Published:Updated:

என் அன்புள்ள காலன்! - ஒரு "இதயம் திறந்த" மடல் | My Vikatan

Representational Image

எனது ஒழுங்கற்ற வாழ்வு முறை குறித்து, என் நலன் விரும்பிகள் யாவரும் என்னைத் திட்டினார்கள் என்பதைத் தாண்டி தீட்டினார்கள் என்பதே சரி.

என் அன்புள்ள காலன்! - ஒரு "இதயம் திறந்த" மடல் | My Vikatan

எனது ஒழுங்கற்ற வாழ்வு முறை குறித்து, என் நலன் விரும்பிகள் யாவரும் என்னைத் திட்டினார்கள் என்பதைத் தாண்டி தீட்டினார்கள் என்பதே சரி.

Published:Updated:
Representational Image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

விகடன் வாசகனின்

இதயம் *திறந்த* மடல்!

இருதயம் இருப்பதை இரண்டாம் முறை உலகிற்கு உரத்துச் சொன்ன உன்னத தருணம்.

ஒருவருக்கு வாழ்வு ஒன்றை மட்டுமே தருவதில்லை.

அல்லது அப்படித் தருவதுதான் அதன் வேலையுமில்லை. சிகரங்கள் இருக்கும் இதே பூமியில்தான் பள்ளத்தாக்குகளும் இருக்கின்றன.

வாழ்வின் சுவாரஸ்யமே நல்லவை அல்லவை கலந்த ஒரு வித சித்துத்துவமான நவபாஷணம்தான் (புரியக் கூடாதுல்ல. வாழ்க்கை மாதிரியே!?).

Representational Image
Representational Image

அடிக்கடி சிகரங்களில் ஏறினாலும், அது போலவே பள்ளத்தாக்கிலும் அடுத்தடுத்து விழுந்திருக்கிறேன். விழுந்ததற்காக ஒருபோதும் விக்கித்தோ, விசனப்பட்டோ இதுநாள் வரை நின்றதில்லை. உடனே விறு.. விறுவென ஏறி சிகரத்தையும் தொட்டிருக்கிறேன்.

எனக்கான ஞானம் பள்ளத்தாக்கிற்கும், சிகரத்திற்குமான இடைவெளியிலேயே நிரம்பி இருக்கிறது. தேவையேற்படின் கானம்பாடி பறவை ஒன்றின் சிறகுகளைக் கண்டெடுத்து பாடிப் பறந்தபடி சுகவாசியாய் இருப்பது மட்டுமே காலந்தொட்ட என் இயல்பாய், வாழ்வாய் இருந்தும் இருக்கிறது. இனித்தும் இருக்கிறது.

எனது ஒழுங்கற்ற வாழ்வு முறை குறித்து, என் நலன் விரும்பிகள் யாவரும் என்னைத் திட்டினார்கள் என்பதைத் தாண்டி தீட்டினார்கள் என்பதே சரி.அவர்களுக்கு அவ்வளவு உரிமைகளை வாரி வழங்கி இருந்தேன். நம்மை நாள்தோறும் நேசிப்பவர்களுக்கு நாம் தரும் பேரன்பின் அங்கீகாரமே அதுதான்.

சரி, அது இருக்கட்டும். இப்போது, "இதயம் திறந்த" மடலுக்கு வருகிறேன்.

Representational Image
Representational Image

எனக்கு என் இதயத்தில், முதல் முறை 2018 ல். பிறகு 4 வருடங்கள் கழித்து இரண்டாம் முறை 2022 நவம்பரில்! இரண்டாவது இன்னிங்ஸ் போல, இது இரண்டாவது ஹார்ட் அட்டாக். இரண்டுமே அவுட் என நடுவரால் அறிவிக்கப்பட்டு, பெற்றோர், உறவுகள், நண்பர்களால் அப்பீல் செய்யப்பட்டு, தேர்ட் அம்பயரால் நாட் அவுட் ஆன லக்கி பெ(வெ)ர்ஷன் நான்.

