வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
நவம்பர் மாதம் எல்லா இடங்களும் பொதுவாக குளிர் காலம் தான். (ஆஸ்திரேலியா நியூஸிலாந்து தவிர்த்து). அப்படி ஒரு குளிர்காலத்தில்தான் வேலை காரணமாக டென் ஹாக் (The Hague in English / Den Haag in Dutch) சென்றேன், முதல் முறையாக.
முதலில் ஆம்ஸ்டர்டம் ஸ்கிபோல் (Schiphol) விமான நிலையத்தில் இறங்கி விமானநிலையத்தின் உள்ளேயே இருக்கும் தொடர்வண்டி நிலையத்தில் வண்டி பிடித்து ஆம்ஸ்டெர்டம் மத்திய (Central) நிலையம் சென்று அங்கிருந்து தொடர்வண்டி பிடித்து டென் ஹாக் அடையவேண்டும். இதெல்லாம் என் சக ஊழியர்கள் சொன்னது.
எல்லா விவரங்களுடன் நான் ஆம்ஸ்டெர்டமில் இறங்கும்போது காலை 7 மணி இருக்கும். நல்ல குளிர். சம்பிரதாயங்கள் முடிந்து வெளியே வந்து வரிசையான கடைகளை கடந்து தொடர்வண்டி நிலையம் வந்து ஆம்ஸ்டெர்டம் மத்திய தொடர் வண்டி நிலையம் அடைந்தேன்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அங்கேதான் சற்று தயக்கம். எதற்கும் உள்ளூர் ஆட்களிடம் கேட்போம் என்று விழிகளை சுற்ற அந்த இந்தியன் மாதிரி தோன்றிய இளம் பெண் அருகில் நின்றிருந்தார். சற்றே தயக்கத்துடன் அவரை பார்க்க, அவர் மெலிதாக புன்னகைத்தார். எனக்கு சந்தேகம், புன்னகை எனக்கா இல்லை மற்ற யாருக்கோவா என்று. மற்ற யாரும் அங்கு இல்லை. நான் அவர் அருகில் சென்று "நீங்கள் எனக்கு உதவ முடியுமா?" என்றேன். நிச்சயமாக என்றவரிடம் நான் டென் ஹாக் செல்லவேண்டும். சரியான தடத்தில் தான் இருக்கின்றேனா என்றேன். அதற்கு அந்த பெண் நானும் அந்த வண்டிக்காக தான் காத்திருக்கிறேன் என்று கூறியதோடில்லாமல் என் உடை மற்றும் கையில் பெட்டியை பார்த்து நான் எங்கிருந்து வருகிறேன் என்றும் வினவினார். நான் விவரங்களை கூறவும் வண்டி வரவும் சரியாக இருந்தது. மிகவும் நன்றி என்று கூறி விடை பெற எத்தனிக்க அவரோ வாருங்கள் சேர்ந்தோ பயணிப்போம் என்று என் கூடவே ஏறி என் அருகில் அமர்ந்தும் விட்டார்.
நல்ல குளிர். வண்டியில் அவ்வளவாக கூட்டமும் இல்லை. பயண நேரமோ ஏறக்குறைய 50 நிமிடங்கள். சரி நேரம் நன்றாக கடக்கும் என்று எதிர்பார்த்து மெல்ல பேச ஆரம்பிக்கும் விதமாக மீண்டும் நன்றி கூறினேன்.
அதற்குத்தான் காத்திருந்த மாதிரி அந்த பெண் என் பெயர், எங்கிருந்து வருகிறேன், என்ன வேலை என என்னை பற்றி அறிய ஆர்வம் காட்டினார். அதில் பாருங்கள், அந்த பெண் என் படிப்பை கேட்டதும் இன்னும் ஆர்வத்துடன் தானும் பட்டய கணக்காளர் (Chartered Accountant) என்றும் என் வேலையை பற்றியும் கேட்டார். படிப்பு அடுத்து என் வேலை மற்றும் ஊர் விவரங்கள் என நிறைய விஷயங்கள் பற்றி கேட்டு தன்னை பற்றிய விவரங்களையும் கூறினார். தான் நெதர்லாந்து பிரஜை என்றும், முன்னோர்கள் பீஹாரிலிருந்து சூரினாம் (Suriname, தென் அமெரிக்காவில் ஒரு சிறிய நாடு, இந்தியர்கள் அதிகம்) சென்றதாகவும் அங்கிருந்து நெதர்லாந்துக்கு குடியேறிதாகவும் சொன்னார்.

