Published:Updated:

நம் வீட்டை திரும்பி பார்த்தால்! | My Vikatan

Representational Image

சரியாக இருபது வருடங்கள் கழித்து 2019ஜனவரியில் எனது மகனின் திருமண பத்திரிகையைக் கொடுக்க எனது ஊருக்குச் சென்றேன். எங்க வீட்டின் பக்கத்து வீட்டுப் பானு அக்காவிற்கு திருமண பத்திரிகை கொடுக்க சென்றேன்.

நம் வீட்டை திரும்பி பார்த்தால்! | My Vikatan

சரியாக இருபது வருடங்கள் கழித்து 2019ஜனவரியில் எனது மகனின் திருமண பத்திரிகையைக் கொடுக்க எனது ஊருக்குச் சென்றேன். எங்க வீட்டின் பக்கத்து வீட்டுப் பானு அக்காவிற்கு திருமண பத்திரிகை கொடுக்க சென்றேன்.

Published:Updated:
Representational Image

பல வருடங்கள் வாழ்ந்த வீட்டை மறுபடியும் கடக்கும் போது... இதை சொல்லும் போதே மனம் வலிக்கிறது . கண்களில் கண்ணீர் வழிகிறது.

உருண்டு திரண்ட தேக்கு மரத் தூண்கள், நல்ல வெளிச்சமும் காற்றும் வருகிற மாதிரியான ஜன்னல்கள், விசாலமான திண்ணை ,பள பளக்கும்(சிகப்பு) சிமெண்ட் தரை, உயர்ந்த கம்பீரமான தோற்றம் பிரம்மாண்டமான தோட்டம், மாடம் அமைந்த முற்றம் , அழகான மொட்டை மாடி...இப்படி எங்கள் வீட்டின் ஒவ்வொரு அம்சமும் வியப்பானவை.

அன்பாலே அழகான வீடு ஆனந்தம் மட்டுமே அதற்குள்ளே இருந்தது.

வெறும் சுவர்களால் ஆனது இல்லை எங்கள் வீடு உணர்வுகளால், அனுபவங்களால் ஆனது. எங்கள் வீட்டைப் பற்றி என்ன சொல்ல....

பாவாடை, தாவணியை காயவைத்த கொடிக்கயிறை பற்றிச் சொல்லவா?

நார்த்தை மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியதைச் சொல்லவா?

புத்தம்புது கொலுசு மின்ன கிணற்றில் தண்ணீர் சேந்தியதை சொல்லவா?

Representational Image
Representational Image

உடன்பிறந்த அக்காக்களோடு சண்டை போட்டதைச்சொல்லவா? சண்டை போட்ட அதே அக்கா திருமணமாகி போனதும் அழுத அழுகையைச் சொல்வதா?

அழகான மழையை/ மழைத் துளியை முற்றத்தில் கூடை வைத்து பிடித்ததைச் சொல்லவா?

புயல், மழையின் போது எடிசன் எட்டிப்பார்க்காததால், லாந்தர் ஏந்திய என் வீட்டின் அழகை சொல்லவா?

என் பாத சுவடுகளை சுமந்த மொட்டைமாடி படிக்கட்டுகளைச் சொல்லவா?

மொட்டைமாடி பக்கவாட்டுச் சுவரில் அம்மா செய்து கொடுத்த சுடசுட ரவா உப்புமா(நெய் ஒழுகும்) ஒருகையில் மறுகையில் புத்தகமாய் படித்த அனுபவத்தை சொல்லவா?

கல்லூரி விட்டு வந்ததும் விசாலமான திண்ணையில் அமர்ந்து ஊர்க்கதை பேசியதை சொல்லவா?

முருங்கை மரத்தில் ஏறி விழுந்து கால் ஒடிந்த கதையைச் சொல்லவா?

நித்திய மல்லி, கனகாம்பரம், ரோஜா ,சம்பங்கி ,செம்பருத்தி பவழமல்லி, சங்குப்பூ, குண்டுமல்லி, டிசம்பர் பூக்கள் சிரிக்கும் அழகைச் சொல்லவா?

என் தோழிகளோடு தூணுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சி ஆடியதை சொல்லவா?

எல்லா வேலைகளும் முடிந்த பிறகு ஆழ்ந்து உறங்கிய,

அப்பாடி என்று அமர்ந்த என் வீட்டைப் பற்றி

என்ன சொல்ல...எதைச் சொல்ல...

இப்படி எல்லாமுமாக இருந்து என் வீடு பெற்றோரின்(1999) இறப்புக்குப்பின் கைமாறியது. நேற்றுவரை வீட்டின் மீது இருந்த முழு உரிமையும் ஒரே நாளில் பறிபோனது.

மனம் வலித்தது.

சரியாக இருபது வருடங்கள் கழித்து 2019ஜனவரியில் எனது மகனின் திருமண பத்திரிகையைக் கொடுக்க எனது ஊருக்குச் சென்றேன். எங்க வீட்டின் பக்கத்து வீட்டுப் பானு அக்காவிற்கு திருமண பத்திரிகை கொடுக்க சென்றேன்.

20 வருடங்களுக்குப் பிறகு எனது வீட்டிற்கு.. இல்லை இல்லை முன்பின் அறிமுகமில்லாத ஒருவரின் வீட்டின் கதவைத் தட்டி உள்ளே சென்றேன். (இன்னாரின் மகள் என்று சொல்லி) கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது. நான் நின்ற, அமர்ந்து பேசிய, சாப்பிட்ட, சண்டையிட்ட நினைவுகள் எல்லாம் வந்து வந்து சென்றன கண்முன்னே! அமைதியாக கண்ணை மூடி சிறிது நேரம் மானசீகமாக ஒவ்வொரு தூணிடமும், துரும்பிடமும் பேசினேன்.

வாழ்க்கையை புரிந்து கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்/ பயணித்தேன்

எங்கள் வீடு பூலோக சொர்க்கம்.

எங்கள் வீட்டைத் திருமண மண்டபமாகக் கட்ட வேண்டுமென்பது அப்பாவின் கனவு. அப்பாவின் கனவை ஒரு மகள் என்றமுறையில் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

அந்த வீடு கிடைக்காத பட்சத்தில் வளவனூரில் எப்படியாவது ஒரு இடம் வாங்கி பத்மா கண்ணன் மகால் என்றுதிருமண மண்டபம் ஆஞ்சநேயரின் அருளால் கட்டுவேன். வருடத்திற்கு இரண்டு திருமணங்களை இலவசமாக (அம்மா அப்பாவின் நினைவாக) (அடிப்படை தேவைகளான தங்கத் தாலி ,பீரோ ,கட்டில் ,மளிகை சாமான்கள் இப்படி.. பொருட்களை வாங்கிக்கொடுத்து இலவசமாக செய்வேன்)

அப்பா உங்கள் கனவை நனவாக்க நான் போராடுகிறேன். போராட்டத்தில் ஜெயிக்க உங்கள் ஆசிர்வாதம் தேவை.

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.