2018 ல் ஆஞ்சியோ செய்து 2 ஸ்டண்ட்கள் வைத்துக் கொண்டேன். நேரங்காலம் தவறிய உணவு முறை, சமூகத்தின் அனைத்து தளங்களின் மீதான பங்கெடுப்பு, அதீத அலைச்சல்.. ஆகியவற்றால்  இதயக் கூந்தலில் தினமும் சூடும் மருந்து மலர்களை சூடத் தவறி விட்டேன். அது எனக்குபடுக்க வைத்து மாலை சூட தயாராகிவிட்டது என்பதை அறியாமல்.

Representational Image
Representational Image

மென்மையான என் இதயம் திக்கித் திணறித்தான் என் உடலெங்கும் ரத்தங்களைப் பாய்ச்சிருக்கிறது என்பது இரண்டாவது ஆஞ்சியோ செய்த போது மருத்துவ மொழிகளால் மனம் அதிர தெரிந்து கொண்டேன். மூச்சு விடாமல்  இதயத் துடிப்பை நிறுத்தி விடாத என் இதயத்தின் "லப்..டப்.." பிற்கு  அவசரவசரமாக ஆயிரமாவது முறையாக நன்றி சொல்லிக் கொண்டேன்.

ஏற்கனவே ஸ்டண்ட் வைத்த இடத்திலும் ப்ளாக் இருக்கு. மேலும் புதிதாக அஞ்சாறு அடைப்புகள் முளைத்திருப்பதாய் ஆஞ்சியோ ரிப்போர்ட் சொன்னது. நான் வணங்கும் ஆஞ்சநேயர் ஆஞ்சிநேயராகத் தெரிந்தார்.

இடர் வரும் போது வரம் தர வேண்டும் என பிரார்த்திக்கும் சராசரி பக்தனுள் ஒன்றானேன். மேலும் ஸ்டண்ட வைத்தால் சமூகம் என்னை *ஸ்டண்ட்" மாஸ்டர் ஆக்கி விடுமோ எனும் பயம் வேற!

இயற்கையோ, கடவுளோ ஏதோ ஒன்றினால் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவே என்னைக் கருதிக் கொள்வதுண்டு.
காலனுக்கும் எனக்கும் அப்படியான ஓர் உறவு அது. குழந்தையாக இருந்த போதே கந்தன் கருணை போல.. எனக்கு காலன் கருணை!

ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர்

காலன் அவ்வப்போது வீசும் பாசக் கயிற்றை பல தடவை தாண்டியிருக்கிறேன் அல்லது ஒதுங்கியிருக்கிறேன் அல்லது ஓரமாக போயிருக்கிறேன். குறிப்பாக பதட்டங்கள் ஏதுமின்றி. புதைந்தும் புதையாத புன்னகைகளுடன்.

நான் உலகிற்கு அறிமுகமான ஆதித் தருணங்களே அப்படியான திக்..திக்.. தருணங்கள்தான். உண்மைதான்.

என்னை என் அன்னை ஏழரை மாதத்தில் இந்த உலகிற்கு அரைகுறையாய் புறந்தள்ளியதிலிருந்து துவங்கியது எனக்கும் காலனுக்குமான பாசக் கயிறு போராட்டம்!

அண்டை, அயலாரின் ஆருடங்கள் இந்த கொழந்தை தேறாது என்பதாகவே இருந்திருக்கிறது.

பின்னாளில் அந்த பெரிசுகளுக்கு பீடி,சுருட்டு,வெற்றிலை,பாக்கு என வாங்கித் தரும் போதெல்லாம், தலை, இமை ரோமங்கள் இல்லை. பெயருக்கு கை,கால் விரல்கள் இருந்ததே தவிர பெயர்க்கும்படியான நகங்களேதுமில்லை. அழகான ஜோடிக்கு இப்படியொரு குழந்தையா..? என அப்போது என் காதுபடாதபடியே பேசினார்கள் என்பது பிற்பாடே என் காதுக்கு வந்து சேர்ந்தது.

Representational Image
Representational Image

குறை பிரசவத்தில் பிறந்ததும் பஞ்சில் படுத்தபடி,நெஞ்சில் சிரித்தபடி காலன் வீசிய முதல் அரைஞாண் போலான பாசக் கயிற்றை சிசுவாக இருந்த போதே பொக்கை வாய் புன்னகையால் காலனை ரட்சிக்கும் இயேசுவாக மாற்றி இருக்கிறேன் போலும்!?

