Published:Updated:

சூப்பர் மார்கெட்டில் ஏன் போன் நம்பர் கேட்கணும்? | My Vikatan

Representational Image

ஏதோ ஒரு இடத்தில் நமது தகவலை பகிர்ந்துகொண்டால் கூட போதும், அதே துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் எளிதாக அவை கிடைத்து விடுகின்றன என்பது தெளிவாகவே புரியும். இந்த பிரச்னை அந்த பெண்மணிக்கானது மட்டும் அல்ல.

சூப்பர் மார்கெட்டில் ஏன் போன் நம்பர் கேட்கணும்? | My Vikatan

ஏதோ ஒரு இடத்தில் நமது தகவலை பகிர்ந்துகொண்டால் கூட போதும், அதே துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் எளிதாக அவை கிடைத்து விடுகின்றன என்பது தெளிவாகவே புரியும். இந்த பிரச்னை அந்த பெண்மணிக்கானது மட்டும் அல்ல.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

எங்கிங்கிருந்தோ எல்லாம் தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. செல்பேசி அதிகமாக புழக்கத்திற்கு வந்த காலங்களில் வந்த தொலைபேசி அழைப்புகள் கூட நம்முடைய விவரங்கள் எதுவும் அறியாத அழைப்புகளாக தான் இருந்தன. ஆனால், தற்போது வரும் அழைப்புகளில் எதிர்முனையில் இருந்து பேசுபவர் நம்முடைய பெயர் மற்ற விபரங்கள் என்று அனைத்தையும் தெளிவாக குறிப்பிடுகிறார். ஆச்சர்யமாக தான் உள்ளது.


அருகாமை வீட்டில் வசிக்கும் ஒரு பெண்மணி அவரின் பக்கத்து வீட்டு பெண்மணியிடம் ஒரு நாள் புலம்பிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.


'எப்படி தான் இவனுங்களுக்கு நம்பர் கிடைக்குதோன்னு தெரியலை. உங்க பொண்ண எங்க சென்டர்ல சேருங்க, எங்க சென்டர்ல சேருங்கன்னு ஒரே தொல்லையா இருக்கு' என்று சொல்லி அலுத்துக்கொண்டார்.

அந்த பெண்மணியின் மகள் தற்போது தான் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறார். நீட் தேர்வு எழுத முடிவு செய்து ஒன்றிரெண்டு தனியார் பயிற்சி மையங்களில் விசாரித்திருக்கிறார்கள். அவ்வளவு தான், தினமும் இந்தியா முழுவதிலும் இருக்கும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் இருந்து செல்பேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அந்த தொல்லைகள் தாங்கமுடியாமல் தான் அவர் புலம்பிக்கொண்டிருக்கிறார்.

Representational Image
Representational Image

ஏதோ ஒரு இடத்தில் நமது தகவலை பகிர்ந்துகொண்டால் கூட போதும், அதே துறையில் இருக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் எளிதாக அவை கிடைத்து விடுகின்றன என்பது தெளிவாகவே புரியும்.

இந்த பிரச்னை அந்த பெண்மணிக்கானது மட்டும் அல்ல. நாம் எல்லோருமே இது போன்ற பிரச்சனையில் சிக்கி அவ்வப்போது புலம்பியிருப்போம்.

பள்ளியில் பனிரெண்டாவது முடிக்கும் மாணவ மாணவிகள் செல்பேசிக்கு பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வருவதை நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். அந்த கல்லூரிகளுக்கு நம் செல்பேசி தகவல் உள்ளிட்ட தகவல்கள் எப்படி கிடைக்கின்றன என்பது ஒரு ரகசியம் தான்.

