"அம்மா, உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? நம்ம அண்ணனுக்கு இப்போ சப்பாத்தியெல்லாம் போடத் தெரியுமாம்"
"ஓ.."
அன்று வீடியோ காலில் பேசியபோது, தனது அண்ணனைக் கரண்டியும் கையுமாகப் பார்த்ததிலிருந்து சுகுணாவுக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த வார இறுதியில் அம்மாவின் வீட்டுக்கு வந்தபோது, தனது மனப் புழுங்கலையெல்லாம் அடுக்கித் தள்ளினாள்.
"அது மட்டும் இல்லம்மா. அவங்க வீட்டுல பாதி நாள் சாயங்காலத்துல நம்ம அண்ணனோட சமையல் தானாம்"
"ஓ.." சுரத்தேயில்லாமல் பதில் சொல்லிவிட்டு, பூக்கட்டுவதைத் தொடர்ந்தாள் பார்வதி.

"என்னம்மா, வெறும் ஓ, ஓன்னு பதில் சொல்லிட்டு இருக்க ? யோசிச்சுப்பாரு. நம்ம வீட்டுல இருந்தப்போ ஒரு காப்பியாவது போடத் தெரியுமா அவனுக்கு? இப்போ, என்னல்லாம் பண்ணுறான். எல்லாம் மதினியோட ட்ரெயினிங். அவங்களும் வேலைக்குப் போறதால, ஷேரிங் ஷேரிங்க்னு சொல்லி இவன் தலையில நல்லா மிளகா அரைக்கிறாங்க"
அதற்கும் பார்வதி சரியாக பதில் சொல்லவில்லை. தான் அதுவரை கட்டி முடித்த பூச்சரத்தைத் தன் மகளிடம் காட்டி, "சுகு, உனக்கு இவ்ளோ நீளம் போதுமா பாரு ?" என்றாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசுகுணாவுக்கு எரிச்சலாக வந்தது. "என்னம்மா, நீ ஏன் இப்ப பேச்ச மாத்துற ? உனக்கு அவங்க பண்ணுறதெல்லாம் தப்பாத் தெரிலையா ? இங்க நம்ம வீட்டுல, நம்ம அப்பா, என் புருஷன் - இவங்கல்லாம் அடுக்களை பக்கமே எட்டிக்கூடப் பாக்குறதில்ல. இவன் மட்டும் ஏன் இப்புடி கஷ்டப்படுறான் ? பாக்கவே பாவமா இருக்கு" சுகுணாவின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
பார்வதி அதையெல்லாம் கண்டுகொள்ளாது, அவளைத் திரும்பச் சொல்லி, அவள் தலையில் பூவை வைத்தாள். பின்னர், அவள் முடியை வருடியபடியே, "அவங்க வீட்டுல நடக்குறதுல எதுவுமே தப்பில்ல சுகு. உனக்குத் தான் புரிய மாட்டேங்குது" என்றாள்.

விழிகளை அகல விரித்து தனது அம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் சுகுணா. "நீயாம்மா இப்புடி பேசுறது ?"
"ஆமா, சுகு. புருஷன் பொண்டாட்டிக்கு உதவுறதுல என்ன தப்பு இருக்கு ? சொல்லப் போனா, என் பையன் இப்படிலாம் பொறுப்பா இருக்குறதப் பாத்தா எனக்கு பெருமையாத் தான் இருக்கு"
"அம்மா, ஆனா நம்ம அப்பாவோ, என் வீட்டுக்காரரோ.."
"சுகுணா, அவங்கள அப்படிக் கெடுத்து வச்சிருக்குறது, நம்ம தப்பு. திருந்த வேண்டியவங்களும் நம்ம தான். போன தடவ, உனக்கும் எனக்கும் சேர்ந்தாப்போல உடம்பு சரியில்லாம ஆனப்போ, நம்ம ரெண்டுபேரும் எவ்ளோ கஷ்டப்பட்டோம் ? உங்கப்பாவுக்கும் சரி, மாப்பிள்ளைக்கும் சரி ஒரு ரசம், கஞ்சி கூட வைக்கத் தெரியாது. உதவணும்னு தோணியும்கூட எதுவுமே செய்ய முடியலையேன்னு உங்கப்பா எவ்ளோ வருத்தப்பட்டாரு தெரியுமா ? அதான் சொல்லுறேன்.
நீ இப்டி முட்டாள்தனமாப் பேசிட்டுத் திரியாம, உன் புருஷனுக்கு இதையெல்லாம் சொல்லிப் புரிய வையி. அத விட்டுட்டு.."
பார்வதி சொல்லி முடிப்பதற்குள், அவளது கணவர் - அதாவது சுகுணாவின் அப்பா இரண்டு காப்பி கப்புகளோடு அங்கு வர, அவள் முகத்தை வெட்கம் கவ்வியது.
"சுகுணா.. இந்தா காப்பி எடுத்துக்க. எல்லாம் உங்க அம்மா ட்ரைனிங் தான்மா. குடிச்சிப் பார்த்துட்டு நல்லாருக்கான்னு சொல்லு" சுகுணாவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. அந்த வீட்டின் மாற்றம் இன்னொரு வீட்டிலும் கூட மாற்றத்தை விதைத்து தனது பயணத்தைக் தொடர்ந்தது.
-சபரி சங்கரி பரமசிவம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.