பாபு எனும் என் பெயரை உற்றார் உறவினர்கள் எனக்கு வைத்த போது, கூடுதலாக எனது தந்தையார் நம் மகன் நீண்டகாலம் இந்த மண்ணில் தங்க வேண்டும் என்பதற்காவே *தங்க* பாபு என பெயர் வைத்தாற் போல..என உள்ளுக்குள் சமீப காலமாக உணர்வதுண்டு. இது இளம்பிராயம் என்றால்...

அடுத்து இளமைப் பிராயம், காலனின் தடித்த கயிறு தயார் நிலையில் இருந்தது,உலகின் மாபெரும் துயரங்களுள் ஒன்றாகிப்போன 2006 ன் சுனாமி பெருந்துயர்.ஆழி,அகில விழி அழ கொத்துக்கொத்தாய் உயிர்களைப் பிடிங்கி தன் வயிற்றுக்குள் மனித உயிர்களை போட்டு காலி செய்த கலிகாலம் அது!

மறு ஆண்டு 2007 ல் டிசம்பர் 26 ல் முதல் சுனாமி நினைவு தினம்.தங்கள் உறவுகளை இழந்த மக்கள் சுனாமி தினத்தில் வேளாங்கண்ணி சென்று உயிர் நீத்தோருக்கு கடல் நீரில் மலர் மாலை தூவி,அஞ்சலி செலுத்தி விட்டு அவரவர் பல்வேறு ஊர்களுக்கு திரும்பினர். ஒரு சிலர் விடியற்காலை வேளாங்கண்ணியில் 2 மணி போல தொண்டி செல்லும் பேருந்தில் ஏறினர். தாங்களும் ஜலசமாதி ஆகப் போகும் சங்கதி அறியாமல்...

Representational Image
Representational Image

விடியற்காலை 4:15 மணிக்கெல்லாம் எனது சொந்த ஊரான முத்துப்பேட்டை செம்படவன்காடு ரயில்வே கேட்டில் காலன் கயிற்றோடு கொண்டு வரும் அதே பேருந்திற்காக காத்து நிற்கிறேன். திருச்சியில் B.Ed, கடைசித் தேர்வு எழுதப்போகும் அவசரத்துடன். கை நீட்டினேன். எனக்காகவே
"விடப்பட்ட"  பேருந்து போல முன் படிக்கட்டு சரியாக என் முன்னால் வர தாவி ஏறினேன்.சில நிமிடங்களுக்குள் நிக(கவி)ழப் போகும் விபரீதம் அறியாமல்.

 ஜீன்ஸ் பேன்ட், டக்இன் செய்த சர்ட், குளிருக்கு ஷ்வெட்டர் சகிதம் தேர்வெழுதப் போகும் மாணவன் போலில்லாமல் ஷூட்டிங் ஸ்பாட் செல்லும் ஹீரோ கணக்காகவே இருந்தேன்(நெசந்தாங்க!?).

சரி, அத விடுங்க..நம்ம த்ரில் டைம்முக்கு வாங்க.அதிகாலை 5 மணி ஆகி இருக்கும்.ரப்பர் கணக்கா கருமேகத்தை வெளிச்சம் அப்படியும்,இப்படியும் அழிச்சபடி இருந்துச்சு.அந்த ரப்பர் பட்டோ என்னவோ காகங்கள் ரப்பரில் கரைந்து போகாமலிருக்க கா..கா..என கரைந்தபடியே இரை தேடி வானில் பறந்தன.அல்லது அது,விழப்போகும் சடலங்களைச் சுற்றுவதற்கான வார்ம் அப்போ என்னவோ?

Representational Image
Representational Image

சில நிமிடங்களில் பேருந்து, அமரர் ஊர்த்தியாக மாற இருக்கும் பகீர் செய்தி அறியாது, பயணிகளில் பலர் பயணக் களைப்பில் முழு சீட்டில் கால் நீட்டியபடியும், அரை சீட்டில் உடம்பை குறுக்கியும், இரண்டு முழங்கைகளை முன் சீட்டுக் கம்பியில் வைத்து தலையை அதில் புகுத்திக் கொண்டதுமாக குறட்டை சூழ உறங்கியபடியே இருந்தனர்.