இளம் பெண். அழகாகவும் இருக்கிறார். நல்ல நிறம். நானோ அவ்வளவாக பார்க்கும்படி இல்லாத ஒரு சராசரி (க்கும் குறைவான?) இளைஞன். ஏன் இந்த பெண் என்னிடம் ஏதோ பல நாள் பழகிய பெண் மாதிரி பேசுகிறார் மற்றும் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என என் மனதில் கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. ரயிலும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல் வழியே ரம்மியமான இயற்கை காட்சிகள். ஆனால் அதையும் மீறி அந்த அழகிய இளம்பெண்ணின் பேச்சு என்னை ஆக்கிரமித்திருந்தது.
இப்படியே போய்க்கொண்டிருக்க ஒரு சமயத்தில் அந்த பெண் எனக்கு தென்னிந்தியர்களை மிகவும் பிடிக்கும். மிக நல்லவர்கள், புத்திசாலிகள். நீங்களும் என் எண்ணத்தை பொய்க்கவில்லை என்று சொல்ல, "அடுத்த நிறுத்தம் டென் ஹாக்"அறிவிப்பு ஒலித்தது. அந்த பெண்ணோ தன் கை பையை சேகரித்து, என்னை ஒரு முறை கண்ணுக்கு கண் பார்த்து "உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நேரம் போனதே தெரியவில்லை. உங்கள் பயணம் இனிதாகுக" என்று கூறி கையை நீட்டினார்.
அப்பொழுதுதான் எனக்கு உதித்தது, நான் அந்த பெண்ணின் பெயர் கூட கேட்கவில்லை என்று. கேட்டேன். அந்த பெண் என் பெயர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும், சிரிக்கக்கூடாது என்று கூறி நிறுத்தினார். சிரிக்கமாட்டேன் சொல்லுங்கள் என நான் கூற தன பெயர் "உப்புமா" என்றும் முழு பெயர் "உப்புமா சங்கர்" என்றும் கூறினார்.
நிறுத்தம் வந்துவிட்டது. பாருங்கள், என்ன ஒற்றுமை என்று. நீங்கள் இந்தியர். நான் இந்திய வம்சாவழி. நீங்கள் CA, நானும். நீங்கள் சங்கர். நானும் என்று கூறி அழகான புன்னகை உதிர்த்து விடை பெற்று சென்றார். சற்று நேரம் அவர் செல்வதையே பார்த்து விட்டு ஒரு நிலைக்கு வந்து அருகிலேயே விடுதிக்கு சென்று விவரங்களை கொடுத்து அறை சாவியை வாங்கினேன். அப்போது அந்த சிப்பந்தி "ஐயா, உங்களுக்கு உங்கள் மனைவியிடம் இருந்து 3 அழைப்புகள் வந்தன, தயவு செய்து அவர்களை அழைக்கவும்" என்றார்.
அப்போதுதான் நான் உணர்ந்தேன் என் மிகப்பெரிய தவறை. எப்போதும் வெளியூர் செல்லும்போதும், இடம் அடைந்தவுடன் முதல் வேலை மனைவிக்கு தெரியப்படுத்துவது. அது மனைவியின் கட்டளை. என் பழக்கமும் கூட. இன்று பாருங்கள், விமானம் இறங்கி கை பேசியை உயிரூட்டக்கூட மறந்துவிட்டேன். அப்புறம் இந்த உப்புமா.

இப்போது நன்றாக உணர்ந்தேன், எனக்கு வீட்டில் அன்பான மனைவி இருக்கிறார். இந்த 2 மணி நேரம் அவர்களை மறந்தது .....தப்பு. உடனே அழைத்தேன். என் தவறுக்கு உரிய தண்டனையை கை பேசி மூலம் பெற்றுக்கொண்டு, மனைவியை சமாதானப்படுத்தினேன். சமாதானமாகி மனைவி சொன்னார், இன்று டிபன் உங்களுக்கு பிடித்த "உப்புமா"என்றும் உங்களை நினைத்து தான் சாப்பிட்டேன். நீங்கள் வரும் அன்று, உங்களுக்கு டிபன் 'உப்புமா தான்" என்றார்.
மனைவிக்கு நன்றி சொல்லி "உப்புமாவை" நினைத்து மெத்தையில் சாய்ந்தேன். என் மனைவி செய்யும் உப்புமா, அந்த காந்தல் மற்றும் சாம்பாருடன், சொர்க்கம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.