தற்போது, சூப்பர் மார்க்கெட் என்று சொல்லப்படும் ஏதோ ஒரு பல்பொருள் அங்காடிக்கு முதல்முறை சென்று ஏதாவது பொருள் வாங்கி பில் போடும்போதே நம்முடைய பெயர், செல்பேசி எண், முகவரி உள்ளிட்ட அனைத்தையும் வாங்கிக்கொள்கிறார்கள். அதையும் ஒரு கோரிக்கையாக எல்லாம் கேட்பதில்லை. அதிகாரமாகவே கேட்கிறார்கள். காரணம் கேட்டால், நீங்கள் எப்போதெல்லாம் இங்கே வந்து பொருட்கள் வாங்குகிறீர்களோ, அப்போதெல்லாம் உங்கள் செல்பேசி நம்பருக்கு புள்ளிகள் வரவு வைக்கப்படும். அதிக புள்ளிகள் சேர்ந்தவுடன், அதை வைத்து நீங்கள் ஏதாவது பொருளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று ஆசை காட்டுவார்கள்.

எல்லாருமா பயந்து போய் தகவல்களை கொடுத்து விடுவார்கள் என்று யோசிக்காதீர்கள். சிறு நகரங்கள், கிராம பகுதிகளில் ஆதார் அட்டை தகவல்களை கூட வெகு சுலபமாக அனைத்து இடங்களிலும் கொடுத்துவிடுகிறார்கள்.


ஒரு பல்பொருள் அங்காடியில் ஸ்டாக் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு நண்பர் சொன்னார்.

'வாங்குற டேட்டா எல்லாத்தையும் அப்படியே சில நிறுவனங்கள் மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள். அதை வச்சிக்கிட்டு தான் பல நிறுவனங்கள் நம்மை தொடர்பு கொண்டு கேன்வாஸ் பண்ணுவாங்க'

அதை கேட்டதும் தான் புரிந்தது.

இந்த பிரச்சனையை பற்றி ஒரு தமிழ் திரைப்படத்தில் கூட விரிவாக பேசப்பட்டிருக்கும்.

ஒரு ஆளிடம் போன் என்ற கருவியே இல்லை என்றால் என்ன சொல்வார்கள் என்று சோதிக்க விரும்பிய நான், புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஒரு பல்பொருள் அங்காடிக்கு ஒரு நாள் சென்று சில பொருட்களை வாங்கிவிட்டு பில் போட காத்திருந்தேன். என் முறை வந்தபோது பொருட்களை நீட்டினேன். பில் போட்டு முடிந்தவுடன், பில் போட்டவர் என்னை பார்த்து

'உங்க போன் நம்பர் சொல்லுங்க' என்றார்.


'அதெல்லாம் வேணாங்க, அமௌன்ட் சொல்லுங்க' என்று நான் சொன்னதும் கொஞ்சம் யோசித்து,


'இல்லை சார். உங்க பேர், போன் நம்பர் சொன்னாதான் பில் போடமுடியும்' என்றார்.

Representational Image
Representational Image

'இல்லங்க, என்கிட்டே போன் கிடையாது. நான் போன் யூஸ் பண்றதில்லை' என்று சொன்னவுடன் அந்த நபர் என்னை வேற்று கிரகத்து மனிதரை போல பார்த்தார்.

நான் சொல்வதை நம்பாமல் என்னுடைய மேல்ச்சட்டை பாக்கெட், பேண்ட் பாக்கெட்டில் எங்கேயாவது போன் போன்று ஏதாவது பொருள் தட்டுப்படுகிறதா என்று ரகசியமாக அவர் நோட்டமிடுவதை கவனித்து மனதிற்குள் புன்னகைத்து கொண்டேன்(நான் என்னுடைய செல்பேசியை இரு சக்கர வாகனத்திலேயே வைத்துவிட்டு வந்திருந்தேன்).

எங்கேயும் போன் இல்லையென்று உறுதியான பின்னர், என்ன செய்வதென்று புரியாமல் அவர் முழித்துக்கொண்டு நின்றது நன்றாக தெரிந்தது.

'உண்மையில் நீங்க போன் யூஸ் பண்றதில்லையா. ஆனா, பில் போட உங்க டீடைல் வேணுமே' என்று கேட்டதும்,

'ஆமாங்க, நான் போன் யூஸ் பண்றதில்லை. பில் போட முடிஞ்சா போடுங்க. இல்லன்னா சொல்லுங்க. எனக்கு நேரம் இல்லை' என்று நான் சற்று கோபமாக சொன்னவுடன், அந்த நபர் அவருடைய சூப்பர்வைசரை அழைத்தார்.