நானோ பாதி புத்தகம் படிப்பதும், மீதி ஓட்டுநரை கவனிப்பதுமாகவே இருந்தேன். கால் வைக்கும் கம்பிகளில் இரண்டு கால்களையும் கைப்பிடிக் கம்பிகளை கைகளால் அழுந்தியும் இருந்தேன். மூளையின் முன்னெச்செரிக்கை உணர்வு போலும்.முத்துப்பேட்டை டூ பட்டுக்கோட்டை செல்லும் வழியே உள்ள நசுவினி ஆற்றுப்பாலம் குறுகலானதும் கூட. அதி வேக ஆர்ப்பாட்டங்களில் புழுதி கிளப்ப புரவியென புறப்படும் தனியார் பேருந்துகள் கூட , நசுவினி ஆற்றுப் பாலமெனில் பகலில் கூட பவ்யமாகவே கடந்து போகும்.

Representational Image
Representational Image

நாங்கள் சென்ற அரசுப் பேருந்து நசுவினி பாலத்திற்கு 10 அடிக்கு முன்னால் உள்ள சாலைப் பள்ளத்தில் விழ விழித்திருந்தோர் ஏதோ விபரீதம்தான் என சற்றே விழித்துக் கொண்டனர்.

பேருந்து பள்ளத்தில் விழ மேலும் சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் இடப்புறம் ஸ்டியரிங்கை எழுந்து நின்று வளைத்துப் பார்த்தார்.ம்ஹூம்..பேருந்து கட்டுப்படவில்லை.ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலும் இல்லை.

மாங்காயை கையில் பிடித்துக் கொண்டு ஓங்கி தரையில் அடித்தால் பல மின்னல் வெட்டுகள் போல் ஆகுமல்லமா அது போல் ஆகியிருந்தது என் வலப்பக்க தலைத் தெறிப்புகள்.எத்தனைத் தையலோ தெரியாது.தையல் தெரியாத டெய்லர் தைத்த சட்டையாக இருந்தது மேடும்,பள்ளமுமாக.

விபத்தில் சிக்கி காயமடைந்து நிதானத்தில் இருந்தவர்களை மீடியாக்கள் சம்பவம் குறித்து பேட்டி எடுக்க ஆரம்பித்து விட்டன. அப்ப நம்ம விகடனும் முதல் ஆளாய் நின்றது. அப்போது அந்த ஏரியா விகடன் ரிப்போர்டர் இப்போது பிரபல சினிமா இயக்குநர். ஒரு பக்கம் அவர் மனைவி தலைப் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையொன்றில் தவியாய் தவித்துக் கொண்டிருக்க...

அவரோ விபத்தில் பலியான, காயம்பட்டவர்களுக்காக அரசு மருத்துவமனையில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.

Representational Image
Representational Image

அந்தநாள் அவருக்கு மறக்கவே முடியாத நாள்தான் தலைப் பிரசவத்தில் அவருக்கு மகன் பிறந்திருந்தார்.

அடுத்த சில நாட்களில் ஜூ.வியில்...

"காலனை வரவழைத்த மெத்தனம்!" எனும் தலைப்பில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கை மொத்தியிருந்தார் செம காட்டமாக.

அந்த விகடன் ரிப்போர்டர்தான் கத்துக்குட்டி,உடன்பிறப்பே!.. படங்களை இயக்கி, தற்போது சசிகுமாரை வைத்து "நந்நன்" படம் இயக்கிய இயக்குநர் இரா.சரவணன்.

எனக்கு தலையில் அடிபட்டதால் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் அனுப்பப்பட்டேன்.

ஸ்கேன், அது, இது என்று எடுத்துப்பார்த்து ஒன்றுமில்லை என்றார்கள்.

பின்னாளில் என் நண்பர்கள் அப்பவே தெரியும் மாப்ளே உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு.

நானும் அப்பாவியாக மூஞ்சை வைத்துக் கொண்டு,எனக்காக சாமிகிட்ட வேண்டிகிட்டீங்களடா என்றதுதான் தாமதம்...

"மாப்ளே..அது மூளை இருக்குறவங்களுக்குத்தான் பிரச்சனை.உனக்கு அந்த பிரச்சனை எல்லாம் எப்பயும் வராதுடா." என்றார்கள்.

