முதல் சிங்கம் என்ற பெருமை, ஸ்லாட்ஸையே சேரும்.
ஸ்லாட்ஸுக்குப் பிறகு திரையில் தோன்றிய சிங்கத்தின் பெயர், ஜாக்கி (Jackie). MGM சிங்கங்களில் முதன் முதலாக கர்ஜனை செய்த பெருமையை ஜாக்கி அடைந்தது. அதாவது1928ல் வெளியான, White Shadows In The South Sea திரைப்படம் தான் சிங்கத்தின் கர்ஜனையோடு வெளிவந்த முதல் திரைப்படம்.
ஜாக்கியின் கர்ஜனையை1956 வரை வெளியான MGM திரைப்படங்களில் பயன் படுத்தினர். ஜாக்கி, டார்ஸன் போன்ற சில திரைப்படங்கில் நடிக்கவும் செய்தது.

மேலே நீங்கள் பார்க்கும் படத்தில் இருப்பது ஜாக்கி தான். ஜாக்கி கர்ஜிப்பதை படமாக்கும்போது எடுத்த புகைப்படம் தான் இது.
MGM பயன்படுத்திய சிங்கங்களில் ஜாக்கிக்கு தனி இடம் உண்டு. பல ஆபத்துகளிலிருந்து ஜாக்கி தப்பிப் பிழைத்ததாக செய்திகள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று, 1927ல் நடந்த ஒரு விமான விபத்து. அதனாலேயே ஜாக்கியை, Leo The Lucky என அழைக்கின்றனர்.
ஜாக்கி மேலும் புகழ் அடைந்ததின் முக்கியக் காரணம், Alfred Hitchcock. தனது புகழ்பெற்ற படமான North by Northwest ன் ப்ரமோஷனுக்காக ஜாக்கியை பயன்படுத்தியிருக்கிறார், Hitchcock.
ஜாக்கிக்குப் பிறகு நூமா, டில்லி, காஃபி என பல சிங்கங்கள் MGM திரையில் தோன்றினாலும், டேனர் (Tanner) என்ற சிங்கம் 1960 ன் மத்தியில் பிரபலமானது.
அதற்கு முக்கியக்காரணம், டாம் & ஜெர்ரி கார்ட்டூன். அதில் பயன்படுத்தப்பட்ட சிங்கம் டேனர் தான்.
டேனரின் கர்ஜனை, மற்ற சிங்களில் இருந்து மாறுபட்டு இருந்தது. வளர்ச்சி அடைந்து வந்த தொழில்நுட்பமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கூடுதலாக, டேனர் தோன்றும் போது MGM சின்னம், தங்க வண்ணத்தில் மின்னியது.
90s கிட்ஸ் பார்த்த பெரும்பாலான டாம் & ஜெர்ரி நிகழ்ச்சியில் டேனரே கர்ஜிக்கும். எனவே 90s கிட்ஸின் ஃபேவரட் டேனராகத் தான் இருக்கும்.
MGM சிங்கங்களை பொதுவாக, Leo The Lion என்று அழைப்பார்கள். ஆனால் உண்மையில் 1957க்கு பிறகு பயன்படுத்திய சிங்கத்தின் பெயர் தான் லியோ. ஸ்லாட்ஸ் போல இதுவும் டூப்ளின் பூங்காவில் பிறந்த குட்டி தான். பிறந்த இரண்டே ஆண்டுகளில் MGM நிறுவனத்திடம் வந்தது லியோ. அதுமட்டுமின்றி இதுவரை பயன்படுத்திய சிங்கங்களில் அதிக ஆண்டுகள் தாக்குபிடித்தது லியோ மட்டுமே.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, கிராபிக்ஸ் மூலம் சிங்கத்திற்கு இப்போது புது உருவத்தை வழங்கியிருக்கிறது MGM.
2020 க்குப் பிறகு வெளியாகும் MGM படங்களில் இந்த அனிமேஷன் சிங்கத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் MGM நிறுவனத்தை Amazon வாங்கியிருக்கிறது.
கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக இயங்கிவரும் MGM ன் அடையாளம் இந்த சிங்கங்கள். சினிமாவை நேசிக்கும் எவரும் குறிப்பாக 90s கிட்ஸ் இந்த கர்ஜனையை எளிதில் கடந்து விட முடியாது.
ஆனால் வெறும் ஐந்து வினாடிகளே நீளும் இந்த கர்ஜனைக்குப் பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு இருப்பது ஆச்சரியம் தான்.
- சரத்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.