Published:Updated:

நம்ம தீர்க்கதரிசி என்னென்ன சொல்லியிருக்கார் பாருங்க ! - வாசகர் வாய்ஸ்

`விஸ்வரூபம் 2’
`விஸ்வரூபம் 2’

அந்தப் பதிவு என்னை என்னமோ செய்துவிட்டது. கமல்ஹாசனின் சிறப்பம்சங்கள் குறித்து சில நிமிடங்கள் யோசிக்க வைத்துவிட்டது. எனக்குள் இருக்கும் கமல் ரசிகனை வெளியே கொண்டுவந்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

தாலிபான்கள் ஊஞ்சலாடியதை அவர்களுடைய அந்த மனநிலையை கமலஹாசன் தன்னுடைய விஸ்வரூபம் முதல் பாகத்தில் பல வருடங்களுக்கு முன்பே பதிவு செய்துவிட்டார். கமல் ஆப்கானிஸ்தானில் உள்ள அரசியலை அவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து அதை தன் படத்தில் துணிச்சலாக பதிவு செய்து தீர்க்கதரிசியாக திகழ்கிறார் என்று விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியின் மகன் ஊஞ்சலாடும் சீனை பதிவிட்டு இருந்ததை முகநூலில் உள்ள ஒரு சினிமா பக்கத்தில் பார்த்தேன்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் அந்தப் பதிவுக்கு ஹார்ட்டின் பறக்க விட்டிருந்தார்கள். அந்தப் பதிவு என்னை என்னமோ செய்துவிட்டது. கமல்ஹாசனின் சிறப்பம்சங்கள் குறித்து சில நிமிடங்கள் யோசிக்க வைத்துவிட்டது. எனக்குள் இருக்கும் கமல் ரசிகனை வெளியேக் கொண்டுவந்தது.

விஸ்வரூபம் கமல்
விஸ்வரூபம் கமல்

எல்லா மாதிரியான உணர்விலும் கமல் சிறப்பாக நடிப்பவர் என்றாலும் , அவர் மிகவும் ஆத்மார்த்தமாக விரும்பி நடிப்பது குற்ற உணர்வில் சிக்கி தவிப்பது போன்ற காட்சியில் தான் என்று எனக்கு தோன்றுகிறது. விஸ்வரூபம் படத்தில் தனக்கு பதில் அப்பாவி ஒருவன் கொல்லப்பட, அவருடைய தாய் கமல் முன் கதறி அழுவார், அந்தக் காட்சியிலும்... வசூல்ராஜா படத்தில் கேன்சர் நோயாளி இறந்து போனதும் அவனுடைய அம்மா வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் என்று அழும் காட்சியிலும்... பாபநாசம் கிளைமேக்ஸிலும்... குற்ற உணர்வில் சிக்கி தவிப்பவனை என் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார் கமல்.

ஜல்லிக்கட்டு என்றால் அது காளையின் கொம்பை பிடித்து மொத்த பலத்தையும் திரட்டி அந்தக் கொம்பை வளைத்து உடைத்து காளையை பலவீனப்படுத்துவது என்று தான் முந்தைய சினிமாக்கள் காட்டி வந்தன. ஆனால் ஜல்லிக்கட்டு என்றால் காளையின் கொம்பை வளைப்பதோ ஒடைப்பதோ இல்லை... இதுதான் ஒரிஜினல் ஜல்லிக்கட்டு என்று விருமாண்டி படத்தில் உண்மையான ஜல்லிக்கட்டை பதிவு செய்திருப்பார் கமல். அந்தக் காட்சிகள் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ காளையை வைத்து உண்மையாக எடுக்கப்பட்டவை. பார்ப்பதற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கும். அது போன்ற ஒரு காட்சியை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல... இந்திய சினிமாவில் உள்ள எந்த இயக்குனராலும் கமலை போல படமாக்க முடியாது.

'விருமாண்டி'
'விருமாண்டி'

இளையராஜாவும் கமலும் சேர்ந்துவிட்டால் மிரட்டல் தான். விருமாண்டி படத்தில் வரும் "உன்னவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல..." என்ற பாடலை கமலே எழுதி கமலே பாடியிருப்பார். அந்தப் பாடலின் வரிகளிலும் அவருடைய குரலிலும் காதல் உணர்வு பெருகி ஓடும்.

பாடலை முழுக்க முழுக்க இரவு நேரத்தில் நடப்பதுபோல் படமாக்கியிருப்பார். அந்தப் படத்தின்போது கமலுக்கு ஐம்பது வயதிருக்கலாம்... அந்த வயதில் அப்படிப்பட்ட காதலா... அப்படிப்பட்ட படைப்புணர்வா... என்று பிரமிக்க வைக்கிறது. காதலியுடன் பௌர்ணமி வெளிச்சத்தில் டிவிஎஸ்ஸில் ஊர் சுற்றி இரவை கழிப்போமா என்ற ஏக்கம் எனக்குள் பிறக்க இந்தப் பாடல் மிக முக்கிய காரணம். (ஆடுகளம் படத்தில் இதேபோல ஐயயயோ நெஞ்சு அலையுதடி பாடலை முழுக்க முழுக்க இரவில் நடப்பது போல படமாக்கி இருப்பார்கள்.)