"ஆமான்டா நீங்க சொல்றதும் சரிதான். எனக்கு மூளை இருந்திருந்தா உங்கள மாதிரி ஆளுங்க கூட ஏன் சகவாசம் வச்சிருக்கப் போறேன்?" என்றேன்.

"சரியான மூளைக்காரன் மாப்ளடா நீ!" என வழிந்தார்கள்.

நசுவினி ஆற்று நீரில் நனைந்த காலனின் கயிறு காய கொஞ்ச வருஷம் ஆகியிருக்கும் போல. அந்த நசுவினி ஆறு சம்பவத்திற்கு பிறகு ஆறு வருஷம் கழிச்சி 2013 ல வந்தாப்ல. ஒரு ஹோட்டல்ல மிட் நைட்ல காடையும், புரோட்டாவும் சாப்பிட்டு புட் பாய்சன் ஆயிடுச்சி. "பின்னால" நான் ஸ்டாப் கொண்டாட்டம்.

'அதுவும்' நிக்கல. நம்மள நிக்கவும் விடல.முழுக்க..முழுக்க "ஒக்காரவே" வச்சிடுச்சி. திருச்சி தனியார் ஹாஸ்பிடலில் கக்கூசே கதின்னு கடந்த அந்த 7 நாட்கள் அவைகள். (பெட் சார்ஜ் எனக்கு ஏன் போட்டாங்கன்னே இது வரை தெரியல.!?)

Representational Image
Representational Image

நசுவினி ஆத்துல தலை துவட்டி சிவப்பான கர்சீப் வேற இல்ல. அதை காட்டி இருந்தா நின்னுருக்குமோ என்னவோ. செந்தில் கவுண்டமணிகிட்ட சொல்ற, "அண்ணே இந்த செவப்புத் துணிய காட்டுனா அவ்ளோ.. பெரிய ட்ரெயினே நிக்கிறப்போ..இது நிக்காதான்னே?!" டயலாக் அந்த "கட..புட.." நேரத்திலும் துன்பம் வரும் வேளையில் வந்து சிரிக்க வைத்தது.

காலன் கொஞ்சம் சுத்தபத்தமான ஆளு போல.கக்கூஸ் பக்கமே அவரு வரல.உயிர எடுத்திக்கிட்டு போக வந்தவரு.திரும்பவும் அவரோட பாசக் கயிற சுருட்டி எடுத்துகிட்டுப் போயிட்டாப்ல!

அதுக்கப்புறம்...இவன எப்படியும் விடக்கூடாதுன்னு அரைகுறை மனசோட நினைச்சிருப்பாரோ என்னவோ..2018 ஜூன்ல என் வீட்டுக்கே வந்திருப்பார் போல. நடு ராந்திரி, என் நடு நெஞ்சில கடுமையான வலி.

"கேஸ்" ட்ரபுள்தான் நெனச்சி,யாரையும் எழுப்பாம மேனேஜ் பண்ணிப் பார்க்குறேன் முடியல.அப்போ என்னிடம் "கேஷ்" ட்ரபுள்ளான காலக்கட்டம் (இப்ப மட்டும் என்னவாம்!?).

Representational Image
Representational Image

லோக்கலில் ஈசிஜி,என்னன்னமோ எடுத்தாங்க.அட்டாக் வந்திருக்கு..தாமதிக்காம தஞ்சாவூர் போயிடுங்கன்னு சொன்னாங்க.தஞ்சாவூர் மீனாட்சி ஹாஸ்பிடல் போனோம்.3 அடைப்பு இருக்கு.ஒன்னு ஹெவியா இருக்கு.2 மருந்து மாத்திரையில கரைச்சிரலாம்னு ஆஞ்சியோ எடுத்து சொல்ல..ஒரு "ஸ்டண்ட்" + மருந்து மாத்திரைகளோடு சில நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் ஆனேன் மருந்து,மாத்திரைகள் வாழ்நாள் முழுக்க தவறாமல் சாப்பிடனும் எனும் மருத்துவரின் அறிவுரைகளோடு.

மனுஷனுக்கு பயம் வேணும்.

கொஞ்ச மாதங்கள் இருந்தது.அதனால் என் வீட்டில் எனக்கான மருந்து மாத்திரைகள் இருந்தது.அப்புறம் பயம் கொஞ்சங் கொஞ்சமாகப் போக மருந்து மாத்திரைகள் சாப்பிடத் தவறிட்டேன்.

"தவறி விடுவோம்" எனும் பயமில்லாமல்.

"இதற்குத்தானே..ஆசைப்பட்டாய் பாலகுமாரா?!" எனும் டயலாக் திரும்பவும் காலன் காதில் விழுந்திருக்கும் போல.2022 புது வருஷம் பொறந்த துவக்கத்துல கொரோனா பயத்துல நாமெல்லாம் கைக்குலுக்காத காலக்கட்டத்துல,

என்னோடு கைக்குலுக்க வந்தாப்ல.இந்த தடவை ஒமிக்ரான் ரூபத்தில்..

பிரைவேட் ஹாஸ்பிடல் போனா பர்ஸ் பஞ்சராகிடும்னு,திருவாரூர் மெடிக்கல் காலேஜ் போய் அட்மிட் ஆகி,சில நாட்கள் தங்கியிருந்து மீண்டு(ம்) வந்தேன்.எங்கே நெருங்கி வந்தா கொரோனா வைரஸ் தன்னைத் தொத்திக்கிருமோன்னு,

என்கிட்ட நெருங்காம காலன்,அப்புறம் பார்த்துக்கலாம்னு நகர்ந்துட்டார் போல.

2022 வருஷத் துவக்கம்தான் துக்கம் தந்ததுன்னு நெனச்சா.. வருஷக் கடைசியும் அப்படியே அமைஞ்சதுதான் கால(ன்)க் கொடுமை!?.

போன நவம்பர் மாசத்துல இரண்டாம் முறை ஹார்ட் அட்டாக்.ஆஞ்சியோ பண்ணதுல,அஞ்சாறு அடைப்பு...நல்லா படிக்கிற ஸ்டூடெண்ட் மார்க் எடுத்த மாதிரி,அடைப்பு பர்சண்டேஜ் கூடுதலா இருந்துச்சி.

சென்னை,கோவைன்னு முக்கிய ஹாஸ்பிடல்ல ரிப்போர்ட் காட்டுனதுல பைபாஸ் சர்ஜரிதான் தீர்வுன்னுட்டாங்க.

Representational Image
Representational Image

பழகின இடமா இருக்கு.. பார்த்த டாக்டர்ஸா இருக்காங்க.. பக்கமாவும் இருக்குன்னு தஞ்சாவூர் மீனாட்சிலேயே "ஓப்பன் ஹார்ட்" சர்ஜரி. இந்த முறை காலன் கயிறு,நான் பிறந்த போது பார்த்த அரைஞான் கயிறு போல இல்லை.கொஞ்சம் ஸ்ட்ராங்கா மூக்கணாங்கயிறு போல இருந்தது.

என் சின்ன வயசு ஞாபகம் காலனுக்கு வந்திருக்கும் போல..அவரோட மனசு கரைஞ்சி,அவர் பிடியும் தளர்ந்துச்சி.திரும்பவும் தப்பிச்சேன்.

சின்ன வயசுல உப்புக்குச் சப்பாணியாய் விளையாட்டில் சிலரை நாம சேர்த்துக் கொள்வதுண்டு அப்போதெல்லாம் நமக்கு செம கோபம் வரும்.நம்மள ஒரு மனுஷனவே மதிக்கமாட்றாய்ங்களேன்னு.

காலன் என்னை உப்புக்குச் சப்பாணியாகக் கூட கருதி இருக்கலாம் அல்லது கருணை கொண்டிருக்கலாம்.

காலன் என் மீது கொண்ட அன்பால்(?!) என்னை "முடிக்க" முடியாமல், என்ன செய்வது

என்று தெரியாமல் "தத்தக்கா..பித்தக்கா.." என்று முழிப்பது மாதிரி.நானும் இந்த மடலை முடிக்க முடியாது,"தத்தக்கா..பித்தக்கா.." நிலையிலேயே உங்களிடமே விட்டு விடுகிறேன்!

மடலுக்கு தலைப்பு மட்டும் நான் வைத்து விடுகிறேன்...

*காலன் என் தோழன்!*

- *க.தங்கபாபு*

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan
My vikatan
My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.