அங்கே வந்த சூப்பர்வைசரிடம் என்னுடைய பிரச்சனையை விளக்கியதும், அந்த சூப்பர்வைசர் 'சார், உங்க டீடைல் எல்லாம் ஜஸ்ட் பாயிண்ட்ஸ் கொடுக்கறதுக்காக தான் கேட்கிறோம். மற்றபடி, உங்க தகவல்களை யாரிடமும் கொடுக்கமாட்டோம்' என்று அவராகவே தன்னிலை விளக்கம் ஒன்று தந்ததும்,

'நான் அதெல்லாம் கேக்கவே இல்லையே, போன் நம்பர் இல்லாம பில் போடுங்கன்னு தானே கேக்குறேன்.' என்று நான் சொன்னதும்.

'எங்க பில் சாப்ட்வேர் அப்படி தான் சார் இருக்கு. பேர், போன் நம்பர் போட்டாத்தான் பில்லே போடமுடியும்' என்று சொன்னார்.

'சரிங்க அப்படின்னா எனக்கு எதுவும் வேணாம்' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

வீட்டுக்கு செல்லும் வழியில் இருக்கும் அண்ணாச்சி மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றேன். அண்ணாச்சிக்கு உங்கள் பேர் தெரிந்திருக்கும். ஆனால், அவர் உங்கள் செல்பேசி நம்பரை கேட்பதில்லை. அப்படியே உங்கள் செல்பேசி நம்பர் தெரிந்தாலும் அதை யாருக்கும் அவர் விற்பதில்லை.

Representational Image
Representational Image

பல்பொருள் அங்காடிகள், கல்வி நிறுவனங்களில் மட்டும் தான் என்றில்லை. துணிக்கடைகள், நகைக்கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், சுற்றுலா தளங்கள், தனியார் நிறுவனங்கள் என்று எங்கும் பாகுபாடு இல்லாமல் நமது தகவல்களை பெற்றுக்கொள்கிறார்கள். இது தொடர்பாக அரசாங்க கட்டுப்பாடுகளோ, வரைமுறைகளோ எதுவும் இருக்கின்றதா என்பது தெரியவில்லை.

எளிய மனிதர்களுக்கு இது விஷயத்தில் இருக்கும் அறியாமையை நிறுவனங்கள் உபயோகப்படுத்திக்கொள்கின்றன என்று தான் தோன்றுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் செல்பேசி வைத்திருக்காமல் ஒரு நாளை கடத்துவது என்பது ஒரு சாமானிய மனிதனுக்கு சாத்தியமில்லை என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

ஆதார் அட்டையை கூட யார் கேட்டாலும் கொடுத்துவிடும் எளிய மனிதர்களிடம் செல்பேசி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பற்றிய விழிப்புணர்வை எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை தான் என்றாலும் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமை அல்லவா?

அவ்வப்போது வங்கி மோசடிகள், பண மோசடிகளை பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் வழியாக ஏற்படுத்தி வரும் ரிசர்வ் வங்கியும், அரசாங்கமும் செல்பேசி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறுகின்றன என்று தான் தோன்றுகிறது.

Representational Image
Representational Image

வளர்ந்த நாடுகளில் ஒருவரின் செல்பேசி எண் என்பது அவரது தனியுரிமை சம்பந்தப்பட்டது என்பதால், வணிக நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக ஒருவரின் தனிப்பட்ட செல்பேசி எண்ணை கேட்பதில்லை. ஆனால், நமது நாட்டிலோ, ஆதார் எண், வங்கி கணக்கு, செல்பேசி எண் என்று அனைத்தும் பின்னிப்பிணைந்திருப்பதால், ஒருவரின் செல்பேசி எண் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கொண்டே பல்வேறு பணமோசடிகளை அரங்கேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விழிப்புடன் இருப்போம்.

நன்றி.

-விஜயகுமார் ஜெயராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.