அன்னலட்சுமி என்ற பெயரை எங்கு கேட்டாலும் `விருமாண்டி’ தான் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு பேசப்படும் மயக்கம் என்ன யாமினி, சூரரை போற்று பொம்மி, சார்பட்டா மாரியம்மாள் போன்ற கதாபாத்திரங்களை விட நெஞ்சில் ஆழப் பதிந்தவர் கமலஹாசனின் அன்னலட்சுமி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

யூடியூப் சேனல் ஒன்று விருது விழா நடத்துகிறது. அந்த விருதுக்கு சிறப்பு விருந்தினராக அவர்கள் கமலை அழைக்க, எந்த ஈகோவும் இல்லாமல் அவர்களுடைய அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சிக்குச் செல்கிறார் கமல். அதே நிகழ்வில், வில்லேஜ் குக்கிங் சேனல் நபர்களை பாராட்டி அவர்களிடம் சிறுவயதில் சாப்பிட்ட கிராமத்து உணவைப் பற்றிப் பேசுகிறார்...! உண்மையில் இந்த கமலஹாசனுக்கு தெரியாத விஷயம் எதாவது இருக்கிறதா?

கமல்
கமல்

ஒரு மனிதனால் எப்படி இவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்க முடிகிறது என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது... வயதானாலும் சிறிதும் சோம்பேறித்தனம் இல்லாமல் உலகில் நடைபெறும் அத்தனை அரசியல் விஷயங்களையும் கவனித்து வருகிறார்... இதற்கிடையில் சார்பட்டா போன்ற திறமையான படக்குழுவினரை அழைத்து பாராட்டவும் செய்கிறார். கமல் பார்க்காத... படிக்காத புத்தகங்களா... இத்தனை வருடங்களாகியும் வாசிப்பார்வம் குறையாமல் இருக்கிறார். அதனால் தான் "நீலம்" போன்ற சமூக பொறுப்புணர்வு மிக்க இதழ் அவரை தேடி செல்கிறது.

சினிமாவுல நீ எவ்வளவு பெரிய ஆளா வேணா இருக்கலாம்...! ஆனால் அரசியலில் நீ சின்ன பையன் என்று கேலி செய்தவர்களுக்கு எல்லாம், நான் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ஹீரோ தான் என்பதை கடந்த சட்டமன்ற தேர்தலில் நிரூபித்தார். இன்றைய காலகட்டத்தில் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் அரசியலில் வெற்றிக்கு அருகில் நெருங்கிச் செல்வது என்பது சாதாரண காரியமல்ல.

அதேபோல இன்றைய சூழலில் எது எதிர்க்கட்சி என்று தெரியவில்லை. கடந்த சில நாட்களாக கமல் ஒற்றை மனிதராக எதிர்க்கட்சி செய்ய வேண்டிய வேலையை செய்து வருகிறாரோ என்று தோன்றுகிறது. புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு - "அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில்" - புதிதாக கட்ட வைக்க வேண்டும்... என்ற கமலின் சமீபத்திய ஆவேச டுவிட்டில் கமலுக்குள் இருக்கும் "சத்யா" வெளிப்பட்டதுபோல் எனக்கு தோன்றியது.

கமல்
கமல்

பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததற்கு "உனக்கு என்ன பரிசு வேணும் கேள்..." என்றார் என் அப்பா. நான் டிவிடி பிளேயர் வேண்டும் என்று கேட்டேன். எனக்காக டிவிடி பிளேயர் வாங்கி வந்த என் அப்பா கூடவே "வறுமையின் நிறம் சிவப்பு" படத்தின் கேசட்டையும் வாங்கி வந்தார். அப்பாவுடன் சேர்ந்து பார்த்த முதல் படம் அது... அப்போது முதல் கமல் ரசிகன் நான், இன்று வரை அவருடைய ரசிகனாகவே இருக்கிறேன் என்பதில் எனக்கு அவ்வளவு பெருமிதமாக இருக்கிறது.

என்னுடைய உறவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கமலுடைய ரசிகராக தான் இருந்தார். உத்தமவில்லன் படத்தால் நல்ல நல்ல படங்களை தந்த திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்போது செயல்படாமல் இருப்பதனால் கமல் மீது அதிருப்தி கொண்டு இனி நான் கமல் படங்களை பார்ப்பதில்லை என்று என்னிடம் கூறினார். அப்படிபட்ட உத்தமவில்லன் படத்தை தான் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனரான பேரன்பு ராம், உத்தமவில்லன் படத்தை "தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முயற்சி" என்று பாராட்டுகிறார். கமலுக்கு மட்டும் ஏனோ அவருடைய பல நல்ல முயற்சிகள் இப்படி வேதனையில் முடிகிறது என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் "வீட்டிலிருந்த படியே புதிய சினிமாக்களை கண்டு களிக்கலாம்" என்று சொல்லி கடும் எதிர்ப்பை சந்தித்தார் கமல். இப்போது அவர் சொன்னதுதான் நடந்து வருகிறது. அதே சம்பவத்தின்போது கமல் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இனிவரும் காலங்களில் கமல்ஹாசனிடம் இருந்து அப்படியொரு அறிவிப்பு வந்து ஒருவேளை கமல் இந்தியாவை விட்டு வெளியேறும் சூழல் வந்தால் அது இந்தியாவுக்குத் தான் அவமானம். இந்தியாவிற்கு அவ்வளவு முக்கியமானவர் கமல்! அப்படிபட்ட கமல் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்துவிட்டு அரசியலிலும் சினிமாவிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த ரசிகனின் தாழ்மையான வேண்டுகோள்.

- மா. யுவராஜ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு